text
stringlengths 309
27.8k
|
---|
ஒரு ஏரியில் நிறைய மீன்களும் பாம்புகளும் வாழ்ந்து வந்தன. முதலில் நட்பு பாரட்டி இந்த இரண்டு இனங்களும் வாழ்ந்து வந்தன. பருவமழை பொய்த்து ஏரி வற்ற ஆரம்பித்ததும் இடத்துக்குச் சண்டை போட்டு ஏரியைப் பிரித்துக் கொண்டு வாழ்ந்தன. ஒரு இனம் வாழும் இடத்திற்கு மற்றொரு இனம் போகக் கூடாது. மீறினால் எதிரியின் கையில் சரியான உதை கிடைக்கும் இதில் ஒரு விலாங்கு (eel) மட்டும் தந்திரமாக வேஷம் போட்டு ஏரி முழுவதும் சுற்றி வந்து கொண்டிருந்தது. பாம்புகள் இடத்திற்குப் போகும் போது விலாங்கு தன் நீண்ட உடலையும் பாம்பு போன்ற தலையையும் வைத்து தான் ஒரு பாம்பு என்று காட்டிக் கொள்ளும். மீன்களின் இடத்திற்குப் போகும் போது உடலைச் சுருட்டி மீன் போன்ற துடுப்புகளையும் வாலையும் காட்டி தான் ஒரு மீன் என்று காட்டிக் கொள்ளும். இப்படி ஏமாற்றியே பொழுதை ஓட்டிக் கொண்டு இரண்டு இடங்களிலும் உணவு பெற்று ஏரி முழுவதும் சுற்றித் திரிந்து வந்தது விலாங்கு. வெயில் காலம் அதிகமானது. ஏரி மேலும் வற்றியது. பாம்புக் கூட்டமும் மீன் கூட்டமும் தங்கள் இடங்களை நெருக்கியும் குறுக்கியும் அமைத்துக் கொண்டே வந்தன. ஒரு நாள் இரண்டு கூட்டங்களும் ஒன்றன் இருப்பிடத்தை இன்னொன்று பார்த்துக் கொள்ளும் தூரத்தில் அமைக்கும் நிலை வந்தது. அப்போது மீனாக விலாங்கு வேஷம் போட்டால் பாம்புகள் பார்த்து தாக்கின. பாம்பாக வேஷம் போட்டால் மீன்கள் கடித்துக் குதறின. “நான் பாம்பும் அல்ல மீனும் அல்ல” விலாங்கு கதறீயது. நம்புவாரில்லை. விலாங்கு “முதலிலேயே உண்மையைச் சொல்லியிருக்கலாமோ” என்று நினைத்துக் கொண்டு செத்தே போனது.
|
செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த செல்வந்தன் ஒருவன் பல ஊர்களுக்கு வணிகம் செய்வதற்காகச் செல்ல வேண்டி இருந்தது. இதற்காக விலை உயர்ந்த குதிரை ஒன்றையும் அவன் வாங்கி வைத்திருந்தான். அந்தக் குதிரை காற்றை விட வேகமாக ஓடக் கூடியது. அந்தக் குதிரையின் வேகத்திற்கு இணையாக எந்தக் குதிரையாலும் ஓட முடியவில்லை. அவனும் அந்தக் குதிரையின் அருமை தெரிந்து அதை நல்ல முறையில் கவனித்து வந்தான். அந்த நகரத்தில் வாழ்ந்த அனைவருக்கும் அந்த குதிரையைப் பற்றியும் அதன் வேகத்தைப் பற்றியும் தெரிந்திருந்தது. ஒரு முறை வணிக வேலையாக தொலைவிலிருந்த நகரத்துக்குக் குதிரையில் சென்ற அவன் தான் கொண்டு சென்ற பொருட்களை உடனுக்குடன் விற்று நிறைய பணம் சம்பாதித்தான். அந்தப் பணத்துடன் அந்த நகரத்தில் இருக்க விரும்பாத அவன் உடனே வீடு திரும்ப விரும்பினான். குதிரை சற்று கூட ஓய்வெடுக்க முடியாமல் களைத்துப் போயிருந்தது. வணிகனும் உடனே திரும்ப வேண்டி வந்ததால், குதிரையை மெதுவாக ஓட்டிச் செல்வோம் என்று அந்தக் குதிரையின் மேல் அமர்ந்தான். காட்டு வழியாக குதிரையில் வந்து கொண்டிருந்த அவனை குதிரையோடு வழிப்பறித் திருடர்கள் சுற்றிச் சூழ்ந்து கொண்டார்கள். முதலாளியைக் காப்பாற்ற விரும்பிய அந்தக் குதிரை திருடர்களைக் காலால் உதைத்துத் தள்ளியபடி முன்னால் ஓடத் துவங்கியது. திருடர்களும் குதிரையைத் தாக்கத் துவங்கினார்கள். குதிரையின் உடலெங்கும் காயம் ஏற்பட்டது. அந்தக் காயத்தைப் பொருட்படுத்தாத குதிரை தன் முதலாளியைக் காப்பாற்றும் நோக்கத்தில் வேகமாக ஓடத் துவங்கியது. திருடர்கள் வந்த குதிரையால் இந்தக் குதிரையின் வேகத்தைப் பிடிக்க முடியவில்லை. குதிரை தன் முதலாளியை வீட்டில் கொண்டு வந்து சேர்த்ததுடன் வாயில் நுரை தள்ளியவாறு அப்படியே மயங்கி விழுந்தது. தன் உயிரையும் பொருளையும் காப்பாற்றித் தந்த அந்தக் குதிரையை நன்றியோடு பார்த்த முதலாளி வீட்டுக்குள் சென்றான். அங்கிருந்த பணியாட்கள் அந்தக் குதிரையின் மயக்கத்தைத் தெளிவித்தார்கள். அதற்கு உணவு அளித்தார்கள். அதன் உடலெங்கும் ஏற்பட்ட காயம் ஆறப் பல நாட்கள் ஆகியது. அந்தக் குதிரை நலமடைந்து விட்டாலும் அதனால் முன் போல் வேகமாக ஓட முடியவில்லை. நொண்டியபடியே நடந்தது. பயனற்ற அந்தக் குதிரையைச் செல்வந்தன் கவனிக்கவில்லை. அதன் கண்களும் பார்வை இழக்கத் துவங்கின. அதன் நிலை பரிதாபமாக ஆனது. பயனற்ற குதிரையால் தேவையற்ற செலவு வருவதாக எண்ணிய அந்த செல்வந்தன், அந்தக் குதிரையை வீட்டை விட்டு விரட்டும்படி பணியாட்களுக்குக் கட்டளையிட்டான். பணியாட்களும் அந்தக் குதிரையை வெளியே தள்ளி கதவைத் தாழிட்டார்கள். பசியால் துடித்த அது நகரம் முழுவதும் அலையத் துவங்கியது. அந்நகரத்தில் யாருக்காவது ஏதேனும் குறை ஏற்பட்டால் ஊர் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த மணியை அடிப்பார்கள். உடனே அந்த ஊரின் முக்கியமான பெரியவர்கள் கூடி அவரின் குறையைத் தீர்த்து வைப்பார்கள். அது அந்த ஊரின் வழக்கமாக இருந்தது. பசியுடன் வந்த குதிரை அந்த மணிக்காகக் கட்டப்பட்டிருந்த கயிற்றை வைக்கோல் என நினைத்துத் தின்பதற்காக அதைப் பிடித்து இழுத்தது. மணியோசை கேட்டு வந்த அந்த நகரப் பெரியவர்கள் அந்தக் குதிரையைப் பார்த்தார்கள். எலும்பும் தோலுமாக இருந்த அந்தக் குதிரையைப் பார்த்த பெரியவர்கள் அது செல்வந்தனின் குதிரை என்பதையும் செல்வந்தனை திருடர்களிடமிருந்து காப்பாற்றிய குதிரை அது என்பதையும் அறிந்து செல்வந்தனை விசாரணைக்காக வரச் செய்தார்கள். அவனோ இந்தக் குதிரை பயனற்றது, அதனால் விரட்டி விட்டேன். என்மீது எந்தத் தவறுமில்லை என்று வாதிட்டான். இந்தக் குதிரை எவ்வளவு அருமையான குதிரை. எவ்வளவு வேகமாக ஓடியது. உன்னைத் திருடர்களிடமிருந்து காப்பாற்றியதால் தானே இது இப்படி ஆனது. உன் உயிரைக் காப்பாற்றிய இந்தக் குதிரையிடம் உமக்கு சிறிது கூட நன்றி இல்லையா? இதற்கு நாள்தோறும் நல்ல உணவு அளித்துப் பாதுகாக்க வேண்டியது உன் பொறுப்பு. ஒவ்வொரு வாரமும் எங்களில் ஒருவர் வந்து இந்தக் குதிரையைப் பார்வையிடுவோம். இந்தக் குதிரைக்கு ஏதேனும் தவறு நேர்ந்தால் உமக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்.என்று தீர்ப்பு வழங்கினார்கள். தலை கவிழ்ந்த அந்த செல்வந்தன் அந்தக் குதிரையைத் தன் வீட்டிற்கு ஓட்டிச் சென்றான்.
|
வையாபுரி பட்டினம் என்ற நகரம் கடற்கரை ஓரத்தில் அமைந்திருந்தது.வையாபுரி பட்டினத்தில் முத்து வியாபாரி மாணிக்கத்தை தெரியாதவர் இருக்கமுடியாது. மாணிக்கத்தின் வீடு அரண்மனையைப் போல் விசாலமாக இருக்கும்.முத்து வியாபாரி மாணிக்கத்திற்கு முத்து, ரத்தினம், வைரம் என்று மூன்று மகன்கள். இவர்களில் பெரியவன் முத்து வெளிநாடுகளில் வியாபாரம் செய்து பெரும்பொருள் ஈட்டினான்.அவன் தம்பி ரத்தினமும், வைரமும் உள்ளூர் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டனர். முத்து வியாபாரி மாணிக்கத்திற்கு ஒரு நாள் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. தான் இறந்து விடுவோம் என்று தோன்றியது. சொத்துக்கள் அனைத்தையும் உள்ளூரில் இருக்கும் தனது மகன்களிடம் ஒப்படைத்து விட்டு இறந்துபோனார்.பேராசை கொண்ட ரத்தினமும், வைரமும் அப்பாவின் சொத்துக்களை இரண்டாகப் பிரித்துக் கொண்டு அண்ணன் முத்துவை கொலை செய்ய திட்டமிட்டனர். ஒரு நாள் அண்ணன் முத்து திரும்பி வந்தான். அவனிடம் சொத்துக்களை மூன்றாக பிரித்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள்.அண்ணனும் தம்பிகள் சொன்னதை நம்பினான். ஆனால் அன்று இரவே முத்துத் தூங்கி கொண்டிருக்கும் போது அவனை அடித்து ஒரு குளத்தில் வீசி எறிந்தனர்.அடுத்த நாள் அந்த குளக்கரையில இருந்த கோவிலின் எதிரில் படுத்துகிடந்தான் முத்து. ஆனால் அவன் உடம்பில் எந்த விதமான காயமும் இல்லை.தூங்கி எழுந்த முத்து தனக்கு முன்னால் கடவுள் பிரத்யட்சமாய் தோன்றியிருப்பதைக் கண்டு வணங்கினான்."என்ன நடந்தது…?" என்றார் கடவுள். நடந்ததைச் சொன்னான் முத்து."இனி உனக்கு எந்த ஆபத்தும் வராது. 400 ஆண்டுகள் வரை நீ வாழ்வாங்கு வாழ்வாய்…." என்று வரமளித்து விட்டு கடவுள் மறைந்தார்.முத்து வீட்டிற்குத் திரும்பினான் ரத்தினமும் வைரமும் அதிர்ச்சியடைந்தனர்."காலையில் உங்களைக் காணாமல் துடித்துப் போனோம்… உங்களைப் பார்த்த பின்னர் தான்….. எங்களுக்கு உயிரே வந்தது" என்று சொல்லி அழுதனர்."என்ன நடந்தது……" என்று கேட்டனர்.எதையும் மறைத்துப் பேசத் தெரியாத முத்து நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னதுடன், 400 ஆண்டுகள் சாகாமல் வாழ பெற்ற வரத்தையும் பற்றி கூறினான்.தாங்களும் இதே போல் அதிக ஆண்டு வாழவேண்டும் என்று திட்டமிட்டனர்.பேராசை பிடித்த ரத்தினமும், வைரமும் தங்கள் இருவரையும் அடித்து அந்த குளத்தில் வீசி எறியும்படி ஏற்பாடு செய்தனர்.அடுத்த நாள் அவர்கள் இருவரும் கோவிலின் எதிரில் தூங்கியபடி கிடந்தனர்.தூங்கி எழுந்தனர். அவர்கள் எதிரில் கடவுள் தோன்றினார்."உங்களுக்கு என்ன நடந்தது"? என்றார் கடவுள்.தங்களை விரோதிகள் அடித்துப் போட்டதாக கூறினர்."கடவுளே நான் 1000 ஆண்டு சாகாமல் வாழவேண்டும்….." என்றான் ரத்தினம்."நான் 2000 ஆண்டு சாகாமல் வாழ வேண்டும்" என்றான் வைரம்.ரத்தினம் 3000 ஆண்டு என்றான். வைரம் 4000 என்றான். இப்படி ஆண்டுகளை ஏற்றிக்கொண்டே போனார்கள்.கடவுளுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை."நான் சொல்வது போல் செய்தால் உங்கள் திறமைக்குத் தகுந்தவாறு பத்தாயிரம் ஆண்டுகள் கூட சாகாமல் வாழலாம்.." என்றார் கடவுள்."சொல்லுங்கள்… சொல்லுங்கள்" என்றனர் இருவரும் அவசரம் அவசரமாக."கோயிலில் எதிரில் இருக்கு இந்த குளத்தில் நீங்கள் மூழ்கி இருக்கும் ஒவ்வொரு மணித்துளிக்கும் 100 ஆண்டுகள் சாகாமல் வாழும் வரம் கிடைக்கும்" என்று கடவுள் சொல்லி முடிப்பதற்குள் இருவரும் குளத்தில் குதித்தனர்.இருவரும் நீருக்குள் மூழ்கினர். ரத்தினத்தை விட 100 ஆண்டாவது அதிகம் பெற வேண்டும் என்று வைரம் நினைத்தான்.வைரத்தைவிட 100 ஆண்டு அதிகமாகப் பெற வேண்டும் என்று நினைத்தான் ரத்தினம். யார் அதிக ஆண்டு சாகாமல் இருக்கும் வரத்தைப் பெறப் போகிறார் என்று பார்த்தபடி கடவுள் நின்று கொண்டிருந்தார்.சிறிது நேரத்தில் வைரமும், ரத்தினமும் பிணமாக குளத்தில் மிதந்தனர். |
ஒரு குளக்கரை. கரையோரத்தில் கிழக்கொக்கு ஒன்று விசனமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது. துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “நம்மைச் சும்மாவிடாதே, ஆனால் செயலற்று நின்றுள்ளதே என்னவாக இருக்கும்” என்று. “நமக்கேன்” என்று இராமல் அதன்முன் வந்தது. “என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்?” என்றது. “நான் மீனைக்கொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரி இல்லை” என்றது கொக்கு. “மனசு சரி இல்லையா… ஏன்?’ என்றது மீன். “அதைஏன் கேட்கிறாய்…” என்று பிகு பண்ணியது கொக்கு. “பரவாயில்லை சொல்லுங்களேன்” “சொன்னால் உனக்குத் திக் என்றாகும்.” மீனுக்குப் பரபரத்தது. “சொன்னால்தானே தெரியும்” “வற்புறுத்திக் கேட்பதாலே சொல்கிறேன். இப்போது ஒரு செம்படவன் இங்கே வரப்போறான்…” என்று இழுத்தது கொக்கு. “வரட்டுமே” “என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்.” “அய்யய்யோ!” உடனே அம்மீன் உள்ளே சென்றுவிட்டது. சில நிமிடங்கள் ஆகி இருக்கும்; பல மீன்கள் அதன்முன் துள்ளின. அதுமட்டுமா! ஒட்டுமொத்தமாக “நீயே எங்களையெல்லாம் அந்த அபாயத்திலிருந்து காப்பாற்றேன்” என்று கெஞ்சின. அபாயம் சொன்னவனே உபாயமும் சொல்வான் என்று அவைகள் யோசித்து கொக்கிடம் உதவி கேட்டன. “நான் என்ன செய்வேன்? என்னால் செம்படவனோடு சண்டை போடா முடியாது. கிழவன் நான். வேண்டுமென்றால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகலாம். அதனால் எனக்கும் இந்தத் தள்ளாத வயதில் பரோபகாரி என்ற பெயரும் வரும்; நீங்களும் பிழைத்திருப்பீர்கள்” என்றது கொக்கு மிகவும் இறக்கம் கசிய. மீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின. “அபாயத்தை அறிந்து சொன்ன நீங்களே உபாயத்தையும் தெரிந்து சொல்கிறீர்கள்; அப்படியே செய்யுங்கள்” என்றன ஒருமித்தக் குரலில். கொக்குக்கும் கசக்குமா காரியம்? நடைக்கு ஒவ்வொன்றாக குளத்திலிருந்த மீன்களையெல்லாம் கௌவிக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்தது. குளத்திலிருந்த நண்டு ஒன்று இதை கவனித்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது. “ஓ சீவகாகுண்யனே! என்னையும் அவ்விடத்திற்குக் கொண்டுபோங்கள்” என்று கெஞ்சியது. வருங்காலத்தில் எதுவும் வழிய வரும் - என்று உள்ளுக்குள் துள்ளிக் கொண்ட கொக்கு, நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது. பறக்கும் பொது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறி இருப்பதைக் கண்டது நண்டு. அதற்க்கு “பக்”கென்றது. அத்துடன் வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் “சட்”டென்று புரிந்துவிட்டது. தன் நிலையம் அப்படித்தானா? உயிராசையால் நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பதுபோல் அதற்கு மூளை வேலை செய்தது. “கொக்காரே! நீங்கள் என்மேல் இரக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். அங்கே என் உறவினர்கள் பலர் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவைகளையும் காண்பிப்பேன்” என்றது நண்டு. “அப்படியா? இன்னும் இருக்கிறதா நண்டுகள்?” “எனக்கு உறவினர்கள் அதிகம்; பல இருக்கின்றன.” “ஆஹா! அதிர்ஷ்டம் என்றால் இப்படித்தான் வரவேண்டும்; நம்பாடு யோகம்தான்” என்று மகிழ்ந்த கொக்கு மீண்டும் நண்டைக் கௌவிக் கொன்று பழைய குளத்தை நோக்கிப் பறந்தது. குளத்துக்கு நேராக வரும்போது அதுவரை மண்டுபோலிருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டு குளத்து நீரில் விழுந்து உயிர் பிழைத்துக் கொண்டது. அபாயம் சொன்னவனிடமே உபாயம் கேட்ட மீன்கள் செத்தன. வஞ்சமனத்தானின் உபாய மும் அபயாமே என்றறிந்து கொன்றுவிட்ட நண்டு பிழைத்தது.
|
இரண்டு அன்னங்களும் ஒர் ஆமையும் ஒரு குளத்தில் இருந்தன. அன்னங்களும் ஆமையும் மிகவும் நட்புடன் வாழ்ந்து வந்தன. இவ்வாறு இருந்து வரும் போது, நெடுநாள் மழை பெய்யாத தால் அந்தக் குளத்து நீர் வற்றிப் போயிற்று. இதைக் கண்ட அன்னங்கள் இரண்டும் வேறொரு குளத்துக்குப் போகத் தீர்மானித்தன. அவை தங்கள் நண்பனான ஆமையை விட்டுப் போக மனமில்லாமல், அதை எவ்வாறு அழைத்துப் போவதெனச் சிந்தனை செய்தன. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து, அந்த ஆமையை அழைத்து, ‘நாங்கள் இரண்டு பேரும் இந்தக் குச்சியின் இரு நுனியையும் கவ்விக் கொண்டு பறக்கிறோம். நீ அதன் நடுப்பாகத்தை உன் வாயினால் பற்றிக் கொண்டு வா. இடையில் வாய் திறக்காதே’ என்று கூறின. ஆமையும் சரியென்று அந்தக் குச்சியை வாயினால் பற்றிக் கொண்டது. அன்னங்கள் இரண்டும், இரண்டு பக்கமும் குச்சியைக் கவ்விக் கொண்டு பறந் தன. வானத்தில் ஆமை பறக்கும் புதுமையைக் கண்ட அந்த ஊரில் இருந்தவர்கள், வியப்புத் தாங்காமல் கை கொட்டி ஆரவாரம் செய்தார்கள். இதைக் கண்ட அந்த ஆமை, எதற்காகச் சிரிக்கிறார்கள்!’ என்று அவர்களைக் கேட்பதற்காகத் தன் வாயைத் திறந்தது. உடனே அது பிடி நழுவித் தரையில் விழுந்து இறந்து போய்விட்டது.
|
வானம் கருமை பெறத் தொடங்கியதும் இராசதுரை துடித்துப் போனான். நிச்சயமாக இன்று வானத்தில் பரவிய கருமுகில் நேற்றுப் போல வாடைக்காற்றுடன் அள்ளுண்டு செல்ல வாய்ப்பில்லை. மூன்று நான்கு நாட்களாகப் பயமுறுத்திக் கொண்டிருந்த வானம் இன்று அவன் பிரார்த்தனைக்கு இரங்கும் என்ற நம்பிக்கையைச் சீர்குலைத்தபடி குளிர்காற்றுடன் இறங்கிய துமிகள் மழைத்துளிகளாகி வானத்திலிருந்து கோடானுகோடி நீர்விழுதுகளை மண்ணில் அழுத்தின. "ஐயோ... பிள்ளைகள் என்ன பாடோ?" மழைத்துளிகள் பெருந்தாரைகளாகி முகத்தில் ஊசிகளாகக் குத்தின. இராசதுரை கரத்தில் காவிய பாண் சரையுடன் தன் இருப்பிடத்தை நோக்கி ஓடத் தொடங்கினான். நிலவொளியும் சூரிய ஒளியும் மண்தரையில பொட்டுக்கள் இட இடமளிக்கும் குடிசைக்கூரை, சென்ற வருடமே கூரை வேய்ந்திருக்க வேண்டும். அதற்கான பணத்தைத் திரட்ட அவனால் முடியவில்லை. அரசு தருகின்ற உலர் உணவு எத்தனை நாட்களுக்குப் போதும்? தாயில்லாத ஐந்து பிள்ளைகளையும் படித்து ஆளாக்கிவிட வேண்டுமென்ற ஆவேசம், அவன் உழைப்பினைப் படிப்புத் தேவைகளுக்காக விழுங்கிக் கொண்டிருந்தது. கூரை வேயவென பணத்தினை ஒதுக்க முடியவில்லை. கரையான் தின்று ஈக்குகளாக எஞ்சியிருக்கும் கூரை யூடாக வானம் தெரியும். "பாக்கியத்தின் ஆத்மா அங்கு திரியுமா?" மாவிட்டபுரத்தில் அவன் வாழ்ந்த வாழ்கை என்ன? அப்பு கட்டிவிட்ட இரண்டறைகள் விறாந்தை, தலைவாசல் கொண்ட கல்வீட்டில் வெற்றிலைத் தோட்டத்தின் சூழலில் வாழ்ந்தவன். பாயில் படுத்துக்கிடந்தபடி எத்தனை இரவுகள் அவன் வானத்தில் கண்சிமிட்டும் விண்மீன்களைத் துயரத்துடன் வெறித்துப் பார்த்தபடி கிடந்திருக்கிறான். மாவிட்டபுரம் கோயில் வீதியில் அமைந்திருந்த அவன் தகப்பனாரின் கல்வீட்டில் வெளித் திண்ணையின் வெறும் சீமேந்துத்தரையில் வானத்தையும் நிலவையும் பார்த்தபடி படுத்துக் கிடப்பதில் அவனுக்குப் பெரு விருப்பம். சிலவேளைகளில் அவன் அருகில் வந்து பாக்கியம் அமர்ந்து கொள்வாள். "என்னப்பா...ஆகாயத்தில் தேடுறியள்?" என்று கேட்டுவிட்டு ஒரு நாள் சிரித்தாள். அவள் சிரிப்பில் அவன் கரைந்து போனான். அவனைத் தான் கலியாணம் செய்தால் கட்டுவேனெனப் பிடிவாதமாக நின்று அவனுக்கு வாழ்க்கைப்பட்ட அம்மான் மகள் அவள். அவன் மெதுவாகத் தன் தலையைத் தூக்கி அவள் மடியில் சாய்த்துக் கொண்டான். "உள்ளை அம்மான்... இன்னமும் நித்திரைக்குப் போகவில்லை.", "அதிலை என்ன? அவர் செய்யாததே?" தன்மடியில் அவன் தலைவைத்துப் படுத்திருப்பதில் அவளுக்கும் சம்மதந்தான். மகிழ்ச்சிதான். அவன் தலைமயிரைக் கோதிவிட்டாள். "வானத்தில் இந்த மண்ணில் உடலைக் கழற்றிவிட்ட ஆத்மாக்கள் உலவுவினமாம். அவர்களில் என் அம்மாவும் இருப்பா. குருக்கள் சொன்னார்" என்றான் அவன். "விசர்... இப்ப மாமி எங்கை பிறந்திருக்கிறாவோ?" எங்கையும் பிறக்கமாட்டா. உன் வயிற்றில தங்கி எங்களுக்கு மகளாகப் பிறப்பதற்குக் காத்திருக்கிறா..." அவன் இவ்வாறு கூறியபடி அவள் மணி வயிற்றினைப் பாசத்தோடு தடவிவிட்டான். அவள் அவன் தலையைத் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டாள். "மெய்யாகவா அப்பா... அப்படி ஒருபேறு எனக்குக் கிடைத்தால் என்னைவிடப் பாக்கியசாலி வேறு எவருமில்லை" பாக்கியம் விரும்பியபடி அவர்களுக்கு முதலில் பிறந்தது பெண் தான். மாவிட்டபுரத்திலிருந்து இராணுவத்தால் திடீரெனத் துரத்தப்பட்டு அனைத்தையும் இழந்து உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி அளவெட்டியில் முதலில் குடியேறி பின்னர் வலி காமத்தின் பெரிய இடப்பெயர்வின் போது சாவகச் சேரிக்கு ஓடினார்கள். அங்கு தான் மூத்தவள் பிறந்தாள். துயரத்திலும் வாழவேண்டுமென்ற பிடிப்பை வசந்தி ஏற்படுத்தினாள். யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய இராணுவம் தென்மராட்சியை நோக்கி வருவதாகக் கேள்விப்பட்டதும் கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு கிழவரையும் அழைத்துக்கொண்டு வன்னிக்கு ஓடினார்கள். அங்கு அவர்கள் கிழவரை மலேரியாவுக்குத் தொலைத்துவிட்டனர். ஆனால் சத்தியன் அங்குதான் பிறந்தான். "அம்மானும் வந்திட்டார்" என்று பாக்கியம் பூரித்துப்போனாள். அவன் சிரித்தான். அவன் நடேஸ் வராக்கல்லூரியில் கல்வி கற்றவன். பகுத்தறிவால் ஏற்கக்கூடியவை எவை, பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை எவை என்பது அவனுக்குத் தெரியாதவையல்ல. ஆனால் பாரம்பரியமாக நிலவுகின்ற பகுத்தறிவற்ற நம்பிக்கைகள் மக்களின் வாழ்க்கைத் துன்பங்களை மறக்கவும் வாழ்வின் திருப்திக்கும் உதவுமாயின் அவற்றினால் பாதகமில்லை என்பது அவனின் வாதம். நிறைய நூல்கள் வாசிப்பான். பாரதியார் கவிதைகள் மீது அளப்பரிய பிரேமை. அடிக்கடி பாரதியின் வரிகளைப் பாக்கியத்திற்குப் பாடிக்காட்டுவான். "தனிமனிதனுக்கு உணவில்லையெனில் இந்த உலகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி.", "ஒருவனுக்காக உலகத்தை அழிக்கிறதே" என்று பாக்கியம் சிரிப்பாள். "அப்படியல்ல பாக்கியம் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கவேணும் என்று அவாப்பட்டார்." சத்தியனுக்குப் பிறகு வசந்தன், மாலினி, ரூபி மூவரும் வன்னியில் பிறந்தவர்கள். குடும்பத்தில் எண்ணிக்கை அதிகரித்ததும் பிரச்னைகளும் தோன்றத் தொடங்கின. வன்னியின் காட்டுச் சூழலின் காங்கைவெக்கையில் அவன் குடும்பத்திற்காக ஓயாது உழைக்க நேர்ந்தது. வேளாண்மைக்காலத்தில் தொழில் கிடைத்தது. ஏனைய நாட்களில் கனகசபையோடு பட்டவிறகு தேடி சேகரிக்கக் காட்டிற்குள் அலைந்தான். பாக்கியம் மெலிந்து உருக்குலைந்து போனாள். அடிக்கடி கடும் காய்ச்சலில் படுத்துக் கொள்வாள். அந்நேரங்களில் குடிசையில் தங்கி அவளையும் பிள்ளைகளையும் பராமரித்துக் கொள்வது அவன் பணியாகிறது. எப்படி வாழ்ந்தவர்கள்? மாவிட்டபுரத்தில் வெற்றிலைத் தோட்டத்துடன் கூடிய விட்டார்தியான காணியில் அப்பு கட்டிய வீட்டில் அமிர்தம் போன்ற கிணற்றுத் தண்ணீருடன் வாழ்ந்து சுகித்த குடும்பம், இன்று வன்னிக்காட்டிற்குள் பத்தடிக்கு பத்தடிக் குடிசைக்குள் மண் தரையில் பாய்களில் கிடக்க நேர்ந்து விட்டது. "எங்கட ஊருக்கு எப்படியாவது திரும்பிப்போய்விடணும், அப்பா. பிள்ளையளைப் படிப்பித்து ஆளாக்கிவிட வேணும். பாவம் செய்ததுகள். இங்கை வந்து எங்களுக்குப் பிறந்திருக்குதுகள்." பாக்கியத்தின் ஏக்கம் மாவிட்டபுரமாகத் தான் இருந்தது. பிறந்த மண்ணைவிட்டு அகதிகளாக ஓடி வந்து எத்தனை வருடங்களாகிவிட்டன? மண் மீட்பிற்கான யுத்தம் நாலரை இலட்சம் மக்களை சொத்துச் சுகமிழக்க வைத்துவிட்டது. அறுபதினாயிரம் மக்களைக் காவுகொண்டுவிட்டது என்பதை எண்ண மனம் வலித்தது. "கெதியல போவம் பாக்கியம். சமாதானப் பேச்சு வார்த்தை நடக்குது. எங்களைப் பழைய விடங்களில் இருக்க விடுவினமாம்" என்றான் நம்பிக்கையோடு இராசதுரை, அந்த நம்பிக்கையோடுதான் கண்டிவீதி திறக்கப்பட்டதும் யாழ்ப்பாணத்திற்கு ஓடி வந்தார்கள் பூனை குட்டிகளைக் காவுவதைப் போல பிள்ளைகளைக் காவிக்கொண்டு ஓராயிரம் ஆசைக் கனவுகளோடு ஓடிவந்து ஏமாந்தார்கள் இருக்க இடமின்றி நடுத்தெருவில் நின்றார்கள். "இனி சண்டையில்லை. சமாதானமாம். அவையவை அவையினர் வீடுகளில் இருக்கலாம் என்றினமே?" பெரும் ஏமாற்றம் அவர்களைத் தாக்கியது. இராணுவத்தினரின் முகாமுள்ள விடங்களிலும் உயர் பாதுகாப்பு வளையங்களுள்ளும் எவருக்கும் மீளக் குடியமர அனுமதியில்லையாம். யாழ்ப்பாணக் குடா நாட்டின் வடபெரும்பகுதி. அவர்களின் மாவிட்டபுரம் உட்பட இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வளையத்தினுள் அடங்கிக்கிடந்தது. "வன்னியிலேயே இருந்திருக்கலாம்" என பாக்கியம் விம்மினாள். "கெதியில விடுவினமாம். இங்கினேக்க இருப்பம்." மாவிட்டபுரத்தினை இராணுவம் ஆக்கிரமித்ததும், அவர்கள் அடைக்கலம் தேடி அளவெட்டிக்குச் சென்றார்கள். அவர்களை முதலில் ஆதரித்த வெளிநாட்டுக்காரர் ஒருவரின் வீட்டில் அவனைப் போல ஆறுகுடும்பங்கள் இப்பொழுது குடியேறியிருந்தன. அங்கும் இருக்க இடம் கிடைக்கவில்லை. பரிதவித்து நின்றபோது, பழைய தோழன் பொன்னுத் தரை உதவ முன் வந்தான். "கவலைப்படாதை இராசதுரை. நாங்கள் களமேடு அகதி முகாமில் இருக்கிறம். எங்களுக்கு அங்க ஒரு நிறுவனம் சின்ன ஒரு வீடு கட்டிக் கொடுத்திருக்குது. நான் முதலில் இருந்த குடிசையைப் பிரிக்காமல் வைச்சிருக்கிறன். அதில் வந்து இப்போது பிள்ளையோடு இரு. பிறகு பார்ப்பம்." மீண்டும் குடிசைக்குள் முடங்கிக்கொள்ள நேர்ந்தது. எட்டுப்பரப்புக் காணிக்குள் முப்பதுக்கு மேற்பட்ட குடும்பங்கள் முடங்கிக்கிடந்தன. அசைய இடமில்லை. ஒரு குழாய்க்கிணறு நூற்றியிருபது பேருக்கு நாள் முழுவதும் நீரிறைத்து சிலவேளைகளில் காற்றினைக் குழாய் வழி கக்கியது. நான்கு மலசல கூடங்கள் காலை வேளைகளில் திணறின. மலக்குழிகள் வேறு அடிக்கடி நிரம்பிப் பிரச்னை தந்தன. சிறிது நேர மழைப் பொழிவில் நிரம்பிய வீதி வெள்ளம் பாதங்களை மூடிவிட்டது. இராசதுரை வேகமாக ஓடிவந்தான். ஈர்க்கும் கூரைக்குடிசைக்குள் பிள்ளைகள் என்ன பாடோ? இப்படி மழைபொழிந்த ஒரு மாரிப் பொழுதில் தான் நெஞ்சு வலிக்கிறதென்று மார்பினைப் பற்றியபடி சரிந்த பாக்கியம் மீண்டும் எழுந்தமரவில்லை. மாவிட்டபுரத்தில் மீளக்குடியேறும் கனவு நிறைவேறாமலே மண்ணில் எரிந்து சாம்பலாகிப் போனாள். எப்படி வாழ்ந்தவள்? ஐந்து பிள்ளைகளையும் அவன் பொறுப்பில் கொடுத்துவிட்டு மறைந்து போனாள். முழுப்பொறுப்பும் மூத்தவள் வசந்தி தலையில் விழுந்ததும் அவள் பாடசாலைக்குச் செல்லல் முற்றுப் பெற்றது. மாதாமாதம் கிடைக்காமல் உலர் உணவுப் பொருட்கள் அவர்களுக்குப் போதுமானதாகவில்லை. அவன் நேர காலம் பார்க்காமல் உழைக்க நேர்ந்தது. மாரி மழை இரைசலுடன் மீண்டும் பாட்டம்பாட்டமாகப் பொழியத் தொடங்கியது. தூரத்தில் அவன் வாழ்கின்ற அகதி முகாம் வெள்ளத்துள் மூழ்கிக்கிடப்பது தெரிகிறது. கூரையை மழைக்கு முன்னர் வேய்ந்துவிட அவன் எவ்வளவோ முயற்சிகள் செய்தான். அவை பலிதமாகவில்லை. கிராம சேவகர் மூலம் ஏதாவது உதவிகள் கிடைக்குமா என்று பலதடவைகள் ஓடியலைந்தான். "இதோ பார் இராசதுரை. நீ உரியமுறையில் பதிந்து இந்த முகாமிற்கு வரவில்லை. அடாத்தாகத் குடியேறியிருக்கிறாய். அதனால அரசு சார்பற்ற நிறுவனங்கள் வழங்குகின்ற உதவிகள் உனக்குக் கிடையாது. பாய், பிளாஸ்ரிக் பாத்திரங்கள், செமிபேமனன்ற வீட்டிற்கான பணம். எதுவும் கிடையாது" என்றார் விதானையார். எனக்கு அலையள் கிள்ளிக்கொடுத்துவிட்டு அள்ளிக் கொண்டு போகிற சங்கதிகள் பிரச்னையில்லை. எங்கட துயரத்தை அந்த வெளிநாட்டு நிறுவனங்கள் வியாபாரமாக்கிவிட்டன. மீளக்குடியேற வருபவர்களுக்கு இருபத்தையாயிரம் அரசு கொடுக்குது. அதுதான் எனக்கு வேணும். தந்தியள் எண்டால் குடிசையைத் திருத்தி கிடுகு வாங்கிக் கூரையை வேய்ந்திடுவேன்.", "நீ உன்ர சொந்தவிடத்தில் குடியேறினால் தான் அது உனக்குக் கிடைக்கும்". அவன் விக்கித்துப்போய் அவரைப் பார்த்தான். "குடியேற விடுங்களேன்? நாங்களா வேணாமென்றம்?" இவன் பாதிக்கப்பட்டவன். அவன் ஆவேசத்தின் காரணம் கிராமசேவையாளருக்குப் புரியாமலில்லை. அவனைப்போல எத்தனை மனிதர்கள் அங்குள்ளனர்? பார்த்துப்பார்த்து அவர்களின் துயரங்களைக் கேட்டுக்கேட்டு நெஞ்சமும் அவருக்கு மரத்துவிட்டது. இராசதுரையை வியப்புடன் கிராம சேவையாளர் ஏறிட்டார். எவ்வளவு அற்புதமாக வெளிநாட்டு நிறுவனங்களை அவன் கணித்திருக்கிறான். "இராசதுரை, அப்படி முற்று முழுதாகச் சொல்லிவிடாதை. அந்த நிறுவனங்கள் இல்லாவிட்டால் இருக்கவும் இடமில்லாமல் எத்தனை குடும்பங்கள் தவித்திருக்கும் தெரியுமா?", "விதானையார் இப்ப இருக்கவிடமில்லாமல் தவிக்கிறது. வலிகாமம் வடக்கு மக்கள் தான். நீங்கள் அல்ல. யாழ்ப்பாணத்தவரல்ல வன்னி மக்கள் இல்லை. நீங்க எல்லாரும் உங்கட உங்கட வளவுகளில் வீடுகளில் இருக்கிறியள். நாங்க... இருபது வரியமாக அலையிறம். உயர் பாதுகாப்பு வளையம் என்று ஒரு எல்லையை வகுத்து எங்கட வளவுகளையும் வீடுகளையும் அநியாயக்காரர் ஆக்கிரமித்ததால் அகதிகளாகியது நாங்கதான். வலி உங்களுக்கல்ல. எங்களுக்குத்தான். எங்களது போராட்ட உணர்வை மழுங்கடிக்க அகதி முகாம். உலர் உணவு, பிளாஸ்ரிக் பாத்திரங்கள், கூரை விரிப்புகள் என்று பிச்சை தந்து உணர்ச்சியை அடக்கிவிட்டினம். எங்களைத் தவிக்க விட்டிருந்தால் தெரிந்திருக்கும் எங்கட ஊருக்கு புகுந்திருப்பம்." என்றான் இராசதுரை ஆவேசமாக. "ஆமி சுட்டுத் தள்ளியிருக்கும்.", "எத்தனை பேரை? ஒரு நூறு பேரை? ஆயிரம் பேரை? அதுக்கும் கூட? நாங்க அறுபதினாயிரம் பேர் எங்கட குடிநிலத்தை இழந்து தவிக்கிறம் விதானையார். நான் வாறன் விதானையார்." அவனைப்பார்த்தபடி அவர் நின்றிருந்தார். மழைவிடுவதாகவில்லை. பொழிந்து கொட்டியது. அவன் வீட்டை அடைந்தபோது குடிசை வெறிச்சிட்டுக்கிடந்தது. "ஐயோ" என இதயம் பதறியது பிள்ளைகளின் பெயர் சொல்லி கூச்சலிட்டான். எவரையும் காணவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தான். வெள்ளக்காடாக எங்கும் விரிந்து கிடந்தது எவரையும் காணோம். "தம்பி இராசதுரை... எல்லாரும் பள்ளிக்கூடத்தில். ஒதுங்கிவிட்டனம் ஆங்க போ..", "நீயும் வானை ஆச்சி...", "நான் வாறன் நீ போ," மனம் அமைதி கண்டது. இரவு முழுவதும் விறைக்கும் குளிரில் நடுங்கியபடி அவர்கள் அப்பாடசாலைக் கட்டடத்தில் அமர்ந்திருந்தனர். இராசதுரை நனைந்திருந்த பாணைப் பிள்ளைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். நாளை காலை பாடசாலை அதிபர் பிரதேசச் செயலரிடம் ஓடிப்போகப் போகிறார். "சேர் வந்து ஒருக்காப் பாருங்கோ.... பள்ளிக் கூடமிருக்கிற நிலையை. அதுகள் அதுக்குள்ள வந்து தங்கி நாறிப்போய் கிடக்குது. இனித் துப்பரவாக்கிறதென்ன? பள்ளிக்கூடம் நடத்துறதென்ன? "அப்படிச் சொல்லிப் போட்டு வரட்டும். நாயை அடிக்கிற மாதிரி உதைக்கிறன். சொந்த வீட்டில் சொகுசாக இருந்துகொண்டு...." அடுத்தநாள் பலர் வாகனங்களில் பாட சாலைக்கு வந்திறங்கினர். பிரதேசக் செயலாளர், கிராம சேவகர், சமூகசேவை அதிகாரி... இன்னும் ஒரு வெள்ளைக்காரர்... அரசு சார்பற்ற நிறுவனத்தின் ஒரு லொறி நிறைந்த பொருட்களுடன் வந்திறங்கினர். பிரதேசச் செயலரின் விழிகளில் பரிவு தெரிந்தது. "எங்கட சொந்தவிடங்களில் போய் இருக்க அனுமதி பெற்றுத் தாருங்க சேர்" என்று வேண்டினான். பொன்னுத்துரை. "நாங்க இருபது வரியமாக அனுபவிக்கிற வேதனை காணும். ஏங்களுக்கு ஒன்றும் வேண்டாம் சேர்... எங்கட இடம் தான் வேணும். "இப்ப சமாதானம் வந்திட்டுதானே?", "ஆருக்கு சேர் வந்திருக்குது?" என இராசதுரை சத்தமிட்டான். "உங்களுக்குத் தான் வந்திருக்குது. யாழ்ப்பாணத்தின் வாழுகிறவைக்கு வந்திருக்குது... வன்னியில இருக்கறவைக்கும் வந்திருக்குது... எங்களுக்கல்ல. வலிகாமம் வடக்குக்காரருக்கல்ல. அகதி முகாம்களில் வாழுகிற எங்களைப் போன்ற பரதேசிகளுக்கல்ல. யுத்தமில்லாத இந்தக் காலத்தில் உங்களுக்குத் தான் கொண்டாட்டம் அவ்விடத்தில் அமைதி நிலவியது. அவனை எல்லாரும் வியப்புடன் பார்த்தனர். "ஓலைக்கூரை வீட்டுக்காரர் வாருங்கோ... தறப்பாள் கொண்டு வந்திருக்கிறம். கூரைக்குப் போட்டு ஒழுகாமல் செய்திட்டு இருங்கோ. ஏல்லாரும் வரிசையாக வந்து வாங்கிக் கொண்டனர். இராசதுரை எழுந்து வந்தான். "இராசதுரைக்கு இரண்டு தறப்பாள் வேணும் சேர். குடிசை அப்படிக் கூரையில..." என்ற விதானையார் பரிந்துரைத்தார். "எனக்கெதுவும் வேணாம் சேர்." என்றான் இராசதுரை. "தம்பி... கெதியில் பேச்சு வார்த்தை புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் மீண்டும் தொடங்க இருக்குது. சரியாக வந்திடும். எல்லாரும் அவரவர் இடங்களுக்குப் போகலாம். இராசதுரை பிரதேசச் செயலாளரை ஏளனமாகப் பார்த்தான். "நம்பச் சொல்லுறியளா சேர். எத்தனை வரியமாகச் சொல்லிறியள். எந்தச் சிங்கள அரசாவது நீங்க கேட்கிறதைத் தூக்கிக் கொடுத்து விடப் போவதில்லை. சமாதானம் வந்திட்டுது எல்லாரும் அவரவர் இடத்திற்குப் போகலாம் எண்டியவள். நம்பி ஓடிவந்தம். இப்ப பேச்சு வார்த்தை... முடியட்டும் என்கிறியள்.... இந்தச் சமாதானம் பேச்சுவார்த்தை எதுவும் எங்களுக்கு வேணாம். எனக்கு என்ற மாவிட்டபுரம் வேணும்... அங்க என்ற வளவு வேணும். இவங்க ஒரு போதும் தரப்போவதில்லை. நாங்களாத்தான் எடுத்துக் கொள்ள வேணும். என்னைப் பொறுத்தவரையில் இன்னமும் சண்டை முடியவில்லை. சேர். சமாதான சுகத்தையும் போரில்லா இனிமையும் நாங்க அனுபவிக்கவில்லை. தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த உலகத்தையே அழித்திடச் சொன்ன பாரதியைத் தெரியுமா சேர்? நீங்க எழுத்தாளர் உங்களுக்குத் தெரியும். நாங்க ஒருவரல்ல அறுபதினாயிரம் பேர்... எங்க பிரதேசத்தை மீட்டுத்தாருங்க. உங்களோட சேர்ந்து நாங்களும் சுகத்தை அனுபவிக்கிறம். இல்லாட்டில் எங்களோட சேர்ந்து நீங்களும் அழியத் தயாராகுங்க. போங்க சேர். நாங்க இப்பவும் அடிமைச் சாதியள்.", "அதுகளைவிடு... இந்தா இந்தத் தறப்பாளை வாங்கிக் கொள் தம்பி" நீட்டிய தறப்பாளை வாங்கிய இராசதுரை அவற்றினை அப்படியே முற்றத்தில் தேங்கிக்கிடந்த வெள்ளத்தில் வீசிவிட்டு.... "வாருங்கோ பிள்ளையள்" என்றபடி மழையில் இறங்கி நடக்கத் தொடங்கினான்... |
உழவன் ஒருவன் வீட்டில் வெள்ளாடும் செம்மறி ஆடும் இருந்தன. அவை இரண்டும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. எங்கே சென்றாலும் ஒன்றாகவே சென்றன. தோட்டத்தில் விளையும் செடிகளை எல்லாம் அவை கடித்து நாசம் செய்தன. கோபம் கொண்ட உழவன், நீங்கள் இனிமேல் இங்கே இருக்கக் கூடாது. இருந்தால் உங்களைக் கொன்று விடுவேன். எங்காவது போய் விடுங்கள், என்று விரட்டினான். இரண்டு ஆடுகளும் தங்கள் பொருள்களை ஒரு சாக்குப் பையில் போட்டன. அந்தப் பையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டன. செம்மறி ஆடு வலிமை உள்ளதாக இருந்தது. ஆனால் கோழையாக இருந்தது. மாறாக வெள்ளாடோ வீரத்துடன் விளங்கியது. ஆனால் வலிமை இல்லாமல் இருந்தது. சிறிது தூரம் நடந்த இரண்டும் ஒரு வயலை அடைந்தன. அங்கே இறந்து போன ஓநாய் ஒன்றின் தலை கிடந்தது. அந்த ஓநாயின் தலையை எடுத்துக் கொள். நீதான் வலிமையுடன் இருக்கிறாய், என்றது வெள்ளாடு. என்னால் முடியாது நீதான் வீரன். நீயே எடு, என்றது செம்மறி ஆடு. இரண்டும் சேர்ந்து அந்த ஓநாயின் தலையைச் சாக்கிற்குள் போட்டன. சாக்கைத் தூக்கிக் கொண்டு இரண்டும் நடந்தன. சிறிது தொலைவில் நெருப்பு வெளிச்சத்தை அவை பார்த்தன. அந்த நெருப்பு எரிகின்ற இடத்திற்குப் போவோம். குளிருக்கு இதமாக இருக்கும். ஓநாய்ளிடம் இருந்தும் நாம் தப்பித்துக் கொள்ளலாம், என்றது வெள்ளாடு. இரண்டும் நெருப்பு இருந்த இடத்தை நோக்கி நடந்தன. அருகில் சென்றதும் அவை அதிர்ச்சி அடைந்தன. அங்கே மூன்று ஓநாய்கள் உணவு சமைத்துக் கொண்டிருந்தன. ஓநாய்கள் தங்களைப் பார்த்து விட்டன. தப்பிக்க வழியில்லை, என்பதை உயர்ந்தன ஆடுகள். நண்பர்களே! நீங்கள் நலந்தானே என்று தைரியத்துடன் கேட்டது வெள்ளாடு. அச்சத்தால் செம்மறி ஆட்டின் கால்கள் நடுங்கின. நண்பர்களா நாய்கள்? எங்கள் உணவு தயார் ஆகட்டும். அதன் பிறகு உங்களைக் கவனிக்கிறோம். எங்கே ஓடிவிடப் போகிறீர்கள்? என்றது ஒரு ஓநாய். இவற்றிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தது வெள்ளாடு. செம்மறி ஆடே! இன்று நாம் கொன்றோமே ஓநாய்கள். அவற்றில் ஒன்றின் தலையை எடுத்து இவர்களிடம் காட்டு. நாம் யார் என்பது புரியும்? என்று உரத்த குரலில் சொன்னது அது. செம்மறி ஆட்டிற்கு அதன் திட்டம் புரிந்தது. சாக்கிற்குள் கையை விட்டு ஓநாயின் தலையை எடுத்தது. ஏ! முட்டாள் ஆடே! பெரிய ஓநாயின் தலையை எடுத்துக் காட்டு என்றேன். நீ சிறிய தலையை எடுத்துக் காட்டுகிறாயே, பெரியதை எடு, என்று கத்தியது வெள்ளாடு. அந்தத் தலையைச் சாக்கிற்குள் போட்டது செம்மறி ஆடு. மீண்டும் அதே தலையை வெளியே எடுத்துக் காட்டியது. கோபம் கொண்டது போல் நடித்தது வெள்ளாடு. இருக்கின்ற ஓநாய்த் தலைகளில் பெரியதை எடு. மீண்டும் நீ சிறிய தலைகளையே எடுத்துக் காட்டுகிறாய். இதைப் போட்டுவிட்டு பெரிய தலையாக எடு, என்று கத்தியது. அந்தத் தலையைப் போட்டுவிட்டு அதே தலையை மீண்டும் வெளியே எடுத்தது செம்மறி ஆடு. இதைப் பார்த்த மூன்று ஓநாய்களும் நடுங்கின. இவை சாதாரண ஆடுகள் அல்ல. நீ அவற்றைக் கேலி செய்திருக்கக் கூடாது. சாக்கிற்குள் இருந்து ஒவ்வொரு ஓநாய்த் தலையாக எடுக்கின்றன, என்றது ஒரு ஓநாய். மூன்றும் சிறிது நேரம் அமைதியாக இருந்தன. ஆடுகளைப் பார்த்து ஓநாய் ஒன்று, உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, குழம்பு நன்றாகக் கொதிக்கிறது, இன்னும் சிறிது தண்ணீர் ஊற்ற வேண்டும், நான் சென்று தண்ணீர் கொண்டு வருகிறேன், என்று புறப்பட்டது. சிறிது நேரம் சென்றது. இரண்டாவது ஓநாய், அந்த ஓநாயிற்கு நம் அவசரமே தெரியாது. போய் எவ்வளவு ஆகிறது? நான் சென்று அதை அழைத்துக் கொண்டு தண்ணீருடன் வருகிறேன், என்று புறப்பட்டது. பரபரப்புடன் இருந்த மூன்றாவது ஓநாய், இருவரும் எங்கே தொலைந்தார்கள்? நான் சென்று அவர்களை அழைத்து வருகிறேன் என்று புறப்பட்டது. தப்பித்தோம் என்ற மகிழ்ச்சியில் ஓட்டம் பிடித்தது. செம்மறி ஆடே! நம் திட்டம் வெற்றி பெற்று விட்டது. ஓநாய்களிடம் இருந்து தப்பித்து விட்டோம். விரைவாகச் சாப்பிட்டுவிட்டு இங்கிருந்து புறப்படுவோம். உண்மை தெரிந்து மீண்டும் அவை இங்கே வரும், என்றது வெள்ளாடு. இரண்டும் அங்கிருந்த உணவை வயிறு முட்ட உண்டன. மகிழ்ச்சியுடன் ஏப்பம் விட்டுக் கொண்டே புறப்பட்டன. ஓடிய மூன்று ஓநாய்களும் வழியில் சந்தித்தன. ஆடுகளுக்குப் பயந்தா நாம் ஓடி வருவது? என்று கேட்டது ஒரு ஓநாய். நம்மை அவை ஏமாற்றி இருக்கின்றன. நாமும் ஏமாந்து விட்டோம், என்றது இன்னொரு ஓநாய். மூன்றாவது ஓநாய், நாம் உடனே அங்கு செல்வோம், அவற்றைக் கொன்று தின்போம், என்றது. மூன்று ஓநாய்களும் அங்கு வந்தன. உணவை உண்டு விட்டு இரண்டு ஆடுகளும் ஓடி விட்டதை அறிந்தன. ஏமாந்து போன ஓநாய்கள் பற்களை நறநறவென்று கடித்தன. பாவம் அவற்றால் வேறு என்ன செய்ய முடியும்?
|
முல்லாவின் வீட்டிற்கு அருகில் ஒரு செல்வந்தன் வீடு இருந்தது. அவனிடம் ஏராளமான
பணமும் மற்றும் வீடு வாசல், தோட்டம் துறவு என சொத்துக்களும் நிறைய இருந்தன. ஆனால்
அந்த செல்வந்தன் ஒருநாள் கூட மகிழ்ச்சியாக இருந்ததில்லை. முல்லாவை சந்திக்கும் போதெல்லாம், " என்னால் ஒரு நிமிஷங்கூட மகிழ்ச்சியுடன் இருக்க
முடியவில்லை. எப்பொழுது பார்த்தாலும் கவலையாகவும், கலக்கமாகவும் அல்லவா இருக்கிறது.
நான் கொஞ்ச நேரமாவது மகிழ்ச்சியுடன் இருக்க முல்லா அவர்களே எனக்கு ஒரு யோசனை கூறக்
கூடாதா?" என்று பரிதாபமாகக் கேட்டார். செல்வந்தன் ஒரு பெரிய பேழையில் தன்னுடைய பணத்தையெல்லாம் சிறுசிறு மூட்டைகளாகக்
கட்டிப் போட்டு வைத்திருந்தான். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவன் அந்தப் பணப் பைகளை ஒவ்வொன்றாக எடுத்துப்
பார்த்துப் பார்த்து வைப்பான். முல்லா அவன் வீட்டுக்கு அடிக்கடி சென்று அவனுடன் பொழுது போக்காகப் பேசிக்
கொண்டிருந்து விட்டு வருவது வழக்கம். அன்றும் அவர் வழக்கம்போல செல்வந்தன் வீட்டுக்கு வந்தார். அந்தச் சமயத்தில் செல்வந்தர் பணப் பெட்டியைத் திறந்து பணமூட்டைகளை எடுத்துப்
பார்த்து
விட்டு வைத்துக் கொண்டிருந்தார். " என்ன ஐயா செய்து கொண்டிருக்கிறீர்கள் " என்று கேட்டவாறு பணப்பெட்டி இருக்குமிடத்தை
நோக்கி நடந்தார் முல்லா. முல்லா வீட்டுக்குள் வருவதைக் கண்ட செல்வந்தன் அவசர அவசரமாகப் பணப் பைகளைப்
பெட்டியில் வைத்துப் பூட்டத் தொடங்கினான். அப்போது அவனுடைய பணப் பைகளில் ஒன்று செல்வந்தன் அறியாமலே பணப் பெட்டிக்கு
அருகாமையில் விழுந்து விட்டது. செல்வந்தன் அதைக் கவனிக்கவில்லை ஆனால் முல்லா கவனித்தார். உடனே அவர் பாய்ந்து சென்று பணப் பையைத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடினார். " ஐயோ என் பணப்பை போய் விட்டதே" என்று கூக்குரலிட்டவாறு முல்லாவைத் துரத்திக்
கொண்டு செல்வந்தன் ஓடினான். முல்லா இரண்டொரு தெருக்கள் வழியாக வேண்டுமென்றே ஓடினார். செல்வந்தன் பணம் போய் விட்டதே என்று கூக்குரலிட்ட வண்ணம் முல்லாவைப் பின் தொடர்ந்து ஒடினான். முல்லா கடைசியாக செல்வந்தன் வீட்டுக்கே ஓடி வந்தார். பணப்பையை அவனுடைய பணப்
பெட்டியின் மீது தொப்பெனப் போட்டார். செல்வந்தன் ஓடி வந்து பணப் பையைத் தூக்கிக் கொண்டு அப்பாடி இப்பொழுது தான் எனக்கு
மகிழ்ச்சியாக இருக்கிறது என்ற மலர்ந்த முகத்துடன் கூறினான். பிறகு " முல்லா அவர்களே எதற்காக என் பணத்தைத் தூக்கிக் கொண்டு ஓடினீர். இந்தப் பணம்
கிடைக்காவிட்டால் என் உயிரே போயிருக்கும் " என்றார். " இப்பொழுது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதா?" என்று முல்லா கேட்டார். " மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை முல்லா பறிபோய் விட்டது என்று நான் நினைத்த பணம்
திரும்பக் கிடைத்து விட்டதே! என் மகிழ்ச்சிக்குச் சொல்லவும் வேண்டுமா?" என்று
கூறினான் செல்வந்தன். " எதற்காகப் பணத்தைத் தூக்கிக் கொண்டு ஓடினேன் என்று கேட்டீரல்லவா? உமக்கு கொஞ்ச
நேரமாவது மகிழ்ச்சியை ஊட்டலாமே என்பதற்காகத் தான் பணத்தைத் தூக்கிக் கொண்டு ஓடினேன்
உம்மால் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்று கூறினீர் அல்லவா ? அதற்காகத்தான் உமக்கு மகிழச்சியை ஏற்படுத்த வேண்டுமே என்று பணத்தைத் தூக்கிக்
கொண்டு ஓடினேன் " என்றார் முல்லா. |
முல்லா ஒரு புதிய சுவர் கடிகாரம் வாங்கி வந்தார்.அதை சுவரில் மாட்ட ஆணி அடிக்க அவரிடம் சுத்தியல் இல்லை! பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்க வேண்டும்.நேரம் இரவாகிவிட்டது.இந்நேரம் போய் கேட்பது சரியல்ல ம்றுநாள் காலையில் கேட்க்கலாம் என் நினைத்து தூங்க சென்றார்.மறுநாள் காலை எழுந்ததும் கடிகாரம் நினைவுக்கு வந்தது.பக்கத்து வீட்டுக்காரரிடம் சுத்தியல் கேட்க எண்ணியபோது அன்று வெள்ளிக்கிழமை என்பது நினைவுக்கு வந்தது! இன்று போய் கேட்டால் ஏதாவது நினைத்துக்கொள்வாரோ? என எண்ணி அன்றும் சுத்தியல் வாங்கவில்லை!.மறுநாள் போய்கேட்க முடிவு செய்து பக்கத்து வீட்டை நெருங்கினார்.பக்கத்து வீட்டில் நிறைய விருந்தினர்கள் வந்திருப்பதை பார்த்து கேட்காமலே திரும்பினார்.இப்படி பல காரணங்களினால் ஒரு வாரமாகியும் முல்லாவால் கடிகாரத்தை மாட்ட முடியவில்லை! அன்று வாங்கி வந்த கடிகாரம் அவரை பார்த்து சிரிப்பது போல இருந்த்து.உடனே விடுவிடு என பக்கத்து வீட்டுக்கு சென்றார்.பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து"உன் சுத்தியலை நீயே வைத்துக்கொள்! எனக்கு தேவையில்லை"பொல்லாத சுத்தியல்!நீ மட்டும் தான் சுத்தியல் வைத்திருக்கின்றாயா?" என கோபமாக பேசினார்.பக்கத்துவீட்டுக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை!பரிதாபமாக முல்லாவை பார்த்தார். ந்ம்மில் பலரும் இப்படித்தான் மனதில் உள்ளதை தெளிவாக பேசாமல் மனதில் ஒன்றை வைத்து பேசி பிரச்சினைகளுக்கு காரணமாகின்றோம் என்பதே இக்கதையின் நீதி!! |
பீர்பால், அறிவாற்றலும் புத்திக்கூர்மையும் உள்ளவர். எவ்வளவு பெரிய சிக்கலையும், தமது அறிவுத் திறமையாலே சமாளித்து விடுவார்னு கேள்விப்பட்ட காபூல் அரசருக்கு, பீர்பாலின் அறிவாற்றலை ஆராய்ந்து அறிய ஆவல் ஏற்பட்டது. அதனால ஒரு கடிதத்துல, மேன்மை தாங்கிய அக்பர் சக்ரவர்த்தி அவர்களுக்கு, ஆண்டவன் தங்களுக்கு நலன்கள் பலவும், வெற்றிகள் பலவும் தருவாராக. தாங்கள் எனக்கு ஒரு குடம் அதிசயம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்னு எழுதி கையெழுத்துப் போட்டு, தூதன் மூலமா அக்பருக்கு அனுப்பினாரு காபூல் அரசர். கடிதத்தைப் படிச்ச அக்பர் திகைச்சு, ஒரு குடம் அதிசயம் அனுப்புவதா? ஒன்றுமே புரியவில்லையேன்னு குழம்பி, பீர்பால்கிட்ட கடிதத்தை காட்டினாரு. பீர்பால் சிறிது நேரம் யோசிச்சாரு. அப்புறம், அக்பரிடம் மூன்று மாதத்தில் அதிசயம் அனுப்புவதாக பதில் எழுதுமாறு சொன்னார். அக்பரும் அதேபோல் தபால் எழுதி அனுப்பினாரு. அப்புறம் அக்பர், பீர்பாலிடம், ஒரு குடம் அதிசயம் எப்படி அனுப்புவீர்?னு விசாரிச்சாரு. அதுக்கு பீர்பால், மூன்று மாதம் கழித்து அந்த அதிசயத்தைப் பாருங்களேன்னாரு. பிறகு பீர்பால் ஒரு மண் குடத்தை எடுத்தார். ஒரு பூசணிக்கொடியில் காச்சிருந்த பூசணிப்பிஞ்சு ஒண்ணை கொடியோட மண் குடத்திற்குள் வைத்தார். வைக்கோலால் குடத்ததை மூடினாரு. நாளாக நாளாக பூசணிப் பிஞ்சு குடத்திற்குள்ளேயே நன்றாக வளர்ந்து பெருத்தது. குடம் நிறையுமளவிற்கு பூசணிக்காய் பெருத்ததும், பூசணிக்காயைத் தவிர மற்ற வைக்கோல், கொடி, காயின் காம்பு எல்லாவற்றையும் கத்தரித்து விட்டார் பீர்பால். இப்போ அந்தக் குடத்தை அக்பரிடம் காட்டினார் பீர்பால். அக்பருக்கு ஆச்சரியம். குடத்தின் வாயோ உள்ளே இருக்கும் பூசணிக்காயைவிட மிகவும் சிறியது. இதனுள் இவ்வளவு பெரிய பூசணிக்காயை எப்படி நுழைத்தார்னு. பீர்பால் அதை விளக்கிவிட்டு, அந்தப் பூசணிக்காய் குடத்தை அப்படியே காபூல் அரசனுக்கு, அதிசயம்னு அனுப்பினாரு. அதைப் பார்த்த காபூல் அரசன் பீர்பாலோட புத்திக் கூர்மையை எண்ணி வியந்தாராம்.
|
ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான். இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும். குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும். இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது. "ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்" அதற்கு விவசாயி, "பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்" இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.
|
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று அரசு செய்து கொண்டிருந்தது. அதற்கு அமைச்சர்களாக ஒரு நரியும், ஒரு புலியும், ஒரு காக்கையும் இருந்து வந்தன. ஒரு நாள் ஒட்டகம் ஒன்று வழிதப்பி அந்தக் காட்டுக்குள் வந்து விட்டது. அதைக் கண்ட காகம், சிங்கத்தினிடம் அழைத்துக் கொண்டு வந்து விட்டது. சிங்கம் அதற்கு அடைக்கலம் கொடுத்து, அதையும் தன் அமைச்சர்களில் ஒருவனாக இருக்கும்படி கூறியது. எல்லாம் ஒன்றாகப் பல நாட்கள் இருந்தன. ஒரு நாள் சிங்கம் நோயுற்றிருந்ததால், தன் அமைச் சர்களாகிய புலி, நரி, காகம், ஒட்டகம் ஆகியவற் றைப் பார்த்து, என் பசியைத் தீர்க்க ஏதாவது இரை தேடிக் கொண்டு வாருங்கள்" என்று கூறியது. அவை நான்கும் காடெல்லாம் சுற்றித் திரிந்து எங்கும் இரை கிடைக்காமல் திரும்பி வந்தன. ஒட்டகத்திற்குத் தெரியாமல், காகம் மற்ற இரண்டையும் அழைத்துக் கொண்டு சிங்க மன்னனிடம் சென்றது. ‘மன்னா, காடு முழுவதும் தேடிப் பார்த்து விட்டோம். எங்கும் இரை கிடைக்கவில்லை" என்று காகம் கூறியது. "அப்படியானால் என் பசிக்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்? உங்கள் கருத்து என்ன?" என்று சிங்கம் கேட்டது. மன்னா ஒட்டகம் இருக்கிறதே!" என்று காகம் கூறியது. ‘சிவசிவ! நினைப்பதும் பாவம்" என்று சிங்கம் தன் காதுகளை மூடிக் கொண்டது. "மன்னவா, ஒரு குடியைக் காப்பாற்ற ஒருவனைக் கொல்லலாம். ஒரு நகரைக் காப்பாற்ற ஒரு குடியைக் கெடுக்கலாம். ஒரு நாட்டைக் காப்பாற்ற ஒரு நகரையே அழிக்கலாம். இந்த நீதியைக் கொண்டுதான், பஞ்ச பாண்டவர்கள், தங்கள் மகன் அரவானைப் போர்க்களத்தில் பலியிட்டு வெற்றி அடைந்தார்கள்" என்று காகம் எடுத்துக் கூறியது. ‘அடைக்கலமாக வந்தவர்களை அழிப்பது சரி யல்ல என்று மீண்டும் சிங்கம் மறுத்துக் கூறியது. ‘அரசே, அடைக்கலமாக வந்ததை நீங்களாகக் கொல்ல வேண்டாம். அதன் ஒப்புதலின் பேரிலேயே அதைக் கொன்று பசி தீரலாம் என்று காகம் கூறியது. சிங்கம் அதற்குப் பதில் எதுவும் கூற வில்லை. காகம், அது பேசாமல் இருப்பதே ஒப்பியதாகும் என்று எண்ணிக் கொண்டு, நரியையும் புலி யையும் கூட்டிக் கொண்டு அவ்விடத்தை விட்டுச் சென்றது. ஒட்டகம் வந்தவுடன், நான்குமாக மீண்டும் சிங்க மன்னனிடம் வந்தன. ‘அரசே! இந்தக் காடு முழுவதும் இரையே அகப்படவில்லை. என்னைக் கொன்று உண்ணுங்கள்" என்று காகம் கூறியது. ‘உன்னுடலும் எனக்கோர் உணவாகுமா?" என்று சிங்கம் பதில் கூறியது. உடனே நரி, என்னைத் தின்னுங்கள்" என்றது. ‘உன்னைத் தின்றாலும் என் பசியடங்காதே? என்று சிங்கம் கூறியது. புலி முன் வந்து, அரசே என்னைச் சாப்பிடுங்கள்!" என்று வேண்டியது, "நீயும் என் பசிக்குப் போதுமானவன் அல்ல" என்று மீண்டும் சிங்கம் மறுத்துக் கூறியது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒட்டகம் நம்மைக் கொல்லத்தான் சூழ்ச்சி நடக்கிறது" என்று தெரிந்து கொண்டது. ஆயினும் வேறு வழியில்லாமல், அரசே, நான் மிகுந்த தசை உடையவன், என்னைக் கொன்று தின்னுங்கள்? என்று கூறியது. அது சொல்லி முடிப்பதற்கு முன்னால், சிங்கம் என்ன சொல்கிறது என்பதையும் எதிர் பார்க்காமல், புலி அதன் மேல் பாய்ந்தது. சிங்கம் இறந்து போன ஒட்டகத்தின் இரத்தத் தைக் குடித்தது. புலி அதன் மூளையைச் சுவைத்துத் தின்றது. நரி அதன் ஈரலைக் கடித்துத் தின்று மகிழ்ந்தது. காகமோ, தசையைக் கொத்தித் தின்று வயிறு புடைத்தது. கொடியவர்களுடன் கூடியவர்கள் மடிவது திண்ணம் என்பதை இந்தக் கதை எடுத்துக் காட்டுகிறது. |
ஒரு வியாபாரி உப்பு வாங்குவதற்காகத் தன் கழுதையைக் கடற்கரைக்கு ஓட்டிச் சென்றார். போகிற வழியில் ஓர் ஓடை இருந்தது. திரும்பி வரும்போது கால்தவறிக் கழுதை ஓடையில் விழுந்தது. தண்ணீரில் உப்பு கரைந்து போனதால், கழுதை எழுந்த போது சுமையின் கனம் மிகவும் குறைந்திருந்தது. வியாபாரி திரும்பிப்போய், இன்னும் கூடுதலாக உப்பைத் தனது கோணிகளில் நிரப்பிக்கொண்டான். வேண்டுமென்றே கழுதை மீண்டும் விழுந்து தனது பாரத்தைக் குறைத்துக் கொண்டது. எனவே அது வெற்றிகரமாகக் கனைத்தது. வியாபாரிக்குக் கழுதையின் தந்திரம் புரிந்துபோகவே, மூன்றாம் முறையாக கடற்கரைக்கு அதை ஓட்டிச் சென்றான். அங்கே உப்புக்கு பதிலாகக் கடற்பஞ்சு மூட்டைகளை வாங்கினான். ஓடையை அடைந்ததும், மீண்டும் அதே தந்திரத்தைக் கழுதை செய்தது. ஆனால் கடற்பஞ்சு தண்ணீரை உறிஞ்சிக்கொண்டு மிகவும் கனத்துப் போனது. தான் செய்த தந்திரம் தன்மீதே பாயவே, கழுதை இரண்டு பங்கு பாரத்தைச் சுமந்தது.
|
ஒரு பெண்ணின் கணவன் இறந்து விட்டான். அவளுக்கு இளம் வயது, ஒரே ஒரு குழந்தை இருந்தது. அவள் தனது கணவனுடன் சிதையில் குதித்து உடன்கட்டை ஏற விரும்பினாள். ஆனால் இந்த சின்ன குழந்தை அதை தடுத்து நிறுத்தி விட்டது. அவள் அந்த குழந்தைக்காக வாழ்ந்தாக வேண்டும். ஆனால் பின் இந்த சின்ன குழந்தையும் இறந்துவிட்டது. இப்போது பாதிப்பு அதிகமாகி விட்டது. அவள் கிட்டத்தட்ட பைத்தியமாகி விட்டாள். "என்னுடைய குழந்தையை திரும்பவும் உயிர்ப்பித்து தரக் கூடிய மருத்துவர் யாரேனும் இங்கு உண்டா" நான் அவனுக்காகவே வாழ்ந்தேன். ஆனால் இப்போது எனக்கு எனது முழு வாழ்வும் இருளாகி விட்டது." என்று கேட்டு அலைந்து திரிந்தாள். இந்தியாவில் நீ மறுமணம் செய்து கொள்ள முடியாது. அதிலும் குறிப்பாக அந்த காலத்தில் அது சாத்தியமே இல்லாத ஒன்று. ஒரு பெண் மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆணின் ஆளுமை வெறி அத்தகையது. ‘ நான் இறந்து விட்டாலும்கூட………. நீ சிரமபட்டாலும் சரி, ஆனால் நீ வேறு யாரையும் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது." அப்படிப்பட்ட பொறாமை…. இதுதான் ‘இந்தியாவின் பாரம்பரியம்" என்று அழைக்கப்படுகிறது. அப்போது புத்தர் அந்த நகரத்தின் வழியே வந்தார். அதனால் மக்கள் அவளிடம், "எங்களுக்கு எந்த மருத்துவரையும் தெரியாது. ஆனால் புத்தர் வருகிறார். இது ஒரு சிறந்த தருணம். நீ உனது குழந்தையை தூக்கிக் கொண்டு புத்தரிடம் செல். நீ இந்த குழந்தைக்காவே உயிர் வாழ்ந்தாய் என்பதைக் கூறி இப்போது இது இறந்துவிட்டது என் மேல் கருணை காட்டுங்கள். இவனை உயிர்பித்து தாருங்கள் நீங்கள் ஞானமடைந்தவர் என்று கேள்." என்றனர். ஆகவே அவள் புத்தரிடம் சென்றாள். இறந்த குழந்தையின் உடலை புத்தரின் காலடியில் கிடத்தி, "இவனை உயிர்பித்து தாருங்கள். உங்களுக்கு வாழ்வின் அனைத்து மர்மங்களும் தெரியும். நீங்கள் பிரபஞ்சத்தின் உச்சியை தொட்டு விட்டீர்கள். இந்த ஏழை பெண்ணுக்காக ஒரு சிறிய அற்புதத்தை நீங்கள் செய்யக் கூடாதா?" என்று வேண்டினாள். புத்தர், "நான் செய்கிறேன், ஆனால் ஒரு நிபந்தனை!" என்றார். அவள், "அது எதுவானாலும் நான் செய்கிறேன்" என்றாள். புத்தர், "அப்படியென்றால் சரி.! நிபந்தனை இதுதான். இந்த நகரத்தைச் சுற்றி வந்து யார் வீட்டில் இது வரை சாவு எதுவும் நடக்கவில்லையோ அந்த வீட்டிலிருந்து கொஞ்சம் கடுகு விதைகள் வாங்கி வா." என்றார். அந்த கிராமத்தில் கடுகு பயிர் அறுவடை செய்து வந்தனர். எனவே புத்தர் அவளிடம், "இந்த நகரத்தை சுற்றி வந்து…………. என்றார். அந்த பெண்ணால் இதை புரிந்து கொள்ள முடிய வில்லை. அவள் ஒரு வீட்டிற்கு சென்று கேட்டாள். அவர்கள், "கொஞ்சம் கடுகென்ன? புத்தரால் உனது குழந்தைக்கு உயிர் தர முடியுமென்றால் ஒரு மாட்டு வண்டி நிறைய கடுகு வேண்டுமானாலும் தருகிறோம். ஆனால் எங்களது குடும்பத்தில் ஒருவர் அல்ல, ஏகப்பட்ட பேர் இறந்து போயிருக்கின்றனர். காலங்காலமாக நாங்கள் இங்கிருக்கிறோம். தாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு பாட்டி, தாத்தாவின் அப்பா, தாத்தாவின் அம்மா, தாத்தா, பாட்டி என எல்லோரும் இறந்து விட்டிருக்கின்றனர். நாங்கள் பலர் இந்த குடும்பத்தில் சாவதை பார்த்திருக்கிறோம். ஆதலால் இந்த கடுகினால் பயன் இல்லை. ‘எந்த குடும்பத்தில் இது வரை சாவு விழ வில்லையோ" என்பதுதானே புத்தரின் நிபந்தனை." என்றனர். அது ஒரு சிறிய கிராமம். அவள் ஒவ்வொரு வீட்டிற்க்கும் சென்று கேட்டாள். அந்த கிராமத்தில் உள்ள எல்லோரும் கடுகு தர தயாராக இருந்தனர். "எவ்வளவு கடுகு வேண்டும் உனக்கு?" ஆனால் அந்த நிபந்தனை அதுதான் சாத்தியமற்றதாக இருந்தது. எங்களுடைய குடும்பத்தில் பலர் இறந்திருக்கின்றனர்." மாலையில் அவள் புத்தரின் நடவடிக்கை பற்றி உணர்ந்தாள். மேலும் அவளுக்கு உண்மையையும் புரிந்தது. பிறக்கும் யாவரும் இறந்தே தீருவர் என்பது அவளுக்கு புரிந்தது. குழந்தையை திரும்ப உயிர்பித்து என்ன பயன் அவனும் ஒருநாள் இறந்தே தீருவான். அதற்கு பதிலாக எது இறப்பதும் பிறப்பதும் இல்லையோ அந்த அழிவற்றதை நானே தேட வேண்டியதுதானே. என்பதை உணர்ந்தாள். மாலையில் அவள் வெறும் கையுடன் திரும்பி வந்தாள். புத்தர், "எங்கே கடுகு?" என்று கேட்டார். அவள் சிரித்தாள். காலையில் அவள் அழுதவண்ணம் வந்தாள், இப்போது சிரித்தாள். அவள், "நீங்கள் தந்திரம் செய்து விட்டீர்கள், பிறக்கும் யாரும் இறக்கத்தான் வேண்டும். இந்த கிராமத்தில் மட்டுமல்ல, இந்த உலகத்திலேயே யாரும் இறக்காத குடும்பமே கிடையாது. அதனால் நான் எனது மகனை உயிர்பித்துத் தர கேட்கப் போவதில்லை, என்ன பயன்? – சில தினங்களுக்குப் பிறகு, அல்லது சில நாட்களுக்குப் பிறகு, அல்லது சில வருடங்களுக்குப் பிறகு அவன் திரும்பவும் இறந்துவிடுவான். வாழும் அத்தனை வருடங்களும் அவன் துயரத்திலும் துன்பத்திலும் எல்லா விதமான வேதனைகளிலும் இருப்பான். அவனை திரும்பவும் வாழ்வுக்கு கொண்டு வராத உங்களது கருணை மிகவும் பெரியது. குழந்தையை மறந்து விடுங்கள். எனக்கு தீட்சை கொடுங்கள். பிறப்பும் இறப்பும் நிகழாத அழிவற்ற, அந்த உலகத்திற்கு நான் செல்ல எனக்கு தியானமென்னும் வழி காட்டுங்கள்," என்றாள். புத்தர், "நீ மிகவும் புத்திசாலியான பெண். நீ அதை உடனே புரிந்து கொண்டு விட்டாய்." என்றார். நான் இதைத்தான் அதிசயம் என்றழைப்பேன், ஜீஸஸ் லசாரஸை உயிர்பித்ததை நான் அதிசயம் என்று கூற மாட்டேன். அது பார்ப்பதற்கு அதிசயம் போல தோன்றலாம், ஆனால் தோன்றுவதெல்லாம் உண்மை அல்ல. நான் புத்தரின் நடவடிக்கையைத் தான் அதிசயம் என்று கூறுவேன். எல்லோரும் இறந்து போகத் தான் போகிறார்கள். அதில் எந்த வித்தியாசமும் இல்லை. பிறப்பிலிருந்தும் இறப்பிலிருந்தும் ஒருவர் வெளியே வர வேண்டும். புத்தர் அந்த பெண்ணிற்கு தீட்சை கொடுத்தார். அவள் புத்தரின் ஞானமடைந்த சீடர்களில் ஒருவராக விளங்கினாள். அவளது தேடுதல் அத்தகையது….. அவளுக்கு என்னுடைய கணவன் இறந்து விட்டான், என்னுடைய குழந்தை இறந்து விட்டது, இப்போது என்னுடைய முறை, எந்த கணமும் நான் இறப்புக்கு பலியாகி விடலாம். நேரமில்லை, எந்த நேரம் மரணம் வரும் என்று எனக்குத் தெரியாது. எனவே நான் முழுமையாக இந்த தேடுதலில் ஈடுபடவேண்டும், புத்தர் என்னிடம், ‘உள்ளே செல். உன்னுடைய இருப்பின் மையத்திற்குச் செல், நீ பிறப்பையும் இறப்பையும் தாண்டி செல்வாய்." என்று கூறியுள்ள படியால் நான் தேடி சென்றடைய வேண்டும் என்பதை அவள் அறிந்திருந்தாள். இதைதான் நான் ஆணித்தரமான தேடுதல் என்றழைக்கிறேன். எல்லா பிரச்சனைகளையும் வேரறுத்து விடுவது. |
ஒரு முறை விசுவாமித்திர முனிவர் கடுமையான தவம் செய்து கொண்டிருந்தார். அவருடைய தவம் முற்றுப் பெற்றால் இந்திரனுடைய பதவிக்கே ஆபத்து வந்துவிடும். இதை இந்திரன் விரும்பவில்லை. தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினான். இதற்காகத் தனது சபையில் நடன மாதர்களாக உள்ள ரம்பை, ஊர்வசி இருவரையும் வரவழைத்தான். இருவரில் ஒருவரை அனுப்பி முனிவரின் தவத்தைக் கலைத்து வருமாறு செய்ய நினைத்தான். இருவரில் யாரை அனுப்புவது என்று இந்திரனுக்குப் புரியவில்லை. செய்தி அறிந்த இருவரும் தாங்களே செல்வதாகப் போட்டியிட்டனர். ""ஒருவர் மட்டும்தான் செல்ல வேண்டும். உங்களில் யாரை அனுப்பலாமென்று நீங்களே கூறி விடுங்கள்," என்றான் இந்திரன். ""நடனக் கலையில் எனக்கு ஈடு இணை எவருமே கிடையாது. எனவே, நான் தான் பூலோகத்திற்குச் செல்வேன்," என்று ரம்பை கூறினாள். ""ரம்பை நடனக்கலை ஒன்றில்தான் சிறந்தவள். நான் சகல கலைகளிலும் சிறந்தவள் என்பதைத் தாங்களே அறிவீர்கள். அவ்வாறு இருக்கையில் என்னை விடத் தகுதி பெற்றவர் வேறு எவர் இருக்கக்கூடும்," என்றாள் ஊர்வசி. இருவருடைய பேச்சையும் கேட்ட இந்திரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இருவரில் எவர் சிறந்தவர் என்று தீர்மானிக்க அவனால் முடியவில்லை. இச்சமயத்தில் நாரதர் அவ்விடம் வந்தார். இந்திரன் அவரை வரவேற்று உபசரித்தான். ""இந்திரதேவா, ஏன் வருத்தமுற்று இருக்கிறாய்?" என்று கேட்டார் நாரதர். ""ஐயனே! விசுவாமித்திர முனிவர் கடும் தவம் இயற்றிக் கொண்டிருக்கிறார். அவரது தவத்தைக் கலைக்க எனது நடன மாதர்களில் ஒருவரை அனுப்ப நினைத்தேன். அதற்காக இவர்கள் இருவரையும் வரவழைத்தேன். ஆனால், இப்பொழுது இவர்களில் யாரைப் பூலோகத்திற்கு அனுப்புவது என்று புரியவில்லை…" என்றான் இந்திரன். ""இரண்டு பேரையும் உனது சபையில் நடனமாடச் செய்து சிறப்பாக எவள் நடனமாடுகிறாளோ அவளையே பூலோகத்திற்கு அனுப்பிவிடு…" என்றார் நாரத முனிவர். மறுநாள் இந்திர சபையில் ரம்பை, ஊர்வசி ஆகிய இருவரின் நடன நிகழ்ச்சி நடந்தது. நடனத்தைக் காண தேவர்களும், சகல கலைகளையும் உணர்ந்த கலைவாணர்களும் சபையில் குழுமியிருந்தனர். நடனம் ஆரம்பம் ஆயிற்று. இருவரும் சளைக்காமல் ஆடினர். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவில்லை. இருவருமே சிறப்பாக நடனம் ஆடினர். ஒருவருடைய நடனத்திலும் குற்றம் குறை சொல்ல முடியவில்லை. இருவருமே சரிசமமாக ஆடினர். இருவருடைய நடனத்தில் எவருடைய நடனம் சிறந்தது என்று தீர்ப்புச் சொல்ல முடியாமல் அனைவரும் குழம்பினர். இச்சமயத்தில் நாரத முனிவர் எழுந்து, ""இந்திரனே, இங்குள்ள எவராலும் முடியாத காரியத்தைச் செய்யக்கூடிய ஒருவன் பூலோகத்தில் வசிக்கிறான். அவன் பெயர் விக்கிரமாதித்தன். உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்தை ஆண்டு சகல கலைகளையும் உணர்ந்தவன் விக்கிரமாதித்தன். சிறப்பாக நாட்டியக் கலையில் தேர்ச்சி பெற்றவன். அவனை இங்கு அழைத்து வரச் செய்தால் அவன் ரம்பை, ஊர்வசி ஆகிய இருவரில் எவர் சிறந்தவர் என்பதைக் கூறி விடுவான்," என்றார். உடனே இந்திரன் தனது தேரோட்டியான மாதிரியை அழைத்து, ""மாதிரி, உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்திற்குச் சென்று உடனே விக்கிரமாதித்தனை இங்கு அழைத்து வா!" என்றான். மாதிரிக்கு விக்கிரமாதித்தனை இந்திரலோகத்திற்கு அழைத்துவர விருப்பமில்லை. "ஒரு மானிடன் இந்திர லோகத்திற்கு வருவதா?" என்று நினைத்தான். இதை அறிந்து கொண்ட நாரதமுனிவர், ""மாதிரி, விக்கிரமாதித்தனை அவ்வளவு சாதாரணமாக நினைத்துக் கொள்ளாதே! தேவர்களுக்கெல்லாம் மேலாக விளங்கக் கூடியவன். இங்கு எழுந்துள்ள சிக்கலான பிரச்னையைத் தீர்த்து வைக்கக் கூடியவன் அவன் ஒருவனே. எனவே, தாமதம் செய்யாமல் அவனை இங்கு அழைத்து வா," என்றார். மாதிரியும் அரை மனதுடன் பூலோகத்திற்குச் சென்றான். விக்கிரமாதித்தனைக் கண்டு இந்திரன் அவனை அழைத்து வருமாறு கூறினான். விக்கிரமாதித்தன் நேரே காளிகோயிலுக்குச் சென்றான். காளியிடம் எலுமிச்சம் பழமும் திருநீறும் ஆசியும் பெற்று இந்திரலோகம் செல்லக் கிளம்பினான். தேவலோகத்திலிருந்து வந்த விமானத்தில் ஏறுவதற்காக விக்கிரமாதித்தன் தமது வலது காலை எடுத்து வைத்தான். இடது கால் தரையில் இருந்தது. அச்சமயத்தில் மாதிரி, "இந்த மானிடன் இந்திரலோகத்திற்கு வருவதா?" என்ற எண்ணத்துடன் விமானத்தைத் திடீரென்று கிளப்பினான். இதை அறிந்து கொண்ட விக்கிரமாதித்தன் தமது வலது காலின் பெருவிரலைத் தேர்த் தட்டில் அழுத்தமாக ஊன்றினான். மாதிரி எவ்வளவு முயற்சி செய்தும் விமானத்தை அவனால் மேலே கிளப்ப முடியவில்லை. உடனே மாதிரி விக்கிரமாதித்தனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். பின்னர் விமானம் தேவலோகம் நோக்கிச் சென்றது. இந்திரன் விக்கிரமாதித்தனை எதிர் கொண்டழைத்தான். தங்க ஆசனம் கொடுத்து அமரச் செய்தான். பிறகு விக்கிரமாதித்தனிடம் எல்லாச் செய்தியையும் கூறி அவனிடம் ஒரு பாரிஜாத மாலையைக் கொடுத்தான். ""விக்கிரமாதித்தரே! ரம்பை, ஊர்வசி இருவரில் எவர் சிறப்பாக நடனமாடுகிறாரோ அவருக்கு இந்த மாலையை அணிவியுங்கள்," என்றான் இந்திரன். போட்டி ஆரம்பமாகியது. இருவரும் முன் போலவே ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் ஆடினர். விக்கிரமாதித்தனுக்கு யாரைத் தேர்ந்தெடுப்பது என்றே புரியவில்லை. போட்டி முடிவுற்ற பிறகு, ""தேவேந்திரா, இருவரும் தனித்தனியாக ஆடினர். எனவே, இவர்களில் எவர் சிறப்பாக ஆடினர் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நாளைய தினம் இருவரையும் சேர்ந்தாற்போல் ஆடச் செய்யுங்கள். அதைப் பார்த்தப் பிறகு என்னுடைய தீர்ப்பை வழங்குகிறேன்," என்றான் விக்கிரமாதித்தன். மறுநாள் காலையில் விக்கிரமாதித்தன் நந்தவனத்திற்குச் சென்றான். அங்கு மலர்களைப் பறித்தான். அவைகளை இரண்டு பூச்செண்டுகளாகக் கட்டினான். உள்ளே நிறைய வண்டுகளைத் திணித்து வைத்துக் கட்டினான். இரவு நடன நிகழ்ச்சி நடக்கும் போது, தான் தயாரித்து வைத்திருந்த பூச்செண்டுகளுடன் சபைக்குச் சென்றார். நடனம் ஆரம்பமாவதற்கு முன், ""வெறுங்கையுடன் ஆடினால் அழகாக இராது. இந்தப் பூச்செண்டுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினால் அழகாக இருக்கும்," என்று கூறிய விக்கிரமாதித்தன் இருவரிடமும் ஆளுக்கொரு பூச்செண்டைக் கொடுத்தான். ரம்பையும், ஊர்வசியும் விக்கிரமாதித்தன் கொடுத்த பூச்செண்டுகளுடன் ஆட ஆரம்பித்தனர். நேரம் செல்லச் செல்ல ரம்பை தன்னை மறந்தாள். கையில் பிடித்திருந்த பூச்செண்டை அழுத்திப் பிடித்தவாறு வெறியுடன் ஆடிக் கொண்டிருந்தாள். பூச்செண்டை அவள் அழுத்திப் பிடித்ததால் அதற்குள்ளிருந்த வண்டுகள் அவள் கையைப் கொட்டத் தொடங்கின. வலி தாங்காத ரம்பை ஆட்டத்தை மறந்தாள். தாறுமாறாக, ஆட ஆரம்பித்தாள். தாளம் தவறி ஆட ஆரம்பித்தாள். ஆனால், ஊர்வசி நிதானமாக ஆடியதால் பூச்செண்டை மென்மையாகக் கையில் பிடித்துக் கொண்டிருந்தாள். இதனால் வண்டுகள் அவளை ஒன்றும் செய்யவில்லை. தாளத்துக்குத் தக்கவாறு அவள் ஆடினாள். இதிலிருந்து ஊர்வசியே சிறப்பாக நடனமாடினாள் என்று தீர்ப்பு வழங்கிய விக்கிரமாதித்தன், இந்திரன் அளித்த பாரிஜாத மாலையை அவளுக்கு அணிவித்தான். விக்கிரமாதித்தனின் தீர்ப்பைக் கண்டு வியந்த இந்திரன் அவரைப் பாராட்டினான். தான் இந்திரப் பட்டம் ஏறிய பொழுது பரமேசுவரனால் அவனுக்குப் பரிசாக அளிக்கப்பட்ட தங்க சிம்மாசனத்தை விக்கிரமாதித்தனுக்குப் பரிசாக அளித்தான். அழகுமிகுந்த அந்த சிம்மாசனத்திற்கு முப்பத்தி இரண்டு படிகள் இருந்தன. ஒவ்வொரு படியிலும் ஓர் அழகிய பதுமை இருந்தது. சிம்மாசனத்தில் ஏறுவதானால் ஒவ்வொரு பதுமையின் தலைமீது கால்வைத்துத் தான் ஏறவேண்டும். இந்த சிம்மாசனத்தை விக்கிரமாதித்தனுக்குப் பரிசாக அளித்த இந்திரன், ""இந்த சிம்மாசனத்தில் இருந்தவாறே ஆயிரம் ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி செய்து வருவாயாக," என்று வரமும் அளித்தான். ரத்தின மயமான அந்த சிம்மாசனத்துடன் விக்கிரமாதித்தன் உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்தை அடைந்தான். |
மனோவிற்கு மனசு படபடவென்று அடித்துக் கொண்டது. ஆசிரியர் ஆரோக்கியசாமி பையன்களின் புத்தகப்பையை ஒவ்வொன்றாக சோதனை செய்து கொண்டிருந்தார். அவர் தேடிக் கொண்டிருந்த அவரின் மணிபர்ஸ் மனோவின் பைக்குள் பத்திரமாக இருந்தது. மனோ ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். மனோ பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பையன். தன் வகுப்பில் படிக்கும் பையன்களின் பென்சில், ரப்பர் என்று விளையாட்டாக எடுக்க ஆரம்பித்தான் மனோ. சின்ன சின்ன பொருட்களை அவ்வப்போது எடுப்பது என்பது அவனுக்கு அன்றாட வழக்கமாகிவிட்டது. ஆனால் இன்றுதான் முதன்முறையாக வகுப்பு ஆசிரியரின் மணிப்பர்ஸைத் திருடிவிட்டான். இவ்வளவு சீக்கிரமாகவா தேட ஆரம்பிப்பார். அதுவும் இப்படி ஒவ்வொரு பையாகவா தேடுவார்? இன்னும் சிறிது நேரத்தில் அகப்பட்டு விடுவான். திருடியது இவன் என்று எல்லோருக்கும் தெரிந்து விடும். பையன்கள் இவனை திருடன் திருடன் என்று அழைப்பார்கள். பள்ளிக்கூடத்தை விட்டு விலக்கி விடுவார்கள். அப்பா, அம்மா இவனைப் பற்றி என்ன நினைப்பார்கள்? மனோ என்று ஆசிரியர் குரல் கேட்டது. அடுத்த வினாடி புத்தகப் பையை எடுத்துக் கொண்டு முன்னால் சென்றான். ஆரோக்கியசாமி அவன் பையில் கையை விட்டார். மணிபர்ஸ் கையில் அகப்பட்டது. வெளியே எடுத்தார். அதே பர்ஸ். பிரித்துப் பார்த்தார் பணம் அப்படியே இருந்தது. மனோ தலையைக் குனிந்தபடி நின்று கொண்டிருந்தான். பையன்கள் எல்லோரும் இவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். "என்ன மிஸ்டர் ஆரோக்கியம் பர்ஸ் கிடைச்சிருச்சா?" என்ற குரலைக் கேட்டுத் திரும்பினார் ஆசிரியர். வாசலில் ஹெட்மாஸ்டர் நின்று கொண்டிருந்தார். "ஆமா சார் கிடைச்சிடுச்சி சார்" "யார் எடுத்தது? நிக்கறானே இவந்தான் எடுத்தானா?" "இல்லை சார். நாந்தான் பிரேயருக்கு வர்றதுக்கு முன்னாடி பைக்குள்ள வைக்க சொன்னேன். பத்திரமா இருக்கும்னு அவங்கிட்டே கொடுத்தது மறந்திடுச்சு." "என்ன இது முட்டாள்தனமா பேசறீங்க. கொஞ்சங்கூட பொறுப்பு இல்லாம. யோசனை பண்ணி சொல்றது இல்லையா? ஒரு ஆசிரியரே இப்படி பொறுப்பில்லாம நடந்துகிட்டா எப்படி? நாங்கூட நம்ம மாணவர்களைப் பத்தி தப்பா நினைச்சிட்டேன்" என்றார் கோபமாக தலைமை ஆசிரியர். "சாரி சார்" "என்னது சாரி... பொடவை" "எஸ் ஸார்......." என்றார் ஆரோக்கியசாமி தலையை குனிந்தபடி. கோபமாக அங்கிருந்து சென்றார் ஹெட்மாஸ்டர். வகுப்பில் பையன்கள் ஆசிரியரைப் பரிதாபமாகப் பார்த்தனர். மனோவின் கண்களில் கண்ணீர் முட்டியது. "மணிப்பர்சை நாந்தானே உங்கிட்ட குடுத்தேன் சொல்லக் கூடாது? போய் உட்கார் போ" என்றார் ஆரோக்கியசாமி. மனோ தன் இடத்திற்குப் போனான். தலைமை ஆசிரியரிடம் தன்னால் இத்தனை பையன்கள் முன்னிலையில் ஆசிரியர் அவமானப் பட்டதை நினைத்துப் பார்த்தான். மனோவிற்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. நெஞ்சு வெடித்துவிடும்போல் இருந்தது. சிறிது நேரத்தில் கடைசி மணி அடித்தது. பையன்கள் முண்டியடித்து வகுப்பைவிட்டு வெளியேறினர். எல்லோருக்கும் பின்னால் ஆசிரியர் ஆரோக்கியம் மெல்ல நடந்தார். மனோ அவர் பின்னாலேயே சென்றான். அடுத்த வினாடி மனோ ஆசிரியரின் முன்னால் சென்று அவர் கால்களைப் பிடித்துக் கொண்டான். ஆரோக்கியம் அவனை தூக்கி நிறுத்தினார். மனோ தேம்பித் தேம்பி அழுதான். "தெரியாம செஞ்சிட்டேன் சார். என்ன மன்னிச்சிருங்க. இனிமேல் செய்யமாட்டேன்" என்று அழுகையோடு அழுகையாகச் சொன்னான். "இனிமே எந்த தப்பும் நீ செய்ய மாட்டேன்னு எனக்குத் தெரியும்" என்று சொல்லிக் கொண்டே அவனை மார்புடன் ரே அணைத்துக் கொண்டார்.
|
ஒரு தடவை முல்லா நண்பர்கள் பலருக்கு மத்தியில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்.
நண்பர்கள் கூட்டத்தில் வெளியூரிலிருந்து வந்த சிலரும் இருந்தார்கள் . நண்பர்களில் ஒருவர் எழுந்த வெளியூரிலிருந்து வந்திருந்தவர்களுக்கு முல்லாவை
அறிமுகப்படுத்தினர். முல்லாவைப் பற்றி அளவுக்க அதிகமாகப் பாராட்டிப் பேசிய நண்பர் முல்லாவுக்குத்
தெரியாத விஷயமே உலகத்தில் இல்லை என்றார். அதைக் கேட்டு பிரமிப்பு அடைந்த வெளியூர் நண்பர்களில் ஒருவர் " முல்லாவுக்கு குந்தீஷ்
மொழி தெரியுமா?" என்று கேட்டார். முல்லாவுக்குக் குந்தீஷ் மொழி தெரியாது. அந்த மொழியில் இரண்டொரு சொற்கள் தான்
தெரியும். ஆனால் தனது அறியாமைக் காண்பித்துக் கொள்ளக் கூடாதே என்று குந்தீஷ் மொழி
தெரியும் என்றார். குந்தீஷ் மொழியில் எதாவது ஒரு சொற்களை கூறுங்கள், கேட்போம் என்றனர் வெளியூர்
நண்பர்கள். குந்தீஷ் மொழியில் ஆஷ் என்றால் சூடான சூப் என்று பொருள் என்றார் முல்லா.
ஆறின சூப் என்பதற்கு குந்தீஷ் மொழியில் என்ன சொல்வார்கள்? என்று ஒருவர் கேட்டார்.
தமது குட்டு வெளிப்பட்டு விடும் போலிருக்கிறதே என்று முல்லாவுக்கு தர்மசங்கடமாகி
விட்டது. உடனே அவர் சுதாரித்துக் கொண்டார். நண்பரே குந்தீஷ் மொழியினர் எப்போதும் சூடான சூப்பைத்தான் சாப்பிடுவார்கள். ஆறின சூப்பே
அவர்களுக்குப் பிடிக்காது. அதனால் அவர்கள் மொழியில் ஆறின சூப் என்பதற்கு எந்தச்
சொல்லும் கிடையாது என்று கூறி சாமர்த்தியமாகச் சமாளித்தார். |
விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான்.
மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பது பைசா வட்டி இதனால்
வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கும் மக்கள் அவதியுற்றனர். இதையறிந்த தெனாலிராமன் அந்த சேட்டை நயவஞ்சகமாக திருத்த திட்டம் தீட்டினான். அந்த சேட் பாத்திரங்களையும் வாடகைக்கு விடுவதுண்டு. ஒரு நாள் தெனாலிராமன் சேட்டைச்
சந்தித்து "தன் மகனுக்குக் காதணி விழா நடைபெறுவதாகவும் அதற்குச் சில பாத்திரங்கள்
வாடகைக்கு வேண்டுமென்றும் விழா முடிந்ததும் கொண்டு வந்து தருவதாகவும்" கூறினான். அதன்படியே சேட்டும் பாத்திரங்களை தெனாலிராமனுக்குக் கொடுத்தான். சில நாள் கழித்து
தெனாலிராமன் அந்தப் பாத்திரங்களோடு சில சிறிய பாத்திரங்களையும் சேர்த்துக்
கொடுத்தான். இதைப் பார்த்த சேட் "நான் பெரிய பாத்திரங்கள் மட்டும் தானே கொடுத்தேன். சிறிய
பாத்திரங்களை நான் கொடுக்கவில்லையே......... அவற்றையும் ஏன் கொடுக்கிறாய்" என்று
கேட்டான். அதற்குத் தெனாலிராமன் "உமது பாத்திரங்கள் "குட்டி" போட்டன. அவற்றையும் உம்மிடம்
கொடுப்பது தானே முறை. ஆகையால் தான் அவற்றையும் சேர்த்து எடுத்து வந்தேன்" என்றான். இவன் சரியான வடிகட்டியான முட்டாளாக இருப்பான் போல என்று எண்ணி "ஆமாம் ஆமாம். இவற்றை
நான் உன்னிடம் கொடுக்கும் போது சினையாக இருந்தன. ஆகையால் தான் குட்டி போட்டுள்ளன"
என்று அனைத்துப் பாத்திரங்களையும் பெற்றுக் கொண்டான். சில மாதங்கள் கழித்து "தன்
வீட்டில் விசேடம் நடைபெற இருப்பதாகவும் அதற்கு மன்னரும் அரசுப் பிரதானிகளும் கலந்து
கொள்ள இருப்பதாகவும் அதற்கு தங்கப் பாத்திரங்களும் வெள்ளிப்பாத்திரங்களும் வேண்டும்"
என்று கேட்டான். இவனுடைய நாணயத்தை அறிந்த சேட் பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களைக் கொடுக்க
சம்மதித்தான். கொடுக்கும் போது இவை கர்ப்பமாக இருக்கின்றன. விரைவில் குட்டிபோடும்.
இவற்றின் குட்டிகளையும் சேர்த்துக் கொண்டு வா என்றான். "சரி" என்று ஒப்புக் கொண்டு தங்க வெள்ளிப் பாத்திரங்களைத் தன் வீட்டிற்கு எடுத்துச்
சென்றான். சில மாதங்கள் ஆயின. பாத்திரங்கள் திரும்ப வருவதாகக் காணோம். ஆகையால் சேட் நேரே தெனாலிராமன் வீட்டுக்குச் சென்றான். தெனாலிராமனைச் சந்தித்து "இவ்வளவு
நாட்களாகியும் ஏன் பாத்திரங்களைத் திரும்ப கொண்டு வந்து தரவில்லை" என மிகக் கோபமாக
கேட்டான். அதற்கு தெனாலிராமன் "சொன்னால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று தான் தங்களைப்
பார்க்க வரவில்லை. பாத்திரங்கள் கர்ப்பமாக இருந்தனவா.........பிரசவம் கஷ்ட்மாக
இருந்தது அதனால் அனைத்துப் பாத்திரங்களும இறந்து விட்டன" எனத் தெரிவித்தான். இதைக் கேட்ட சேட் "யாரிடம் விளையாடுகிறாய்? பாத்திரங்கள் சாகுமா?" எனக் மிகக்
கோபமாகக் கேட்டான். அதற்குத் தெனாலிராமன் "பாத்திரங்கள் குட்டி போடும் போது அவை ஏன்
இறக்காது" என்று கேட்டான். "என்னுடன் வா மன்னரிடம் முறையிடுவோம் அவரின் தீர்ப்புப்படியே நடந்து கொள்வோம்"
என்றதும் வேக, வேகமாக அவ்விடத்தை விட்டு நகன்றான் சேட். இருப்பினும் தெனாலிராமன் அவனை விடாது மன்னரிடம் இழுத்துச் சென்று மக்களிடம் அநியாய
வட்டி வாங்குவது பற்றி முறையிட்டான். எல்லா விவரங்களையும் கேட்டறிந்த மன்னர் "பாத்திரங்கள் குட்டி போடும் என்றால் அவை
பிரசவத்தின் போது ஏன் இறக்கக் கூடாது? உன் பேராசைக்கு இது ஒரு பெரு நஷ்டமே ஆகையால்
இனிமேலாவது மக்களிடத்தில் நியாயமான வட்டி வாங்கு" என புத்திமதி கூறி அவனை அனுப்பி
வைத்தார் மன்னர். தெனாலிராமனின் புத்திசாலித் தனத்தை மன்னர் மனமாரப் பாராட்டி பரிசுகள் வழங்கினார். |
தென்னாட்டில் மகிழாருப்பியம் என்று ஓர் ஊர் இருந்தது. அங்கு வர்த்தமானன் என்ற பெயருடைய ஒரு வணிகன் இருந்தான். அவன் வெளிநாடுகளில் வாணிகம் செய்ய விரும்பி, தன்னிடம் இருந்த சரக்கு களைக் கட்டை வண்டியில் ஏற்றிக் கொண்டு புறப் பட்டான். ஒரு காட்டு வழியாகப் போகும் போது வண்டி மாடுகளில் ஒன்று காலிடறி விழுந்து விட்டது. அந்த மாட்டின் கால் பிசகி அது நொண்டியாகி விட்டது. இதைக் கண்ட வணிகன், அந்த மாட்டை அவிழ்த்து விட்டுத் தன் சரக்குகளை ஆட்களின் தலையில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டான். அந்த மாட்டைப் பார்த்துக் கொள்வதற்காக ஓர் ஆளை வைத்து விட்டுப் போனான். ‘சாகிற மாட்டுக்குக் காவலென்ன காவல்!” என்று அந்த ஆளும் புறப்பட்டுப் போய்விட்டான். ஆனால், அந்த மாடு சாகவில்லை. நொண்டிக் காலோடு மெல்ல மெல்ல நகர்ந்து நகர்ந்து சென்று காட்டில் நன்றாக மேய்ந்தது. தீனி ஏற ஏற அது கொழுத்து வளர்ந்தது. ஊட்டத்தினால் அதன் கால் ஊனமும் சரியாகி விட்டது. பிறகு அது அந்தக் காடு முழுவதும் விருப்பம்போல் சுற்றித் திரிந்து, நன்றாக மேய்ந்து பெரிய எருதாகி விட்டது. அந்தக் காட்டை ஒரு சிங்கம் ஆண்டு வந்தது. அந்தச் சிங்கம் தண்ணிர் குடிப்பதற்காக ஒரு நாள் யமுனை யாற்றுக்குச் சென்றது. அப்போது அந்தப் பக்கத்தில் திரிந்து கொண்டிருந்த எருது முழக்கம் செய்தது. கடல் முழக்கம் போல் அந்த முழக்கம் பெரிதாக இருந்தது. சிங்கம் அதற்கு முன் அத்தகைய பேரொலியைக் கேட்டதில்லை யாகையால், நடுங்கிப் போய்விட்டது. இதேது புதிதாக இருக்கிறதே!’ என்று பயந்து அது தண்ணிர் குடிக்கவும் மறந்து நின்று விட்டது. சிறிது தூரத்தில் இரண்டு நரிகள் நின்று கொண்டிருந்தன. சிங்கத்தின் அமைச்சன் பிள்ளைகளாகிய அவை இதைப் பார்த்து விட்டன. அவற்றில் ஒரு நரி, மற்றொன்றைப் பார்த்து, “நம் அரசன் ஏன் நடுங்கி நின்று விட்டான்?’ என்று கேட்டது. ‘அதைப் பற்றி நமக்கென்ன கவலை? அதைத் தெரிந்துகொள்வதால் நமக்கென்ன இரை கிடைக்கப் போகிறதா, அல்லது பெருமை கிடைக்கப்போகிறதா. தனக்குத் தொடர்பில்லாத ஒரு காரியத்தில் தலையிடுகிறவன் ஆப்புப் பிடுங்கிய குரங்கு போல் அவதிப் பட வேண்டியது தான்’ என்றது இன்னொரு நரி. “ அப்படியல்ல. என்ன இருந்தாலும் சிங்கம் நம் அரசன். அரசர்களுக்குப் பணி செய்வது பெருமையானது. அதனால் பெரியோர்களுடைய நட்பு உண்டாகும்; பல உதவிகளும் கிடைக்கும். நாய்கள், ஈரம் சிறிதும் இல்லாத எலும்பையும், பல்லசையும் வரை விடாமல் கெளவிக்கடித்துத் தின்னும். ஆனால் மிகுந்த பசியோடிருக்கும் சிங்கமோ மதயானையை அடித்துக் கொன்று தன் பசியைத் தீர்த்துக் கொள்ளுமேயல்லாமல், சிறிய உயிர்களைக் கொல்லாது. நாய், ஈனத் தனமாகத் தன் வயிற்றை ஒடுக்கி வாலைக் குழைத் துக் குழைத்து முகத்தைப் பார்த்துக் கெஞ்சி எச்சிலை வாங்கியுண்ணும். ஆனால் யானையோ, எவ்வளவு பசியிருந்தாலும், சிறிதும் கெஞ்சாது. தன் பாகன் வலியக் கொண்டு வந்து ஊட்ட ஊட்ட உணவை யுண்ணும். இப்படிப்பட்ட பெருமை யுடையவர்களோடு சேர்ந்து வாழ்வதே வாழ்க்கை’ என்றது முதல் நரி, சிங்கத்திற்கு நாம் அமைச்சர்கள் அல்லவே, இதைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டும்?’ என்று மறுத்தது இரண்டாவது நரி. ‘எந்த ஒரு காரியத்தையும் தந்திரமாகச் செய்தால் உயர்வை யடையலாம். யோசனையில்லா விட்டால் சிறுமைதான் உண்டாகும். நல்ல செயல்களைச் செய்து நன்மையடைவது அரியதுதான். தீய செயல்களைச் செய்து கேடடைவது எளிது. ஏரியின் நீரைக் கரைபோட்டுக் கட்டுவது அரிது. அதை உடைத்துக் கெடுப்பது எளிது. ஒரு கல்லை மலையில் ஏற்றுவது அரிது. அதைக் கீழே உருட்டி விடுவது எளிது. அரியனவா யிருந்தாலும் பெரிய செயல்களையே செய்து பெருமையடைய வேண்டும். அறிவுடைய பெரியோர்கள் வாழ்வது ஒரு கணம் போல் இருந்தாலும் பெருமையோடும் புகழோடும் வாழ்வார்கள். கருமை நிறமுள்ள காக்கையோ, எச்சிலைத் தின்று கொண்டு பல நாள் உலகில் வாழ்ந்திருக்கும். பெருமையும் சிறுமையும் அவரவர் செயலால் ஏற்படுவதே! இவற்றில் அருமையான செயல்களைச் செய்கின்றவர்களுக்கே பெருமை யுண்டாகும்’ என்று கூறியது முதல்நரி. ‘நல்லது இப்பொழுது என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்டது இரண்டாவது நரி. “நம் மன்னனாகிய சிங்கம் வருத்தப்பட்ட காரணத்தை அறிந்து, அதன் மனத் துயரத்தை நீக்குவேன். அவனுடைய அமைச்சனாக இருந்து நம் நரிக்குலத்துக்கு இன்ப வாழ்வு ஏற்படச் செய்வேன்’ என்றது முதல் நரி, “மோந்து பார்ப்பவர்கள் போல் வந்து, கடித்து விடக் கூடிய தன்மை யுடையவர்கள் அரசர்கள். அரசர்களும், தீயும், பாம்பும் ஒரே மாதிரி தான்? என்று இரண்டாவது நரி கூறியது. ‘நெருங்கி வளர்ந்திருக்கும் கொடி, பக்கத்தில் இருக்கும் மரத்தின் மேலேதான் படரும். அதுபோல, பெண்களும், மன்னர்களும் அருகில் இருந்து இனிமையாகப் பேசுபவர்களிடமே அன்பு கொள்ளுவார்கள். நானும் என் திறமையால் சிங்கத்தின் நட்பைப் பெறுவேன்’ என்று உறுதியாகக் கூறியது முதல் நரி. ‘நன்று, நீ வெற்றியடைக!’ என்று இரண்டாவது நரியும் மனந்துணிந்து வாழ்த்துக் கூறியது. முதல் நரி விடை பெற்றுக் கொண்டு சிங்கத்தின் முன்னே சென்று கை கூப்பி நின்றது. இந்த நாள் வரை உன்னைக் காணோமே, எங்கு போயிருந்தாய்?” என்று கேட்டது சிங்கம். ‘அரசே, ஒன்றுமில்லாமல் வந்து என்ன பயன்? இப்போது தங்களிடம் வரவேண்டியகாரியம் ஏற்பட்டதால் வந்தேன். என்னைச் சிறியவன் என்று எண்ணி ஒதுக்கிவிடாதீர்கள். உங்களுக்கு வெற்றியும் பெருமையும் உண்டாகும்படி செய்வேன். நல்ல அறிஞர்களின் துணை கொண்டே அரசர்கள் நீதிகளை இயற்றுவார்கள். அவர்களுடைய அரசும் பெருமையுடன் விளங்கும். ஒளி பொருந்திய வாளும், இனிமையான இசையும் இன்பந்தரும் யாழும், பரந்த உலகமும், அழகிய பெண்களும், அறிவு நிறைந்த பெரி யோரும், பயன் மிக்க நூல்களும் ஆகிய இவையெல்லாம், வைத்துக் காப்பாற்றுகின்றவர்களின் தன்மை யாலேதான் சிறப்படையும். அதுபோல் அரசு சிறக்க அறிஞர் துணை தேவை’ என்றது நரி. ‘நரியே, நீ அமைச்சருடைய மகன் அல்லவா? அதனால்தான் உயர்ந்த ஆலோசனைகளைக் கூறுகின்றாய். நீ என்னிடமே இருந்து, உண்மையாக வேலை செய்து வா!’ என்று சிங்கம் கூறியது. உடனே நரி துணிச்சலுடன் அரசே, தங்கள் மனத்தில் ஏதோ பயம் ஏற்பட்டிருக்கிறது போல் தோன்றுகிறதே! என்று கேட்டது. “ஆம், இதுவரை இந்தக் காட்டில் நான் கேட்டறியாத ஒரு பெரு முழக்கத்தைக் கேட்டேன். அதனால் என் மனம் கலங்கியிருக்கின்றது. முழக்கம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாய் அந்த முழக்கம் செய்த மிருகமும் இருக்க வேண்டும் அல்லவா? அந்த மிருகம் என்னைக் காட்டிலும் பெரியதாய் இருக்குமோ என்று அஞ்சுகிறேன். வழுக்கி விழ இருந்தவனுக்கு ஊன்றுகோல் கிடைத்தது போல் சரியான சமயத்தில் நீ வந்தாய் என் கவலை நீங்க ஒரு வழி கூறு’ என்று மனம் விட்டுப் பேசியது சிங்கம்.
|
ஒரு பால் நிலா காயும் இரவு. சான் குரு ஃபாயாவும், அவரது இரண்டு சீடர்களான துறவிகளும் திறந்த வெளியில் மணல் பரப்பின் மீது உட்கார்ந்திருந்தனர். அவர்கள் நிலாவினைச் சுட்டிக் காட்டி பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குள் நடந்த சுவரசியமான உரையாடலே இன்றைய தினம் ஒரு ஸென் கதையின் கருவாகும். முதலாம் துறவி சா'ன் குரு ஃபாயானிடம் "குருவே, உங்களிடம் நான் 'சுட்டு' என்பதன் அர்த்தத்தைக் கேட்கவில்லை. 'நிலா' என்பதன் உண்மையான அர்த்தத்தினை எனக்கு விளக்கிக் கூறவேண்டும்" என்று கேட்டான். " 'சுட்டு' என்பதன் பொருளை நீ உணர்ந்து விட்டதாக தெரிகிறது. எனக்கு அதன் பொருளைக் கொஞ்சம் விளக்கிச் சொல்ல முடியுமா?" என்று கேட்டார் சா'ன் குரு. அந்த சமயத்தில் இரண்டாம் துறவி, "குருவே, உங்களிடம் 'நிலா'வின் அர்த்தத்தினை கேட்க விரும்பவில்லை. 'சுட்டு' என்பதன் உண்மைப் பொருளை விளக்க வேண்டும்" என்று கேட்டான். "நிலா" என்பதே பதிலாக கிடைத்தது. "நான் உங்களை 'சுட்டு' என்பதன் பொருளைத் தான் கேட்டேன்" என்று கண்டனத்துடன் மறுதலித்துக் கூறியவன், "எதற்காக 'நிலா' என்று பதில் அளித்தீர்கள்?" "ஏனேன்றால் 'சுட்டு' என்பதன் அர்த்தத்தினைத் தானே நீ கேட்டாய்" என்றார் குரு.
|
பழைய ஊர் ஒன்றில் ஒரு கோயில் இருந்தது. கோயில் திருப்பணிக்காக மரங்களை அறுத்துக் கொண்டு வந்து போட்டிருந்தார்கள். அந்த மரங்களில் ஒன்றை இரண்டாக அறுத்துக் கொண்டிருந்த தச்சன், பாதி அறுத்தபின் அறுத்த பிளவிலே ஆப்பு வைத்துவிட்டு, மீதியை அறுக்காமல் சென்று விட்டான். கோயிலை யடுத்திருந்த மாதுளை மரச் சோலையில் பல குரங்குகள் இருந்தன. அந்தக் குரங்குகளில் சில, தாவி விளையாடிக் கொண்டே மரம் அறுத்துக் கிடந்த இடத்திற்கு வந்து சேர்ந்தன. அவற்றில் ஒரு குரங்கு பாதி பிளந்து கிடந்த மரத்தின் மேல் வந்து உட்கார்ந்தது. அது சும்மாயிருக்காமல், அந்த மரப்பிளவில் வைத்திருந்த ஆப்பை அசைத்து அசைத்துப் பிடுங்கியது. ஆப்பைப் பிடுங்கியவுடன், பிளந்திருந்த மரத்தின் இரு பகுதிகளும் நெருங்கின. அவற்றிற் கிடையிலே மாட்டிக் கொண்ட அந்தக் குரங்கு உடல் நசுங்கி உயிர் விட்டது. ஆகையால் தனக்குத் தொடர்பில்லாத ஒரு காரியத்தில் தலையிடக்கூடாது.
|
சோழ நாட்டின் தலை நகரம் உறையூர். எப்பொழுதும் ஆரவாரமாக இருக்கும் அந்த நகரம் அன்று அமைதியாக இருந்தது. நகர வீதியில் முதியவர்கள் இருவர் சந்தித்தனர். "முத்தனாரே! அரசவையில் இருந்துதானே வருகிறீர். ஏதேதோ தீய செய்திகளைக் கேள்விப் படுகிறோமே. மக்கள் கூட்டமாக அழுது புலம்புகிறார்களே. நாடெங்கும் இதே பேச்சாக உள்ளதே. உண்மையா?" "இளவழகனாரே! நீங்கள் கேள்விப்பட்ட செய்தி உண்மைதான். அதனால்தான் சோழ நாடே அவலத்தில் ஆழ்ந்து உள்ளது. நகர வீதிகளில் எங்கும் அழுகை ஒலி கேட்கிறது." "முத்தனாரே! எல்லாம் அறிந்தவர் நீங்கள். அரசவையில் என்ன நிகழ்ந்தது? விளக்கமாகச் சொல்லுங்கள்." "தன்மானம் மிக்கவர் நம் அரசர். புதல்வர்களால் மானத்திற்கு இழுக்கு வந்து விட்டதாகக் கருதுகிறார். அதனால்தான் வடக்கிருந்து உயிர் விடும் முடிவுக்கு வந்து விட்டார்." "எங்கு தான் தந்தைக்கும் மைந்தர்களுக்கும் பிணக்கு இல்லை." "இளவழகனாரே! நம் அரசர் நீதிநெறி தவறாதவர். வீரம் மிக்கவர். எல்லா நாட்டு அரசர்களும் மதித்துப் போற்றும் நற்பண்பாளர். ஆனால் அவருக்குப் பிறந்த மக்கள் இருவருமே தீயவர்களாக உள்ளனர். அவர்களைத் திருத்த அரசரும் தம்மாலான முயற்சி செய்தார். முயற்சி பயன் ஏதும் தர வில்லை. தீயவர்களான அவர்கள் தந்தையையே வெறுக்கத் தொடங்கினார்கள்." "நாட்டு மக்கள் எல்லோரும் அறிந்த செய்திதானே இது." "இளவழகனாரே! இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நம் அரசரை எதிர்த்தனர் அவர் மக்கள். அவருடன் போர் செய்யத் துணிந்து விட்டார்கள். அந்தத் தீயவர்களுக்கு ஆதரவாகப் புல்லர்கள் சிலரும் துணை நின்றனர். இதைக் கேட்ட அரசர் கோபத்தால் துடித்தார். 'என்னையே எதிர்க்கத் துணிந்து விட்டார்களா என் மக்கள்? அவர்களை இந்த வாளுக்கு இரையாக்குவேன்' என்று போருக்கு எழுந்தார். சினம் கொண்ட அவரைப் புலவர் புல்லாற்றூர் எயிற்றியனார் தடுத்தார்." "முத்தனாரே! தீயவர்களைக் கொன்று ஒழிப்பது அரச நீதிதானே. எதற்காகப் புலவர் எயிற்றியனார் குறுக்கிட்டார். அவர் என்ன சொன்னார்.?" "அரசே! நீங்கள் யாரோடு போரிடச் செல்கிறீர்கள்? உங்கள் மக்களுடனா? உங்களுக்குப் பின் ஆட்சிக்கு உரியவர்கள் அவர்கள்தானே. அவர்களை வென்ற பின் யாருக்கு இந்த நாட்டைத் தரப் போகிறீர்கள்? இந்த வெற்றியால் உங்களுக்குப் புகழ் வருமா? போரில் தன் மக்களையே கொன்றான் சோழன். இப்படித்தான் உலகம் உங்களை ஏசும். இந்தப் போரில் தோற்றாலோ மாறாகப் பழிதான் உங்களைச் சூழும். நான் சொல்வதை எண்ணிப் பாருங்கள். போரில் வென்றாலும் பழிதான். தோற்றாலும் பழிதான் என்றார் எயிற்றியனார்." "முத்தனாரே! இதைக் கேட்ட அரசர் என்ன செய்தார்?" "கோபத்தை அடக்கிக் கொண்ட அவர் சிந்தனையில் ஆழ்ந்தார். "புலவரே! நீங்கள் சொன்னது உண்மைதான். நான் போ‘ரில் வெற்றி பெற்றாலும் தோற்றாலும் பழிக்கு ஆளாவேன். இதிலிருந்து நான் மீள வழியே இல்லை. என் மக்களின் பொருந்தாச் செய்கையினால் பழிக்கு ஆளாகிவிட்டேன். இந்தப் பழி நீங்க வடக்கிருந்து உயிர் துறக்கப் போகிறேன். என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை" என்று உறுதியுடன் சொன்னார்." "ஆ! நம் அரசரா அப்படிச் சொன்னார்?" "அரசர் சொன்னதைக் கேட்டு அவையில் இருந்த எல்லோரும் கலங்கி விட்டனர்." "முத்தனாரே! வடக்கிருத்தால் என்றால் என்ன?" "பெரியவர்கள் தங்கள் மானமே பெரிது என்று கருதுவார்கள். மானத்திற்குச் சிறிது இழிவு வந்தாலும் உயிரை விடத் துணிவார்கள். அப்படி உயிரைத் துறக்கின்ற முறைக்கு வடக்கிருத்தல் என்று பெயர். வடக்கிருத்தலுக்கு ஏற்ற இடத்தைத் தேர்ந்து எடுப்பார்கள். அங்கே வடக்கு நோக்கி அமர்வார்கள். உண்ணா நோன்பு இருந்து உயிரை விடுவார்கள். அது மட்டும் அல்ல. அவருக்காக உயிரை விட முன்வருபவர்களும் அவரோடு வடக்கு இருப்பார்கள்." "முத்தனாரே! உண்ணா நோம்பிருந்து உயிர்விடும் முறையா வடக்கிருத்தல். மிகக் கடுமையாக உள்ளதே." "இளவழகனாரே! அரசர் வடக்கிருக்கும் இடத்தைப் புலவர் பொத்தியார் தேர்ந்து எடுத்தார். அரசரும் அங்கே சென்று வடக்கிருக்க அமர்ந்து விட்டார். புலவர்கள் பலரும் அவருடன் சென்று விட்டனர். செய்தி அறிந்த மக்களும் கூட்டம் கூட்டமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள்." "முத்தனாரே! நம் அரசரின் பெருமை யாருக்கு வரும்? வடக்கிருக்கும் போதும் நண்பர்கள் சூழ இருக்கிறாரே." "இளவழகனாரே! நானும் அரசருடன் வடக்கிருக்கத்தான் செல்கிறேன்" என்று புறப்பட்டார் முத்தனார். வடக்கிருப்பதற்காகப் பெரிய திடலைத் தேர்ந்து எடுத்து இருந்தார்கள். அதன் ஒரு பக்கத்தில் கோப்பெருஞ் சோழன் அமர்ந்து இருந்தார். அவர் அருகே புலவர் பொத்தியார் உள்ளார். பல புலவர்கள் நெருக்கமாக அமர்ந்து இருக்கின்றனர். திடல் முழுவதும் மக்கள் கூட்டமாக அமர்ந்து உள்ளனர். "அரசே! இவ்வளவு பெரிய திடலில் எத்தனை பேர் என்று பாருங்கள். எல்லோரும் நெருக்கமாக அமர்ந்து உள்ளனர். நாட்டு மக்களின் உள்ளத்தைக் கவர்ந்தவர் நீங்கள். அதற்கு இதுவே நல்ல சான்று" என்றார் பொத்தியார். "பொத்தியாரே புலவர்கள் பலரும் என்னுடன் நெருக்கமாகவே அமர்ந்து உள்ளீர்கள். வடக்கிருக்கும் போதும் உங்களுடன் இலக்கியச் சுவை நுகருகின்றேனே. என் வாழ்வில் பெரும் பேறாகக் கருதுகின்றேன். என் வேண்டுகோள் ஒன்று. எனக்காக நீங்கள் அனைவரும் ஓர் உதவி செய்ய வேண்டும்." அங்கிருந்த புலவர்கள் திகைத்தனர். "அரசே! எங்களை வடக்கிருக்க வேண்டாம் என்று சொல்லி விடாதீர்கள். உங்கள் கட்டளை வேறு எதுவாக இருந்தாலும் நிறைவேற்றுகிறோம்" என்றார் பொத்தியார். "புலவர்களே! பெரும்புலவர் பிசிராந்தையார் என் உயிர் நண்பர். நான் வடக்கிருக்கும் செய்தி அறிந்ததும் அவர் இங்கே ஓடி வருவார். அவருக்கு என் அருகே ஓர் இடம் ஒதுக்கி வையுங்கள். இது என் வேண்டுகோள்" என்றார் அரசர். இதைக் கேட்டு எல்லோரும் வியப்பு அடைந்தனர். "அரசே! நீங்கள் சொல்வது பாண்டிய நாட்டுப் புலவராகிய பிசிராந்தையாரைத்தானே. அவர் தம் ஊராகிய பிசிரை விட்டு அதிகம் வெளியே வந்தது இல்லை. பல ஊர்கள் சுற்றும் புலவர்கள் நாங்கள். அவர் பெயரைத்தான் கேட்டு இருக்கிறோம். அவரை நேரில் பார்த்தது இல்லை. அவர் நம் சோழ நாட்டிற்கு வருகை தந்ததாகவும் எனக்குத் தெரிய வில்லையே" என்று கேட்டார் பொத்தியார். "நீங்கள் சொல்வது உண்மைதான். பிசிராந்தையார் நம் சோழ நாட்டிற்கு வருகை தந்தது இல்லை. நானும் பாண்டிய நாட்டிற்குச் சென்றது இல்லை. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததும் இல்லை." "அரசே! நீங்களும் பிசிராந்தையாரும் சந்தித்தது இல்லை என்கிறீர்கள். பேசிப் பழகவில்லை என்கிறீர்கள். உங்களுக்காக வடக்கிருந்து உயிர் விட அவர் இங்கே வருவார். அவருக்கு இடம் ஒதுக்கி வையுங்கள் எனச் சொல்கிறீர்கள். அவர் இங்கே வருவாரா? எங்களால் நம்ப முடியவில்லையே" என்று கேட்டார் பொத்தியார். "பொத்தியாரே! நானும் பிசிராந்தையாரும் உள்ளம் ஒன்றுபட்ட உயிர் நண்பர்கள். என்னுடைய உள்ளம் அவர் அறிவார். அதே போல அவருடைய உள்ளத்தை நான் அறிவேன். நல்ல நட்பிற்கு, உயர்ந்த நட்பிற்குப் பேசிப் பழக வேண்டுமா?" "அரசே! பேசாமல் பழகாமல் நட்பு எப்படி வளர முடியும்? உங்கள் பெருமையையும் புகழையும் பிசிராந்தையார் அறிந்து இருக்கலாம். அதே போல அவருடைய புலமைச்சிறப்பை நீங்கள் அறிந்து இருக்கலாம். இருவரும் ஒருவர் மீது ஒருவர் மதிப்பு கொண்டிருக்கலாம். இந்தச் சூழலில் அவர் உங்களுக்காக வடக்கிருக்க வருவார் என்கிறீர்களே. இதை என்னால் நம்ப முடியவில்லை." "பொத்தியாரே! பிசிராந்தையார் என்னை நண்பனாக விளித்துப் பாடல் எழுதி உள்ளார். நானும் அவருக்கு மடல் எழுதி உள்ளேன். மடல் வழியாக நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிவோம். நல்ல நட்பிற்குப் புணர்ச்சி பழகுதல் வேண்டா. இது உங்களுக்குத் தெரியாதா? எனக்காக உயிரை விட பிசிராந்தையார் இங்கே வருவார். இது உறுதி. என் அருகில் அவருக்கு ஒரு இடம் ஒதுக்கி வையுங்கள்." "அரசே! பிசிராந்தையார் இங்கு வருவதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் வடக்கிருக்கும் செய்தி அவரை அடைய இரண்டு திங்களாவது ஆகும். இல்லக் கடமைகளை எல்லாம் ஒழுங்கு செய்ய வேண்டும். அதன் பிறகே அவர் புறப்பட முடியும். இங்கு வர மேலும் சில நாட்கள் ஆகும். அதற்குள் நீங்கள் விண்ணுலகம் சென்று விடுவீர்கள். அவர் வந்தாலும் உங்களைச் சந்திக்க முடியாது. இங்குள்ள இட நெருக்கடி உங்களுக்கே தெரியும். இந்தச் சூழலில் உங்களுக்கு அருகில் அவருக்கு இடம் ஒதுக்க வேண்டுமா?" "பொத்தியாரே! எங்கள் நட்பின் ஆழத்தை நீங்கள் அறியவில்லை. அவருடைய வருகைக்காக என் உள்ளம் துடிப்பது எனக்குத்தான் தெரியும். என் உயிர் நண்பர் வளமான காலத்தில் சந்திக்காமல் இருந்து இருக்கலாம். இப்பொழுது என்னைக் காண ஓடோடி வருவார்." "அரசே! என்னை மன்னியுங்கள். இட நெருக்கடியால்தான் மறுத்துப் பேச வேண்டி வந்தது. உங்களுக்கு அடுத்தே பிசிராந்தையாருக்கு இடம் ஒதுக்கி உள்ளோம். இப்பொழுது உங்களுக்கு மகிழ்ச்சிதானே." "மகிழ்ச்சி பொத்தியாரே! என் மக்கள் மீது கொண்ட பிணக்கு. அதனால் ஏற்பட்ட சூழல்களால் உங்களை மறந்து விட்டேன். உங்கள் மனைவி கருவுற்று இருப்பதாக மகிழ்ச்சியுடன் சொன்னீர்களே. குழவி பிறந்து விட்டதா? ஆண் குழவியா? பெண் குழவியா?" "அரசே! பெற்ற மகவைப் பார்ப்பதா பேறு? உங்களுடன் உயிர் விடுவதே பெரும் பேறு." "பொத்தியாரே! வடக்கிருக்கும் மரபு உங்களுக்குத் தெரிந்து இருக்குமே. யார் யார் வடககிருக்கலாம். யார் யார் கூடாது என்ற விதி தெளிவாக உள்ளதே. திருமணம் ஆகாதவர்கள். கருவுற்ற மனைவியை உடையவர்கள். அவர் வருவாயையே நம்பி இருக்கும் குடும்பத்தினர். இப்படிப்பட்டவர்கள் வடன்கிருத்தல் கூடாது. வடக்கிருப்பவர்கள் இல்லக் கடமைகளை நிறைவேற்றியவர்களாக இருக்க வேண்டும். மானத்திற்கு இழுக்கு வந்ததால் நான் வடக்கிருக்கிறேன். இல்லக் கடமைகளை நிறைவேற்றியவர்கள் மட்டுமே என்னுடன் வடக்கிருக்க வேண்டும்." "அரசே! வடக்கிருக்கும் மரபை நான் நன்கு அறிவேன். இருந்தாலும்." "மனைவி கருவுற்று இருக்கும் நிலையில் எப்படி இங்கு வந்தீர்? இதனால் எனக்குத்தானே பழி வந்து சேரும். உடனே இங்கிருந்து புறப்படுங்கள். மகவின் அழகிய திருமுகத்தைப் பாருங்கள். தமிழ்ப் பெயர் சூட்டுங்கள். உங்கள் மனைவிக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் சொல்லுங்கள். இல்லக் கடமைகளை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் இங்கே வந்து வடக்கிருங்கள்." "அரசே! அறநெறிகளை விதிமுறைகளைச் சொல்லி என்னை இங்கிருந்து அனுப்பி விடாதீர்கள். உங்களுடனேயே வடக்கிருந்து உயிர்விட விரும்புகிறேன். என் எண்ணத்திற்கு மாறாக நடந்து கொள்ளாதீர்கள். இது என் அன்பு வேண்டுகோள்." "பொத்தியாரே! நீங்கள் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். இல்லப் பொறுப்புகளை நிறைவேற்றிய பின்னரே வடக்கிருக்க வேண்டும். என் மீது உங்களுக்கு உண்மையான அன்பிருந்தால் இல்லத்திற்குச் சொல்லுங்கள். பிறக்கும் குழந்தையில் திருமுகத்தைக் கண்டு மகிழுங்கள். இல்லக் கடமைகளை முடித்து விட்டு இங்கே வாருங்கள். இது என் அன்புக் கட்டளை." "அரசே! உங்கள் அன்பை மீறும் ஆற்றல் எனக்கு இல்லை. இப்பொழுதே என் இல்லத்திற்குச் செல்கிறேன். நான் மீண்டும் இங்குத் திரும்பச் சில திங்கள் ஆகும். அப்பொழுது நீங்கள் விண்ணுலகம் சென்றிருப்பீர்கள். உங்கள் திருமுகத்தை என்னால் காண இயலாது. உங்கள் நினைவாகவே இங்கே வடக்கிருந்து உயிர் விடுவேன்" என்று கண்ணீர் வழிய புறப்பட்டார் பொத்தியார். கோப்பெருஞ் சோழனும் புலவர்களும் அவரை வழியனுப்பி வைத்தார்கள். கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்கும் செய்தி எங்க்ம் பரவியது. நாள்தோறும் பலர் அங்கு வந்து வடக்கிருந்தனர். சில நாட்களில் கோப்பெருஞ் சோழன் உயிர் துறந்தார். வடக்கிருந்த இடத்திலேயே அவரை நல்லடக்கம் செய்தார்கள். அங்கே நடுகல் நட்டார்கள். அவரோடு வடக்கிருப்பவர்களும் ஒவ்வொருவராக இறந்தனர். மூன்று திங்கள் கழிந்தது- புலவர் பொதியார் அங்கு வந்தார். வடக்கிருக்கும் பெரியவர்கள் சிலர் அவரை வரவேற்றார்கள். தமக்கு உரிய இடத்தில் அவர் அமர்ந்தார். கோப்பெருஞ் சோழனுடன் உயிர் துறக்க இயலவில்லையே" என்று கலங்கினார். "ஆ! நண்பனே! நற்பண்பாளனே! உலகம் போற்றும் புகழோனே! மானமே பெரிதென்று உயிர் துறந்தாயே! உன் புகழ் உலகு உள்ளளவும் நிலைத்து நிற்குமே! கடமைகளை முடித்து விட்டு வரச் சொன்னாயே! அப்படியே வந்து விட்டேன். என்னை விட்டு எங்கே சென்றாய்? இறக்கும் போது அருகில் இருக்கும் பேறு கிடைக்க வில்லையே. கொடியவனாகி விட்டேனே. காலனே! நண்பன் இல்லாமல் நான் உயிர் வாழ்வேனா? என் உயிரையும் உடனே எடுத்துச் செல்" என்று புலம்பினார் அவர். அங்கிருந்த பெரியவர் ஒருவர், "புலவரே! உங்களுக்கு அறிவுரை கூறும் தகுதி எனக்கு இல்லை. மானத்தின் பெருமை காக்க உயிர் விட்டார் நம் அரசர். நாமும் அவருக்காக உயிரை விட வந்து உள்ளோம். இங்கே அழுகை ஒலியோ புலம்பல் ஒலியோ கேட்க வேண்டாம். நம் அரசரைப் பற்றிய இனிய நினைவுகளைச் சொல்லுங்கள். வாழ்க்கையின் உண்மை நிலையினை விளக்குங்கள். நல்ல அறிவுரைகளை வாரி வழங்குங்கள். அவற்றைக் கேட்டுக் கொண்டே நாங்கள் பெருமிதத்துடன் உயிர் விடுகிறோம்" என்றார். "பெரியவரே! மன்னியுங்கள். எல்லை மீறிய உணர்ச்சியில் என்னேயே மறந்து விட்டேன். உங்கள் அறிவுரைக்கு நன்றி. உயர்ந்த குறிக்கோளுக்காக இங்கே உயிர் விட வந்துள்ளோம். அழுது புலம்பி அதன் மதிப்பைக் குறைக்க மாட்டேன். நிலையான மெய்ப் பொருள்களைப் பற்றி இனி நாம் உரையாடுவோம். சாகும் போதும் இனிமையாகச் சாவோம்" என்று உணர்ச்சி பொங்கச் சொன்னார் பொத்தியார். மறுநாள் அங்கே பெரியவர் ஒருவர் வந்தார். அறிஞரைப் போல அவர் தோற்றம் இருந்தது. நீண்ட பயணம் செய்தவரைப் போலக் காட்சி அளித்தார் அவர். வடக்கிருக்கும் போலக் காட்சி அளித்தார் அவர். 'மதிப்பிற்கு உரியவரைப் போல இவர் தோற்றம் உள்ளது. யார் என்று கேட்போம்' என்று நினைத்தார் பொத்தியார். எழுந்து அவரை வரவேற்றார். "பெரியவரே! நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? சொல்லுங்கள்? அப்பொழுதுதான் உங்களுக்கு உரிய இடத்தை ஒதுக்க முடியும்" என்றார் பொத்தியார். "ஐயா! நான் பாண்டிய நாட்டுப் புலவன். என் ஊர் பிசிர். பிசிராந்தையார் என்று என்னை அழைப்பார்கள். உயிர் நண்பர் கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்கும் செய்தி கிடைத்தது. வடக்கிருந்து உயிர் துறக்க நானும் இங்கு வந்தேன்." "ஆ! தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் பெரும்புலவர் பிசிராந்தையாரா நீங்கள்? பாண்டியன் அறிவுடை நம்பி மக்களிடம் அதிக வரி வாங்கினான். அவனுக்கு அறிவுரை சொல்வதற்காகக் "காய்நெல் அறுத்து" என்ற பாடலை பாடினீர்களே? அரசர்கள் எப்படி வரி வாங்க வேண்டும். இதற்கு இலக்கணமாக அந்தப் பாடலையே பயன் படுத்துகிறார்களே." "நீங்கள் சொன்ன அத்தனைக்கும் உரியவன் அடியேன்தான். அன்பின் மிகுதியால் பலர் என்னை இப்படிப் புகழ்கிறார்கள். நீங்கள் யார் என்று சொல்ல வில்லையே?" "பெரும்புலவரே! என் பெயர் பொத்தியார்." "புலவர் பொத்தியாரா! என் உயிர் நண்பருக்கு எல்லாமாக இருந்தவரா? உங்களைச் சந்திக்கும் பேறு கிடைக்கும் என்று கனவிலும் நினைக்க வில்லை. கோப்பெருஞ் சோழனுடன் நீங்களும் உயிர் துறந்து இருப்பீர்கள் என்று நினைத்தேன்." "நீங்கள் நினைத்தது போலத்தான் நடந்திருக்க வேண்டும். என் மனைவி கருவுற்று இருந்தாள். அவள் மகவு ஈன்ற பிறகு வருமாறு அரசர் கட்டளை இட்டார். "என் இல்லக் கடமைகளை முடித்து விட்டேன். வடக்கிருக்க நேற்றுத்தான் இங்கு வந்தேன். அப்படி நடந்ததும் நல்லதற்குத்தான் அதனால் உங்களைச் சந்திக்கும் பேறு பெற்றேன்." கோப்பெருஞ் சோழன் தமக்கு அருகிலேயே உங்களுக்கு இடம் ஒதுக்கி வைத்துள்ளார். நீங்கள் இங்கே அமரலாம்." "பொத்தியாரே! எந்த இடம்? காட்டுங்கள்." "என் அருகில் உள்ள இந்த இடம்தான்." பிசிராந்தையார் அந்த இடத்தில் அமர்ந்தார். அருகிருந்த மற்ற புலவர்கள் அவரை வியப்புடன் பார்த்தார்கள். பொத்தியார் தயக்கத்துடன் "பெரும் புலவரே! எனக்கு ஓர் ஐயம்?" என்று கேட்டார். "எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள்." "நான் கோப்பெருஞ் சோழனுக்கு நெருங்கிய நண்பன். நான் அவரைப் பிரிந்ததோ அவர் என்னைப் பிரிந்ததோ இல்லை. நான் அறிந்து கோப்பெருஞ் சோழனை நீ சந்தித்ததோ பேசியதோ இல்லை. உங்கள் பெரும்புலமையைப் அவர் அறிந்து இருக்கலாம். அவருடைய வள்ளன்மையைப் பற்றியும் புலமையைப் பற்றியும் நீங்கள் கேட்டிருக்கலாம். ஒருவரை ஒருவர் அறியாமலே நட்பும் கொண்டிருக்கலாம். மடல் வழியாக இருவர் நட்பும் வளர்ந்திருக்க வாய்ப்பு உண்டு. பார்க்கலாம். பழகாமல் உங்கள் இருவருக்கும் நெருங்கிய நட்பு எப்படி மலர்ந்தது? எனக்கு வியப்பாக உள்ளது." "பொத்தியாரே! உயர்வுதான் நட்பிற்கு அடிப்படை. பேசுவதும் பழகுவதும் நட்பின் வெளிப்பாடுகள். உள்ளத்தால் கலப்பதே உயர்ந்த நட்பு. நானும் கோப்பெருஞ் சோழனும் உள்ளத்தால் ஒன்றுபட்டு இருந்தோம். ஆனால் உடலால் பிரிக்கப்பட்டு இருந்தோம். நீண்ட தொலைவு எங்களைச் சந்திக்க இயலாமல் தடுத்தது. அதனால் என்ன? உள்ளம் ஒன்றுபட்ட நாங்கள் மடல் வழியாக உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டோம். அவர் உள்ளத்தை நான் அறிவேன். என் உள்ளத்தை அவர் அறிவார். இணைந்த எங்கள் உள்ளங்கள் காலத்தாலோ நாட்டாலோ பிரிக்கப் படுவன அல்ல" என்றார் பிசிராந்தையார். "புலவரே! உங்களை வியப்பதா? அல்லது கோப்பெருஞ் சோழனை வியப்பதா? யாரை வியப்பது என்று புரியாமல் குழம்பி நிற்கிறேன்." "பொத்தியாரே! என்ன சொல்கிறீர்?" "என்னுடன் வடக்கிருந்து உயிர் துறக்கப் பிசிராந்தையார் வருவார். அவருக்காக என் அருகே ஓர் இடம் வையுங்கள் என்றார். நாங்கள் கோப்பெருஞ் சோழனிடம் எவ்வளவோ மறுத்து உரைத்தோம். ஆனால் அவரோ நீங்கள் இங்கே வருவீர்கள் என்று உறுதியுடன் சொன்னார். அவர் சொன்னது போலவே நீங்களும் இங்கே வந்திருக்கிறீர்கள். இருவரில் யார் செயலை வியப்பது என்று தான் குழப்பம்." "பொத்தியாரே! ஒருவர் உள்ளத்தை இன்னொருவர் அறிவதே உண்மை நட்பு. இதில் வியப்பதற்கு என்ன உள்ளது? என் நண்பர் வடக்கிருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டேன். நான் செய்ய வேண்டிய இன்றியமையாக் கடமைகளை விரைந்து முடிந்தேன். இங்கு வந்தேன் அதற்குள் என் உணிர் நண்பர் விண்ணுலகம் சென்று விட்டார். காணாமலே காதல் என்பார்கள். பிறகு சந்தித்து உரையாடி மகிழ்வார்கள். என் நிலையைப் பாருங்கள். என் உயிர் நண்பரை நான் இதுவரை சந்தித்தது இல்லை. அவருடைய உள்ளத்தை அறிவேன். அவர் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை அறியேன். இங்கு வந்ததும் அவரைச் சந்திக்க இயல வில்லை. என் வருகைக்காக அவர் விண்ணுலகில் ஆவலுடன் காத்திருப்பார். விரைவில் என் உயிர் நீங்க வேண்டும். என் நண்பரைச் சந்தித்து மகிழ வேண்டும். இதுதான் என் ஆவல்" என்றார் பிசிராந்தையார். "பிசிராந்தையாரே! நீங்களும் கோப்பெருஞ் சோழனும் சிறந்த நட்பிற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறீர்கள். இனி இந்த உலகமே உங்கள் நட்பைப் போற்றிப் புகழப் போகிறது. உங்கள் இருவர் புகழும் என்றும் நிலைத்து நிற்கும். உங்கள் காலத்தில் வாழும் பேறு பெற்றதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்" என்றார் பொத்தியார். 1. "எண்ணில் காட்சி யிளையோர் தோற்பின் நின்பெருஞ் செல்வம் யார்க்கெஞ் சுவையே அமர்வெஞ் செல்வ நீயவர்க் குலையின் இகழுந ருவப்பப் பழியெஞ் சுவையே (புறநானூற்றுப் பாடல் 212, அடிகள் 15 முதல் 18 வரை, புல்லாற்றூர், எயிற்றியனார் பாடியது). 2. வடக்கிருத்தல்: - வடக்கிருத்தலாவது ஊர்ப் புறத்தே தனியிடங்கண்டு அறமுரைக்கும் சான்றோர் புடைசூழப் புல்லைப் பரப்பி அதன் மீதிருந்து உண்ணா நோன்பு மேற்கொண்டு அறங்கூறும் தவம் செய்தலாகும். (புறநானூறு - இரண்டாம் தொகுதி - ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை உரை - கழக வெளியீடு) 3. தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளும் பிசிரோ னென்பவென் னுயிரோம் புநனே செல்வக் காலை நிற்பினும் அல்லற் காலை நில்லலன் மன்னே (புறநானூற்றுப் பாடல் 215, பாடல் அடிகள் 6 முதல் 10 வரை) 4. இசை மரபாக நட்புக் கந்தாக இனையதோர் காலை யீங்கு வருதல் வருவ னென்ற கோனது பெருமையும் அதுபழு தின்றி வந்தவ னறிவும் வியத்தொறும் வியத்தொறும் யிப்பிறந் தன்றே (புறநானூற்றுப் பாடல் 217, பாடல் அடிகள் 5 முதல் 9 வரை)
|
ஒருநாள் ஆற்றங்கரையில் இருந்த சிறிய நண்டு ஒன்று ஆற்றை நோக்கி மெல்ல நடந்து போய்க்கொண்டிருந்தது. அதனுடைய நடையே நேராக இல்லாமல் கோணலும் மாணலுமாய் இருந்தது. இதைக் கவனித்த ஒரு பெரிய நண்டு ஒன்று, சிறிய நண்டின் அருகே சென்று, “யப்பா மகனே! எங்கே போய்க்கொண்டிருக்கின்றாய்? என்று கேட்டது. அதற்கு அந்த சிறிய நண்டு, “நானா! நான் இந்த ஆற்றில் போய் நீந்திக் குளிக்கப்போகிறேன்” என்றது. உடனே அந்தப் பெரிய நண்டு, “நீ இப்படி கிழக்கும் மேற்குமாக, வடக்கும் தெற்குமாக நடந்து போய்க்கொண்டிருந்தால், ஒருபோதும் ஆற்றை அடைய முடியாது” என்றது. “அப்படியானால், நான் எப்படி நடக்கவேண்டும் என்பதை எனக்குக் கற்றுத்தாருங்கள்” என்றது சிறிய நண்டு. “அப்படிக் கேள் என் செல்லம், இதோ பார் நான் நடந்து காட்டுகிறேன். அதன்பின்னர் என்னைப் பின்பற்றி நட” என்று சொல்லிவிட்டு முன்னால் நடந்து சென்றது. பெரிய நண்டு நடந்துபோன விதத்தைப் பார்த்துவிட்டு, சிறிய நண்டுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ஏனென்றால், அந்த நண்டும் கோணலும் மாணலுமாய் நடந்து போனது. அப்போது அந்தச் சிறிய நண்டு பெரிய நண்டைப் பார்த்து, “அம்மா! நம்முடைய இனத்தில் உங்களால் மட்டுமல்ல, யாராலும் சரியாக நடக்கத் தெரியாது போலும்” என்றது. இதைக் கேட்ட பெரிய நண்டால், எதுவும் பேச முடியவில்லை. ஆம், சொல்வது அல்லது போதிப்பது யாருக்கும் எளியது. ஆனால், அதைக் கடைப்பிடித்து வாழ்வது மிகக்கடினம்.
|
தன்னுடைய தர்பாருக்கு விசாரணைக்காக வரும் வழக்குகளில் பலவற்றை அக்பர் பீர்பாலிடம் ஒப்படைப்பதுண்டு. ஒருநாள், அக்பரின் அனுமதியுடன் தர்பாருக்கு வந்த மதுசூதன் என்ற வியாபாரி அவரை வணங்கியபின், "பிரபு! என் பெயர் மதுசூதன்! நான் ஒரு நெய் வியாபாரி! ஒரு மாதத்திற்கு முன் அஸ்லாம்கான் எனும் என் நண்பன் என்னிடம் வந்து 20 முகராக்கள் கடன் கேட்டான். பதினைந்து நாள் களுக்குள் திருப்பித் தருவதாகச் சொன்னவன் இதுவரை அதைத் திருப்பித் தரவேயில்லை" என்றார். "நீ கொடுத்த கடனுக்கு அவனிடம் இருந்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கியிருக்கிறாயா?" என்று அக்பர் கேட்டார். "அஸ்லாம்கானை எனக்கு இருபது வருடங்களாகத் தெரியும். அதனால் கடன் பத்திரத்தில் கையெழுத்து வாங்கவில்லை. ஆனால் நான் சொல்வது உண்மை!" என்றார். உடனே பீர்பாலின் பக்கம் திரும்பிய அக்பர், "பீர்பால்! இந்த வழக்கை நீ கவனிக்கிறாயா?" என்று கேட்டார். அதற்குச் சம்மதித்த பீர்பால் மாலையில் மதுசூதனைத் தன் வீட்டில் சந்திக்கச் சொன்னார். மாலையில் மதுசூதன் வீட்டிற்கு வந்ததும், அவரை நடந்தவற்றை மீண்டும் விளக்கச் சொன்னார். அவர் சொன்னதெல்லாம் கேட்டபிறகு, "ஆக, நீங்கள் அஸ்லாமுக்குக் கடன் கொடுத்ததற்கு அத்தாட்சி எதுவும் இல்லை. சாட்சிகளும் இல்லை" என்றார் பீர்பால். அதற்கு மதுசூதன், "ஆமாம்!" என்றார். அவருக்கு தைரியமளித்து அனுப்பியபின், பீர்பால் அஸ்லாம் கானைத் தன்னை சந்திக்கும்படி தகவல் அனுப்பினார். சற்று நேரத்தில் நல்ல உடை அணிந்த வாட்டசாட்டமான ஓர் ஆள் பீர்பாலைத் தேடி வந்தார். "நான் தான் அஸ்லாம்கான்! என்னை வரச் சொன்னீர்களாமே!" என்றார். "உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். உங்கள் மீது ஒருவர் புகார் கொடுத்திருக்கிறார். அதைப்பற்றி உங்களை விசாரிக்க வேண்டும்" என்றார் பீர்பால். "என் மீது புகாரா? நான் மிகவும் நாணயமானவன்! என் மீது புகார் வர சிறிதும் வாய்ப்பு இல்லையே!" என்றான் அஸ்லாம். மதுசூதன் அவர் மீது தொடுத்து உள்ள வழக்கைப்பற்றி பீர்பால் விவரித்ததும், "நான் ஏன் அவரிடம் இருந்து கடன் வாங்க வேண்டும்? எனக்கு ஏராளமாக சொத்து இருக்கிறது. நெய் வியாபாரத்தில் நல்ல லாபமும் சம்பாதிக்கிறேன். மதுசூதன் என் மீது வீணாகப் பழி சுமத்துகிறான்" என்றான் அஸ்லாம். "இருக்கலாம்! ஆனால் வழக்கு என்று வந்து விட்டபின் அதை நன்கு விசாரிக்க வேண்டியிருக்கிறது" என்றார் பீர்பால். "அல்லா எனக்கு ஏராளமான செல்வத்தை வழங்கி இருக்கிறார். எனக்கு யாரிடமும் கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை" என்று அஸ்லாம் அடித்துக் கூறினார். உடனே பேச்சை மாற்றிய பீர்பால், "அஸ்லாம்! உங்களால் எனக்கு ஓர் உதவி செய்ய முடியுமா?" என்றார். "சொல்லுங்கள்" என்று அஸ்லாம் கூற, "கிராமத்திலுள்ள என் நண்பனிடம் எனக்கு ஒரு டின் நெய் அனுப்பச் சொன்னேன். அவன் இரண்டு டின் அனுப்பி விட்டான். ஒரு டின் நெய்யை எங்காவது விற்று விட்டால் நல்லது" என்றார் பீர்பால். "அதை என்னிடம் கொடுங்கள். அதை விற்றுப் பணத்தை உங்களுக்கு அனுப்புகிறேன்" என்றான் அஸ்லாம். "நன்றி! நாளைக்கே உங்கள் கடைக்கு ஒரு டின் அனுப்பி வைக்கிறேன்" என்று சொல்லிவிட்டு பீர்பால் அவரை அனுப்பி வைத்தார். மறுநாள், மதுசூதன் வீட்டுக்குச் சென்ற பீர்பால், அஸ்லாம்கானிடம் கூறியதுபோல் கூறிவிட்டு நெய்யை விற்றுத்தரமுடியுமா என்று கேட்டார். மதுசூதனும் அதற்கு ஓப்புக் கொண்டதும், இரண்டு பேர் கடைக்கும் இரண்டு நெய் டின்கள் அனுப்பப்பட்டன. மறுநாள் பீர்பால் தன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கையில், மதுசூதன் மூச்சிரைக்க ஓடிவந்தார். "பீர்பால்! நீங்கள் அனுப்பியிருந்த டின்னில் ஒரு பொற்காசு இருந்தது. அதைக் கொடுக்க வந்தேன். நெய் விற்ற பணம் இதோ!" என்று அவர் மொத்தத்தையும் பீர்பாலிடம் தந்தார். "அட! நான் அனுப்பிய டின்னில் பொற்காசு இருந்ததா? நான் மிகவும் அதிருஷ்டசாலி! நன்றி, மதுசூதன்" என்றார் பீர்பால். "அதிருக்கட்டும். என்னுடைய வழக்கு என்ன ஆயிற்று?" என்று மதுசூதன் கேட்க, "அதுவா! நான் விசாரணை நடத்திக் கொண்டு இருக்கிறேன். நாளைக்கு முடிவு தெரியும்" என்றார் பீர்பால். அடுத்த நாள் பீர்பால் வீட்டுக்கு வந்த அஸ்லாம் "உங்களுடைய நெய் விற்ற பணம் இதோ!" என்று பணத்தை அளித்தார். அவருக்கு நன்றி தெரிவித்தப்பின் அவரை உட்காரச் சொல்லிவிட்டு பீர்பால் தன் வேலைக்காரனை அழைத்து அவன் செவிகளில் ரகசியமாக ஏதோ கூறினார். அவர் என்ன கூறினார் என்று அஸ்லாமின் செவிகளில் விழவில்லை. அதைப்பற்றி அவன் பொருட்படுத்தவும் இல்லை. பீர்பால் தன் வேலைக்காரனிடம் ரகசியமாகக் கூறியது இதுதான்! "நேராக நீ அஸ்லாமின் வீட்டுக்குப் போ! அவருடைய மகனைக் கூப்பிடு! அவனுடைய தந்தை பீர்பாலின் வீட்டிலிருப்பதாக கூறு! பிறகு நெய் டின்னில் இருந்த ஒரு பொற்காசை எடுத்துவர மறந்து விட்டதாகவும், அதை உடனடியாக எடுத்து வரவும் அவன் தந்தை கூறியதாகச் சொல்!" என்றார். வேலைக்காரனை அஸ்லாமின் வீட்டுக்கு ரகசியமாக அனுப்பியபின், பீர்பால் தன் வரவேற்பறையில் அமர்ந்திருந்த அஸ்லாமிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு வேண்டும் என்றே காலத்தைக் கடத்தினார். சற்று நேரத்தில் அஸ்லாமின் மகனுடன் பீர்பாலின் வேலைக்காரன் திரும்பினான். அந்தச் சிறுவன் அஸ்லாமை நோக்கி ஓடிவந்து, "அப்பா! நீங்கள் எடுத்துவரச் சொன்ன பொற்காசு இதோ! இது நமக்கு நேற்று நெய் டின்னில் கிடைத்தது" என்று உண்மையை உளறிவிட, அஸ்லாம் கோபத்துடன் "அதிகப்பிரசங்கி! உன்னை யார் இங்கே வரச்சொன்னது? நெய் டின்னில் பொற்காசா? நீ என்ன மடத்தனமாய் உளறுகிறாய்?" என்று உண்மையை மறைக்க அரும்பாடு பட்டார். "அவனை ஏன் மிரட்டுகிறீர்கள் அஸ்லாம்? பையன் உண்மையைத் தான் கூறுகிறான். நீங்கள்தான் மூடி மறைக்கிறீர்கள். இந்தப் பொற்காசை நான்தான் நெய் டின்னில் வைத்தேன். உங்களை சோதிப்பதற்காகத்தான் அதைச் செய்தேன். இனியும் பொய் பேச முயன்றால், உங்கள் தலை போய்விடும்" என்று பீர்பால் மிரட்ட, அஸ்லாம் உண்மையை ஒப்புக் கொண்டு பொற்காசை பீர்பாலிடம் திருப்பித் தந்தார். "சரிதான்! நீங்கள் மதுசூதனிடம் கடன் வாங்கிய 20 முகராக்களையும் இதேபோல் என்னிடம் திருப்பித் தந்துவிடுங்கள்" என்றார் பீர்பால். "நான் மதுசூதனிடம் கடன் வாங்கவே இல்லை" என்று அஸ்லாம் பழைய பல்லவியைப் பாட, இதைக் கேட்டதும் பீர்பால் "அஸ்லாம்! இனியும் பொய் பேசினால், உங்களுக்கு தூக்கு தண்டனை நிச்சயம்!" என்று அஸ்லாம் கானை பயமுறுத்த, அவன் உண்மையை ஒப்புக்கொண்டு கடனைத் திருப்பிக் கொடுப்பதாகக் கூறி பீர்பாலிடம் மன்னிப்புக் கேட்டு, வாங்கிய கடனை மொத்தமாக திருப்பி அளித்தான். பீர்பாலின் புத்திசாலித்தனத்தை, அக்பர் வெகுவாகப் பாராட்டினார். |
அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் தோட்டத்தில் கீரை பயிரிட்டு இருந்தனர், குருவும் சீடர்களும். செடிகள் நன்றாக வளர்ந்து, தள தள என்று இருந்தனர். ஒருநாள் காலையில் எழுந்து பார்த்த மட்டி, "ஐயோ! போச்சு! போச்சு!" என்று அலறினான். பரமார்த்தரும், மற்ற சீடர்களும் தோட்டத்துக்கு ஓடினார்கள். மொத்தம் மூன்று பாத்திகள் இருந்தன. அதில் ஒரு பாத்தியில் இருந்த செடிகளை மாடு ஒன்று மேய்ந்து விட்டிருந்தது. "அடடா! நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறோம்; எல்லாம் இப்படிப் பாழாகி விட்டதே" என்று வருத்தப்பட்டார் பரமார்த்தர். செடிகளை மாடு மேயாமல் இருப்பதற்காகத் தம் சீடர்களை யோசனை கூறுமாறு கேட்டார். "குருவே! அந்த மாடு வந்து மேய்வதற்கு முன்பு நாமே கொஞ்சம் கீரையைப் பறித்து அதற்கு போட்டு விடலாமே!" என்றான் முட்டாள். "நாம் பயிரிடுவதை மாடு சாப்பிடாமல் இருக்க வேண்டுமானால் மாட்டுக்கென்று தனியாக ஒரு பாத்தியில் கீரை விதைத்து விட்டால் போதும். அதை மட்டும் சாப்பிட்டு விட்டுப் போய்விடும்!" என்றான்ன மூடன். "புத்திகெட்டவர்களே! நீங்கள் சொல்கிறபடி செய்தாலும் நமக்குத்தானே நஷ்டம்? அதையும் தின்று, இதையும் தின்றுவிடுமே!" என்று அவர்களைத் திட்டினார், பரமார்த்தர். அப்போது மண்டுவுக்கு ஒரு யோசனை தோன்றியது. "ராத்திரியில் மட்டும்தானே மேய்கிறது? அதனால் தினம் தினம் இரவு வந்ததும் எல்லாச் செடிகளையும் பிடுங்கி பத்திரமாக மறைத்து வைத்து விடலாம்! பொழுது விடிந்ததும், பழையபடி நட்டு விடலாம்!" என்றான். இந்த யோசனையும் சரிப்பட்டு வராது என்று பரமார்த்தர் கூறிவிட்டார். "தழைகள் எல்லாம் மேலே இருப்பதால்தான் தின்று விடுகிறது, பூரா செடிகளையும் பிடுங்கி, தலைகீழாக நட்டு விடுவோம்! வேர் மட்டும் மேலே இருப்பதைப் பார்த்து, மாடு ஏமாந்து போய்விடும்!" என்று சொன்னான் மட்டி "ஆமாம்! இதுதான் சரியான வழி!" என்று, ஒரு பாத்தியில் இருந்த செடிகளை மட்டும் பிடுங்கித் தலைகீழாக நட்டு வைத்தனர். வேர் முழுவதும் மண்ணுக்கு மேலே இருந்ததால் செடிகள் முழுவதும் ஒரே நாளில் செத்து விட்டன. "குருவே! இந்தச் செடிகளின் மீது பானைகளை கவிழ்த்து மூடி விட்டால் போதும். செடிகளைத் தேடிப் பார்த்து விட்டு மாடு ஏமாந்து போய்விடும்!" என்று சொன்னான் மடையன். மறுநாளே, சந்தையிலிருந்து ஏராளமான பானைகளை வாங்கி வந்தனர். ஒவ்வொரு செடியின் மீதும் ஒவ்வொரு பானையைக் கவிழ்த்து வைத்தனர். சூரிய வெளிச்சம் படாததால், பத்தே நாளில் இரண்டாவது பாத்தியில் இருந்த செடிகளும், வாடி வதங்கி விட்டன. குருவுக்கும், சீடர்களுக்கும் ஒரே கவலையாகப் போய்விட்டது. "குருவே! அந்தப் பசு மாட்டைப் பிடித்துக் கட்டி விட்டால் போதும். நாமே தினம் பால் கறந்து சாப்பிடலாம்! மாட்டுக்காரன் வந்து கேட்டால் செடிகளை மேய்ந்ததற்காகத் தண்டனையாக நிறைய பணத்தையும் வாங்கிக் கொள்ளலாம்" என்று கூறினான் மடையன். "இப்போதுதான் நமக்கு இரண்டு வழிகளில் லாபம்!" என்றபடி குதித்தான் மட்டி மறுநாள் இரவு வெளிச்சம் தெரிவதற்காகக் கையில் கொள்ளிக் கட்டையை வைத்துக் கொண்டான், முட்டாள். குருவும், சீடர்களும் தோட்டத்தில் பதுங்கிக் கொண்டனர். இந்தத் தடவை வழக்கமான மாட்டுக்குப் பதில் எலும்பும் தோலுமாய் இருந்த வேறொரு பசுமாடு வந்தது. மாட்டைக் கண்டதும் பதுங்கியிருந்த குருவும் சீடர்களும் தடால் என்று அதன் மேல் விழுந்து புரண்டார்கள். மாட்டின் வாலைப் பிடித்து முறுக்கினான் மூடன். அதன் முகத்தில் சூடு போட்டான், முட்டாள். வயிற்றின் மேல் ஏறிக் குதித்தான் மடையன். "அப்பாடா! ஒரு வழியாகத் திருட்டு மாட்டைக் கண்டுபிடித்து விட்டோம்!" என்ற பரமார்த்தரும் சீடர்களும் மகிழ்ச்சியோடு படுக்கச் சென்றார்கள். பொழுது விடிந்ததும், அந்த ஊரிலேயே பெரிய முரடனான முனியாண்டி, தன் மாட்டைத் தேடிக் கொண்டு வந்தான். பரமார்த்தரும் சீடர்களும் தன் மாட்டை கட்டி வைத்திருப்பதைப் பார்த்துப் பயங்கரமாகக் கோபம் கொண்டான். "டேய்! உங்களுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என் மாட்டைக் கட்டி வைப்பீர்கள்? மாட்டுக்குச் சூடு போட்டதற்கும், அதன் காலை ஒடித்துக் கட்டிப் போட்டதற்கும் சேர்த்து மரியாதையாகப் பணத்த எடுத்து வையுங்கள்!" என்று கத்தியபடி குருவையும் சீடர்களையும் உதைக்க ஆரம்பித்தான். "கீரையும் வேண்டாம்; பணமும் வேண்டாம். ஆளை விட்டால் போதும்" என்று அலறியபடி குருவும், சீடர்களும் மடத்தை விட்டே ஓடத் தொடங்கினார்கள். |
சந்திரி அக்காவிற்கு பீடை கூடியிருக்கிறது என்று ஜோசியர் தாத்தா அப்பாவிடம் வந்து சொன்னார். அன்றைக்கு வெள்ளிக் கிழமை. ஜோசியர் தாத்தா வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பத்து மணி வாக்கில்தான் வருவார். பகல் முழுக்க அப்பாவிடம் சாஸ்திரம் பேசிவிட்டு மத்தியானம் சாப்பிட்டு கண்ணயர்ந்து விட்டுப் போவார். ஆற்றங்கரைப் படிக்கட்டில் புஸ்புஸ் என்று அவர் ஏறி வருவதை நான் தான் முதலில் பார்த்தேன். புருவங்களில் வேர்வை திரண்டு மினுங்கியது. ''ஜோசியர் தாத்தா'' என்றேன். "உங்கப்பா எங்கேடா?'' என்றார். ''குளிக்கிறார்'' வேட்டி நுனியைத் தூக்கி முகத்தைத் துடைத்தபடி, கூனல் முதுகுடன், விடுவிடுவென்று நடந்தார். நான் அவருக்குப் பின்னால் ஓடினேன். திண்ணையில் அமர்ந்து சாஸ்திரக் கட்டை பக்கத்தில் வைத்துவிட்டு, ''உங்கப்பன்கிட்ட போய் சொல்லுடா'' என்றார். நான் அம்மாவிடம்தான் போய் சொன்னேன். அம்மா குளியலறைக்குள் போனாள். தண்ணீர் கொட்டும் சத்தம் நின்றது. பாதி துவட்டியபடி அப்பா என்னருகே போன போது வெந்நீரின் ஆவி என்மீது பட்டது. லைப்பாய்சோப்பின் இனிய மணம். அப்பாவைப் பின் தொடர்ந்தேன். உற்சாமாகச் சிரித்தபடி அப்பா ஏது இத்தனை தூரம் என்று கேட்டபடி ஓரத்து அறைக்குப் போனார். ஜோசியர் தாத்தா உற்சாகமே இல்லாமல் வா. ஒரு விசேஷம் இருக்கு என்றார். அப்பா சலவை வேட்டியை மொடமொட வென்று சுற்றியபடி வந்தார். அவர் உடலின் ஈரத்தில் அது ஆங்காங்கே நீலநிறம் பெற்றது. தாத்தாவின் உடல் உலர்ந்து விபூதிப் பட்டைகள் தெளிவடைந்தன. அப்பா அருகே உட்கார்ந்தார். ''காப்பி சாப்பிடுது...'' என்றார் தாத்தா. ''இருக்கட்டும் பார்க்கலாம்'' என்றார். அம்மா பித்தளை செம்பில் காப்பி கொண்டு வந்தாள். தாத்தா பெரிய டம்ளரில் வழிய வழிய ஊற்றி மூன்று முறை பருகினார். ''அப்பாடா'' என்றார். மறுபடி வேர்க்க ஆரம்பித்தது. அப்பா, ''என்ன சங்கதி'' என்றார். தாத்தா திரும்பி என்னைப் பார்த்தார். அப்பா, ''போடா, போய் குளி'' என்றார் பின்கட்டுக்கு வந்தேன். தங்கம்மா நெல்லை வேக வைத்துக் கொண்டிருந்தாள். குட்டுவம் களக்களக் என்று சிரிப்பை அடக்க முயல்வது போலிருந்தது. எரியும் தென்னை மட்டைகள் டப் டப் என்று வெடித்தன. தொழுவிற்குப் போய் பசுக்களை வேடிக்கை பார்த்தபடி சிறிது நேரம் உட்கார்ந்திருந்தேன். நேரமாகிக் கொண்டிருந்தது. பள்ளிக்கூடம் ரொம்ப தூரம். என்ன விஷயம் என்று தெரியாமல் எப்படி போவது? சிறிது நேரம் கழித்து தாத்தா ஜோசியக் கட்டுடன் கோயில் முற்றத்தில் நடந்து போவது தெரிந்தது. வீட்டுக்கு வந்தேன். அப்பா அதற்குள் சட்டை போட்டு குடையுடன் நின்றிருந்தார். நின்றபடியே காப்பி பருகிவிட்டு, அப்ப நான் வர்றேன்'' என்றார். அவர் ஆபீஸ் போகவில்லை. ஆற்றுப்படிகளில் இறங்கிச் சென்றார். சமையலறைக்கு ஓடி அம்மாவிடம், அப்பா எங்கே போகிறார்?'' என்று கேட்டேன். அம்மா, நான் அதுவரையிலும் பல்கூட தேய்க்காமல் இருப்பதைக் சொல்லிக் திட்டினாள். கொல்லைக் பக்கத்துக்குப் போனேன். தங்கம்மா பெரிய சல்லடைக் கரண்டியால் நெல்லை அள்ளி பனம் பாயில் கொட்டிக் கொண்டிருந்தாள். குட்டுவத்திலிருந்து ஆவி எழுந்தது. பாய் நெல்லின் மீது மேகம் பரவி எழுந்தது. இனிமையான புழுங்கல் மணம். நெல்மணிகள் வெடித்து புன்னகை புரிவதுபோல இருந்தன. தங்கம்மா ஆற்றில் விழுந்து எழுந்தவள் போல தெரிந்தாள். "கொச்சேமான் வடக்கேடத்துக்குப் போவேல்லியா?" என்றாள். எதுக்கு? அப்போதுதான் சந்திரி அக்கா பற்றி அறிந்தேன். எனக்குப் புரியவில்லை பல் தேய்ப்பதை நிறுத்திவிட்டு, ''பீடை என்றால் என்ன?'' என்றேன். ''செண்ணு பாக்கணும். கொச்சேமானுக்கு அருமந்த அக்காதானே'' என்றாள். சிக்கலான ஏதோ விஷயம் என்று புரிந்தது. முன்பு அக்கா திரண்டு குளித்த போது, பத்து நாள் என்னை அந்தப் பக்கம் அண்டவே விடவில்லை. மூலைப்புரையின் கரிபிடித்த ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தபோத நாலு உலக்கைகளால் வேலி கட்டப்பட்டு உட்கார்ந்திருந்தாள். என்னைப் பார்த்துச் சிரித்து, பச்சரிசி மாவு உருண்டை வேண்டுமா என்று சைகையால் கேட்டாள். மாவு உருண்டையும், உளுந்தங்களியும் தின்று அலுத்துப் போயிருந்ததனால் நான் வேண்டாம் என்றேன். அவளைப் பார்க்வே வினோதமாக இருந்தது. அவசர அவசரமாக இட்லியை விழுங்கிவிட்டு., புத்தகப் பையுடன் கிளம்பினேன். பையை செல்வராஜின் பெட்டிக் கடையில் போட்டுவிட்டு கீழக்கடவு வழியாக ஆற்றைக் கடந்தேன். அங்கு ஆழம் அதிகம். காற்சட்டை நனைந்து விட்டது. ஆற்றின் மறுகரையில், வயல் வரப்பு வழியாக ரொம்ப தூரம் போக வேண்டும். கையை விரித்துக் கொண்டு ஓடினேன். பிளேன் ஆக மாறி மிதக்க ஆரம்பித்தேன். தரையெல்லாம் பச்சை நிறமாக அலையடிக்கும் வயல்கள். தென்னந்தோப்பின் அரையிருட்டில் புகுந்து மேடேறிய போது வடக்கேடத்து மச்சுவீடு தெரிய ஆரம்பித்தது. ஒட்டுக்கூரை கன்னங்கரேலென்று இருந்தது. முற்றத்தில் மூன்று பலா மரங்கள். கண்ணி, நீலி, சக்கி என்று பெயர். சகோதரிகள், கண்ணிக்கு நூறு வயது ஆகிவிட்டது. காய்ப்பதில்லை. போன வருடம் மட்டும் ஒரே ஒரு பழம் கிடைத்தது. அதை அறுக்கும் போது சந்திரி அக்கா என்னைக் கூப்பிட வந்தாள். குளித்து விட்டு அப்படியே எங்கள் வீட்டுக்கு வந்து, அம்மாவிடம் கதை பேசிவிட்டு பத்திரிகையெல்லாம் வாங்கிக் கொண்டு, மகாதேவர் கோயிலில் கும்பிட்டு விட்டுத்தான் திரும்பிப் போவாள். அன்றைக்கு ராஜப்பன் கூட வந்தான். அக்கா அவனிடம் கண்ணிப் பலாவைப் பற்றித்தான் பேசியபடி வந்தாள். ஊரில் உள்ள எல்லா வரிக்கைப் பலா மரங்களும் அதன் வம்சம்தான். அக்கா தோள் நிறைய ஈரத் துணிகளை முறுக்கிப் போட்டிருந்தாள். கூந்தல் நுனியிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. ராஜப்பன் ஏதோ சொல்ல, அக்கா சிரித்தாள். இரண்டு பேரும் என்னைப் பார்த்தார்கள். ராஜப்பன் எங்கள் பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்தலிருந்த குட்டி பள்ளிக்கூடத்தில் வாத்தியார். அவனைப் பள்ளிக்கூடத்தில் மட்டும்தான் ராஜப்பா சார் என்று சொல்ல வேண்டும் என்று அம்மா சொல்லியிருந்தாள். ''ராஜப்பா நீதான் பலாப் பழத்தைப் பறிக்கப்போகிறாயா?'' என்று கேட்டேன். அக்கா என் தலையில் ஓங்கி அரைந்து, ''பெயர் சொல்லியா கூப்பிடுவது கழுதை?'' என்று திட்டினாள். உண்மையிலேயே அவளுக்கு பயங்கர கோபம். கண்களும் மூக்கும் சிவந்து விட்டன. ''ராஜப்பா சார்'' என்று நான் ஈனஸ்வரத்தில் சொன்னேன். சரி சரி விடு. என்று ராஜப்பா சார் சொன்னார். என் தலையை வருடி, ''சின்னப்பையன் தானே? பெரியவங்க பேச்சைத்தானே அவன் கேப்பான்'' என்றார். ராஜப்பா சார் ரொம்ப நல்லவர் என்று நினைத்தேன். அதே சமயம் கோபமும் வந்தது. தலையை உதறினேன். வீடு நெருங்கியதும், அக்கா தலையை அசைத்து விட்டு விலகி, கொல்லைப் புறமாகப் போனாள். நானும் ராஜப்பா சாரும் முகப்பு முற்றத்துக்கு வந்தோம். குஞ்ஞ’ப் பாட்டி திண்ணையில் கம்பிளி மேல் உட்கார்ந்திருந்தது. காலெல்லாம் குந்திரிக்கத் தைலம். தாங்க முடியாத நாற்றம். பாட்டியின் பக்கத்தில் போனால்தான் வாய் வேறு மாதிரி நாறுவதை உணர முடியும். ''ஏண்டா ராஜப்பா நீயா ஏறப் போகிறாய்?'' என்று பாட்டி கேட்டாள். ''ஓம் அம்மிணி'' சார் சொன்னார். ''எப்பிடி ஏறுவியோ என்ன இழவோ! நாலெழுத்துப் படிச்சு தொலைச்சுப்பிட்டே. அங்கே பள்ளிக்கூடத்திலே என்னடா சொல்லி குடுக்கிறே? மரம் ஏறவா? ஹெஹெஹெ'' பாட்டியின் வாயில் மூக்குப் பொடி நிறத்தில் இரண்டு பற்கள் காணப்பட்டன. ''சார் தான் மூணாம் கிளாஸ் பயக்களுக்கு கிளாஸ் டீச்சர் பாட்டி'' என்றேன். ''சாரா? யாருடா அது?'' தணிந்த குரலில், ''ராஜப்பா சார்'' என்றேன். ''தூ, உன் வாயைப் பொசுக்க. நாய் கெட்ட கேட்டுக்கு வாலுக்கு பட்டுக்குஞ்சலம் வேணுமா? ஏண்டா ராஜப்பா. ஏரப்பாளி, நீயாடா சொல்லிக் குடுத்தே இப்பிடி?'' சார் புன்னகை புரிந்தபடி, ''இல்லம்மணி'' என்றார். என்னைப் பார்த்து, ஏதோ கண்ணைக் காட்டினார். ''இல்லைபாட்டி அக்காதான்....'' என்று நான் ஆரம்பித்தேன். சார் உடனே, அக்காகிட்டேயிருந்து ஒரு கயிறு வாங்கிட்டு வா ஓடு'' என்றார். நான் கயிறு வாங்கி வந்தேன். சார் சட்டையைக் கழட்டி விட்டு, வேட்டியைத் தார் பாய்ச்சினார். சாரின் உடம்பு கருப்பாக, பளபளப்பாக, கோயில் வீரபத்ரன் சிலை மாதிரி இருந்தது. பவுன் சங்கிலி போட்டிருந்தார். அதைக் கழட்டி மடியில் செருகினார். அடிமரப் பொந்தில் கையை வைத்து தொத்தி ஏறினார். அவருடைய தோளிலும், கைகளிலும், முதுகிலும் தசைகள் இறுகி அசைந்தன. இடுப்பில் கயிறு கட்டப்பட்டிருந்தது. பெரிய பாம்பு மரத்தில் ஊர்ந்து ஏறுவது போல அது மேலே சென்றது. வலப்பக்க நுனிக் கிளையில் குரங்கு போல ஊர்ந்து சென்றார். பலாப்பழ காம்பில் கயிற்றின் நுனியை முடிந்த பிறகு வெட்டினார். கிளை வழியாக கயிற்றைப் போட்டு இறக்கினார். பலாப்பழம் பலூன் போல கீழே வந்தது. தரையைத் தொட்ட பிறகுதான் அது எத்தனை பெரிது என்று தெரிந்தது. முள்ளெல்லாம் மழுங்கி விட்டிருந்தது. மணம் வந்தது. அக்கா ஜன்னல் வழியாக பார்த்தபடி நின்றிருந்தாள். ''டேய்'' என்றாள். ஓடிப்போய் ''என்னக்கா?'' என்றேன். ''சார் கிட்டே பழம் சாப்பிட்டு விட்டு போகலாம் என்று சொல்லு'' சார் திரும்பிப் பார்த்து சிரித்தார். கைகளை உரசி அரக்கை உருட்டியபடி, படிகளில் அமர்ந்தார். அவருடைய பல்வரிசை அழகாக இருந்தது. அக்கா அந்தப் பலாப்பழத்தை கமுகம் பாளையை கீழே வைத்து அரிவாளால் வெட்டினாள். சாறு ஊறி பாளையில் கொட்டியது. சுட்டு விரலால் வழித்து என் நாவில் தடவினாள். நெற்றியை மோதியது இனிப்பு. சுளைகளை எடுத்து தட்டில் போட ஆரம்பித்தாள். ''டம்ளரில் கொஞ்சம் சாறு தாறேன் சாருக்கு கொண்டு போய் கொடுக்கிறாயா? யாருக்கும் தெரியக்கூடாது'' என்று என்னிடம் அந்தரங்கமாகக் கேட்டாள். அப்படி அவள் கேட்டதில் நான் மிகவும் பூரிப்பு அடைந்தேன். அதற்குள் பாட்டி வந்து விட்டாள். பக்கத்தில் அவள் உட்கார்ந்த போது பலாப்பழ வாசனை மறைந்தது. ''எவ்வளவு சுளைடி இருக்கு?'' என்றாள். அக்கா எதுவும் சொல்லவில்லை. ''ரெண்டு சுளையை இப்பிடி போடு. வாய் ஒரு மாதிரி இருக்கு. கிருஷ்ணா குருவாயூரப்பா....'' அக்கா பேசாமல் இரண்டு சுளையை பாட்டி கையில் வைத்தாள். பாட்டி முகமே சப்பி விரிய மெல்ல ஆரம்பித்தாள். ''அந்த ராசப்பன் பயலுக்கு ரெண்டு சுளை குடு. அங்கியே நிற்கிறான்.'' பாட்டி இன்னொரு சுளையை எடுத்தாள். ''அந்த காலத்திலெல்லாம் பலாப்பழ மட்டையே ஆசையா வாங்கிட்டு போவான்கள். இப்போ அவன்களுக்கு காலம் வந்திருக்கு...'' நான் எட்டிப் பார்த்தேன். சார் சட்டையை மாட்டிவிட்டு கிளம்பிக் கொண்டிருந்தார். ''சார் போகிறார் என்றேன்'' ''போனால் போறான். மாசச் சம்பளம் வாங்குகிறவன்தானே? இங்கே மாதிரி ராச்சாப்பாட்டுக்கு பலாப்பழ மட்டையா அவனுக்கு...? கலிகாலம்! மாதவா, கோபாலா'' பாட்டி சொன்னாள். அக்கா பேசாமல் சுளைகளை இணுத்துப் போட்டுக் கொண்டிருந்தாள். பிறகு "இருடா அக்கா கொல்லைக்கு போய் விட்டு வந்திடறேன்" என்று எழுந்து போனாள். நான் நாலைந்து சுளைகளைப் பிய்த்தேன். சரியாக வரவில்லை. எழுந்து கொல்லைப் பக்கம் போனேன். மூத்திரப் புரையின் மேலாக அக்காவின் தலை தெரியவில்லை. இடது பக்கம் மஞ்சணாத்தி மரத்தடியில் அக்காவும் சாரும் நின்றிருந்தனர். சார் சிரித்தபடி ஏதோ சொன்னார். அவர் கையில் வாழையிலையில் பலாச் சுளைகள் இருந்தன. நான் நினைத்தபடி வீட்டு முற்றத்தில் கூட்டம் ஏதும் இல்லை. அப்பாவும், அச்சு மாமாவும், சந்திரன் அண்ணாவும், சிவன் அண்ணாவும், பிரபாகரன் மாமாவும், ஒரு கருப்பு நிற தடியனும் பாட்டியும் மட்டும் திண்ணையில் ஏதோ பேசியபடி இருந்தார்கள். கொல்லைப் பக்கத்துக்கு போனேன். நாலைந்து பெண்கள் தென்பட்டனர். சாவித்திரி மாமியும், பங்கஜம் மாமியும் எனக்குத் தெரிந்தவர்கள். அவர்களிடம் ஊடே புகுந்து, சமையலறைக்குள் நுழைந்தேன். இருட்டாக இருந்தது. அங்கும் சில பெண்கள் நின்றிருந்தனர். ஒரு மாமி என்னிடம், ''யாருடா நீ?'' என்றாள். இன்னொரு மாமி ''நீ விசாலத்தின் பிள்ளைதானே? உங்கம்மா வரவில்லையாடா?' என்றாள். நாள், ''அப்பா இதை நீலம் மாமியிடம் கொடுக்கச் சொன்னார்'' என்றேன். உள்ளே போ'' என்றாள். உள் அறையில் யாருமில்லை. வடக்கேடத்து வீடு மிகவும் பழையது. பாழடைந்த நிறைய அறைகள். பக்கவாட்டு அறையில் உறிகளும். அடுக்குப் பானைகளும் இருட்டுக்குள் இருக்கும். அங்கு சிறு மண்ணெண்ணை விளக்கு எரிந்தது. பெரிய நிழல் சுவரில் விழுந்தது. அக்காவின் நிழல். அக்கா தலையை அங்குமிங்கும் திருப்பியபடி, ''ஊம்ஊம்!'' என்று சொல்லிக் கொண்டிருந்தாள். தலை கலைந்திருந்தது. முகம் வீங்கியது போல இருந்தது. அருகே நீலம் மாமி. இன்னொரு பாட்டி சுவரோடு ஒட்டி நின்றிருந்தாள். மாமி திரும்பிப் பார்த்து என்னிடம், ''என்னடா'' என்றாள். அக்கா? என்றேன். ஓடு இங்கே நிற்காதே'' என்று கடுப்பாகச் சொன்னாள். நான் கொல்லைப் பக்கம் வந்தபோது இன்னும் ஒரு பாட்டி விசுவிசுவென்று வருவதைப் பார்த்தேன். கல்லத்தி வீட்டில் நாராயணிப் பாட்டி பர்ஸ் போன்ற வாயைத் திறந்தபடி, சாவித்திரி மாமியிடம், '' ஏண்டியம்மா இது, கேட்டதெல்லாம் சத்தியமா? இதென்ன கொடுமை? கலிகாலம் முத்திப் போயிட்டதா?'' என்றாள். ''போய்ப் பாருங்கள் பாட்டி. உட்கார்ந்திருக்கிறது மூதேவி'' என்றாள் சாவித்திரி மாமி. பாட்டி குரலைத் தாழ்த்தி ''யாரு''? என்றாள். எல்லார் முகமும் ரகசியத்தைக் காட்ட ஆரம்பித்தது. சாவித்திரி மாமி என்னை கவனித்து. ''நீ இங்கேயா நிற்கிறாய்? ஓடு வீட்டுக்குப் போ'' என்றாள். நான் தயங்கி நின்றேன். ''உள்ளே போய் பார்க்கிறது'' என்று மாமி சொன்னாள். ''அய்யோ அம்மை முகத்தில் முழிக்க என்னால் முடியாதம்மா. அம்மே பரதேவதே...'' பாட்டி கை கூப்பியபடி பின்னடைந்தாள். வெயில் பிரகாசமாகக் கொட்டிக் கொண்டிருந்தது. தோட்டமெங்கும் நிழல்கள் பின்னி அசைந்தன. வாலை செங்குத்தாக தூக்கியபடி ஒரு நாய் போனது. வாழைக் கூட்டம் அருகே தரை குளிர்ச்சியாக இருந்தது. கரிய மண்ணில் ஒரு மென்மையான குழி. அந்த நாயின் இடமாக இருக்க வேண்டும். அங்கிருந்து பார்த்த போது வீடு தொலைவில் சத்தமே இல்லாமல். இருப்பதுபோல இருந்தது. வாழைக் கூட்டத்தில் ஒரு குலை தென்பட்டது. அதன் பூவுக்குள் தேன் இருக்கும். சந்திரி அக்கா எடுத்துக் கொடுப்பாள். யாரிடம் உதவி கேட்பது என்று புரியவில்லை. வீட்டின் மறுபுறம் பாழடைந்த தொழுவம். அதன் படிக்கல் மீது காளி உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். கண்கள் மூடியிருந்தன. புகையிலை மெல்லும் போது கண்களைத் திறக்க மாட்டாள். நான் அருகே போய் ''காளி'' என்றேன். ''ஆரு?'' என்றபடி கண்களைத் திறந்தாள். ''ஆரு கொச்சா? இங்க எதுக்கு வந்தது?'' நான் அவள் மடியில் ஏறி அமர்ந்தேன். ''சந்திரி அம்மிணியைப் பாக்கவா வந்தது. அம்மிணிக்கு பீடையில்லா வந்திருக்கு?'' காளி என் தலைமயிரை விலக்கிப் பார்த்தாள். ''அம்மைக்கு நேரமே இல்லியாக்கும்? பேனு புளுத்து கெடக்குதே?" என்றாள் ''பீடை என்றால் என்ன காளி?'' என்றேன். ''சாமி வந்து மனியனுக்க மேத்த கேறுய தாக்கும்'' நான் அவள் முகவாயைத் திருப்பு ''மலைச்சியம்மன் சாமிதானே?'' என்றேன். ''ஆரு சென்னாவல இதையொக்க? '' நான் சிரித்தேன். ''எனக்குத் தெரியும்'' என்றேன். "மலைச்சியம்மன் கண்கண்ட அம்மையாக்கும். கொச்சு கும்பிடணும்'' காளி என் கையைப் பற்றி கூப்பி வைத்தாள். '' சாமீய் சந்திரியக்களுக்கு எல்லாம் செரியாவணும் சாமீய் - சொல்லணும்'' நான் உற்சாகமாக அதைச் சொன்னேன். காளி என்னிடம் ''கொச்சு மலைச்சியம்மன் காவுக்கு செண்ணு பாத்ததுண்டா?'' என்றாள். ஒரு தடவை போயிருக்கிறேன், ஐப்பசி மாதக் கொடைக்கு, மழைக்காலம் தெற்கு மடம் வயல்கரையில், பெரிய தோட்டத்தின் விளிம்பில், ஏழெட்டுப் புளிய மரங்கள் கூட்டமாக நின்றன. புளியம் சருகு மெத்தை போல பரவியிருந்தது. நடுவே கல்லாலான சிறு மேடை. அதில் ஒரு சிறு சூலாயுதம். அதுதான் காவு. அன்றைக்கு எல்லாரும் குடை வைத்திருந்ததனால் யானைக் கூட்டம் மாதிரி இருந்தது. பூசாரி கண்ணன் கூட தலைக்குடை வைத்தபடிதான் பூசை செய்தான். பக்கத்தில் பெரிய நீரோடை சிவப்பு நிறமாக சுழித்து ஓடியது. வயல் வெளியில் மழை புகை போல காற்றில் அலையலையாக பரவிச் சென்றது. புளிய மரக் கிளைகள் எம்பி எம்பி விழுந்தன. மேலே ஒவென்று இலைகள் இரைந்தன. அப்பா என்னைத் தூக்கி வைத்திருந்தார். நான் குடையிலிருந்து சொட்டிய நீரை கையால் பிடித்தேன் என்று தொடையில் கிள்ளினார். பூசாரி குனிந்தபோத அவன் பின்புறத்தில் மழை கொட்டியது. பீடத்துக்கு செந்தூரம் வைத்த உடனே ரத்தமாக கரைந்து ஓடி வாய்க்காலில் கலந்தது. அரளிப்பூக்கள் தயங்கித் தயங்கி ஓடை நோக்கிச் சென்றன. சோமன் அண்ணாவின் கையில் இருந்த கூடையில் மூன்று சேவல்கள் இருந்தன. ஒன்று சிவப்பு மற்ற இரண்டும் வெள்ளை, ஈரத்தில் உடலைக் குறுக்கி சத்தமில்லாமல் உட்கார்ந்திருந்தன. பூசாரி சிவப்புக் கோழியை எடுத்தான். அதன் தலையையும் ஒரு காலையும் ஒரு கையால் பற்றினான். இன்னொரு கையால் இன்னொரு காலைப் பற்றினான். சூலாயைதத்தின் மீது தூக்கி ஒரே குத்தாகக் குத்தினான். கோழி துடிதுடித்தது. அப்படியே இறக்கி விட்டு அடுத்த கோழியை எடுத்தான். மூன்று கோழிகளும் சூலத்தில் கிடந்து வட்டமிட்டுத் துடித்தன. ரத்தம் வழிந்தது. ஓடையை நோக்கிப் போனது. திடீரென்று மின்னல். பிறகு இடி. நான் அப்பாவின் கழுத்தை இறுகப் பற்றினேன். எல்லோரும் ''அம்மே, மலைநீலி! மகாமாயே'' என்று கூவினார்கள். ரத்தத்தைப் பிரசாதமாக தந்தார்கள். என் நெற்றியில் கூட அப்பா போட்டு விட்டார். திரும்பி வரும் வழியில் வயல்கள் எல்லாம் நிரம்பி சிவப்பாக, தண்ணீர் விரிந்து கிடந்தது. வாய்க்கால்கள் கொப்பளித்தச் சென்றன. ஆற்றில் வெள்ளம், திருவட்டாறு போய் பாலம் வழியாக திரும்பி வர வேண்டியிருந்தது. ''அந்த மலைச்சியம்மனா அக்கா மேல் கூடியிருக்கிறது?'' என்று கேட்டேன். ''அம்மைக்கு கொடை திகையேல்ல. எளகிப் போட்டாள். இனி அவ மனசடங்காம போவ மாட்டா. அவளுக்கு மனசு அணையாத்த தீயில்லா? குடும்பத்த எரிச்சுப் போடுமே'' என்றாள் காளி. உள்ளிருந்து சாவித்திரி மாமி, ''காளீ காளீ'' என்றாள். ''ஓம் அம்மிணி'', ''அங்கே என்ன செய்யே? பூசாரி வந்தாச்சு வா'' காளி என்னை இறக்கி விட்டாள். ''கொச்சு வீட்டுக்குப் போவணும். இஞ்ச நிக்கப்படாது கேட்டுதா? சந்திரியம்மிணிக்கு நாளைக்கு செரியாப் போடும் என்றாள். நான் யோசித்தேன். பிறகு கண் மறைவாகப் பதுங்கினேன். பாழடைந்த தொழுவம் வழியாக வீட்டுக்குள் நுழைய ஒரு இடுக்கு உண்டு. நானும் சந்திரி அக்காவும் ஒளிந்து விளையாட அதைப் பயன்படுத்துவது உண்டு. அதன் வழியாக உள்ளே போனேன். தூசும் ஒட்டடையும் மண்டிய அறையில், மாடிப்படி மச்சுக்கு போனது. ஒட்டடையைப் பிய்த்தபடி ஏறினேன். மச்சுப்பலகை உளுத்திருந்தது. கிச்கிச் என்று எலிகள் கலைந்து ஓடின. வெளவால் ஒன்று கலைந்து டபடபவென்று தலைக்கு மேலாகப் பறந்தது. அப்படியே நின்றேன். வெளவால் கூட்டம் மச்சின் கூரை முழுக்கப் பரவியிருந்தது. கலைந்தால் அவ்வளவுதான். இருட்டுக்கு கண் பழகிய போது அவற்றின் நீர்மணி போன்று கண்களின் மினுக்கம் தெரிந்தது. மெதுவாக நடந்து போனேன். அங்கங்கே மச்சுப் பலகை உடைந்து கீழிருந்து ஒளி வந்தது. கூரைமேல் நிழல்கள் ஆடின. ஒரு இடைவெளி வழியாக கீழே ஆள் நடமாட்டம் தெரிந்தது. எட்டிப் பார்த்தேன். கீழே கூட்டம். அதன் நடுவில் பாய் விரிக்கப்பட்டிருந்தது. மணை ஒன்று போடப்பட்டிருந்தது. ஒரு தீப்பந்தம் ஓரமாக எரிந்தது. சாவித்திரி மாமி பெரிய கெண்டியில் தண்ணீரும், கமுகம் பூக்குலையும் கொண்டு வைத்தாள். அரளிப் பூக்கூடை, சீவிய இளநீர் காய்கள், கனல் புகைந்த தூபத்தட்டு. செந்தூரத்தட்டு என்று வரிசையாக வந்தன. ஜோசியர் தாத்தா ஒவ்வொன்றாகச் சரி பார்த்தார். செந்தூரத் தட்டு எங்கே? முக்கியமானதை மறந்துடுங்க'' என்று இரைந்தார். நீலம் மாமி, ''அதோ இருக்கு'' என்று தணிந்த குரலில் சொன்னாள். ''அது அப்பவே சொல்லித் தொலைக்கிறது மூதேவி'' என்றார் தாத்தா. அப்பா உள்ளே வந்தார். துண்டால் முகத்தைத் துடைத்தபடி ''சின்னவங்க யாரும் இங்கே நிக்க வேண்டாம்'' என்றார் பூசாரி மெதுவாக பூனை போல வந்தான். மார்பு வெளிறி எலும்பெலும்பாக இருந்தது. மீசை இல்லை. குடுமி ஒரு பக்கமாக சாய்ந்து. இருந்தது அக்குளில், இருபுறமும் மணி கட்டிய, கட்டெறும்பு நிறம் கொண்ட, பெரிய பிரம்பு ஒன்று இருந்தது. அதைப் பார்த்தபோதே ''விஷ்க்'' என்று அது சீறும் ஒலி கேட்டது. கையிலிருந்த பெட்டியைக் கீழே வைத்து திறந்தான். கைமணி, கொப்பரை சம்புடம், சிறிய மரச்செம்பு எல்லாவற்றையும் எடுத்தப் பரப்பினான். காலை மடக்கி முதுகை நிமிர்த்தி அமர்ந்து கொண்டான். அவன் உதடுகள் படபடவென்று துடிக்க ஆரம்பித்தன. எல்லாரும் அமைதியாக நின்றார்கள். அப்பா கைகளை மார்பில் கட்டியபடி நின்றிருந்தார். பூசாரி கண்களைத் திறந்து, சைகை காட்டினான். அப்பா மெல்ல ''கொண்டு வரச் சொல்லு'' என்றார் உள்ளிருந்து காளியின் மீது சாய்ந்தவளாக, நடை தடுமாற அக்கா வந்தாள். அவளை பூசாரி முன் பிடித்து உட்கார வைத்தார்கள். அக்காவின் தலை தொய்ந்து முகவாய் மார்பில் அழுந்தியது. தலைமயிர் முகத்திலும் மடியிலுமாக சரிந்தது. பூசாரி மந்திரத்தை உரக்கச் சொன்னான். தூபத்தட்டில் சாம்பிராணியைப் போட்டான். புகை குபீரென்று எழுந்து என்னை நோக்கி வந்தது. சாம்பிராணியின் மணம் எனக்கு அச்சமூட்டுவதாக இருந்தது. பூசாரி அக்காவைக் கூர்ந்து பார்த்தான். பிறகு அக்காவிடம் ''ஆராக்கும் நீ'' என்று தணிந்த குரலில் கேட்டான். அக்காவிடம் ''ம்ம்ம்...'' என்றாள். "சொல்லிப்போடு ஆராக்கும் நீ" "ம்ம்ம்..." சொல்லாம உன்னை விடப் போறதில்லை. மரியாதியா சொல்லிப்போடு. நீ ஆருடி கூதறமேளே?'' பூசாரியின் குரல் முழுங்கியது. அக்கா திடீரென்று உரக்கச் சிரித்தாள். முரட்டு ஆண்கள் இரண்டு பேர் சேர்ந்து ஒரே சமயம் சிரிப்பது போல இருந்தது. ''நானா? நான்தேம்பில உன்னைப் பெத்தது அந்தக் குரல் கூட அக்காவின் குரலாக இல்லை. இறுக்கமும் கரகரப்பும் கொண்ட பெண் குரல். பூசாரி சிரித்தான். ''இத வேற வல்ல எடத்திலயும் வச்சுக்க கேட்டியா? இது கொறே கண்டவனாக்கும் நான். மரியாதையா சொல்லிப் போடு. ஆராக்கும் நீ?'' அக்கா நிமிர்ந்து பார்த்தாள். முடி விலகியது. அவள் முகம் சீற்றம் மிகுந்து இருந்தது. கண்கள் முடிப்புரைக் காலில் அம்மன் சிலையின் கண்கள் போல சிவப்பாக வெறித்தன. பூசாரி பிரம்பை எடுத்தான். வலக்கையால் திடீரென்று கொப்பரைச் சம்புடத்திலிருந்து சாம்பலை அள்ளி அக்கா முகத்தில் வீசினான். அக்கா ''ஆ'' அலறினாள். என் உடம்பு நடுங்கியபடி இருந்தது. நரியின் ஊளை போன்றிருந்தது அது. பூசாரி பிரம்பால் மாறி மாறி அடித்தான். "அடிபில! அடிபில மோன! அடிபில" என்று கூவியபடி அக்கா தலை மயிரைச் சுழட்டி சுழன்றாடினாள். உரக்கச் சிரித்தாள். சீறும் நாயின் பற்கள் போல அவள் பற்கள் ஈறுடன் வெளித் தெரிந்தன. குரல்வளை புடைத்து, பச்சை நரம்புகள் நெளிந்தன. கையை நீட்டினாள் விரல்கள் ஸ்பிரிங் கத்தியின் நுனி போல வெடுக் வெடுக் என்று விரிந்து கொண்டன. மணிக்கட்டு மட்டும் சுழன்றது. முழுமையாக இரண்டு முறை சுழன்று நடுநடுங்கியது. கையின் சதைகள் இழுபட்டு அதிர்ந்தன. பூசாரி கூட ஒரு கணம் அடிப்பதை நிறுத்தி விட்டான். சமையலறைக்குள் இருந்து ''அம்மே பரதேவதே'' என்று அலறல் ஒலிகள் கேட்டன. அப்பா கூட கன்னத்தில் போட்டு கொண்டார். பூசாரி தன் பெட்டிக்குள்ளிருந்து ஒரு குவளையை எடுத்து அதிலிருந்து சிவப்பு நிறத்தூளை அள்ளி அக்கா முகத்தில் ஓங்கி ஓங்கி வீசிறினான். வத்தல் மிளகாய் கமறல் நெடி எழுந்தது. அக்காவின் நாக்கு வெளியே வந்தது. நாயின் நாக்கு போல மோவாயைத் தாண்டி கீழிறங்கித் தொங்கியது. பூசாரி பெட்டியிலிருந்து வெண்ணிறக் குச்சியொன்றை எடுத்தான். அது ஒரு எலும்புத் துண்டு என்று தெரிந்தது. அதன் உருண்ட நுனியால் அக்காவின் கைகளிலும் எலும்பு மூட்டுகளிலும் அடிக்க ஆரம்பித்தான். அக்கா தூக்கி விசிறப்பட்டவள் போல விழுந்து துடித்தாள். அவள் உடம்பு அட்டைபோல சுருண்டு உடம்பு இறுகியது. தலை தொடையிடுக்கில் நுழைந்தது. அது ஒரு மனித உடம்பு என்றே தோன்றவில்லை. பூசாரி தூபத்தணலில் செருகப்பட்டிருந்த இரும்புக் கரண்டியை எடுத்தான். அது கனலாக ஒளிர்ந்தது. பின் வெண்ணிறச் சாம்பல் நிறம் பெற்றது. அதை அக்காவின் கால்களிலும் புஜங்களிலும் வைத்து இழுந்தான். அக்கா பாய்ந்து எழுந்து அலறியபடி ஓட ஆரம்பித்தாள். காளி பிடிக்க முயல, ஒரே உதறலில் அவளைதூக்கி வீசினாள். பூசாரி அக்காவின் கால்களை அடித்து மடக்கி வீழ்த்தினான். தலைமயிரை அள்ளி இழுத்து போட்டு மீண்டும் சுட்டான். அக்கா திடீரென்று அவளுடைய சொந்தக் குரலில் வேண்டாம் வேண்டாம் விட்டுடு என்னை விட்டுடு என்ற கதறினாள். அக்கா என்று நானும் கதறியிருப்பேன். அந்தக் திகிலிலும் நான் எங்கிருக்கிறேன் என்ற உள் பிரக்ஞை எனக்கிருப்பதை அறிந்தேன். ''செல்லு இல்லெங்கி பொசுக்கிப் போடுவேன்'' என்றான் பூசாரி. அக்கா மீண்டும் அந்த கட்டைக் குரலில் ''செல்லிப் போடுதேன் வேண்டாம் செல்லிப்போடுதேன் என்றாள். வாசல்களில் கூட்டம் முண்டியடித்தது. அக்கா விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள். பிறகு ஒப்பாரிப் பாட்டின் நீட்டல்களோடு விளங்காத சொற்களில் கூவி அழுதாள். கண்ணீர் கொட்டியது. ''செல்லிப் போடு ஆராக்கும் நீ?'' என்று பூசாரி கேட்டான். ''நான்தான்'' என்றாள் அக்கா. ''நான் எண்ணு சென்னா?'' அக்கா தலையை ஆட்டி, விசும்பியபடி, ''மலைச்சியாக்கும் நான்'' என்றாள். கூட்டம் பிதுங்கி சிலர் அறைக்குள் வந்து விட்டனர். ''ஓகோ நீதானா செரி, எதுக்கிப்பம் இஞ்ச வந்த?'' அக்கா ஓங்கி மார்பில் அறைந்தபடி அழுதாள். அழுகை ஏறி ஏறி வந்தது. சின்னையன் பயல் ஆற்று வெள்ளத்தில் போனபோது அவன் அம்மா அப்படித்தான் கதறிக் கதறி அழுதாள். அழுகை சற்றுக் குறைவதும், பின்பு பீறிடுவதுமாக இருந்தது. ''உனக்கென்னவேணும்? செல்லிப் போடு" என்றார் பூசாரி. ''பாவியளா, மண்ணாப் போன படுபாவியளா, எனக்க பொன்னு தம்புரானை எனக்கு குடுத்துப் போடுங்கலேய்! எனக்க தம்புரான் எக்கு வேணும்பிலேய் கொண்ணு போட்டியளே பாவிப் பயலுவளே. இந்த கொலம் வெளங்குமா? வெளங்கு விடுவேனா?'' அப்பா கும்பிட்டார். பூசாரி உரக்க ''ஆரு ஆரக் கொண்ணா? அதைச் சொல்லு. பரிகாரம் வல்லதும் உண்டெங்கி செய்வம்'' என்றான். ''எனக்க பொன்னுதம்புரானை கொண்டு போட்டியளே பாவி மக்கா. எனக்க கும்பி ஆறதில்லையே. எனக்கு கும்பி அடங்கேல்லியே. எனக்கு கெதி மோட்சம் இல்லியே'' திடீரென்று பல்லை நறநறவென்று கடித்தாள். சத்தம் மச்சுக்கு கேட்டது. கைகளைத் தூக்கியபடி காட்டுப் பூனை போல உறுமினாள். "விடமாட்டேன். கொளம் தோண்டிப்பிட்டு தான் போவேன். இந்தக் குடும்பத்துக்க தாய்வேரை அறுத்துப் போட்டுத்தான் அடங்குவேன். எனக்கு கும்பி அடங்கேல்ல.'' பூசாரி பாய்ந்து எழுந்து மீண்டும் அடிக்க ஆரம்பித்தான். பிரம்பு அறையின் உள்ளே சுழன்று பறப்பது போலிருந்தது. அடிபட்ட இடத்தில் அக்காவின் சதை துடிப்பது தெரிந்தது. பூசாரியின் முதுகில் வியர்வை வழிந்தது. குடுமி அவிழ்ந்து கூத்தாடியது. அக்கா அப்படியே தரையோடு தரையாக விழுந்தாள். அவள் தலைமயிரைப் பற்றித் தூக்கி, உனக்கு என்னவேணும்? என்ன கிட்டினா எறங்குவே? மரியாதிய சொல்லிப் போடு என்றான். அக்கா தீனமாக விசும்பினாள். எனக்கு எக்க பொன்னு தம்புரான் வேணுமே. எனக்கு தம்புரான் வேணுமே'' பூசாரி ''ஆருட்டி கொண்ணது உனக்க தாம்புரானே'' என்றான். ''இந்தக் குடும்பத்துக்கு மூத்தருமாருவளும், ஊராய் மக்காரனுவளும்தேன்.'' ''எப்பம்?'' ''இப்பம்தேன்'' உனக்க தம்புரானுக்க பேரு என்னவாக்கும்? பத்மநாபன் தம்பி, எனக்க தம்புரானே உன்னைக் காணாம எனக்கு மனசு ஆறலில்லியே. எனக்கு நெனைச்சுப்பாக்க பளுதில்லையே அறு கொலை பண்ணிப் போட்டினுமே பாவிய. எனக்கு தீயடங்கேல்லியே ''பூசாரி அக்காவை உலுக்கினான். "உனக்க பேரு மலைச்சிங்கிய. நீ எப்பிடிட்டி தம்புரானுக்கு கெட்டினவ ஆனே?'' அக்கா திடீரென்று மவுனமானாள். பிறகு மெதுவாக ''பேச்சி மலையிலே என்னைக் கண்டு மோகிச்சு விளிச்சோண்டு வந்தாவ. கண்ணுக்கு மணி போல வச்சு சினேகிச்சாவ. எனக்க அம்மையில்லா, எனக்க தேவியில்லா எண்ணுல்லா எக்கதம்புரான் என்னை விளிப்பாரு. கொண்ணு போட்டினுமே. எனக்க தம்புரானைக் கொண்டு கெடத்திப் போட்டினுமே. அது எனக்க கண்ணில விட்டு மாறேல்லியே'' அக்கா வெறி எழுந்து கதறியழுதாள். "இஞ்ச பாரு அபவாதம் செல்லப்பிடாது கேட்டியா? ஆரு கொண்ணா. என்னத்துக்கு கொண்ணா?'' அக்கா மார்பை கையால் அழுத்தியபடி திக்கித்திக்கி சொன்னாள். ''ஊராய் மக்காரனுவ வந்து எக்கதம்புரானை அடிச்சாவ. என்னைய விட்டுப் போடணும் எண்ணு சொன்னாவ. என்னைப் பெத்த அம்€யாக்கும் அவ எண்ணு செல்லிப் போட்டாரு. சாதிக்கு தீட்டு செல்லி தள்ளி வச்சாவ. புளியங்காட்டில் குடிலு கெட்டி கெடந்தோம். மண்ணும் மானமும் சாச்சியாட்டு கிளியும் கிளியும் மாதிரி கொஞ்சிட்டு கெடந்தோம். எக்கதம்புரானே உனக்க சிரிப்பு மறக்க ஒக்குதில்லியே. அறுகொலை பண்ணிப் போட்டினுமே படுபாவிய தீராப்பளி செய்து போட்டினுமே...'' அப்பா முன் நகர்ந்து பூசாரியிடம் ஏதோ சொன்னார். பூசாரி ''கொல மூப்பராக்கும் செல்லுயது. பரிகாரம் செய்து போடலாமிங்கியாரு. உனக்கு என்ன வேணும் சொல்லு'' என்றான். "அவனுக்க கரளில் உள்ளசோர வேணும்பில'' என்று அக்கா பாய்ந்து எழுந்தாள். பூசாரி அவளை உதைத்து தள்ளி அடித்தான். அக்கா தரையோடு தரையாக விழுந்தாள். பூசாரி ''கொலத்துக்கு எளைய குருந்தை மறிமாயம் செய்து மயக்கி சோர குடிச்சு பலி எடுத்த மலைநீலியாக்கும் நீ. உனக்க கதையொக்க எனக்கும் அறியிலாம். அண்ணு மலைகேறின உனக்கு வரியம் முடங்காம பலி போட்டு கும்பிடுதாவ இவிய. இப்பம் நீ நரபலி கேக்க வந்தியா? கொறை கண்டவானக்கும் நான். உனக்கு என்னவேணுமோ செல்லி வாங்கிப் போட்டு விட்டு நீங்கு '' என்றான். அக்கா கைகளை ஊன்றி தலையை மட்டும் தூக்கி தணிந்த குரலில் நான் இவ இல்லாம போவ மாட்டேன். கொண்டு தான் போவேன்'' என்றாள். பிறகு அவள் தலை சரிந்தது. பூசாரி இரண்டு முறை உதைத்தான். அசைவு இல்லை. அப்பாவிடம் ''பாதிச் சோலி மிச்சம் கெடக்கு. எறக்கிப் போடலாம்'' என்றான். அப்பா பணிவாக ''இனி என்ன செய்ய'' என்றார். ''எளநீ வாட்டு'' என்றான். நாலைந்து இளநீரை குடித்து வீசிய பிறகு ஜபம் செய்ய உட்கார்ந்தான். ''நான் இருக்கணுமா?'' என்றார் அப்பா. ''நிறுத்தப்பிடாது நிறுத்தினா பின்ன கையில் பெடாது. தொடங்கியாச்சு. எண்ணு சென்னா எறக்கிப் போட்டுதான் மறுசோலி பாக்கணும்.'' அப்பா பெருமூச்சுடன் விலகி நின்றார். நான் என் கால்கள் குளிர்ந்து, விரைத்திருப்பதை அப்போது தான் உணர்ந்தேன். தூபப்புகை மச்சில் நிரம்பியிருந்தது. மல்லாந்து படுத்தேன். என் கைகால்கள் குளிர்ந்து விலகிக் கிடந்தன. அக்காவின் சிரித்த முகமும் மூக்குத்தியும் அசைவும் ஞாபகம் வந்தது. உடனே ராஜப்பா சாரின் முகம். பிறகு மூன்றாம் கிளாஸ் பள்ளிக்கூடம். குழந்தைகளின் குரல். ''சாலமன் கிரண்டி! பான் ஆண் சண்டே! கிரிஸ்டின்ட் ஆன் மண்டே'' நானும் ஒரு குழந்தையாக பாடிக் கெண்டிருந்தேன். மச்சில் நிறைய கண்கள். மெலிதாக தங்களுக்குள் பேசியபடி அவை என்னைப் பார்த்தன. கண்களை மூடினாலும் அந்தப் பார்வைகள் அப்படியே இருந்தன. எல்லாமே கனவு என்று திடீரென்று அறிந்தேன். எவ்வளவு பயங்கரமான கனவு. விழித்துக் கொள்ளப் போகிறேன். வீட்டுப்பாடம் எழுத வேண்டும் கனவுதான். மச்சில் கீழ் விளிம்பு வாயாக உள்ளே வந்து நீண்டிருந்த மூன்று ஒளிச்சட்டங்களைப் பார்த்தபடி கண் விழித்தேன். மச்சே தவிட்டு நிறமாக வேறு மாதிரி இருந்தது. பதற்றத்துடன் பொன்னிற தூசிகள் சுழன்று பறந்து கொண்டிருந்தன. என் உடம்பு முழுக்க கரிய பசை போல வெளவால் எச்சம். எழுந்து தவழ்ந்து நடந்து படியிறங்கினேன். கண்கள் கூசின. தலை சுழன்றது. நிற்க முடியவில்லை. அப்படியே தொழுவத்துக் கல் மீது அமர்ந்து விட்டேன். பின்பு யாராவது பார்த்து விடுவார்கள் என்ற எண்ணம் வந்தது. குமட்டல் வந்தது. எழுந்து தோட்டத்தில் புகுந்து நீரோடையில் உடலைக் கழுவினேன். அது காலை நேரம் என்று அப்போது தெரிந்தது. இரவெல்லாம் மச்சிலேயே கிடந்திருக்கிறேன். சத்தமேதும் இல்லை. அக்காவிற்கு என்ன ஆயிற்று? மீண்டும் வீட்டுக்கு ஓடிவந்தேன். சமையலறையில் நீலம் மாமி காபி போட்டுக் கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் ''எங்கேடா போயிருந்தாய் பாவி? உன் அம்மா நேற்று ராத்திரிபடாத பாடு இல்லை" என்றாள். கருப்பட்டிக் காபி மணம் குமட்டலை வரவழைத்தது. தெக்கேடகத்துக்குப் போனேன் என்றேன். அவ்வளவு தூரமா. எதுக்கு சொல்லாம கொள்ளாம?'' என்றாள் மாமி. ''அக்கா எங்கே?'' மாமி ஏதும் பேசாமல் காப்பியைத் துணியால் ஜாக்கிரதையாகப் பற்றி இறக்கினாள். தீ எழுந்து படபடத்தது. அவள் முகம் சிவப்பாக கனன்றது. உள்ளே போனேன். அறையின் அரை இருட்டில் அக்கா குவியலாக கிடப்பது தெரிந்தது. முகம் வீங்கிக் கண்கள் இடுங்கி வேற எவரோ போல் இருந்தால். குறட்டைகேட்டது. கால்களும் கைகளும் கூட பொதபொதவென்று வீங்கியிருந்தன. மஞ்சளும் களபமும் உடலெங்கும் அப்பியிருந்தன. குமட்டல் தரும் ஒரு வாடை. ரத்த வாடையா சீழ்வாடையா என்று தெரியவில்லை. ''அக்கா'' என்றேன். அங்கு எவருமில்லை போலப் பட்டது. சிறிதுநேரம் நின்றுவிட்டு வெளியே வந்தேன். காளி பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள். அருகே போனேன். என்னைக் கண்டதும் சிவப்பாக பற்கள் தெரிய சிரித்தாள். ''கொக்சு எங்க போச்சுது ராத்திரி? அம்மைய அரை உயிரு ஆக்கிப் போட்டுதே'' என்றாள். ''காளி, அக்காவிற்கு பீடை இறங்கிவிட்டதா?'' என்று கேட்டேன். ''வெளுக்கும்பம்தான் ஒரு மாதிரி விட்டு மாறிச்சு. ஒக்கே அம்மிணி செய்த புண்ணியம்தேன். கொஞ்ச பாடா படுத்திப் போட்டுது பிள்ளைய? ஆனா அந்தப் பயலுக்க கெதிகேடு. அவனுக்கு விதி இருந்திருக்கு. இல்லெங்கிலும் இம்மாதிரி மூத்த பீடைய வந்தா பலியில்லாம விட்டு மாறாது'' என்றாள். நான் சட்டென்று பீதி வசப்பட்டேன். காளி கூறப் போவதை தெளிவின்றி முன் கூட்டியே உணர்ந்து கொண்டிருந்தேனா? ''ஆரு காளி?'' காளி வெற்றிலையைத் துப்பினாள். ''நம்ம ராசப்பன் பயதான். நல்லோரு பய. வல்ல காரியமும் உண்டுமா? புளியங்காவுக்கு இந்த சமயத்தில் வல்லவனும் போவினுமா? வெளுக்கும்பம் பனைகேறப் போன தங்கராசுப் பய கண்டிருக்கான். பொற மண்டையில் அடி விளுந்திருக்கு. கையும் காலையும் பரத்திக்கிட்டு கமிந்து கெடக்குதான். கண்ணெடுத்துக் காணப் பளுதில்லை. அங்க கூடியுள்ள ஆளு பெகளத்துக்கு கையும் காலையும் கணக்குமில்ல. கொச்சு இண்ணு பள்ளிக்கூடம் போவாண்டாம் கேட்டுதா? ஒளிவாக்கும். பய வாத்தியாருல்லா?'' நான் என் புறக்கழுத்தில் எவரோ தொடுவது போன்ற பீதிக்கு ஆளானேன். வீட்டை நோக்கி கதறியபடி ஓடினேன்.
|
ஒரு காட்டில் ஆமையும், நத்தையும் நண்பர்களாய் இருந்தன. அவை இரண்டுக்கும் நீண்டகாலமாக, ஒரு மனக்குறை இருந்தது. தங்களால் வேகமாக நடக்கவோ, தாவிக் குதித்து ஓடவோ முடியவில்லை என்ற மனக்குறைதான் அது. ஒருநாள், அவை இரண்டும் நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஓர் அழகிய வெள்ளை நிற முயல் தாவிக் குதித்து, ஓடி வருதைக் கண்டன. "முயலே நில்!" என்றது ஆமை. முயல் நின்றது. "நீ எப்படி இவ்வளவு வேகமாய் தாவிக் குதித்து ஓடுகிறாய்?" என்று கேட்டது நத்தை. "இது என்ன கேள்வி! உங்களுக்கு இருப்பதுபோல், என் முதுகில் கனமான ஓடு இல்லை. அந்தச் சுமை இல்லாததால், வேகமாக ஓடுகிறேன்!" என்று சொல்லி விட்டு, முயல் அந்த இரண்டையும் இளக்காரமாகப் பார்த்தது. "ஓஹோ! எங்களின் வேகக் குறைவுக்கு எங்கள் ஓடுதான் காரணமா?", "ஆமாம்! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட்டால், என்னைப் போல் வேகமாக ஓடலாம். வேகமாக ஓடுவதில், ஓர் அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா... அனுபவித்துப் பாருங்கள்!" என்றது முயல். ஆமைக்கும், நத்தைக்கும் அந்த இடத்திலேயே தங்கள் முதுகு ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. அவற்றைக் கழற்ற முயன்றபோது, திடீரென புதர் மறைவில் ஏதோ அசையும் ஓசை கேட்டது. ஆமையும், நத்தையும் ஆபத்தை உணர்ந்து, தங்கள் ஓடுகளைக் கழற்றும் முயற்சியைக் கைவிட்டன. சட்டென, புதர் மறைவிலிருந்து ஓரு ஓநாய் வெளிப்பட்டு, முயலை நோக்கிப் பாய்ந்தது. ஆமையும், நத்தையும், விருட்டென்று தங்கள் உடலை ஓடுகளுக்குள் இழுத்துக் கொண்டு, உயிர் பிழைத்தன. ஓநாய் முயலைப் பிடித்தது. சிறிது நேரம் சென்ற பிறகு ஓடுகளை விட்டு வெளியே வந்த ஆமையும், நத்தையும் முயலின் ரத்தத்தைப் பார்த்து, உறைந்து போயின. தாங்கள் வேகமாய் ஓடுவதைவிட, உயிர் பிழைத்து வாழ்வதே முக்கியமானது என்பதை உணர்ந்தன. தங்கள் எதிரியிடமிருந்து காப்பாற்றிய தங்கள் ஓடுகளுக்கு அவை நன்றி கூறின. |
பரமார்த்தரும் சீடர்களும் கந்தபுரம் என்ற ஊருக்குள் நுழைந்தார்கள். அப்போது அந்த ஊர் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தார்கள். அதற்குக் காரணம் நரபலி சாமியார் நாகப்பா அந்த ஊரில் உலவுகிறான் என்பதுதான்! "குருவே! நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் நமக்கே ஆபத்தாக முடிகிறதே! அது ஏன்?" என்று மட்டி கேட்டான். "நாம் எல்லோரும் போன பிறவியில் நிறைய பாவம் செய்து விட்டோம் போலிருக்கிறது!" என்றார் பரமார்த்தர். "குருவே! உடனே இதற்கு ஏதாவது பரிகாரம் செய்தே ஆக வேண்டும்" என்று சொன்னான், முட்டாள். குருவும் சீடர்களும் அன்று இரவே ரகசியமாக ஆலோசனை செய்தார்கள். "குருவே! முனிவர்களைப் போல யாகம் செய்தால் நாம் பாவம் எல்லாம் போய்விடும்" என்றான் மூடன். "அதற்கு நிறைய பணம் செலவாகும். நம்மால் முடியாது. வேண்டுமானால், நரபலி கொடுக்கலாம்" என்றார் பரமார்த்தர். "நரபலியா? ஐயையோ!" என்று சீடர்கள் அனைவரும் அலறினார்கள். "சீடர்களே! நமக்கு நல்ல காலம் பிறக்க வேண்டுமானால் நரபலி கொடுத்தே ஆக வேண்டும் வேறு வழியே இல்லை" என்று முடிவாகச் சொல்லி விட்டார், பரமார்த்தர். "அப்படியானால் யாரைப் பலி கொடுப்பது?" என்று கேட்டான் மண்டு. "வேறு யாரையாவது பிடிக்கப் போனால் மாட்டிக் கொள்வோம்! அதனால்……சீடர்களே… உங்களில் யாராவது ஒருவர்தான் பலியாக வேண்டும்! இந்த நல்ல செயலுக்கு யார் முன் வருகிறீர்கள்?" என்றார் பரமார்த்தர். அவ்வளவுதான்! "ஐயோ நான் பலியாகிவிட்டால், அப்புறம் உங்கள் சுருட்டுக்குக் கொள்ளி வைப்பது யார்?" என்று அழ ஆரம்பித்தான் முட்டாள். "ஐயையோ நான் மாட்டேன்" என்று மூடனும் மூக்கால் அழுதான். "குருவே! நாங்களும் பலியாக மாட்டோம்" என்றபடி மற்ற சீடர்களும் தூர ஓடப் பார்த்தனர். பரமார்த்தருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நெருதூரம் தாடியை உருவிக் கொண்டு யோசனை செய்தார். "சரி, சீடர்களே! நீங்கள் யாரும் பலியாக வேண்டாம்! வேறு ஒரு வழி தோன்றுகிறது. அதன்படிச் செய்வோம்" என்று சொல்லிப் படுத்து விட்டார் பரமார்த்தர். மறுநாள், சீடர்கள் அனைவரும் "எங்கள் குரு நரபலி கொடுக்கப் போகிறார்" என்று ஊர் முழுவதும் பெருமையோடு சொல்லிக் கொண்டு திரிந்தார்கள். அதனால் அந்த ஊர் அரசனுக்கும் செய்தி எட்டியது. பரமார்த்தரை, நரபலி சாமியார் நாகப்பா என்று தவறாக நினைத்து விட்டான். "நாகப்பாவையும் அவன் கூட்டத்தையும் கையும் மெய்யுமாகப் பிடித்து வாருங்கள்" என்று ஆணையிட்டான். நரபலி இடுவதற்காகக் குறிப்பிட்ட நாளும் வந்தது! பரமார்த்தரும் சீடர்களும் யாருக்கும் தெரியாமல் பதுங்கிப் பதுங்கிச் சென்று கொண்டு இருந்தார்கள். ஊர்க் கோடியில் இருந்த காளி கோயிலை அடைந்ததும் பரமார்த்தர் பரம சந்தோஷம் அடைந்தார். மண்டை ஓட்டு மாலையும், நீளம் நீளமான பற்களுமாக இருந்த பத்ரகாளி சிலையைப் பார்த்த சீடர்கள் பயந்து நடுங்கினார்கள். "ஏ, காளியம்மா! வாக்குக் கொடுத்தபடி உனக்கு நரபலி கொடுக்கப் போகிறோம்! நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும். ஜெய் காளி" என்று காளியின் கால்களில் விழுந்து வணங்கினார் பரமார்த்தர். சீடர்களும் ‘தடால்" என்று விழுந்து கும்பிட்டார்கள். நடு இரவு ஆகிவிட்டதை அறிவிப்பதற்கு, அரண்மனையில் இருந்து மணியோசை கேட்டது. அப்போது, கோயிலைச் சுற்றிலும் மறைந்தபடி நின்று கொண்டிருந்த அரண்மனைக் காவலர்கள் சுறுசுறுப்பானார்கள். "சீடர்களே! சீக்கிரம் நாம் கொண்டு வந்த உயிரைப் பலி பீடத்தின் மீது வையுங்கள்!" என்று அவசரப்படுத்தினார், பரமார்த்தர். சீடர்களும் அவசரம் அவசரமாகத் தாங்கள் கொண்டு வந்த உயிரைப் பலி பீடத்தில் வைத்தனர். "ஓம்…ரீம்…பத்ரகாளி!…… இந்தா நரபலி!" என்று ஆவேசமாய்க் கத்தியபடி, பலி பீடத்தின் மீது கொடுவாளை வீசினார், பரமார்த்தர். உடனே அரண்மனை வீரர்கள் ஓடிவந்தது பரமார்த்தரையும் சீடர்களையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பரமார்த்தர் யாரைப் பலியிட்டார் என்று எல்லோரும் ஆவலோடு பலி பீடத்தைப் பார்த்தனர். அங்கே… ஒரு பல்லி, இரண்டு துண்டாகிக் கிடந்தது. அரண்மனை வீரர்களுக்கு ஒரே அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. "சே, நரபலி சாமியார் என்று நினைத்தோம். இவர் நரபல்லி சாமியாராக அல்லவா இருக்கிறார்" என்றபடி பரமார்த்தரையும் சீடர்களையும் அரசனிடம் அழைத்துச் சென்றார்கள். மன்னா! ஏன் எங்களைக் கைது செய்தாய்? நாங்கள் செய்த தவறு என்ன?" என்றார் பரமார்த்தர். "நரபலி கொடுப்பது எங்கள் நாட்டுச் சட்டப்படி குற்றம்" என்றான் மன்னன். "நாங்கள் என்ன, மனிதர்களையா பலி கொடுத்தோம்? கேவலம் ஒரு பல்லியைத்தானே கொன்றோம்" என்று சொன்னார் பரமார்த்தர். "அதுதான் நீங்கள் செய்த தவறு! எங்கள் நாட்டு மக்களின் குலதெய்வம் பல்லி! என் நாட்டுக் கொடியில் இருப்பதும் பல்லி சின்னம்! அந்தப் பல்லியைக் கொன்று, அவமரியாதை செய்த குற்றத்திற்காக உங்கள் அனைவரையும் சிறையில் இட ஆணையிடுகிறேன் என்று கட்டளையிட்டான், கந்தபுர மன்னன். ஐயோ! நரபலி கொடுத்தால் நல்லது நடக்கும் என்று நினைத்தோம். அதுவும் ஆபத்தில் கொண்டு வந்து விட்டு விட்டதே" என்று புலம்பியபடி குருவும் சீடர்களும் சிறைக்குச் சென்றார்கள். |
பீர்பாலின் புத்திசாலித்தனம் எட்டுத் திக்கிலும் பரவி இருந்துச்சு. பக்கத்து ஊரு ராஜாவுக்கு ரொம்ப பொறாமை.. இப்படி ஒரு ஆள் நம்ம தேசத்துல இல்லயேன்ணு..எப்படியாவது இந்த பீர்பாலை அவமானப்படுத்தணுனு யோசிச்சிட்டிருந்தான்.ஒரு யோசனை தோணுச்சு.. உடனே தன்னோட நாட்டில இருக்கும் அனைத்து வகை அபூர்வ ரோஜா செடிகளையும் அக்பருக்கு பரிசா அனுப்பினார்.கூடவே ஒரு வேண்டுகோலும் விடுத்தார். என்ன தெரியுமா.." பிரியமான ராஜாவே இதோ என்னோட சிறிய பரிசுகளை ஏத்துக்கங்க. எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை இருக்கு. உங்க ஊரு முட்டை கோஸ் சுவை ரொம்ப அருமையா இருக்குமாமே எனக்கு கொஞ்சம் அனுப்பி வையுங்க. கூடவே உங்க பீர்பாலையும் அனுப்புங்க.. அப்படி ஒரு புத்திசாலி எங்க நாட்டுக்கு வரணும்னு நாங்க ஆசைப்படுறோம்" இப்படி ஒரு கடிதமும் அனுப்பினார். அக்பருக்கு ஒரே தர்ம சங்கடமாப் போச்சு. முட்டை கோஸ் அவங்க ஊருக்கு போய் சேரதுக்குள்ள அழுகிடுமே. என்ன செய்யறதுனு யோசிச்சார். உடனே பீர்பால் வந்தார். நான் கொண்டு போறேன் அரசே. எனக்கு ஒரு 10 மாட்டு வண்டி மட்டும் கொடுங்க அப்படின்னார். அக்பரும் பீர்பால் கேட்டதெல்லாம் கொடுத்தார். பீர்பால் பயணத்தை தொடங்கினார். சில காலம் கழிச்சு அந்த ராஜாவோட அரண்மனைக்கு போனாரு பீர்பால். ‘ராஜா நீங்க கேட்ட பரிசில் கொண்டு வந்திருக்கேன் ஆனா நீங்க கொஞ்சம் அரண்மனைக்கு வெளிய வரணும்னு" சொன்னாரு நம்ம பீர்பால். ராஜாவுக்கு ஒரே சந்தோஷம்.. எப்படியும் முட்டை கோஸெல்லாம் அழுகி போயிருக்கும்.. பீர்பால் அவமானப்படப்போரார்னு நெனச்சிக்கிடே வெளிய வந்தார்..வந்தவர் அசந்து போயிட்டாரு.. பின்ன பீர்பால் என்ன பன்னார் கெரியுமா.. அந்த மாட்டு வண்டியிலவே முட்டை கோஸ் விதைச்சு எடுத்து வந்துட்டார்.அது இந்த தேசத்துக்கு வரதுக்குள்ள நல்லா விளைஞ்சு சமைக்க தயாரா இருந்தது. அந்த ராஜா நம்ம பீர்பால் கிட்ட மன்னிப்பு கேட்டு அவருக்கு நிறைய பரிசில் கொடுத்து அனுப்பினார். |
அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் வசித்து வந்த நரியும், கழுதையும் சேர்ந்து ஒரு உடன்படிக்கை செய்து கொண்டன. அதாவது நாள்தோறும் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து இரைதேடச் செல்ல வேண்டும் என்றும், இரண்டு பேரில் யாருக்கு என்ன ஆபத்து ஏற்பட்டாலும், மற்றவர் ஆபத்தை விலக்கப் போராடுவது என்றும் அந்த ஒப்பந்தத்தின் மூலம் உறுதி செய்து கொண்டன. ஒருநாள் நரி, தன் நண்பனான கழுதையை இரை தேடுவதற்கு அழைத்துச் செல்வதற்காக கழுதையின் இருப்பிடத்தை நோக்கிச் அந்த அடர்ந்த காட்டின் வழியே சென்று கொண்டிருந்தது. சிறிது தூரம் சென்றதும், சிங்கம் ஒன்று அந்த நரியினை வழி மறித்தது. சிங்கத்தைக் கண்டு அந்த நரி நடுங்கியது. எப்படியாவது உயிர்தப்ப வழியுண்டா என யோசித்தது. நரி உடனே சிங்கத்தை நோக்கி, "மன்னாதி மன்னா! அற்பப் பிராணியாகிய என்னைக் கடித்துத் தின்பதால் உங்கள் பசி சற்றும் அடங்கப் போவதில்லை. உங்களுக்கு நான் மாற்று ஏற்பாடு ஒன்றைச் செய்ய முடியும். என் நண்பனாக, கொழுத்த கழுதை ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் சிரமமில்லாமல் பிடித்துக் கொள்வதற்கு ஓர் ஏற்பாட்டைச் செய்கிறேன். அந்தக் கழுதை, இரண்டு மூன்று நாட்களுக்கு உங்கள் உணவுக்கு ஆகும்!" என்று கூறிற்று. அந்த ஏற்பாட்டுக்கு சிங்கம் ஒப்புக் கொண்டது. நரி, சிங்கத்தை ஓரிடத்தில் மறைவாக இருக்குமாறு கூறிவிட்டு கழுதையின் இருப்பிடத்திற்குச் சென்றது. "நண்பனே! இரை தேடச் செல்லலாமா?" என, கழுதையை அழைத்துக்கொண்டு சிங்கம் மறைந்திருந்த இடத்திற்கு வந்தது. கழுதையை, சிங்கம் மறைந்திருக்கும் இடத்திற்கு அருகாமையில் கொண்டு வந்து நிறுத்தியது நரி. சிங்கம், கழுதையின் மீது பாய்ந்து அதைக் கொன்றது. பிறகு சிங்கம், நரியின் மீதும் பாய்ந்து பிடித்துக் கொண்டது. நரி பதறிப் போய், "மகாராஜா! எனக்குப் பதிலாகத் தானே கழுதையைக் காண்பிக்க வந்தேன். இப்போது என்னையே கொல்ல வந்து விட்டீர்களே!" என்று நரி நடுக்கத்துடன் கேட்டது. "நெருக்கமான நண்பனையே காட்டிக் கொடுக்கத் தயங்காத உன்னை நம்ப முடியாது. நாளை நீ உயிர் தப்புவதற்காக பலம் வாய்ந்த ஒரு விலங்கிடம் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாய் என்பது என்ன நிச்சயம். ஆகவே, உன்னை உயிருடன் விட்டு வைக்கக்கூடாது" என்று கூறிக் கொண்டே சிங்கம், நரியையும் கொன்று வீழ்த்தியது. கெட்ட நண்பர்களுடன் சகவாசம் வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்களால் உங்களுக்கு தீமை தான் ஏற்படும். |
சந்தையின் வழியாக பான்சான் நடந்து கொண்டிருந்தான். அப்பொழுது அருகில் இருந்த கசாப்புக்கடையில் கசாப்புக் கடைகாரனுக்கும் அங்கு கறி வாங்க வந்திருந்த ஒருவனுக்கும் இடையில் நடந்த உரையாடலைத் தற்செயலாகக் கேட்க நேர்ந்தது. வாங்க வந்தவன் "இருக்கின்ற கறியிலேயே நல்ல பாகமாக இருப்பதிலிருந்து ஒரு துண்டினை வெட்டிக் கொடு" என்று கேட்டான். கசாப்புக் கடைகாரன் "என்னுடைய கடையில் இருக்கின்ற அனைத்துமே நல்லதுதான்" என்றவன், "நன்றாக இல்லை என்று இங்கு உள்ள கறியின் ஒரு துண்டு பாகம் கூட இல்லை" என்று தனக்கே உரிய பாணியில் பதில் அளித்தான். கேட்டுக் கொண்டிருந்த பான்சானுக்கு சட்டென்று ஏதோ உரைத்தது போல் இருந்தது. தன்னொளியைப் பெற்றான். |
மதுராந்தகம் மன்னனுக்குக் கண் பார்வை மங்கிக் கொண்டே போனது. வெள்ளை யானையின் தந்தங்களைத் தேய்த்து, கண்களில் பூசிக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் மறுபடி கண்பார்வை வந்துவிடும், என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.வெள்ளை யானையை உயிரோடு பிடித்து வந்தால், ஒரு ஊரையே பரிசாகத் தருவதாக அறிவித்தான், மன்னன். இந்தச் செய்தி பரமார்த்தருக்கும், அவரது சீடர்களுக்கும் எட்டியது.குருநாதா! நமக்குத் தெரிந்தவரை யானை கருப்பு நிறமாகத்தானே இருக்கிறது? வெள்ளை யானை கூட உண்டா என்ன? எனக் கேட்டான், மட்டி. தேவலோகத்தில் ஐராவதம் என்று ஒரு யானை இந்திரனிடம் இருக்கிறது. அது வெள்ளையாக இருக்குமாம், என்றான் மடையன்.குருவே! அந்த யானையைப் பிடித்துவர உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா? என்று கேட்டான், முட்டாள். உடனே குருவுக்குக் கோபம் வந்து விட்டது!கோழையே! என்னால் முடியாத காரியம்கூட உண்டா? ஆனால், இந்திரனுக்கும் எனக்கும் போன ஜென்மத்தில் இருந்தே தீராத பகை. அதனால் அங்கே போவதற்கு நான் விரும்பவில்லை, என்று கூறியபடி தாடியை உருவிக் கொண்டார்.குருதேவா! எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது… வீட்டுக்கு வெள்ளை அடிப்பது மாதிரி, யானைக்கும் வெள்ளை அடித்து விட்டால் என்ன? என்று கேட்டான், மண்டு.ஆமாம் குருவே! யானையின் மேல் சுண்ணாம்பு தடவி விட்டால் போதும். கருப்பு யானை வெள்ளையாக மாறிவிடும்! என்று குதித்தான், மூடன்.ராஜாவுக்குத்தான் சரியாகக் கண் தெரியாதே! அதனால் அவரால் நம் மோசடியைக் கண்டுபிடிக்க முடியாது! என்று மகிழ்ந்தான், முட்டாள்.ஆகா! ஆளுக்கு ஒரு ஊர் பரிசாகக் கிடைக்கப் போகிறது. இனிமேல் நாம் எல்லோரும் குட்டி ராஜாக்கள்தான்! என்றபடி மண்ணில் புரண்டான், மட்டி.பலே, பலே! இப்போதுதான் உங்கள் மூனை நன்றாக வேலை செய்கிறது! எனப் பாராட்டினார், பரமார்த்தர்.அப்போதே தன் சீடர்களை அழைத்துக் கொண்டு, யானைப் பாகனிடம் போனார்.ஒருநாளைக்கு மட்டும் உங்கள் யானையை வாடகைக்குக் கொடுங்கள். தேவையான பணம் தருகிறோம். நீங்களும் கூடவே வரவேண்டும், என்று வேண்டினான் மட்டி.பணத்துக்கு ஆசைப்பட்ட பாகனும் சரி என்று சம்மதித்தான்.நன்றாக இருட்டிய பிறகு, பானை பானையாகச் சுண்ணாம்பு கொண்டு வந்தான், மடையன்.அதை எடுத்து அபிஷேகம் செய்வது போல, பானையின் மேல் ஊற்றினான், முட்டாள்.கொஞ்சம் சுண்ணாம்பை வாரி எடுத்து, பயந்து கொண்டே யானையின் வாயில் பூசிவிட்டான், மண்டு.பரமார்த்தரும் தம் கைத் தடியால் வரி வரியாக வெள்ளை அடித்தார்.குருவே! யானை கருப்பாக இருக்கும்போது தந்தம் வெள்ளையாக இருக்கிறது, அதுபோல யானை வெள்ளையாக இருந்தால், தந்தம் கருப்பாக அல்லவா இருக்க வேண்டும்? எனக் கேட்டான், பாகன்.ஆமாம்! நீ சொல்வதும் சரிதான்! என்றபடி அடுப்புக் கரியைத் தேய்த்து, தந்தங்களில் பூசி விட்டான், முட்டாள்.இது தேவலோகத்தில் இருந்து பிடித்து வந்தது என்பதை அரசன் நம்ப வேண்டும். அதனால் இரண்டு இறக்கைகள் கட்ட வேண்டும், என்றார் பரமார்த்தர்.குருவின் யோசனையை உடனே செயல்படுத்தினான், மூடன்.எல்லா வேலையையும் முடிந்தது. யானையைச் சுற்றி வந்து பார்வையிட்ட குரு, அற்புதம்! இது இந்திர லோகத்து யானையேதான்! என்றபடி அதன் தும்பிக்கையைத் தொட்டுக் கும்பிட்டார்.மறுநாள், அரண்மனைக்கு முன்னால் மக்கள் கூட்டம் ஜே ஜே என்று இருந்தது. வெள்ளை யானையைப் பார்ப்பதற்காக மந்திரிகள் புடைசூழ மன்னனும் வந்தான்.திறந்த வெளியில் கட்டி இருந்த யானையைப் பார்த்த அரசன், அதிசயமாக இருக்கிறதே! இந்த யானையை எங்கிருந்து பிடித்து வந்தீர்கள்? என்று கேட்டான்.தேவலோகம் வரை தேடிக் கொண்டு போனோம்! என்று புளுகினான், மண்டு.ஐயோ! இதைப் பிடிக்க நாங்கள் பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும்! என்றான் மூடன்.தந்தம் மட்டும் கருப்பாக இருக்கிறதே? என்று மந்திரி கேட்டதும், அது வைரம் பாய்ந்த தந்தம்! அப்படித்தான் இருக்கும்! என்றான் முட்டாள்.இவர்கள் பேசிக் கொண்டே இருக்கும்போது, திடீரென்று பலத்த காற்று அடிக்க ஆரம்பித்தது. உடனே யானையின் மீது கட்டப்பட்ட இறக்கைகள் பிய்த்துக் கொண்டு கீழே விழுந்தன.உடனே பலத்த மழையும் பெய்ய ஆரம்பித்தது. மழை நீர் யானையின் மீது பட்டதும் கொஞ்சம் கொஞ்சமாகச் சுண்ணாம்பு எல்லாம் கரைந்து, வெள்ளை யானை கருப்பாக மாறியது.இதைப் பார்த்த குருவுக்கும் சீடர்களுக்கும் பயத்தால் உடம்பு வெட வெட என்று நடுங்கியது!சிறிது நேரத்திலேயே பரமார்த்தரின் சாயம் வெளுத்து விட்டது - ஊகும் - கருத்து விட்டது. வழக்கம்போல் தண்டனைக்கு ஆளானார்கள்.தேவலோகத்தில் ஐராவதம் என்று ஒரு யானை இந்திரனிடம் இருக்கிறது. அது வெள்ளை |
முல்லாவின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு பெண்மணி வசித்து வந்தாள். முல்லா
வீட்டில் என்ன சமையல் செய்தாலும் அவள் அதை மோப்பம் பிடித்து தனது சிறிய மகளை அனுப்பி
சமைத்த பொருளை கொஞ்சம் கேட்டு வாங்கி வரச் சொல்வாள். அவளுடைய அந்த விரும்பத்தகாத வழக்கம் முல்லாவுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதை
எப்படித் தடுப்பது என்றும் விளங்கவில்லை. ஒருநாள் முல்லாவுக்கு "கோழிக்குஞ்சு சூப் " தயாரிக்கச் செய்து சாப்பிட வேண்டும் என்று
ஆசையாக இருந்தது. " சூப்" தயார் செய்யச் சொல்லலாம் என மனைவியை அழைத்தார். மனைவி அவர் முன்னால் வந்து நின்றபோது முல்லாவுக்கு அண்டை வீட்டுகாரியின் நினைவு வந்தது. வீட்டில் சூப் செய்யத் தொடங்கினால் அண்டை வீட்டுக்காரி மோப்பம் பிடித்துக் கொண்டு சூப்
வாங்க ஆள் அனுப்பி விடுவாளே என்ற எண்ணம் அவருக்கு ஏற்ப்பட்டது. " சூப் இப்போது தயார் செய்ய வேண்டாம் என்று கூறி மனைவியை அனுப்பி விட்டார்." சற்று நேரத்திற்கெல்லாம் கதவு தட்டப்படும் ஒசை கேட்டது. முல்லா எழுந்து சென்று
கதவைத்
திறந்தார். அண்டை வீட்டுக்காரியின் சின்னப் பெண் கையில் ஒரு கிண்ணத்துடன் வீட்டுவாசலில் நின்று
கொண்டிருந்தாள். என்ன? என முல்லா விசாரித்தார். உங்கள் வீட்டில் கோழி சூப் தயாரித்தீர்களாமே! அம்மா கொஞ்சம் வாங்கிக் கொண்டு
வரச்சொன்னாள் என்று சிறுமி கூறினாள். முல்லா உரத்த குரலில் " ஒஹோஹோ" என்று சிரித்தார். உள்ளேயிருந்த மனைவி ஒடிவந்து " உங்களுக்கு என்ன வந்துவிட்டது? ஏன் இப்படிச்
சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டாள். " இந்த வினோதத்தைப் பார்?" இத்தனை காலமாக நாம் சமையல் செய்யும்போதுதான் அண்டை
வீட்டுக்காரி மோப்பம் பிடித்து நாம் சமைக்கும் பொருளில் கொஞ்சம் வாங்கி வரச்
சொல்லுவாள்.
இப்போது நான் சூப் செய்யச் சொல்ல வேண்டும் என்று மனத்திலேதான் நினைத்தேன். இதைக்கூட அண்டை வீட்டுக்காரி மோப்பம் பிடித்து சூப் வாங்கி வரச் சொல்லி மகளை அனுப்பியிருக்கிறாள் பார் என்று கூறிவிட்டு முல்லா சிரிக்கலானார். |
அறிஞர்கள் கூடியிருந்த ஒரு சபையில் மிகவும் பயனுடையது எது சூரியனா அல்லது சந்திரனா? என்பது குறித்துப் பட்டிமன்றம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அங்கே பேசியவர்கள் பெரும்பான்மையினர் சந்திரனைவிட சூரியனால்தான் உலகத்திற்கு அதிகப்
பயன் உண்டு என்ற கருத்தையே வலியுறுத்திப் பேசினர். அப்போது பேசியவர்களை நையாண்டி செய்து வேடிக்கை பார்க்க வேண்டும் என்று
முல்லாவுக்குத் தோன்றியது. அவர் உடனே எழுந்து " அறிஞர் பெருமக்களே, இங்கே நடந்த பட்டிமன்றம் தொடர்பாக எனது
கருத்தைக் கூறலாமா?" என்று கேட்டார். இது பொதுமன்றம், இங்கு யாரும் தங்கள் கருத்தினை எந்தவிதத் தடையுன்றிக் கூறலாம்.
முல்லா அவர்களே உங்கள் கருத்தைக் கூறுங்கள் என்று அறிஞர் பெருமக்கள் கேட்டுக்
கொண்டனர். சூரியனைவிடச் சந்திரனால்தான் உலகத்திற்கு அதிகமான பயன் கிடைக்கிறது என்று
நான் கருதுகிறேன் என்றார் முல்லா. அது எவ்வாறு விளக்குங்கள் என்று அறிஞர்கள் கேட்டனர். பகலில் நமக்கு இயற்கையாக வெளிச்சம் இருக்கிறது. அதனால் சூரியனுடைய உதவி நமக்குத்
தேவையே இல்லை. இரவில் இருளாக இருக்கிறது. சந்திரன் இருளை அகற்றி நமக்கத் தேவையான
ஒளியை இரவிலே அளிக்கிறது. அதனால் சந்திரன் தான் நமக்கு அதிகப் பயனை அளிக்கின்றது
என்றார் முல்லா. முல்லா தங்களை நையாண்டி செய்கிறார் என்பதை உணர்ந்து அறிஞர்கள் சிரித்து
மகிழ்ந்தார்கள்.
|
ஒரு குளத்தில் மூன்று மீன்கள் இருந்தன. அவற்றின் பெயர் வருமுன்காப்போன், வருங்கால் காப்போன், வந்தபின்காப்போன் என்பனவாகும். அவை மூன்றும் ஒரு கவலையும் இல்லாமல் பல நாட்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தன். ஒரு நாள், வலைஞர்கள் வந்து நாளை இந்தக் குளத்தில் மீன் பிடிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள். இதைக் கேட்டவுடன் வருமுன்காப்போன் என்ற மீன், மற்ற மீன்களைப் பார்த்து, இப்பொழுதே நாம் மற்றோர் இடத்திற்குப் போய்விட வேண்டும்" என்று சொல்வியது. அதற்கு வருங்கால்காப்போன் என்ற மீன் என்ன அவசரம்? அந்தச் சமயத்திற்குப் பார்த்துக் கொள்ளலாம். சமயத்திற்குத் தகுந்தாற் போல் தந்திரம் செய்து தப்பித்துக் கொள்ளலாம் என்று கூறியது. வருமுன்காப்போன் என்ற மீன், இந்தக் கருத்தை ஒப்புக் கொள்ளாமல் அப்பொழுதே அந்தக் குளத்தைவிட்டு மற்றொரு குளத்திற்குப் போய் விட்டது. வருங்கால்காப்போன், வந்தபின்காப்போன் முதலிய மீன்களெல்லாம் அந்தக் குளத்திலேயே இருந்தன. பேசிச் சென்றபடி மறுநாள் வலைஞர்கள் மீன் பிடிக்க வந்தார்கள். எல்லா மீன்களையும் வலை வீசிப் பிடித்தார்கள். அப்போது வலையில் அகப் பட்டுக் கொண்ட வருங்கால்காப்போன் செத்த மீன் போல், விரைத்துக் கிடந்தது. அதைக் கண்டு ஒரு செம்படவன் கரையில் தூக்கி எறிந்தான். அது யாரும் காணாமல் தண்ணிருக்குள் புகுந்து மறைந்து கொண்டது. வந்தபின் காப்போனும், மற்ற மீன்களும் வழி தெரியாமல் அகப்பட்டுக் கொண்டு செம்படவர்கள் கையிலே சிக்கி மடிந்து போயின. முன்னாலேயே எதையும் நினைத்துப் பார்த்து முடிவு செய்பவன் உறுதியாகப் பிழைத்துக் கொள் வான். அவ்வப்போது சிந்தித்து வேலை செய்யும் அறிவுடையவனும் எப்படியாவது பிழைத்துக் கொள்வான். எதையும் எப்போதும் சிந்திக்காதவன் பிழைக்கவே மாட்டான். |
நகரில் கப்பி ரோடு ஒன்று இருந்தது. அதன் மேல் வேகமாகப் போன வண்டியின் சக்கரம் ஒன்று ஒரு கப்பிக் கல்லை பெயர்த்து உருட்டி விட்டுப் போய் விட்டது. அந்தக் கப்பிக் கல் தனக்குள் சொல்லிக் கொண்டது. “என்னைப் போன்ற மற்றவர்களுடன் பிணைக்கப் பட்டு நான் இப்படி ஒரே இடத்தில் கிடப்பானேன்? நான் தனியாகவே வாழ்ந்து பார்க்கிறேன்!” தெருவோடு போன ஒரு பையன் அந்தக் கல்லைத் தன் கையில் எடுத்துக் கொண்டான். கல் தனக்குள் எண்ணிக் கொண்டது. “நான் பிரயாணம் செய்ய விரும்பினேன். பிரயாணம் செய்கிறேன். தீவிரமாக எதையும் விரும்பினாலே போதும். விரும்பிய படி நடக்கும்!” கல்லை ஒரு வீட்டை நோக்கி எறிந்தான் பையன். “ஹா! நான் பறக்க விரும்பினேன்; பறக்கிறேன். என் விருப்பம் போலத்தான் நடக்கிறது எல்லாம்” ஒரு ஜன்னல் கண்ணாடியில் ‘டண்’ என்று கல் மோதி உடைத்துக் கொண்டு உள்ளே போனது, கண்ணாடி உடையும் போது அது சொல்லியது “போக்கிரி, நான் போகும் வழியில் விலகிக் கொள்ளாமல் நிற்கிறாயே?! என்னை மறிப்பவர்களை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. என் சௌகரியத்திற்காகத்தான் எல்லாம் இருக்கிறது. ஆகவே இனிமேல் கவனமாக இரு!” வீட்டின் அறைக்குள் இருந்த ஒரு மெத்தையின் மேல் விழுந்தது கல். “இவ்வளவு நேரம் பிரயாணம் செய்ததில் அலுப்பாகி விட்டது. சற்று ஓய்வு தேவை என்று நினைத்த பட்சத்திலேயே படுக்கை கிடைத்து விட்டதே. ஆஹா!” என்று நினைத்துக் கொண்டது. ஒரு வேலைக்க்காரன் அங்கே வந்தான். படுக்கையில் இருந்த கல்லைத் தூக்கி ஜன்னல் வழியே திரும்பவும் தெருவில் எறிந்து விட்டான். அப்போது கப்பிக் கல் தன்னுடன் பதிந்திருந்த ஏனைய கப்பிக் கற்களிடம் “சகோதரர்களே! சௌக்கியமா? நான் இப்போது பெரிய மனிதர்களைப் பார்க்க அவர் மாளிகைக்குப் போய் விட்டுத் திரும்புகிறேன். பெரிய மனிதர்களையும் பணக் காரர்களையும் எனக்குப் பிடிப்பதில்லை. என்னைப் போன்ற சாதாரண மக்களிடம்தான் எனக்கு உண்மையில் ரொம்பப் பிரியமும் மரியாதையும் இருக்கிறது. அதனால்தான் திரும்பி விட்டேன்” என்றது. சொல்லிக் கொண்டிருக்கும் போதே சரக்கு ஏற்றி வந்த ஒரு வண்டியின் சக்கரம் தனியாகக் கிடந்த கல்லின் மேல் ஏறியது. “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!” என்று சொல்லிக் கொண்டே துண்டு துண்டாகச் சிதறிப் போனது அந்தப் பச்சோந்தி கப்பிக் கல்.
|
மிஸோ என்பது ஜப்பானியர்கள் உபயோகப் படுத்தும் ஊறுகாய் போன்ற சத்துள்ள உப்பான சாப்பிடும் உணவுப் பொருளாகும். ஜப்பானியர்கள் மிஸோ சூப்பினை காலையில் உடல் சத்திற்காக சாப்பிடுவார்கள். மிஸோவினை உபயோகப் படுத்தி மதிய, இரவு உணவுப் பதார்த்தங்களையும் செய்வார்கள். மிஸொவினை மற்ற காய்கறிகளுடன் சேர்த்து புளிக்க வைத்து எடுத்து வைத்து விடுவார்கள். குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ள மிஸோ பல நாடகளுக்கு கெடாமல் இருக்கும். மிஸொவுடன் அரிசி, கோதுமை, அவரைவிதை மற்றும் சோயா மொச்சைக் கொட்டை போன்ற பொருட்களுடனும் சேர்க்கப் பட்டு சாப்பிடுவதற்கு உபயோகப் படுத்தப் படும். மிஸோவினைப் பற்றிய இந்த சிறுகுறிப்பு இன்றைய ஸென் கதைக்கு உபயோகமான தகவலாகும். பென்கேயின் மடத்தில் இருந்த சமையல்காரத் துறவி டைரியோ (ஸென் மடத்தில் இருக்கும் துறவிகள் தியானம் மட்டும் அல்லாமல் மற்ற பிற வேலைகளையும் செய்வது வழக்கம். சுழற்சி முறையில் ஒரு வேலையிலிருந்து மற்ற வேலைகளுக்கு அனுப்பப் பட்டனர்.), பென்கேயின் வயதினைக் கருத்தில் கொண்டு இனி அவருக்கு புதிதாக தயார் செய்த சுவையுள்ள மிஸோவினை மட்டுமே தருவது என முடிவெடுத்தான். கொஞ்ச நாட்களாகவே தனக்கு வரும் மிஸோவானது சுவையுடனும் மிகவும் புதிதாக தாயாரிக்கப் பட்டதாகும் இருந்ததைக் கவனித்த பென்கேய் தன்னுடைய சீடர்களை அழைத்து "யார் இப்பொழுது எல்லாம் சமைப்பது?" என்று கேட்டார். டைரியோவினை அவரிடம் அனுப்பி வைத்தார்கள். டைரியோவிடமிருந்து தன்னுடைய வயதிற்கும் தகுதிக்கும் புதிதாக தயாரிக்கப் பட்ட மிஸோக்களையேத் தான் சாப்பிட வேண்டும் என்பதினைக் கேட்டறிந்தார். அதைக் கேட்ட உடனேயே, "அப்படியானல், இனி நான் சாப்பிடவேக் கூடாது என்று சொல்கிறாயா?" என்றவர் தன்னுடைய அறைக்குள் சென்று உட்புறமாக பூட்டிக் கொண்டார். டைரியோ கதவின் வெளியே நின்று கொண்டு ஆசிரியரிடம் மன்னிப்புக் கேட்டான். பென்கேய் எந்தப் பதிலும் கூறவில்லை. ஏழு நாட்களுக்கு டைரியோ கதவின் வெளிப்புறம் உட்கார்ந்திருந்தான். ஆசிரியர் அறையின் உள்ளே இருந்தார். முடிவில் நம்பிகையையும் பொருமையையும் இழந்த டைரியோ சத்தமாக பென்கேயிடம், "கிழவா, நீ வேண்டுமானல் சாப்பிடாமல் நன்றாக இருக்கலாம். ஆனால் இந்த இளைஞனான சீடன் சாப்பிட வேண்டும். என்னால் இப்படியே தொடர்ந்து உணவு சாப்பிடாமலேயே உயிர் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது!" என்று கத்தினான். அந்த சமயத்தில் கதவினைத் திறந்தார் பென்கேய். புன்னகையுடன் டைரியோவைப் பார்த்த பென்கேய், "என்னுடைய சீடர்கள் எதைச் சாப்பிடுகிறார்களோ அதையே நானும் சாப்பிட விரும்புகிறேன். நீ ஆசிரியராகும் போது இதனை மறந்துவிடாதே" என்றார்.
|
ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் இவர்களைப் பார்த்து, "பாரேன், இவர்களை, அற்புதமான கழுதையை ஓட்டிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யாராவது அதில் ஏறிச் செல்லலாம். ஆனால் பொருளைக் கொடுத்த கடவுள் அதைப் பயன்படுத்த அறிவைக் கொடுக்கவில்லை, இவர்களுக்கு" என்று ஏளனம் செய்தனர். இதனால் வெட்கப்பட்டுப் போன தந்தையும் மகனும் ஒரு முடிவு செய்து, வயதில் சிறியவனான மகன் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, தந்தை நடந்தவாறே இருவருமாகப் போனார்கள். அப்போது வேறு சில வழிப்போக்கர்கள், "இங்கப் பாருடா அநியாயம்! பெரியவர் நடக்கமுடியாமல் நடக்கிறார், இந்த வாலிபப் பையன் சொகுசா கழுதை சவாரி செய்கிறான்" என்று கிண்டலடித்தனர். இதைக் கேட்டு இவர்கள் கூறுவதில் நியாயம் இருப்பதாக உணர்ந்த பையன், தந்தையைக் கழுதையில் உட்காரவைத்து இருவரும் புறப்பட்டனர்.இன்னும் சற்று தூரம் சென்ற பின் ஒரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "கலி முற்றிவிட்டது.. இங்கப் பாரு! நல்லா சுக்குமாந்தடி போல இருக்கிற பெரியவர், ஒரு நோஞ்சான் பையனை நடக்கவிட்டு தான் மட்டும் சொகுசாக கழுதை மேல் ஏறிப்போகிறார்" என்றான். வழக்கம் போல இதைக்கேட்ட தந்தை-மகன் இருவரும் ஒரு சேர கழுதைமேல் ஏறிகொண்டனர். இனி இந்த உலகம் தங்களைப் பார்த்துக் கேலிப் பேசாது என்று தந்தைக் கூறினார். கொஞ்ச தூரம் சென்றபின் இன்னொரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "இரண்டு தடியன்கள், ஒரு நோஞ்சான் கழுதையின் மேல் ஏறி சவாரி செய்கிறார்கள்; இரக்கங்கெட்ட ஜென்மங்கள்!" என்று காட்டமாக விமர்சித்தான். இதைக் கேட்டு வருந்திய தந்தையும், மகனும் கழுதையிலிருந்து குதித்தனர். இனி என்ன செய்வது? என்று சிந்தித்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு "மக்கள் மனம் மகிழ கழுதையை நாம் கட்டித் தோளில் சுமந்து செல்வோம்!" என்று முடிவு செய்தனர். அவ்வாறு கழுதையைத் தோளில் சுமந்து செல்கையில் வழியில் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. அதைக் கடக்கையில் கழுதை மிரண்டு போய் வெள்ளத்தில் விழுந்தது. கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை! எனவே அது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தந்தையும் மகனும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.எப்படி இருக்கு? |
மனோவிற்கு மனசு படபடவென்று அடித்துக் கொண்டது. ஆசிரியர் ஆரோக்கியசாமி பையன்களின் புத்தகப்பையை ஒவ்வொன்றாக சோதனை செய்து கொண்டிருந்தார். அவர் தேடிக் கொண்டிருந்த அவரின் மணிபர்ஸ் மனோவின் பைக்குள் பத்திரமாக இருந்தது. மனோ ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். மனோ பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பையன். தன் வகுப்பில் படிக்கும் பையன்களின் பென்சில், ரப்பர் என்று விளையாட்டாக எடுக்க ஆரம்பித்தான் மனோ. சின்ன சின்ன பொருட்களை அவ்வப்போது எடுப்பது என்பது அவனுக்கு அன்றாட வழக்கமாகிவிட்டது. ஆனால் இன்றுதான் முதன்முறையாக வகுப்பு ஆசிரியரின் மணிப்பர்ஸைத் திருடிவிட்டான். இவ்வளவு சீக்கிரமாகவா தேட ஆரம்பிப்பார். அதுவும் இப்படி ஒவ்வொரு பையாகவா தேடுவார்? இன்னும் சிறிது நேரத்தில் அகப்பட்டு விடுவான். திருடியது இவன் என்று எல்லோருக்கும் தெரிந்து விடும். பையன்கள் இவனை திருடன் திருடன் என்று அழைப்பார்கள். பள்ளிக்கூடத்தை விட்டு விலக்கி விடுவார்கள். அப்பா, அம்மா இவனைப் பற்றி என்ன நினைப்பார்கள்? மனோ என்று ஆசிரியர் குரல் கேட்டது. அடுத்த வினாடி புத்தகப் பையை எடுத்துக் கொண்டு முன்னால் சென்றான். ஆரோக்கியசாமி அவன் பையில் கையை விட்டார். மணிபர்ஸ் கையில் அகப்பட்டது. வெளியே எடுத்தார். அதே பர்ஸ். பிரித்துப் பார்த்தார் பணம் அப்படியே இருந்தது. மனோ தலையைக் குனிந்தபடி நின்று கொண்டிருந்தான். பையன்கள் எல்லோரும் இவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். "என்ன மிஸ்டர் ஆரோக்கியம் பர்ஸ் கிடைச்சிருச்சா?" என்ற குரலைக் கேட்டுத் திரும்பினார் ஆசிரியர். வாசலில் ஹெட்மாஸ்டர் நின்று கொண்டிருந்தார். "ஆமா சார் கிடைச்சிடுச்சி சார்", "யார் எடுத்தது? நிக்கறானே இவந்தான் எடுத்தானா?", "இல்லை சார். நாந்தான் பிரேயருக்கு வர்றதுக்கு முன்னாடி பைக்குள்ள வைக்க சொன்னேன். பத்திரமா இருக்கும்னு அவங்கிட்டே கொடுத்தது மறந்திடுச்சு.", "என்ன இது முட்டாள்தனமா பேசறீங்க. கொஞ்சங்கூட பொறுப்பு இல்லாம. யோசனை பண்ணி சொல்றது இல்லையா? ஒரு ஆசிரியரே இப்படி பொறுப்பில்லாம நடந்துகிட்டா எப்படி? நாங்கூட நம்ம மாணவர்களைப் பத்தி தப்பா நினைச்சிட்டேன்" என்றார் கோபமாக தலைமை ஆசிரியர். "சாரி சார்", "என்னது சாரி... பொடவை", "எஸ் ஸார்......." என்றார் ஆரோக்கியசாமி தலையை குனிந்தபடி. கோபமாக அங்கிருந்து சென்றார் ஹெட்மாஸ்டர். வகுப்பில் பையன்கள் ஆசிரியரைப் பரிதாபமாகப் பார்த்தனர். மனோவின் கண்களில் கண்ணீர் முட்டியது. "மணிப்பர்சை நாந்தானே உங்கிட்ட குடுத்தேன் சொல்லக் கூடாது? போய் உட்கார் போ" என்றார் ஆரோக்கியசாமி. மனோ தன் இடத்திற்குப் போனான். தலைமை ஆசிரியரிடம் தன்னால் இத்தனை பையன்கள் முன்னிலையில் ஆசிரியர் அவமானப் பட்டதை நினைத்துப் பார்த்தான். மனோவிற்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. நெஞ்சு வெடித்துவிடும்போல் இருந்தது. சிறிது நேரத்தில் கடைசி மணி அடித்தது. பையன்கள் முண்டியடித்து வகுப்பைவிட்டு வெளியேறினர். எல்லோருக்கும் பின்னால் ஆசிரியர் ஆரோக்கியம் மெல்ல நடந்தார். மனோ அவர் பின்னாலேயே சென்றான். அடுத்த வினாடி மனோ ஆசிரியரின் முன்னால் சென்று அவர் கால்களைப் பிடித்துக் கொண்டான். ஆரோக்கியம் அவனை தூக்கி நிறுத்தினார். மனோ தேம்பித் தேம்பி அழுதான். "தெரியாம செஞ்சிட்டேன் சார். என்ன மன்னிச்சிருங்க. இனிமேல் செய்யமாட்டேன்" என்று அழுகையோடு அழுகையாகச் சொன்னான். "இனிமே எந்த தப்பும் நீ செய்ய மாட்டேன்னு எனக்குத் தெரியும்" என்று சொல்லிக் கொண்டே அவனை மார்புடன் ரே அணைத்துக் கொண்டார். |
தேரிக்குடியிருப்பு என்ற ஊரின் எல்லையில் இருந்த காட்டில் பெரிய குளம் இருந்தது, அதனை ஒட்டி சிறிய நீரோடை ஓடிக் கொண்டிருக்கும். அந்த குளத்தில் நிறைய மீன்கள், நண்டுகள், மற்றும் அனைத்து நீர்வாழ் இனங்கள் வாழ்ந்து வந்தன. அவற்றில் ராமு, சோமு, தாமு என்ற மூன்று மீன்கள் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அந்த மூவரும் எங்கே சென்றாலும் ஒன்றாகவே போவார்கள். ஒரு பயமும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் மகிழ்ச்சியை கெடுக்கும் விதமாக ஒரு நாள் மாலையில் ஒரு இரண்டு மனிதர்கள் அங்கே வந்தார்கள், வேட்டையாடிய களைப்பு முகத்தில் தெரிந்தது, குளத்து நீரை அருந்தி விட்டு, குளத்தை நன்றாக ஆராய்ந்தார்கள், பின்னர் அவர்களில் ஒருவர் "இந்த குளத்தில் நிறைய மீன்கள் இருக்கிறதே, அதுவும் நன்றாக வளர்ந்து கொழு கொழு என்று இருக்கிறதே, நாம் வீணாக காடு மேடு என்று அலைந்து வேட்டையாட வேண்டாம், பேசாம இங்கே நாளை வந்து வலையை விரிப்போம், மாட்டிக் கொள்ளும் மீன்களை விற்று பணம் சம்பாதிக்கலாம்" என்றார். மற்றவரும் "ஆகா, அருமையான யோசனையாக இருக்கிறதே" என்றார். இவர்கள் பேசுவதை கேட்ட ராமு என்ற மீன் பெருங்கவலை அடைந்தது, உடனே தன் நண்பர்களான சோமு, தாமுவிடம் கூறியது. காட்டின் நடுவில் இருந்ததால் இதுவரை பெரிய ஆபத்து வந்தது இல்லை, குளத்தில் நடுவில் போய் இருந்தால் பறவைகள் கூட தங்களை ஒன்றும் செய்தது இல்லை, இன்றோ இந்த மனிதர்களால் பெரிய ஆபத்து வந்து விட்டதே என்ன செய்யலாம் என்று யோசித்தன. ராமு எப்போவும் வரும்முன் காத்துக் கொள்ளும் மனம் படைத்த மீன், மற்ற மீன்களைப் பார்த்து, நாளை கண்டிப்பாக அவர்கள் இங்கே வருவார்கள், நாம் இன்று இரவே இக்குளத்தை விட்டு நீரோடையின் உதவியால் அருகில் இருக்கும் வேறு குளத்திற்கு போகலாம். சில காலம் போனபின்பு மீண்டும் இங்கே வரலாம் என்றது. ராமுவின் நல்ல யோசனையை மற்ற இருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் சும்மா சொல்லிவிட்டு போயிருப்பார்கள், அவர்களாவது நம்மை பிடிப்பதாவது, நீ வீணாக பயப்படுகிறாய் என்றன. ராமு எவ்வளவோ சொல்லிப் பார்த்தது, ஆனால் சோமு,தாமு இருவரும் கேட்கவில்லை. ராமு அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் இன்று இரவே அந்த குளத்தை விட்டு போவதாக சொல்லி விட்டு இரவே தப்பி வேற குளத்திற்கு போய் விட்டது. மறு நாள் காலையில் சோமு, தாமு இருவரும் கூடி பேசினார்கள், மீன் பிடிப்பதாக சொன்னவர்களை காணவில்லை, சும்மா பேச்சு சொன்னதை நம்பி ராமு வேற குளத்திற்கு போனது முட்டாள்த்தனம் என்று கேலி செய்தன. சிறிது நேரத்தில் வலை விரிப்பதாக சொன்ன இருவரும் பெரிய வலையை எடுத்து வந்து எங்கே வலை வீசுவது என்று பேசினார்கள். அவ்வளவு தான் அதைக் கேட்டு சோமு "அய்யோ கடவுளே!, ராமு அப்போவே சொன்னதே, இரவே தப்பியிருக்கலாமே" என்று புலம்பியது. ஆனால் தாமு அந்த சூழ்நிலையிலும் கொஞ்சமும் பயப்படவில்லை, "ஏன் பயப்படுகிறாய், குளத்தில் எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன, நாம் மறைந்துக் கொள்ளலாம்" என்றது. சோமு கொஞ்சம் கொழு கொழு மீன், அதற்கு பயம் வந்து விட்டது, அதற்குள் மீனவர்கள் வலை வீச, தாமூ ஓடி ஒளிந்துக் கொண்டது. சோமு மாட்டிக் கொண்டது, வலையில் இருந்து தன்னை விடுவிக்க படாத பாடு பட்டது, இறுதியில் சோமுவின் வால் பகுதியும் முதுகும் சேதமடைந்து, வலையில் இருந்து விடுபட்டு நீரோடையில் பாய்ந்து தப்பி விட்டது. உடல் எங்கும் ரத்தம், வரும் முன்னால் காக்காமல் வந்த போது காக்க நினைத்த தன் முட்டாள்தனத்தை நினைத்து வருந்தியது. தாமு குளத்தின் உள்ளே இருந்த பாறையின் அடியில் ஒளிந்துக் கொண்டது, தான் வீரமாக தப்பியதை நினைத்து பெருமைப்பட்டது. அது ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. வந்த இருவரில் ஒருவர் நீண்ட கம்பை எடுத்து குளத்தின் அடியில் இருக்கும் பாறைகளில் செலுத்தி அசைத்தார், அவ்வாறு செய்கையில் ஒரு முறை அந்த கம்பானது தாமுவை தாக்கியது, தாமு தப்பிக்க நினைத்து அதிலிருந்து வெளியே வர, அங்கே இருந்த வலையில் மாட்டிக் கொண்டது. சிறிது நேரத்தில் மீனவர்கள் வலையை வெளியே எடுத்து மாட்டிய அனைத்து மீன்களையும் தரையில் போட்டு கொன்றார்கள். அதில் தாமுவும் ஒரு மீன். வரும்முன் காப்போம் என்ற கொள்கை கொண்ட ராமு ஒரு ஆபத்தும் இல்லாமல் தப்பி, மகிழ்ச்சியாக வாழ்ந்தது, வந்த போது காப்போம் என்ற கொள்கை உடைய சோமு, உடல் எங்கும் காயப்பட்டு, மற்ற மீன்களுக்கு பயந்து பயந்து வாழ்ந்தது, வந்தப்பின்பு பார்ப்போம் என்ற கொள்கை உடைய தாமுவோ கொல்லப்பட்டு விட்டது. குழந்தைகளே! இக்கதையானது நம் அனைவருக்கும் நல்ல பாடம். எந்த விசயத்தையும் வரும் முன்பே யோசிக்க வேண்டும், மழைக்காலம் என்றால் வெளியே செல்லும் போது கையில் குடை இருக்க வேண்டும். தேர்வு வருகிறது என்றால் ஒரு வாரத்திற்கு அனைத்துப் பாடங்களையும் படித்து முடிக்க வேண்டும். கடைசி நேரத்தில் படிக்கத் தொடங்கினால் அது பயன் அளிக்காது, எனவே நாம் எப்போவும் வரும்முன் காப்போம் என்ற கொள்கையை பின்பற்ற வேண்டும், பின்பற்றினால் கவலையின்றி வாழலாம். |
ஒரு பட்டணத்தில் இரண்டு வணிகப் பிள்ளை கள் இருந்தார்கள். ஒருவன் பெயர் நல்ல புத்தி. இன்னொருவன் பெயர் கெட்டபுத்தி. இரண்டு பேரும் பணம் சேர்ப்பதற்காக வெளியூருக்குச் சென் றார்கள். அங்கே நல்லபுத்திக்கு ஆயிரம் பொன் கிடைத்தது, கெட்டபுத்திக்கு எதுவும் கிடைக்க வில்லை. நல்ல நோக்கமுடைய நல்லபுத்தி, கெட்டபுத்தி யைப் பார்த்து, கவலைப்படாதே, நாம் இருவரும் ஆளுக்கு ஐநூறு பொன்னாகப் பங்கிட்டுக் கொள்ளலாம்" என்று கூறினான். சரியென்று ஒப்புக் கொண்ட கெட்டபுத்தி, நாம் உடனே இவ்வளவு பணத்தையும் ஊருக்கு எடுத்துச் சென்றால் கெடுதல் உண்டாகும். இங்கேயே ஒரு மரத்தின் கீழ்ப் புதைத்து வைப்போம். மற்றொரு நாள் வந்து எடுத்துக் கொண்டு போவோம்" என் றான். இது பொருத்தமாகத் தோன்றவே, நல்லபுத்தி ஒப்புக் கொண்டான். உடனே அங்கொரு மரத்தடி யில் பள்ளம் தோண்டிப் பணத்தைப் புதைத்து ஓர் அடையாளம் வைத்துவிட்டு இருவரும் ஊருக்குள் சென்றார்கள். கெட்டபுத்தி அன்று இரவே திரும்பி வந்து ஆயிரம் பொன்னையும் அடித்துக் கொண்டு போய் விட்டான், சில நாள் கழித்து இருவரும் அந்த மரத்தடிக்கு வந்து பார்த்தார்கள். பணம் காணவில்லை. உடனே, கெட்டபுத்தி முந்திக் கொண்டு நல்லபுத்தியைப் பார்த்து, நண்பா இப்படி மோசம் செய்யலாமா? என்று கேட்டான், "நீதான் எடுத்துக் கொண்டு என்னை ஏமாற்றுகிறாய்! என்றான் நல்லபுத்தி. இருவருக்கும் சண்டை வந்து விட்டது. கடைசி யில் வழக்கு மன்றத்திற்குப் போனார்கள். ஊர் வழக்காளர் அவர்களுடைய வழக்கை விசாரித்தார். பிறகு, "ஏதாவது சாட்சி உண்டா?" என்று கேட்டார். "எங்கள் இருவரையும் தவிர அந்த இடத்தில் வேறு யாரும் சாட்சியில்லை" என்றான் நல்லபுத்தி. அந்த மரமே இதற்குச் சாட்சி சொல்லும்" என்றான் கெட்டபுத்தி. ‘உண்மைதானா? காலையில் வாருங்கள் அந்த மரத்தையே கேட்போம்" என்று சொல்லி வழக்காளர் போய்விட்டார். வீட்டுக்கு வந்த கெட்டபுத்தி தன் தந்தையை அழைத்து மரப்பொந்தில் போய் ஒளிந்து கொண்டு, மரம் சாட்சி சொல்வது போல் பேசச் சொன்னான். ‘தம்பி, கொக்கின் முட்டையைத் திருடிய நாகத்தைப் போல் நமக்குத் துன்பம் ஏற்படக் கூடும். இந்தக் கெட்ட நினைப்பை விட்டுவிடு" என்று அறிவுரை கூறினார் அவர். ஆனால், கெட்டபுத்தி அவர் பேச்சைக் கேட்கவில்லை. அவரை வலுவாக இழுத் துச் சென்று அந்த மரப் பொந்தில் ஒளிந்து. கொள்ளும்படி வற்புறுத்தினான். பொழுது விடிந்தது. ஊர் வழக்கர் தன் ஆட்க ளோடு நல்லபுத்தியையும் கெட்டபுத்தியையும் அழைத்துக் கொண்டு வந்து மரத்தைச் சாட்சி சொல்லும்படி கேட்டார். மரம் பேசியது : ‘நல்லபுத்திதான் பணத்தை எடுத்தான்!" ஏன்று அழுத்தந்திருத்தமாகக் கூறி யது. ஆ! என்ன புதுமை! மரம் சாட்சி சொல்லுகிற தே!" என்று ஊர் வழக்காளர் ஆச்சரியப்பட்டார். ‘இது சூது!" என்று தெரிந்து கொண்ட நல்ல புத்தி, மரத்தில் ஏறி அந்தப் பொந்தில் நெருப்பை மூட்டினான். நெருப்பின் சூடு தாங்காமல், கெட்டபுத்தியின் தந்தை மரப்பொந்தின் உள்ளிருந்தபடியே கெட்ட புத்தி, உன்னால் கெட்டேன்!" என்று பதைபதைத்துக் கதறினான். நெருப்பில் வெதும்பி இறந்து போனான். இதைக் கண்ட ஊர் வழக்காளர் அரசரிடம் போய் நிகழ்ந்ததைக் கூறினார். பொன் முழுவதையும் நல்லபுத்திக்குக் கொடுக் கும்படி சொல்லி, கெட்டபுத்தியை அரசர் சித்திரவதை செய்து கொல்லும்படி உத்தர விட்டார். பிறரைக் கெடுக்க நினைப்பவர்கள் தாங்களே கெட்டொழிவார்கள். |
முன்னொரு காலத்தில் நந்திபுரத்தை ஆண்டு வந்த விக்கிரம சேனனுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சிம்மசேனன் எனப் பெயரிட்டு சீரும், சிறப்புமாக வளர்த்து வந்தான். ஆனால் சிம்மசேனனோ சிறு வயது முதலே பெரியவர்களையும், தாய், தந்தையரையும் மதிக்காமல் தன் கருத்துப்படி ஆணவத்துடன் வளர்ந்து வந்தான். அவனுக்கு எட்டு வயது நிரம்பியதும் கல்வி மற்றும் அனைத்து கலைகளையும் கற்கும் பொருட்டு குரு குலத்திற்கு அனுப்பி வைத்தார் மன்னர். அங்கும் அவன் யார் பேச்சையும் கேட்பதில்லை. குருவையே மதிப்பதில்லை. அவனுக்கு எப்படி புத்தி புகட்டுவது என்ற யோசனையில் இருந்தார் குரு. அந்த குருவிடம் மிருகங்களை வசியம் செய்து, அவர் நினைத்தபடி ஆட்டுவிக்கும் சக்தி இருந்தது. அதை உபயோகித்து அவனைத் திருத்தவும் ஒரு வழி கண்டுபிடித்தார். ஒரு நாள் அனைவரும் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது இளவரசன் மட்டும் கரையில் அமர்ந்து ஆற்றுக்குள் கல் வீசி விளையாடிக் கொண்டிருந்தான். தூரத்தில் தண்ணீர் அருந்திக் கொண்டிருந்த சிறுத்தையை, தன் வசிய சக்தியால் ஈர்த்து இளவரசனை துரத்தும்படி பணித்தார் குரு. சிறுத்தை இளவரசனை துரத்த ஆரம்பித்ததும், `அய்யோ!’ என்று அலறியபடி அடர்ந்த காட்டிற்குள் ஓடத் தொடங்கினான், இளவரசன். அடர்ந்த காட்டினுள் ஓடிய இளவரசன் வெகு தூரம் ஓடிக் களைத்து, ஒரு பெரிய மரத்தில் ஏறி அதன் உச்சிக் கிளையில் அமர்ந்து கொண்டான். துரத்தி வந்த புலி அவனைக் காணாமல் அங்கேயே சுற்றி சுற்றி வந்தது. பசி வயிற்றைக் கிள்ள, பயமும், அசதியும் சேர்ந்து கொள்ள அப்படியே தூங்கி போனான். திடீரென விழித்துப் பார்த்தபொழுது சிறுத்தையை காணவில்லை. சூரியன் உச்சியிலிருந்தான். பசி, களைப்பு, பயம், கவலை இவற்றால் கால், கை நடுக்கமுற என்ன செய்வதென்று புரியாமல் விழித்தான் இளவல். சிறு வயது முதலே தன்னை நன் றாக வளர்த்த தாய், தந்தை மற்றும் உறவினர் அனைவரையும் உதாசீனப் படுத்தியதை நினைத்து மிகவும் வருந் தினான். தன்னுடன் பயிலும் அனைத்து மாணவர்களும் குருவிடம் எவ்வளவு பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்கள். நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன். மற்ற மாண வர்கள் குருவுக்கு செய்யும்பணிவிடை களையும் நினைத்துக் கொண்டான். அதில் ஒன்றைக்கூட தான் செய்தது இல்லை. அதனால் தான் இத்துன்பம் நேர்ந்தது என்று நினைத்து வருந் தினான். உடன் அங்கேயே குருவை மனதில் நினைத்து வணங்கினான். குருகுலத்தை சென்று அடைய வழி காட்டும்படி மானசீகமாக குருவிடம் வேண்டிக் கொண்டான். அடுத்த நொடி யானையின் பிளிறல் சப்தம் கேட்டது. கீழே உற்று நோக்கிய இளவரசன் யானை ஒன்று தனியே நடந்து செல்வதை கவனித்தான். யானையின் பின்னே சீரான இடைவெளி விட்டு நரி ஒன்று செல்வதையும் பார்த்தான். யானைகள் தண்ணீர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் திறன் பெற்றவை என்று கேள்விப் பட்டிருக்கிறான். யானை தண்ணீருக்காக செல்வதை அறிந்து, அதன் பின்னால் நரியும் தொடர்ந்திருக்கக்கூடும் என்று ïகித்த இளவரசன் அவைகளுக்கு பின்னால் அவனும் நடக்க ஆரம்பித்தான். வெகு நேரத்திற்கு பின் யானை ஒரு ஆற்றங்கரையை அடைந்து நீர் அருந்த தொடங்கியது. ஆற்றைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்த இளவரசன் ஆற்றின் கரையோரமாக நடந்து குருவின் குடிலை அடைந்தான். குருவின் காலடியில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டான். நாடாள வேண்டிய மன்னன் தவறான வழியில் செல்வதை தடுக்க, இச்சிறு நாடகம் நடத்த வேண்டி வந்ததை எண்ணிய குரு, அதன் பிறகு அவனுக்கு கற்பிக்க வேண்டிய அனைத்து கலைகளையும் கற்றுக் கொடுத்து ஒரு நல்ல நாளில் மன்னரிடம் அனுப்பி வைத்தார்.
|
பரமார்த்தரும் சீடர்களும் கந்தபுரம் என்ற ஊருக்குள் நுழைந்தார்கள். அப்போது அந்த ஊர் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தார்கள். அதற்குக் காரணம் நரபலி சாமியார் நாகப்பா அந்த ஊரில் உலவுகிறான் என்பதுதான்! “குருவே! நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் நமக்கே ஆபத்தாக முடிகிறதே! அது ஏன்?” என்று மட்டி கேட்டான். “நாம் எல்லோரும் போன பிறவியில் நிறைய பாவம் செய்து விட்டோம் போலிருக்கிறது!” என்றார் பரமார்த்தர். “குருவே! உடனே இதற்கு ஏதாவது பரிகாரம் செய்தே ஆக வேண்டும்” என்று சொன்னான், முட்டாள். குருவும் சீடர்களும் அன்று இரவே ரகசியமாக ஆலோசனை செய்தார்கள். “குருவே! முனிவர்களைப் போல யாகம் செய்தால் நாம் பாவம் எல்லாம் போய்விடும்” என்றான் மூடன். “அதற்கு நிறைய பணம் செலவாகும். நம்மால் முடியாது. வேண்டுமானால், நரபலி கொடுக்கலாம்” என்றார் பரமார்த்தர். “நரபலியா? ஐயையோ!” என்று சீடர்கள் அனைவரும் அலறினார்கள். “சீடர்களே! நமக்கு நல்ல காலம் பிறக்க வேண்டுமானால் நரபலி கொடுத்தே ஆக வேண்டும் வேறு வழியே இல்லை” என்று முடிவாகச் சொல்லி விட்டார், பரமார்த்தர். “அப்படியானால் யாரைப் பலி கொடுப்பது?” என்று கேட்டான் மண்டு. “வேறு யாரையாவது பிடிக்கப் போனால் மாட்டிக் கொள்வோம்! அதனால்……சீடர்களே… உங்களில் யாராவது ஒருவர்தான் பலியாக வேண்டும்! இந்த நல்ல செயலுக்கு யார் முன் வருகிறீர்கள்?” என்றார் பரமார்த்தர். அவ்வளவுதான்! “ஐயோ நான் பலியாகிவிட்டால், அப்புறம் உங்கள் சுருட்டுக்குக் கொள்ளி வைப்பது யார்?” என்று அழ ஆரம்பித்தான் முட்டாள். “ஐயையோ நான் மாட்டேன்” என்று மூடனும் மூக்கால் அழுதான். “குருவே! நாங்களும் பலியாக மாட்டோம்” என்றபடி மற்ற சீடர்களும் தூர ஓடப் பார்த்தனர். பரமார்த்தருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நெருதூரம் தாடியை உருவிக் கொண்டு யோசனை செய்தார். “சரி, சீடர்களே! நீங்கள் யாரும் பலியாக வேண்டாம்! வேறு ஒரு வழி தோன்றுகிறது. அதன்படிச் செய்வோம்” என்று சொல்லிப் படுத்து விட்டார் பரமார்த்தர். மறுநாள், சீடர்கள் அனைவரும் “எங்கள் குரு நரபலி கொடுக்கப் போகிறார்” என்று ஊர் முழுவதும் பெருமையோடு சொல்லிக் கொண்டு திரிந்தார்கள். அதனால் அந்த ஊர் அரசனுக்கும் செய்தி எட்டியது. பரமார்த்தரை, நரபலி சாமியார் நாகப்பா என்று தவறாக நினைத்து விட்டான். “நாகப்பாவையும் அவன் கூட்டத்தையும் கையும் மெய்யுமாகப் பிடித்து வாருங்கள்” என்று ஆணையிட்டான். நரபலி இடுவதற்காகக் குறிப்பிட்ட நாளும் வந்தது! பரமார்த்தரும் சீடர்களும் யாருக்கும் தெரியாமல் பதுங்கிப் பதுங்கிச் சென்று கொண்டு இருந்தார்கள். ஊர்க் கோடியில் இருந்த காளி கோயிலை அடைந்ததும் பரமார்த்தர் பரம சந்தோஷம் அடைந்தார். மண்டை ஓட்டு மாலையும், நீளம் நீளமான பற்களுமாக இருந்த பத்ரகாளி சிலையைப் பார்த்த சீடர்கள் பயந்து நடுங்கினார்கள். “ஏ, காளியம்மா! வாக்குக் கொடுத்தபடி உனக்கு நரபலி கொடுக்கப் போகிறோம்! நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும். ஜெய் காளி” என்று காளியின் கால்களில் விழுந்து வணங்கினார் பரமார்த்தர். சீடர்களும் ‘தடால்’ என்று விழுந்து கும்பிட்டார்கள். நடு இரவு ஆகிவிட்டதை அறிவிப்பதற்கு, அரண்மனையில் இருந்து மணியோசை கேட்டது. அப்போது, கோயிலைச் சுற்றிலும் மறைந்தபடி நின்று கொண்டிருந்த அரண்மனைக் காவலர்கள் சுறுசுறுப்பானார்கள். “சீடர்களே! சீக்கிரம் நாம் கொண்டு வந்த உயிரைப் பலி பீடத்தின் மீது வையுங்கள்!” என்று அவசரப்படுத்தினார், பரமார்த்தர். சீடர்களும் அவசரம் அவசரமாகத் தாங்கள் கொண்டு வந்த உயிரைப் பலி பீடத்தில் வைத்தனர். “ஓம்…ரீம்…பத்ரகாளி!…… இந்தா நரபலி!” என்று ஆவேசமாய்க் கத்தியபடி, பலி பீடத்தின் மீது கொடுவாளை வீசினார், பரமார்த்தர். உடனே அரண்மனை வீரர்கள் ஓடிவந்தது பரமார்த்தரையும் சீடர்களையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பரமார்த்தர் யாரைப் பலியிட்டார் என்று எல்லோரும் ஆவலோடு பலி பீடத்தைப் பார்த்தனர். அங்கே… ஒரு பல்லி, இரண்டு துண்டாகிக் கிடந்தது. அரண்மனை வீரர்களுக்கு ஒரே அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. “சே, நரபலி சாமியார் என்று நினைத்தோம். இவர் நரபல்லி சாமியாராக அல்லவா இருக்கிறார்” என்றபடி பரமார்த்தரையும் சீடர்களையும் அரசனிடம் அழைத்துச் சென்றார்கள். மன்னா! ஏன் எங்களைக் கைது செய்தாய்? நாங்கள் செய்த தவறு என்ன?” என்றார் பரமார்த்தர். “நரபலி கொடுப்பது எங்கள் நாட்டுச் சட்டப்படி குற்றம்” என்றான் மன்னன். “நாங்கள் என்ன, மனிதர்களையா பலி கொடுத்தோம்? கேவலம் ஒரு பல்லியைத்தானே கொன்றோம்” என்று சொன்னார் பரமார்த்தர். “அதுதான் நீங்கள் செய்த தவறு! எங்கள் நாட்டு மக்களின் குலதெய்வம் பல்லி! என் நாட்டுக் கொடியில் இருப்பதும் பல்லி சின்னம்! அந்தப் பல்லியைக் கொன்று, அவமரியாதை செய்த குற்றத்திற்காக உங்கள் அனைவரையும் சிறையில் இட ஆணையிடுகிறேன் என்று கட்டளையிட்டான், கந்தபுர மன்னன். ஐயோ! நரபலி கொடுத்தால் நல்லது நடக்கும் என்று நினைத்தோம். அதுவும் ஆபத்தில் கொண்டு வந்து விட்டு விட்டதே” என்று புலம்பியபடி குருவும் சீடர்களும் சிறைக்குச் சென்றார்கள்.
|
ஒரு ஊரில் குமரன் தன் தாய் தந்தையுடன் வசித்துவந்தான். அப்போது அவன் வீடட்டின் முன் மூன்று வயதானவர்கள் வந்து ‘ உள்ளேவரலாமா ‘ என்று கேட்டனர். தந்தை ‘வாருங்கள்’ என்றார். ‘நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது…யாராவது ஒருவர் தான் வரமுடியும்…என் பெயர் பணம்…இவர் பெயர் வெற்றி…இவர் பெயர் அன்பு..எங்கள் மூவரில் ஒருவர் தான் ஒரு வீட்டிற்குள் செல்லமுடியும்…எங்கள் மூவரில் உங்களுக்கு யார் வேண்டுமோ அவரை அழைத்துக் கொள்ளுங்கள்’ என்றார் பணம் எனப்படுபவர். குமரனின் தந்தை ‘ வெற்றியை அழைக்கலாம்..நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றியடையலாம்’ என்றார். ஆனால் குமரனோ …’அப்பா பணத்தையே உள்ளே அழைக்கலாம்…நம்மிடம் பணம் சேர்ந்துவிட்டால்…எல்லாவற்றையும்..வெற்றி ..உட்பட …அனைத்தையும் வாங்கலாம்’ என்றான். ஆனால் குமரனின் தாயோ ‘வேண்டாம்…அன்பையே அழைக்கலாம்.அன்பு தான் முக்கியம்’ என்றாள். பின் மூவரும், ”அன்பு உள்ளே வரட்டும்” என்றனர். அன்பு உள்ளே வர, அவரைத் தொடர்ந்து வெற்றியும், பணமும் கூட உள்ளே நுழைந்தனர். உடன் குமரனின் அம்மா’அன்பை மட்டும் தானே உள்ளே அழைத்தோம்’ என்றார். அன்பு சொன்னார்,’ நீங்கள் பணத்தையோ, வெற்றியையோ அழைத்திருந்தால்..மற்ற இருவரும் வெளியே நின்றிருப்போம். ஆனால் அன்பான என்னை வரச் சொன்னதால்.. நான் இருக்கும் இடத்தில் தான் பணமும், வெற்றியும் இருக்கும்..ஆகவே அவர்களும் உள்ளே வந்து விட்டனர்’ அன்பு உள்ளம் இருந்தால்..நம் வாழ்வில் வெற்றியும்,தேவையான வசதிகளும் தானாகவே வந்துவிடும். அன்பே சிவம்…அன்பே முக்கியம். இதையே வள்ளுவர்.. அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு அன்பு நெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும். இல்லையேல் ,அது வெறும் எலும்புத்தோல் போர்த்திய வெறும் உடலாகும். சுருங்கச் சொன்னால்..அன்பு மனம் கொண்டவர்களே மனிதர்கள் ஆவர்.
|
கந்தசாமி என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். வயதாகி விட்டதால் வேலைக்கும் செல்ல முடியாது போகவே, தங்களிடம் இருந்த பொருட்களை விற்று சாப்பிட வேண்டி ஏற்பட்டது. நாட்கள் செல்லச்செல்ல…அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர். இந்நிலையில் அவன் ஆண்டவனை நோக்கி …’இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய்…இது இப்படியே நீடித்தால்….வறுமை தாங்காது…நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை’ என வேண்டினான். அவன் மீது இரக்கம் கொண்ட இறைவன் அவன் முன் தோன்றி அவனின் குறைகளைத்தீர்க்க….அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார். அந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இடும் என்றும்…அதை விற்று அன்றடம் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி வாழ்நாளைக் சந்தோஷமாக கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார். வாத்து தினம் ஒவ்வொரு பொன் முட்டையிட …அவர்கள் அதனை விற்று வாழ்கையை இனிதாகக் கழிந்தனர். ஒரு நாள் கந்தசாமியின் மனைவி தன் கணவனிடம் சென்று ‘தினம் தினம் இந்த வாத்து ஒவ்வொரு பொன் முட்டையே இடுகின்றது, இப்படியே இருந்தால் நாம் எப்படிப் பெரிய பணக்காரர் ஆவது என்று சொல்லி, இந்த வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் நாம் எடுத்தால் அதை விற்று பெரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஒரு உபாயம் சொன்னாள். இதைக் கேட்ட கந்தசாமிக்கும் அது சரியெனப் தோன்றியது. உடனே, கந்தசாமி அந்த வாத்தைப் பிடித்து வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் எடுக்க வாத்தை கொன்று அதன் வயிற்றைக் கிழித்தான். “ஆ” என்ன ஆச்சரியம் அந்த வாத்தின் வயிற்றில் ஒருமுட்டையுமே இருக்கவில்லை. அதன் வயிறில் மற்றைய வாத்துகள்போல் வெறும் குடலே இருந்தது கண்டு ஏங்கினர். தினம் ஒரு பொன் முட்டையிட்ட வாத்து இறந்து விட்டதால், வறுமை அவர்களை மீண்டும் சூழ்ந்துகொண்டது. தங்கள் பேராசையே பெரும் தரித்திரத்தை தந்தது என மனம் வருந்தி ஏழ்மையாகவே வாழ்ந்து உண்ண உணவின்றி இறந்தனர். ஆசை அளவுக்கு மிஞ்சினா; அது பேராசை. பேராசை பெரு நஷ்டத்தையும் கஷ்டத்தையும் தரும்.
|
ஒரு தடவை முல்லா சில பொருட்கள் வாங்குவதற்காக சந்தைக்குச் சென்றார். அங்கே ஒரிடத்தில் பத்துப் பதினைந்து பேர் கும்பலாகக் கூடி எதைப்பற்றியோ விவாதித்துக் கொண்டிருந்தனர்." இங்கே என்ன நடக்கிறது?" என்று முல்லா விசாரித்தார்." நல்ல சமயத்தில் வந்தீர் முல்லா அவர்களே.. நாங்கள் ஒரு விஷயத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம், ஆனால் எங்களில் யாருக்குமே எங்கள் ஆராய்ச்சி பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. எங்கள் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறீரா?" என்று கூட்டத்திலிருந்த ஒருவர் கேட்டார்." உங்கள் சந்தேகம் என்ன?" என்று முல்லா கேட்டார்." உண்மை .. .. .. உண்மை என்ற எல்லோரும் பிரமாதமாகப் பேசுகிறார்களே, அந்த உண்மை என்பது என்ன?" என்று கூட்டத்திலிருந்த ஒருவர் வினா எழுப்பினார். முல்லா பெரிதாகச் சிரித்தார்," இந்தச் சின்ன விஷயம் உங்களுக்கு விளங்கவில்லையா? உலகத்தில் எந்த ஒரு மனிதனும் சிந்திக்கவோ - பேசவோ - செயற்படவோ விரும்பாத ஒரு வரட்டுத் தத்துவந்தான் உண்மை" என்று கூறிவிட்டு முல்லா அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். |
காலையில் ஆடு செத்துப் போச்சு. ஒரு வேளை ராத்திரி செத்தாலும், பூச்சுப்பட்டைக் கடிச்சு இருக்கும்னு நினைக்கலாம். அதுவுமில்லாமல், இப்பத்தான் செத்திருக்கு. செந்தில் ''ஷிப்டு'' முடிஞ்சு வரும்போது நல்லாத்தான் நின்றது. பக்கத்தில் நின்று பார்த்தார். ஆடு ''மே'' ன்னு கூப்பிட்டது. மூத்திரம் பேஞ்சது. புளுக்கை போட்டது. ரெண்டு குட்டிகளுக்கு பால் கொடுத்தது. எப்படி செத்திருக்கும்? ரெண்டு கால்களும் விரைச்சு, வயிறு வீங்கி, வாய் பிழந்து செத்துக் கிடக்கு. ஆட்டைச் சுத்திப் பார்த்தார். கொஞ்ச நேரம் நின்னு யோசித்தார். பக்கத்துல பழைய பொங்கச் சோறு, அங்ஙன இங்ஙன சிதறிக் கிடந்தது. ஆஹா! புளிச்ச சக்கரைப் பொங்கலு. அதை தின்னுருக்கு. அதுதான் செத்திருக்கு. எந்த அறிவு கெட்ட ஜென்மம் இதை வச்சது? செந்திலுக்கு கோபம் வந்தது. ஆட்டைக் கள்ள விலைக்கு விற்றாலும், எவனும் கண்ண மூடிக்கிட்டு 1000 ரூபாய் கொடுப்பான். இப்படி அனாமத்தாப் போயிடுச்சேன்னு கவலையாக இருந்தது. ஆறு மாசத்துக்கு முன்னே, குட்டியாகக் கொண்டு வந்து மாமா கொடுத்தார். மாமாவுக்கு இப்ப சுகமில்லை அப்பாவைப் பார்க்க, ராசாத்தி ஊருக்குப் போயிருந்தாள். இப்ப வந்திடுவாள். தண்ணீர் வேற வரும். இன்னைக்கி புடிக்கலைன்னா, பிறகு 3 நாள் கழிச்சுத்தான் பைப்ல தண்ணியைப் பார்க்கலாம். அதுக்காகவே மனைவி வந்தாகணும். அவள் வந்து என்ன சொல்லப் போறாளோ? அந்த கவலை வேறு செந்திலை வாட்டியது. அவளும் முதல்ல அவுங்க அப்பா வந்து ஆட்டைக் கொடுக்கும்போது, வேண்டாம்னு தான் சொன்னாள். இருக்கிற வேலை காணாதுன்னு இந்த ஆட்டையும் கெட்டி எப்படி பாடு பார்ப்பேன்னு சொல்லும்போது அப்பா ''சும்மா, முக்குலக் கட்டிப் போடம்மா. துன்னுட்டு மிச்சம் மீதியிருக்கிறத அதுக்கு போடு. நாளப் பின்ன அது வளர்ந்தால், ஒரு செலவுக்கு ஆகும்'' என்றார். பிறகு அவருடைய மகளும் ஆட்டோடு பழகிவிட்டாள். அது ஒரு பாரமாகவே தெரியவில்லை. இப்போதுதான் ஆடு ரெட்டை குட்டி போட்டிருக்கு. அந்த சந்தோஷம் கை கூடி வரல. அதுக்குள்ள ஆடு செத்துப் போச்சு. செந்தில் மகளை அதட்டியபடியே கேட்டார். ''இந்த பொங்கச் சோற நீ தானே வச்ச?'' சுப்புக்கு நடுக்கம் எடுத்தது. குளித்து சுத்தமாக இருந்த இளம் முகம் வெட வெடத்தது. குரல் தள தளத்தது. ''ஆமப்பா நான்தான் வச்சேன்'' என்றாள். உடனே தடுமாறினார். மகளை ரொம்பவும் கண்டிக்கவா? ன்னு குழம்பினார். இருந்தாலும் ஆட்டைப் பார்த்த உடனே வயித்தெரிச்சல் தாங்க முடியல. அதை வச்சுத்தான் அவரும் கோபப்பட்டார் ''கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு பிளஸ்டூ படிக்கிறபுள்ள எவ்வளவு சுதாரிப்பா இருக்கணும். பொங்கச் சோத்தை ஆட்டுக்கு வைத்தோமே. அதுவும் சர்க்கரைப் பொங்கல். குட்டிபோட்ட ஆட்டுக்கு அது செமிக்குமா? கொஞ்சமாவது யோசிச்சிப்பார்த்தியா. இப்ப பாரு ஆடு செத்துக் கிடக்கு!'' என்றார். அப்பா அதட்டும்போது, கண் இமைகள் துடித்தன. அந்த துக்கத்தில் நீர் கட்டி நின்றது. இருந்தாலும் தன் மீது தவறிருப்பதை உணர்ந்தாள். அவள் ஆடாமல் அசையாமல் நின்னுக்கிட்டிருக்கும்போதே ஸ்கூலுக்கு போக நேரமாகுதே. அப்பாகிட்ட என்ன சொல்ல? எப்படி பேசன்னு ஒரே குழப்பம். சுப்பு குனிந்தே நின்றாள். செந்தில் மகளைப் பார்த்துப் பேசினார். அப்போது '' வெளிகேட்'' திறக்கிற சத்தம் கேட்டது. ''இப்பத்தான் வாரீங்களா அக்கா, அப்பாவுக்கு எப்படி இருக்கு?'' பக்கத்து வீட்டு லலிதா கேட்கிறாள். பிறகு அம்மாவும், அவுங்க அப்பா உடல் நிலையைப் பத்தி சொல்லிட்டு வாராள். அவளுக்கு கணவனின் அதட்டல். அதுல இருக்கிற கோபம், பதற்றம், பரபரப்பு எல்லாம் கேட்டு, கைப்பையை திண்டில் வச்சிட்டு பின்னால் தான் வந்தாள். அம்மாவைப் பார்த்ததும் சுப்புக்கு அழுகையே வந்துவிட்டது. ''செஞ்சதையும் செஞ்சுட்டு உங்கம்மையை கண்டதும் நல்லா அழு புள்ளைக்கு பொறுப்பு வேணும். இப்படியா இருக்கிறது'' என்றார். அப்பத்தான் ராசாத்தி ஆட்டைப் பார்த்தால் அவளுக்கு திக்கென்றிருந்தது. அவள் விசயத்தைக் கேட்டறிந்தாள். அந்த சூரிய வெளிச்சத்தில் சுப்பு கன்னங்களில் வழிகிற நீர் பளபளத்தது. ராசாத்தி அழுகிற பிள்ளையை அணைத்துக் கொண்டாள். ''சுப்பு என்ன, தெரிஞ்சா செஞ்சி இருப்பா. ஏதோ நடந்து போச்ச. அவளை அதட்டிக் கிட்டிருந்தா, அவள் பள்ளிக் கூடம் போக வேண்டாமா? நீ போம்மா. ரெண்டு பார்சல் வாங்கிட்டு வந்திருக்கேன். ஒன்னத் தின்னுட்டு ஒன்னக் கொண்டு போ'' என்றாள். ஒரு நொடியில் குழப்பம் ஓய்ந்தது. ''என்னப் பார்த்துக்கிட்டிருக்கீங்க. போனது திரும்பி வாராது. நட்டம் நட்டந்தான். போய் கறிக்கடைக்காரை கூட்டிக்கிட்டு வாங்க. அவர் கொடுக்கிறது வாங்கிட்டு ஆட்டைத் தூக்கிட்டுப் போகச் சொல்லுங்க.'' செந்திலுக்கு இதுவும் சரி என்று பட்டது. உடனே சைக்கிளை எடுத்துக்கிட்டுப் போனார். கையோடு கசாப்புக் கடைக்காரரைக் கூட்டிக் கொண்டு வந்தார். ரெண்டு பேருக்கும் பேரம் நடந்தது. கசாப்புக் கடைகாரனும் அங்கேயே கிரயத்தை முடித்துக் கொண்டான். பணத்தை சாயந்திரம் தருவதாகச் சொல்லி ஆட்டை தூக்கிக் கொண்டு போனான். ராசாத்தி ''அந்த ஆடு கொடுத்த பணம் வந்தா, இந்த மாசம் வீட்டுத் தவணை அடக்காம இருக்கு குடுத்திருங்க'' என்றாள். அதைக் கேட்டதும் செந்திலுக்கு கோபம் வந்தது. ''ஆமா. செத்த ஆட்டுக்கு அள்ளித்தருவாங்க. நான் அப்படியே கொண்டு வந்து கொட்டணும்'' என்றான். ''ஏங்க கோவப்படுறீங்க. கொறைஞ்சத போட்டுக் கெட்டுவோம்'' என்று புருஷனைச் சமாதானப்படுத்தினாள். அப்போது தான் செந்திலுக்கு பைப்பில் தண்ணீர் பிடிக்காதது ஞாபகத்திற்கு வந்தது. மனைவியிடம் தண்ணீர் பிடிக்கச் சொல்லிவிட்டு, வீட்டுக்குப் பின்புறம் உள்ள கொடுக்காப்புளி மரத்தை பார்த்தார். போன வருஷம்தான் மரம் காய்ப்புக்கு வந்தது. காய்ப்புன்னா அப்படிக் காய்ப்பு. கொத்துக் கொத்தாய் பூவும் பிஞ்சுமாய் காயும் பழமுமாய் கொடுக்காப்புளி மரக்கிளைகள் பூராவும் பொதுச் சுவருக்கு இந்தக் பக்கம்தான் விரிந்து கிடந்தன. சரவணனும் சுப்புவும் தொரட்டிக் கம்பை வைத்து பழமாகப் பறித்துத் தின்றார்கள். செந்திலும் ஆளில்லாத நேரம் பார்த்து ரெண்டை பறிச்சி வாயில் போட்டுக் கொள்வார். இப்போது மரம் காய்க்கத் தொடங்கி இருக்கு. அதுக்குள்ள சுவர் பக்கம் வருகிற கொப்பை பூராவும் வெட்டி எடுத்தாச்சு. ஒரு காய் கூட இனிமேல் பறிக்க முடியாது. செந்திலுக்கு அதைப் பார்த்ததும் கோபமாக இருந்தது. மரத்தை, தூரோடு வெட்டிச் சாய்த்தால் கூட அவனுக்கு இப்படிக் கோபம் வந்திருக்காது. வருத்தப்பட்டிருக்க மாட்டான். மனைவியிடம் சொன்னான். அதைக் கேட்டு ராசாத்திக்கு கோபம் வரவில்லை. புருஷனைத்தான் அமைதிப்படுத்தினாள். ''அவுங்க மரம். அவுங்க வெட்றாங்க. நம்ம என்ன சொல்ல முடியும்? வேணும்னா நம்மளும் அதே மாதிரி ஒரு மரம் வளர்ப்போம்'' என்றாள். அவளுக்கும் பின் வீட்டுக்காரர்களைப் பற்றி தெரியும். பக்கத்து வீட்டு வனஜா அக்கா புருஷன் நல்ல குடிகாரன். ஒரு நாள் மில்லுக்குப் போனால். ஒன்பது நாட்கள் போக மாட்டான். அவனை ஒன்றும் சொல்லமாட்டார்கள். ஆனால் செந்தில் ஒரு நாள் லீவு எடுத்தால் கூட அபராதம். ஒவ்வொருவருக்கும் மில்காரன் நிலம் கொடுக்கும் போது செந்திலுக்கு நிலம் கிடைக்கவில்லை. ராசாத்தி தான் நச்சரித்தாள். ''திரும்ப கேட்டுப்பாருங்க நம்ம எத்தனை நாளைக்கு தான் வாடகை வீட்டுல இருந்து காலம் தள்ள முடியும்'' என்றாள். செந்தில் அலைந்து திரிந்து, சங்கத்துக்காரன்களுக்கு லஞ்சம் கொடுத்து, பிறகு அவனுக மில்காரன் கிட்ட சொல்லித்தான் அவனுக்கு நிலம் கிடைத்தது. ஆனால் வனஜா புருஷனுக்கோ எந்தச் சிரமமுமில்லாம நிலம் கிடைத்தது. மில் அதிகாரி, வனஜா புருஷனைக் கூப்பிட்டு, அவன் ''வேண்டாம் வேண்டாம்'' ன்னாலும் ''வச்சுக்கா வச்சுக்க'' ங்கிற மாதிரி நிலத்தைக் கொடுத்தான். அது தான் ராசாத்திக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு சமயம் மனைவியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது செந்தில் சொன்னார். நாயக்கமாரு மில்லுல, நாயக்கமாருக்குதான் முன் உரிமை என்னமோ எங்கம்மா ஒரு நாயக்கர் விட்டுல வேலைக்கு இருந்தாங்க. அவுங்க கெஞ்சிக் கூத்தாடி என்னையும் மில்லுல சேர்த்தாங்க. இப்ப நிலம் கொடுத்திருக்காங்க.'' வனஜா புருஷனும் எங்கப்பா ராமசாமி நாயக்கரு வந்தாருன்னா, உங்க ஊரு பள்ளப்பய, பறைப்பய எல்லாம் குனிஞ்சு நின்னு கும்பிடணும். என்னமோ நான் எங்க நாயக்கர் மில்லாக இருக்கப்போய் வேலை பார்த்துக் கிட்டிருக்கேன் என்பான். ''ராசாத்தி அக்கா தண்ணி வருது''- எதிர்வீட்டு லலிதா குரல் கொடுத்தாள். அவள் புதுசா கல்யாணம் முடிஞ்சு வாடகை வீட்டுக்கு வந்திருக்கிறாள். அவளுக்கும், ''நாங்க தான் உசந்த சாதி'' ன்னு நினைப்பு வந்து பேசாமப் போனால் போறான்னு தான் ராசாத்தியும், அவளுடன் பழகிக் கொண்டிருந்தால். அந்த பழக்கமான குரல் பின் வாசல் வரை கேட்டது. அந்த அவசரம் பரபரப்பானது. இருந்தாலும் ராசாத்தி பதற்றப்படாமல் புருஷனைப் பார்த்து. ''ரெண்டு கொடத்த தூக்கிட்டுப் போங்க. ஜெயலட்சுமி அக்கா பிடிச்ச பின்னாடி நம்ம பிடிக்கணும். அந்த அக்கா ஒரு மாதிரி. தள்ளியே நின்னுக்கங்க. யாரும் எது சொன்னாலும் கோவப்படாதீங்க. இட்லி அவுச்சாச்சு சட்னி தான் வைக்கணும். வச்சுட்டுட்டு வந்துட்றேன் என்றாள். செந்தில் எதுவும் பேசாமல் பிளாஸ்டிக் குடங்களை தூக்கிக் கொண்டு போனார். பைப்பை சுற்றிலும் பொம்பளையாட்கள் நின்றார்கள். ஜெயலட்சுமி அக்காள் ரெண்டு குடம் பிடிக்கணும். அதன் பிறகு தான் நமக்கு. செந்தில் பைப்பை விட்டு தள்ளியே நின்றார். அவருக்கு இப்ப ஒரு வேலையும் இல்லை. சாப்பிட்டு தூங்கி எந்திரிச்சால் போதும். ராத்திரி பத்தேகாலுக்கு சைக்கிள் எடுத்தாலும் போதும். பதினொரு மணி ஷிப்டுக்கு போகச் சரியாக இருக்கும். அக்காவின் ரெண்டாவது குடம் நிறையும் போது, பைப்படிக்கு போய் குடத்தை வைத்தார். ரெண்டு குடம் பிடித்து ஒன்னை மட்டும் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார். இவ்வளவு தண்ணீர் கஷ்டத்துக்கு இடையில். அப்பத்தான் பிடிச்சு வச்ச தண்ணியை ஒரு தெரு நாய் வாய் வைத்து விட்டது. அங்கே தான் லலிதா நின்னாள். ஆனால் அவள் கவனிக்கலை. நாய் குடிச்சுருச்சுனு அவளுக்கு கோபம். கிட்டத்துல கெடந்த கருங்கல்லை எடுத்து விட்டெறிந்தாள். அது நாய் காலுலேயே போய் விழுந்தது. நாய் வலி தாங்க முடியாமல் கத்திக்கிட்டு ஓடிப்போனது. நாய் அலறும் சத்தம் கேட்டு ராசாத்தி வெளியே வந்தாள். நாய் ஒரு சந்துக்குள் நுழைவதைப் பார்த்தாள் லலிதா, அவளிடம் சோகமாய் நடந்ததைச் சொன்னாள். பிறகு ஒரு குடம் தண்ணீர் வீணாகிப் போச்சேன்னு கவலைப்பட்டாள். ராசாத்தி கோபமேபடவில்லை. அவள் பதற்றமில்லாமல் நாய்க்காக பரிந்து பேசினாள். ''அதுக்காகவா நாய அடிச்ச. அது என்ன செய்யும். பாவம் வாயில்லாத ஜீவன்'' என்றாள். ''என்ன இருந்தாலும் தண்ணிக்குப் படுற பாடு...'' என்றாள் லலிதா. ''அதுக்கென்ன செடிகளெல்லாம் தண்ணியில்லாம காயுது. அதுகளுக்கு ஊத்துனா சரியா போகும்?'' என்றாள். குடத்தை தூக்கி வந்து செடிகளுக்கு ஊற்றினாள். முதல் வரிசை முடிந்து அடுத்த வரிசையும் வந்தது. தண்ணீர்க் குடத்தை தூக்கி இடுப்புல வச்ச லலிதா, ''இன்னைக்கு தண்ணீர் கொஞ்சம் பாஸ்டா வருது'' என்றாள். பின் அவள் போய் விட்டாள். பைப்படியில் கூட்டமில்லை. எல்லோருக்குமே காலைப் பொழுதில் அடுப்படிகளில் வேலைகள் இருந்தன. வரிசை வரும்போது வந்து தண்ணீர் பிடித்துக் கொண்டு போனார்கள். ஜெயலட்சுமி, ராசாத்தியும் மட்டும் பைப்பில் நின்றார்கள். ஜெயலட்சுமி முதல்குடத்தைப் பிடித்துவிட்டு, அடுத்த குடத்தை வைக்கிறாள். அடுத்து ராசாத்தி வைக்கணும். அவள் குடம் நிறைவதைக் கண்டு, ''அக்கா உங்க குடம் நிறையுது'' என்றாள். ஜெயலெட்சுமி அக்காள் முணுமுணுத்தாள். அந்த குரல் உள் வாங்கி வெளியில் வந்தது. அதுவும் ராசாத்தி கிட்டத்தில் நின்னதினால் கேட்டது. அவ்வளவு சின்னக்குரல். ஆனாலும் ராசாத்திக்கு கொமட்டுல குத்தினது மாதிரி வலித்தது. மனசைப் பிழிந்து ரணமாக்கியது. அப்படி ஜெயலட்சுமி அக்காள் என்னதான் கேட்டு விட்டாள்? நாயே, பேயே, பிசாசேன்னாலும் கூட மனசு ஆறும். சனியன் போகுதுன்னு விட்டிடலாம். ஒன்னுமில்லாத விசயம். ஒரு காத்துட்டுக்கு பெறாது. அப்படியும் ராசாத்தி என்ன சொல்லிவிட்டாள்? ''அக்கா உங்க குடம் நிறையுது''ன்ன சொன்னது என்ன தப்பா? அதுக்கு ஜெயலெட்சுமி அக்காள், ''என்ன. என்னை அக்கா நொக்காங்கிற. மருவாதையாக அம்மான்னுச் சொல்லு'' என்றாள். ''ஆமா....ஆமா... நீ ரொம்பவும் கிழவியாயிட்ட உன்னை அம்மான்னுக் கூப்புடுறதுக்கு. பார்த்தா என்னைய விட ரெண்டு வயசுக் குறையாகத்தான் இருப்ப. உன்னை அம்மான்னு கூப்பிடணுமாக்கும்? கூப்பிடுறேன். எங்கப்பா சாவக் கெடக்காரு நீ அவரக் கெட்டிக்க. நான் உன்னை அம்மான்னு கூப்பிடுறேன்'' ராசாத்தியின் குரல் கோபத்தில பலமாக ஒலித்தது.
|
ஓரு தடவை முல்லா தெருவழியே நடந்து சென்று கொண்டிருந்தார். ஒரு வீட்டின் கூரையில் நின்று கொண்டு வீட்டைப் பழுதுபார்த்துக் கொண்டிருந்தன்
ஒருவன்
கால் தவறிக் கீழே விழுந்தான். அந்த நேரமாகப் பார்த்து அங்கே நடந்து சென்று கொண்டிருந்த முல்லாவின் மீது அந்த
மனிதன் வந்து விழுந்தான். விழுந்தவனுக்கு எந்தவித அடியோ காயமோ ஏற்படவில்லை. ஆனால் முல்லா பயங்கரமான
அடிபட்டுப் படுகாயமடைந்தார். முல்லாவை அருகிலிருந்த மருத்தவமனைக்கு சிலர் எடுத்துச் சென்று சிகிக்சைக்கு ஏற்பாடு
செய்தார்கள். முல்லாவுக்கு பலமாக அடிபட்டு மருத்துவமனையில் கிடக்கிறார் என்ற செய்தியறிந்து
நண்பர்களும் பொதுமக்களும் திரளாகச் சென்று முல்லாவைச் சந்தித்து ஆறுதல் கூறினர். " என்ன நடந்தது?" என்று கூட்டத்திலிருந்த ஒருவர் கவலையோடு கேட்டார். " எல்லாம் உலக நியதிப்படிதான் நடந்தது. உலகத்தில் யாரோ ஒருவன் பாவமோ குற்றமோ செய்ய
அவன் தப்பித்து கொள்கிறான். ஆனால் நிரபாரதி பாவத்தின் பலனை அல்லது குற்றத்திற்கான
தண்டணையை அனுபவிக்கிறான். அது மாதிரி தான் இதுவும் நான் கூரை மேலிருந்து விழவில்லை
ஆனால் விழுந்தவனுக்குக் காயம் இல்லை விழாத எனக்கு காயம் ஏற்பட்டது" என்று
சிரித்துக் கொண்டே முல்லா பதிலளித்தார். |
ஒரு கிராமத்தில் வயதான போர் வீரரும் ஸென் ஆசிரியருமான ஒருவர் வசித்து வந்தார். முதுமையை அடைந்து இருந்தாலும் சண்டையில் யாரையும் எளிதில் வெல்லும் ஆற்றலைப் பெற்றிருந்தார். அவருடைய பொருமையும் பெருமையும் சுத்து வட்டாரங்களில் இருந்த கிராமங்களிலும், நகரங்களிலும் பரவி இருந்தது. பல மாணவர்கள் அவரிடம் சேர்ந்து போர்ப் பயிற்சிகளைக் கற்று வந்தனர். ஒரு நாள் வாலிப வயதுடைய போர் வீரன் ஒருவன் அந்தக் கிராமத்திற்கு வந்தான். அவன் முதிய வயதினரான ஆசிரியரை எப்படியும் வலுச்சண்டைக்கு அழைத்து அவரை முதன்முதலாக வென்றவன் என்ற பட்டத்தினைப் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அந்த ஊருக்கு வந்திருந்தான். அவனுக்கு எதிரியிடம் இருக்கும் குறைபாட்டினை எளிதில் அறிந்து கொள்ளும் திறமையும், இடியைப் போன்ற வேகத்துடன் மின்னெலென கண் இமைக்கும் நேரத்தில் பாய்ந்து தாக்கும் ஆற்றலையும் பெற்றிருந்தான். கருணையே இல்லாத அவன் எதிரியினை வெகு நேரம் உற்று நோக்குவான், எதிரி முதல் அடியை எடுத்து வைக்கும் வரையில் அவர்களை கூர்ந்து நோக்குவான். எதிரி முதல் அடியை எடுத்து வைத்ததும் எதிரியினுடைய சண்டைத் திரனில் உள்ள குறைபாட்டினை அறிந்து உடனடியாக தன்னுடைய ஆற்றைலை எல்லாம் ஒருமுகப் படுத்தி எதிரியைத் தாக்கிக் கொல்லும் ஆற்றலைப் பெற்றிருந்தான். இதுவரை இந்த வாலிபனிடம் அவனுடைய முதல் இடியென தாக்கும் அடியிலிருந்து யாரும் உயிர் தப்பிப் பிழைத்தது இல்லை. தன்னுடைய மாணவர்கள் பலரும் இந்த கெட்ட நோக்குடைய வாலிப போர் வீரனைப் பற்றி சொல்லித் தடுத்த போதும், முதிய ஸென் ஆசிரியர் மிகவும் மகிழ்ச்சியுடன் இளைஞன் விட்ட சவலான சண்டைக்கு ஒத்துக் கொண்டார். இருவரும் போர் செய்யும் இடத்திற்கு சென்றனர். ஊர் மக்களும் மாணவர்களும் சண்டையினைப் பார்ப்பதற்காக சுற்றி நின்று கொண்டிருந்தனர். சண்டை ஆரம்பித்த உடனேயே வாலிப போர் வீரன் ஆசிரியரை ஜப்பானிய மொழியில் இருந்த இழிவான வார்த்தைகளை எல்லாம் உபயோகப் படுத்தி திட்ட ஆரம்பித்தான். கீழே இருந்த குப்பைக் குளங்களை அள்ளி ஆசிரியர் மேல் வீசினான். அவருடைய முகத்தில் படுமாறு காரி உமிழ்ந்தான். ஒரு மனிதனை எதை எதையெல்லாம் செய்தால் அவமானப் படுத்த முடியுமோ அத்தனை விதமான செயல்களையும் செய்தான். வார்த்தைகளை உபயோகப் படுத்தி கோபமுட்டும் படி பேசி சாபமிட்டான். இப்படியாக ஒரு மணி நேரத்திற்கும் மேல் சென்றிருக்கும். ஆனால் ஸென் ஆசிரியர் எந்த விதமான உணர்ச்சியையும் காட்டாமல் அமைதியாக உறுதியுடன் நின்றிருந்தார். கடைசியில் வார்த்தைகள் கிடைக்காமல் இளைஞன் சோர்வடைந்து, தன்னுடைய திட்டம் பலிக்காமை கண்டு, முதியவரை வெல்வது கடினம் என்று நினைத்து அவமானத்துடன் அந்த இடத்தினை விட்டு சென்று விட்டான். முதிய ஆசிரியர் இளைஞனின் எல்லா விதமான அவமானமான செயலுக்கும் கோபமே படாமலும் பதிலே தராமலும் சண்டையிடாமலும் அமைதியாக நின்றிருந்ததைப் பார்த்த மாணவர்கள், ஆசிரியரை சூழ்ந்து கொண்டு கும்பலாக ஒரே நேரத்தில் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். "எப்படி நீங்கள் இப்படிப் பட்ட அவமானமான வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு அமைதியாக நிற்க முடிந்தது? எதனால் அந்த கேடுகெட்ட இளைஞன் சண்டையிடாமலேயே இங்கிருந்து ஓடிவிட்டான்?" "யாரோ ஒரு விருந்தினர் உன்னைப் பார்க்க வருகிறார், வருகிறவர் உனக்கு ஒரு பொருளை அன்பளிப்பாகத் தருகிறார் என்று வைத்துக் கொள்வோம், நீ அதனை பெற்றுக் கொள்ளவில்லை எனில் அந்த அன்பளிப்பு யாரைச் சேரும்?" என்று கேட்டார் ஸென் ஆசிரியர். அனைவரும் ஒரே குரலில், "வந்த விருந்தினரையேச் சேரும்" என்று கூறினர்.
|
பாலம் நெருங்க நெருங்க இன்னொரு உலகத்தின் நுழைவது மாதிரி இருந்தது. இரண்டு ஓரத்திலும் நின்று பாலத்தின் கீழ் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வண்டியின் சக்கரம் நகர நகர, ஆறு புரண்டு கொண்டிருந்தது தெரிந்தது. வழக்கமாக ஆற்றுக்கு நடுவில் உறை இறக்கி, யாராவது இரண்டு பேர் வெளியில் மொண்டு குளித்துக்கொண்டு இருப்பார்கள். ஒரு ரிப்பன் போல தண்ணீர் நெளிந்து கொண்டு கிடக்கும். தலை சிதைந்த பாம்புபோல அந்த இடத்திலேயே ஈரம் கிடந்து தத்தளிப்பது இவ்வளவு அகலமும் நீளமுமான பாலத்தில் இருந்து பார்க்க கஷ்டமாக இருக்கும். இன்னொரு பக்கம் பூராவும் சலவைத் துறை. ஆற்றின் நடுப்படுகையிலேயே துணி உலர்ந்து கொண்டிருக்கும். காற்றின் விசிறலில் துணிகளின் நீள அகலங்களில் அலை எழும்பிப் படபடக்கும் போது மடியிலிருந்து தடவி எடுத்துக் கொண்டது போல இருக்கும். யாராவது இதுதான் பாடல்பெற்ற அந்த ஆறு என்று சொன்னால் நம்ப முடியாது. ஆனால் இன்று நம்பும்படியாக இருக்கிறது. அந்தப் பழைய பெயரைப் புதுப்பித்துக் கொண்டதுபோல கரையற்றுச் சீறிக்கொண்டிருந்தது. தன்னுடைய பெயரைத் தானே சொல்லிக் கொண்டு, நான்தான் நான்தான் என்று நிரூபிப்பதுபோல, புத்தம்புதிதாக நுரை தெறித்துக் கொண்டிருந்தது. வெள்ளம் அப்படி உரக்கக் கத்தக் கத்த, கத்தலின் எதிரொலி மீண்டும் வெள்ளத்தில் கனத்து வந்து விழுந்து, விழுந்த இடத்திலிருந்து நீர் சுழன்று சுழன்று நாலாபுறமும் தெறித்தது. செம்மண்ணும் செங்காவியுமாக நிறத்தைக் கரைத்துக்கொண்டு அப்படியே வானத்தோடு போய் அப்பிக் கொள்வதுபோல தண்ணீர் முட்டிக்கொண்டு இருந்தது. கருத்த மேகங்கள் வெள்ளத்தில் இறங்கிக் கொண்டிருந்ததா அல்லது தண்ணீர் சுருண்டு மேலே ஏறிக் கொண்டிருந்ததா தெரியவில்லை. "அம்மாவைக் கொண்டுவந்து காட்டுங்க "ப்பா" - தினகரி பின்னால் இருந்து கொண்டே சொன்னாள். "காலேஜூக்கு லீவ் போட்டிடுறியா" - நிஜமாகவே கேட்டேன். "பரீட்சை இல்லாவிட்டால் இங்கேயே நின்றுவிடலாம்" தினகரி சொல்லும்போது எனக்கும் அப்படித்தான் இருந்தது. இது போன்ற நேரத்தில் அலுவலகம் போகக் கூடாது. கல்லூரி போகக்கூடாது. சமைக்கக்கூடாது துவைக்கக் கூடாது. வெள்ளம் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். வெள்ளம் மட்டும் தானா. மழை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். மழையும் பெய்யாமல் வெயிலும் அடிக்காமல் இருக்கிற நாட்களில் தட்டான்கள் பறப்பதை பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும். கடற்கரையில் அலை நனைத்துக் கொண்டு நிற்கவேண்டும். தம்பி கையை தினகரி பிடித்துக்கொள்ள தினகரி விரல்கள் அம்மா கையை கவ்வி இருக்க கவ்வின கையில் என்கை புதைத்துக்கொண்டு, மலையின் சரிவுகளில், சருகுகுளை மிதித்துக் கொண்டு நடந்து கொண்டே இருக்கவேண்டும். கல்தூண்கள் நிரம்பிய கோவில் பிரகாரங்களில் உட்கார்ந்திருக்க வேண்டும். நிலாச்சாப்பாடு சாப்பிட என்று மொட்டை மாடிக்குப் போய், அப்புறம் நிலாவைப் பார்க்காமல் உட்கார்ந்திருக்க வேண்டும். தம்ளர்கள், தண்ணீர்ச் செம்பு, சாப்பிட்ட தட்டுகள் போல வேறு சிலசில பாத்திரங்களாக மாறி அவரவர் நினைவில் வேர்விட்டு இருட்டில் முளைக்க வேண்டும். இப்படி நல்லதும் கெட்டதுமாய் எவ்வளவோ தோன்றுகிறது. ஆனால் அது எல்லாம் நடக்கக்கூடியதா என்ன. அலுவலகக் கதவும் பள்ளிக்கூடத் கதவும், சமையல் கட்டுக் கதவும் அகலமாகத் திறந்து கொண்டிருக்கையில் இதையெல்லாம் அவ்வப்போது இப்படி நினைத்துக் கொள்ள வேண்டியது தான். "என்னைக் கொண்டுபோய்க் காலேஜில் விட்டுட்டு அம்மாவைக் கூட்டிக்கொண்டு வந்து காண்பியுங்க அப்பா" தினகரி வெள்ளத்தைப் பார்த்துக் கொண்டேதான் சொல்லியிருக்கவேண்டும். எல்லோரும் வெள்ளத்தை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். பக்கத்தில் நிற்கிறவரை யாரும் பார்க்கவில்லை. யாருடனும் பேசவில்லை. தனித்தனியாக வெள்ளம் ஒவ்வொருவரையும் தன்னோடு கூட்டிக்கொண்டு போய்விடும் போல. சில்லென்ற குளிருக்குச் சேலையைப் போர்த்திக் பல்லில் கடித்துக் கொண்டிருந்த முகத்தில் வெள்ளம் தளும்பிக் கொண்டிருந்தது. புத்தகப் பையுடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த பையனை சைக்கிள் காரியரில் வைத்துக் கொண்டு காலை ஊன்றிப் பார்த்துக் கொண்டிருந்தவர் முகத்தில் தளதளவென்று ஈரம் சிலுப்பி அலையடித்தது. வடக்கு வளவுத் தாத்தா உன்னைத் தூக்கிட்டுப் போய் நம்ம ஊரிலே வெள்ளம் காண்பிச்சது எல்லாம் ஞாபகம் இருக்கா? - இன்றைக்கு மட்டுமல்ல. தினகரியை இதற்கு முன்பு எத்தனையோ தடவை கேட்டாயிற்று. ஒவ்வொரு தடவையும் சிரிக்க மட்டும் செய்திருக்கிறாள். பார்த்ததாகவும் எடுத்துக் கொள்ளலாம். பார்க்கவில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம். அப்படி ஒரு சிரிப்பு. அவள் ஒன்றரை வயதுக் கைப்பிள்ளையாக இருக்கும்போது பார்த்தது என்ன ஞாபகம் இருக்க முடியும்? ஆனால் அரசரடிப்பாலம் முங்க முங்க, பேட்டை ரோடு வரை தண்ணீர் வந்த அந்த வெள்ளம் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. தினகரியின் விவரிக்க முடியாத ஞாபகங்களின் மடிப்புகளில் கண்டிப்பாக அந்த வெள்ளம் எங்கேனும் ஈரமாக ஒளிந்திருக்கும் என்றே தோன்றுகிறது. எப்போதாவது சொல்வாள். சொல்லாவிட்டாலும் ஒரு ஈரம் இன்னொரு ஈரத்தையும், ஒரு தீ இன்னொரு தீயையும் உடனடியாகத் தொட்டுவிடும்படியாக ஏதேனும் சங்கிலிகளை அவளுக்குள் வைத்திருக்கும். "அம்மாவைக் கூட்டிக் கொண்டாந்து காட்டுங்க "ப்பா" என்று சொல்வது கூட அப்படி ஒரு ஈரம் அல்லாமல் வேறு என்ன. காட்டணும் தான். காட்ட வேண்டும் கூட சதா வீட்டுவேலை என்று இருக்கிற பெண்களை இப்படிக் கொஞ்சநேரம் மழையிலும், பணியிலும், மலையடிவாரத்திலும், அருவிக் கரையிலும் நிறுத்தினால் நன்றாகத்தான் இருக்கும் தினகரி அம்மா மட்டுமல்ல. எல்லோருடைய முகமும் அப்படி இருக்கும்போது கொள்கிற தோற்றமும் வேறு. குறுக்குத்துறை முன்னடித்துறையில் பித்தளைக் குடத்துடன் படியேறுகிற முகம், குடையும் வைத்துக்கொண்டு நனைந்தும் வந்துகொண்டிருந்த முகம், கட்டுமானம் ஆகிக்கொண்டிருக்கிற கட்டிடத்துக்குள்ளேயே தலையில் வைத்த துணிச்சுருளையும் பாண்டுச் சட்டியும், சிமெட்டிப் பாலுமாக நிற்கிற முகம், கரியும் கலர் சாக்பீஸ் கட்டியுமாக இரண்டு மணி நேரமாக நடுரோட்டில் வரைந்த படம் கொஞ்சம் கொஞ்சமாக மழையில் கரைவதையும், ஈயத்தகடு போல வீசப்பட்டிருந்த நாணயங்களின் மேல் மழைத் தண்ணீர் விழுவதையும் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொண்டிருக்கிற, இடுப்பில் பிள்ளை வைத்திருக்கிற நைந்த முகம், ஆட்டோவிலிருந்து இறங்கி, வீட்டுக்குள் வருவதற்குள் நனைந்துவிட்ட சிரிப்பு முகம், மேலே ஒரு பாறை விளிம்பில் இருந்து, கீழே புரள்கிற கடலையே பார்த்துக் கொண்டிருக்கிற சிவப்புப் புடவை கட்டின கருகமணிப் பாசிமுகம். இப்படியெல்லாம், எல்லோரும் அழகாகத்தான் இருக்கிறார்கள். தினகரி அம்மாவும் அப்படித்தான் இருப்பாள். இப்போது மறுபடியும் வீட்டுக்குப்போய், அவளை இவ்வளவு தூரம் கூப்பிட்டுக் கொண்டுவந்து காண்பித்து, மறுபடியும் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு அலுவலகம் போக முடியாது. நேரமாகிவிடும். ஏற்கனவே இன்று தாமதம். இன்னும் கொஞ்சம் நின்று பார்க்கலாம் என்று தோன்றுகிற நாட்களில் தான் இதைவிடச் சீக்கிரமாய் போகவேண்டும்படி ஏதாவது ஒரு நிர்ப்பந்தம் வந்துவிடுகிறது. ஏற்கனவே நிர்ணயித்து வைத்திருந்த வேலைகள் அலுவலகத்தில் இப்போது காத்திருக்கும். சாயந்திரம் கண்டிப்பாகக் கூப்பிட்டுக்கொண்டு வரவேண்டும். மறுபடியும் தினகரி, தினகரி அம்மா என்று இந்த இடத்தில் நிற்க வேண்டும். கங்கையும், யமுனையும் ருத்ரப் பிரயாகையும் திரிவேணி சங்கமும் இதுதான். பெயர் இழந்து, பெயர் அழிந்து, பெயர் புனைந்து ஓடுகிற மகாநதியின் ஏதாவது ஒரு கரையில் நிற்கவேண்டும் இதுதான் அந்த நதி. அந்தக் கரை. யோசித்துக்கொண்டே ஓட்டும்போது, பாலம் பின்னால் போயிற்று. "ஹோ" என்கிற காவிச்சுழிப்பு எட்டுத்திசையிலும் கைபரப்பிக் கொண்டிருந்தது. பார்வையில் விழுந்தது ஒரு பகுதியின் ஏதோ ஒரு தெறிப்பு, ஏதோ ஒரு நுரை எனினும் என்கூடவே ஆறு வந்தது. இரண்டு சக்கரங்களுக்கு அடியில் வெள்ளம் கீறிப்பிளந்து வகிடு எடுத்து உறுமுவதுபோல இருந்தது. குனிந்தால் கையில் அள்ளிவிடுகிற அண்மையில் தண்ணீர்த் தகடு அலைந்தது அன்றைக்கு முழுவதும் அலைச்சலாகத்தான் போயிற்று. அலுவலகத்தில் நுழைந்ததுதான் தெரியும். வேலை ஆளை உள்ளே இழுத்தது. அது இன்னொரு மாதிரி வெள்ளம். இன்னொரு மாதிரிக் கசம்.. வெறும் மணல்திட்டு மாதிரிக்கிடக்கிறதே சற்று உட்காரலாம் என்று நினைத்தால் திடீரென்று ஆளை முக்குகிறமாதிரி அடித்துப் புரண்டு கொண்டு வரும், வேலை இருக்கிறது என்று தயாராகி நின்றால், மருத மரத்தையும், பாசஞ்சர் ரயிலையும் பார்த்துக் கொண்டு நிற்கவைத்து, கரண்டையை நனைக்கிற அளவு நகர்ந்துகொண்டுபோகும். ஒன்று மாற்றி ஒரு சிக்கல், ஒரு சிக்கலை எடுப்பதற்குள் இன்னொரு முடிச்சின் இறுகல் என்று தொட்டுக் கொண்டேபோய், பழைய புள்ளி விபரங்கள், கணக்கெடுப்புக்கள், விவாதங்கள், தட்டச்சுக்கள், ஒப்புதல்கள், மீண்டும் விவாதங்கள், தொலைபேச்சுக்கள், மறு ஆலோசனைகள், கையெழுத்துக்கள், இடையில் தேநீர், மறுபடி தேநீர் என்ற இரவு பத்தாகி விட்டது. எப்போது இருட்டு விழுந்தது என்று தெரியவில்லை. இரண்டாவது "ஷிப்ட்" காவலர்கள் "பஞ்ச்" செய்துகொண்டிருந்தார்கள். எல்லா மேஜைகளிலும் ஃபைல்கள், மின்விளக்கு விசிறிக் சுழற்சி. வண்டியை ஷெட்டிலிருந்து எடுக்கும்போது மழைபெய்து கொண்டுதான் இருந்தது. வாட்ச்மேன் குனிந்து பிளாஸ்டிக் குவளையில் பாலூற்றிக் கொண்டிருந்தார். பிறந்து இரண்டு நாள் இருக்குமா தெரியவில்லை. நாய்க்குட்டிகள் ஐந்தாறு முட்டிக் கொண்டு இருந்தன. ஒரு சமயம் எல்லாம் அழகாக இருப்பதுபோல இருந்தது. எல்லாம் சரியாக இருப்பதுபோல் இருந்தது. வாட்ச்மேனைத் தொந்தரவு செய்ய மனமில்லை. இறங்கிப் போய் கதவை திறந்து, மறுபடி சாத்தி வெளியேறுகையில் மழை மீண்டும் வலுக்க ஆரம்பித்திருந்தது. நிற்கத் தோன்றவில்லை நனைய நனைய மேலும் விரைவு கொள்கையில் நடமாட்டம் குறைவான பாதையின் சரிவுகளில் தண்ணீர் ஓட ஆரம்பித்திருந்தது. தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாய்ப் பெய்கிற மழையில் ஒரு குளிரின் கனத்த திரை இறங்கியிருந்தது. வெள்ளம் இன்னும் அதிகரித்துவிட்டிருக்கும் என்று தோன்றியது. இன்றைக்கு முடியவில்லை. நாளைக்குக் காலையாவது தினகரி அம்மாவைக் கூப்பிட்டுக் கொண்டுப் போய்க்காட்ட வேண்டும். ஒரு வேலை தினகரியே இதற்குள் அம்மாவைக் கூட்டிக்கொண்டு போயிருப்பாளோ. தினகரியும் அம்மாவும் குடையில் போவது மாதிரி, ஒரு குடைக்குள் இரண்டு பேரும் ஒடுங்கிக் கொண்டு பாலத்தின் மேல் நிற்கிற மாதிரி, அவர்களைத் தவிர யாருமற்ற பாலத்தில், அடர்ந்து இறங்குகிற மழையில் காணாமல் போன, தென்னை அசைவுகளும், கரையோரத் தோப்புகளுமாக அவர்கள் வந்து கொண்டிருக்கிற மாதிரி.... வீடு அதற்குள் வந்துவிட்டிருந்தது. மின்சாரம் இல்லைபோல. எங்கும் இருட்டாக இருக்கையில், வண்டியின் முன்விளக்கு வெளிச்சம் கற்றையாக அலைந்து எங்கெங்கு எல்லாமோ ஈரத்தில் விழுந்தது. ஹார்ன் அடிக்காமலேயே நான் வந்துகொண்டுவிட்டதைத் தெரிந்து, கதவைத் திறக்கும் போதே.... "நனைஞ்சுக்கிட்டா வாரீங்க" - என்று சத்தம் வந்தது. "துண்டை எடுத்துகிட்டு வாம்மா. அப்பா தலையை துவட்டிகிடட்டும்" என்று தினகரி பெயரைச் சொல்லி உத்தரவு போட்டது. பார்த்து வாங்க. இருட்டா இருக்கு என்று பத்திரப்படுத்தியது. "பார்த்து வீட்டுக்குள்ளே வாங்க. ஆட்கள் இருக்கு" நான் வீட்டுக்குள் நுழையும்போது ஹாலின் மத்தியில் ஒரு அரிக்கேன் லைட் பொருத்திவைக்கப்பட்டிருந்தது. என்னைப் பார்த்ததும் யாரோ இரண்டு பேர் எழுந்திருந்தார்கள். வணக்கம் சொன்னார்கள். சுவரோரமாக ஒரு பெண் குழந்தை சுருண்டு தூங்கிக் கொண்டிருந்தது. அந்த மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் பார்க்கும்போது என்னைப் பார்த்ததும் எழுந்திருந்து நின்றவர்களின் காலடியில் பதுங்கியிருந்த இருட்டுக்குள் அந்தக் குழந்தை படுத்திருப்பது போல இருந்தது. தலையை துவட்டுவதற்குத் துண்டை என் கையில் கொடுத்தவாறு சொல்ல ஆரம்பித்தாள். "பெரிய தெரு, நடுத்தெரு, வேம்படித்தெரு பூராவும் ஒரே வெள்ளக்காடாம். வீட்டுக்குள்ளே எல்லாம் தண்ணியாம். தறிக்குழி எல்லாம் தெப்பத்திலே நிற்குதாம். பாவு மட்டத்துக்கு முங்கிப்போச்சாம். நெசவு செஞ்சது பாதி நின்னது பாதியிண்ணு அப்படி அப்படியே விட்டுவிட்டு, எல்லா ஜனமும் தெருவுல நிக்கிதாம். பத்து அறுபது வருஷத்துல இவங்க கண்காண இப்படி ஒரு கஷ்டம் வந்தது இல்லையாம்." இதை இவள் சொல்லும்போதே இருட்டுக்குள் நின்றவர்கள் திடீரென்று பெருங்குரலில் அழ ஆரம்பித்தார்கள். முக அடையாளமே தெரியாமல் நிற்கிற அவர்களின் குரல் மட்டும் விக்கித்து ஒரு கூரான ஆயுதம்போல நெஞ்சில் செருகியது. "நாங்க இனிமே என்னம்மா ஐயா எந்திரிக்க போறோம்" என்று வாய்விட்டு அதே குரலில், நிர்ணயிக்க முடியாத வயது நடுங்கியது. எனக்கு அவர்கள் கையைப் பிடித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. "தெரிஞ்சவங்களோ, தெரியாதவங்களோ, நம்மளால் வேறு என்ன பண்ணமுடியப்போகுது. அந்தப் பச்சைப் பிள்ளையாவது படுத்துகிடட்டும்னு நான்தான் இவங்களை கூட்டியாந்தேன். பள்ளிக்கூடம் ரெம்பிக் கிடக்கு. கல்யாண மண்டபம் ரெம்பிக் கிடக்கு. நம்ம வீடும் ரெண்டு நாளைக்கு ரெம்பிக் கிடக்கட்டுமே" இதை சொல்லும் போது அவள் தினகரியைத் தன்னோடு அனைத்துக் கொண்டு நின்றாள். கை தினகரியின் தலையை வருடிக் கொண்டிருந்தது. இன்னும் அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஹரிக்கேன் லைட் வெளிச்சத்தில் அந்தச் சின்னஞ்சிறு பெண் குழந்தை ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தது. வயிறு இறங்கி ஏறியது. நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். வெள்ளத்தைப் பாலத்தின் அடியில்தான் பார்க்கவேண்டுமா என்ன?.. |
முப்பது வருடங்களுக்கு முன்பு நான் போயிருந்தபோது அயோவா சிடி மிகச் சின்ன ஊர். ஆனால், அது அந்த மாநிலத்தின் தலைநகராக இருந்திருக்கிறது. ஆனால் நான் போயிருந்த போது அது தலைநகர் அந்தஸ்தை இழந்ததோடு அதன் விமான தளமும் பயனற்றுப் போய் விட்டது என்று அறிந்தேன். ஊர் சின்னதாக இருந்தாலும் நகரங்களின் வசதிகள் பல இருந்தன. இரண்டு வங்கிகள் சாதாரணத் தேவைகளுக்கேற்ப டவுண்ட்டவுன் என்ற கடைத் தெரு. ஐந்தாறு சிற்றுண்டிச் சாலைகள். இரண்டு டிஸ்கவுண்ட் கடைகள். அதாவது தள்ளுபடிக் கடைகள். ஒரு நாள் நானாக வழி தெரியாமல் ஒரு சிறிய தெருவில் நுழைய அங்கும் ஒரு கடை இருந்தது. அங்கு விலைகள் மிகவும் குறைவாக இருந்தன. எனக்குக் கிடைத்த அமெரிக்க நண்பர்களிடம் இதைச் சொன்னேன். "அப்படி எல்லாம் இருக்காதே. இங்கே கடைக்காரர்கள் எல்லாரும் நாணயமானவர்கள்." அந்தக் கடையில் பாத்திரங்கள், துணிமணி, சூட்கேஸ், குடை, காலணி முதலின கூட இருந்தன. ஒருவனுக்குப் புரிந்து விட்டது. "நண்பரே, அவை எல்லாம் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டவை. நீங்கள் மாதக் கணக்கில் இங்கு வசிக்கப் போகிறீர்கள். இருக்கும் வரை நல்ல, புதிய பொருள்களையே பயன்படுத்துங்கள். நான் அங்கு பொருள் கொடுத்துவிடத்தான் போவேன். வாங்க அல்ல.", "இந்தக் கம்பளிக் கோட்டை ஐம்பது டாலருக்கு நீ வாங்கிக் கொடுத்தாய். அங்கே இதே போலக் கோட்டு பத்து டாலருக்கு இருக்கிறது." இந்தக் கம்பளிக் கோட்டுகள் முழுங்கால் வரை நீண்டிருக்கும். "சரி, சரி," அவன் பேச்சை மேற் கொண்டு வளர்த்தாமல் போய் விட்டான். "நீ எதைக் கற்பனை செய்து கொண்டாலும் குளிரைக் கற்பனை செய்து கொள்ள முடியாது" என்று அவனே ஒருமுறை சொல்லியிருந்தான். நான் கற்பனை செய்து பார்க்க முடியாத குளிரை அனுபவிக்க வேண்டியிருந்ததால் எனக்குத் திரும்பத் திரும்பக் கம்பளிக் கோட்டுகள்தான் கவனத்தில் வந்தன. ஒருவன் முகத்தைப் பார்ப்பதற்கு முன்னால் அவர் அணிந்திருக்கும் கோட்டுதான் என் கண்ணில் தெரிந்தது. அயோவா ஸ்டேட் பாங்க் அண்ட்டிரஸ்ட் கம்பெனி பல பணிகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். எனக்கு அங்குதான் வங்கிக் கணக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. என்னை அழைத்துப் போன இளைஞனின் பேச்சு, அந்த மானேஜர் பேச்சு எதுவும் எனக்குப் புரியவில்லை. திடீரென்று அந்த மானேஜர் பக்கத்திலிருந்த இயந்திரத்திலிருந்து ஒரு அட்டை மேஜை மிது விழுந்தது. அதில் என் புகைப்படம்! என் மற்ற புகைப்படங்கள் விசேஷமானவை என்று சொல்லமாட்டேன். ஆனால், அந்த வங்கி அடையாள அட்டையில் இருந்த புகைப்படம் என்னைத் தூக்கி வாரிப் போடச் செய்தது. நான் எங்கு காசோலை கொடுத்தாலும் கூடவே அந்த அடையாள அட்டையையும் காட்ட வேண்டும். ஒரு முறைக்கு இருமுறை என் முகத்தையும் அந்த அட்டைப் புகைப்படத்தையும் உற்றுப் பார்க்காமல் யாரும் என் காசோலையை ஏற்றுக் கொண்டதில்லை. என்னைப் புகைப்படம் எடுக்கப் போவதாக அந்த மானேஜர் சொல்லியிருந்தால் நான் என் குல்லாவையும் கம்பளிக் கோட்டையும் கழட்டியிருப்பேன் வாயைப் பிளந்தபடி வைத்திருக்கமாட்டேன். வங்கி வாஷிங்டன் தெருவில் இருந்தது. விசாலமான தெரு, தெருவின் முழு நீளத்திற்கும் நடுவில் தீவு போல ஏற்பாடு செய்து அதில் சில பெஞ்சுகளும் போடப்பட்டிருந்தன. நன்றாகச் சாய்ந்து கொள்ளக்கூடியவை. ஒரு குறை, அவை வங்கியின் எதிர்சாரியைப் பார்த்துப் போடப்பட்டிருந்தன. எதிர்சாரி முழு நீளமும் ஒரு மிகப் பெரிய கட்டடத்தின் பின் பக்கம். ஜன்னல்கள் தான் உண்டு. ஒரு வாசற்படி கிடையாது. அந்தப் பக்கத்து நடைபாதையில் நடமாட்டமே இருக்காது. நான் வங்கிக்கு அழைத்துச் செல்லப் பட்ட முதல் நாளே வங்கிக்கு நேர் எதிரே இருந்த பெஞ்சில் ஒரு மனிதனின் முதுகு தெரிந்தது. கருநீல நிறக் கம்பளிக் கோட்டு அணிந்திருந்தான். காலர் மடிப்புக்கடியில் சிறிது முயற்சி எடுத்தால் படிக்கும் படியாகக் கென்வுட் என்ற முத்திரை தெரிந்தது. அடுத்தமுறை நான் வங்கிக்குப் போன போது அந்த மனிதனின் முதுகு தெரிந்தது. அதே கோட்டு. அடுத்த முறையும் அவன் உட்கார்ந்திருந்தான். அப்படி என்றால் அவன் தினமும் அங்கு உட்கார்ந்து வெறும் சுவரைப் பார்த்தபடி இருக்கிறான். நான் வங்கி ஜன்னலுக்குப் போனபோது என் பின்னால் யாரும் இல்லை. அந்தப் பெண் பணத்தை எண்ணிக் கையில் கொடுத்தாள். "அங்கே பெஞ்சில் ஒருவர் உட்கார்ந்திருக்கிறாரே, அவர் யார் என்று தெரியுமா?" என்று அவளைக் கேட்டேன். அவள் கலவரமடைந்தாள், "என்ன கேட்கிறீர்கள்?" என்று கேட்டாள். நான் கையைக் காட்டி, "அந்த மனிதன்?"என்றேன். அவளுடைய கலவரம் நீங்கிவிட்டது. "தெரியாது" என்றாள். அவளுக்கு நிஜமாகவே தெரியாமல் இருக்கலாம். வெளியூர்க்காரனுக்கு கண்ணில் படுவதெல்லாம் உள்ளூர்வாசிகளுக்குத் தெரிவதில்லை. தனக்குச் சம்பந்தமற்றது என்றும் இருக்கலாம். எனக்கு மட்டும் அந்த மனிதனைப் பற்றி தெரிந்து கொண்டு என்ன ஆகப் போகிறது. ஆனால் திரும்பத் திரும்ப ஒருவனை ஒரே இடத்தில் பார்க்க நேர்ந்தால் சம்பந்தமில்லை என்று விட்டுவிட முடியவில்லை. உறைபனி விழுந்து கொண்டிருந்த நாட்களில் கூட அவன் உட்கார்ந்திருந்தான். அவனைப் பற்றிப் பலரிடம் விசாரித்தேன். அவன் தனியாகப் பல நாட்களாக அந்த ஊரில் வசிப்பதாகச் சொன்னார்கள். அந்த ஊரில் எவ்வளவோ பேர் தனியாக வசித்து வந்தார்கள். ஆனால் அவர்கள் எல்லா நேரமும் ஏதோ ஒரு சுவரைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்ததில்லை. அவரவர்களுடைய வசிப்பிடங்களில் தான் தனி. வெளியே வந்து விட்டால் அவர்கள் தான் அதிகம் கும்மாளம் போடுவார்கள். கிரிஸ்துமஸ•க்கு இன்னும் நான்கு நாட்கள். அசாத்தியக் குளிர். ஆனால் அதையும் மீறி கடைகளில் கூட்டம். அந்தச் சிறிய ஊரிலிருந்து வேறெங்கோ இருக்கும் தாய், தந்தை, சகோதரன், சகோதரி என யாருக்காவது கிறிஸ்துமஸ•க்கு ஒரு பரிசாவது அனுப்ப வேண்டும், குறைந்தது இருபது வாழ்த்துக் கடிதங்கள் அனுப்ப வேண்டும் என்ற இலக்கோடு மக்கள் கடைகளில் குவிய, அயோவாசிடி தபாலாபீஸில் இரு தனி ஜன்னல்கள் பரிசுப் பார்சல்கள் வாங்கிக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டன. என் வங்கியில் இருக்கும் துளியிடத்தை அடைத்துக் கொண்டு ஒரு கிறிஸ்துமஸ் மரம். வங்கியிலும் கூட்டம். என் வேலையை முடித்துக் கொண்டு வெளியே வந்தேன். குல்லாவைக் காது மூட இழுத்துவிட்டுக் கொண்டேன். கையுறைகள் அணிந்திருந்தும் கைகளைக் கம்பளிக் கோட்டின் பைகளில் நுழைத்துக் கொள்ள வேண்டியிருந்தது, ஒரு பொட்டு மேகம் கூட இல்லாது வானம் தெளிவாக இருந்தது. ஆனால் குளிர் சாலையில் விழுந்திருந்த உறைபனியை ஜ்ஸ் பாளங்களாக மாற்றியிருந்தது. அந்தக் குளிரிலும் அந்த மனிதன் பெஞ்சில் உட்கார்ந்திருந்தான். ஒரே ஒரு மாற்றம். அவன் தொப்பி அணிந்து கொண்டிருந்தான். என் உடல் குளிரில் நடுங்குவதையும் பொருட்படுத்தாது நான் அவன் உட்கார்ந்திருந்த பெஞ்சின் மறு கோடியில் உட்கார்ந்தேன் அவனை வெகு நாட்கள் தெரிந்தது போல, "கிறிஸ்துமஸ் பரிசுப் பொருட்கள் வாங்கியாயிற்றா?" என்று கேட்டேன். அவன் திடுக்கிட்டான். "என்னிடமா பேசுகிறீர்கள்? என்று கேட்டான். நான் புன்னகை புரிந்தேன். "ரொம்பக் குளிராக இல்லை? நான் உறைந்து போய் கொண்டிருக்கிறேன்" என்றேன். "அப்போது வீட்டுக்குப் போக வேண்டும்" என்று அவன் சொன்னான். என் உற்சாகம் முற்றிலும் வற்றி விட்டது. "நீ சொல்வது ரொம்பச் சரி" என்றேன். எழுந்து நின்றேன். அவனைக் கடந்து செல்லும்போது, "ஊருக்குப் புதிதா?" என்று கேட்டான். "அதனாலென்ன?", "இந்த ஊரில் நான் யாருடனும் பேசுவதில்லை." நான் பதில் சொல்லாமல் நின்றேன். "விசேஷமான காரணங்கள் இல்லை, எனக்கு யாருடனும் பேச விஷயம் இல்லை". நான் அப்படியே நின்றேன். "கோபித்துக் கொள்ளாதே, இளைஞனே. நான் கடைக்குப் போனால் கூடப் பேசுவதில்லை. ஒரு முறை பால் திரிந்து போய் விட்டது. நான் கீழே கொட்டி விட்டேன். "பேசாமலே இருப்பது சாதனைதான்.", "நான் சொல்ல வேண்டியதெல்லாம் எழுதி விட்டேன்.", "நீங்கள் எழுத்தாளரா?" அந்த மனிதன் நிராசை தெரியப் புன்னகை செய்தான். "தங்கள் புத்தகங்களை வாசிக்க முடியுமா?", "அங்கே இருக்கிறது" அவன் எதிரில் இருக்கும் கட்டிடத்தைக் காட்டினான். "அங்கே கடை இருக்கிறதா?", "அது நூலகம். இந்த ஊர் நூலகம். நான் அந்த நூலகத்திற்குப் போயிருக்கிறேன். ஆனால் அது வாஷிங்டன் தெரு வரை இருந்தது தெரியாது. நூலகம் என்பதால்தான் ஒரு பக்கம் முழுதும் வெறும் ஜன்னல்கள் மட்டும் அமைத்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். "உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. எனக்கு ரொம்பக் குளிருகிறது. வெட்ஸ்டனில் போய் காபி குடிக்கலாமா?" அவன் முடியாது என்று சொல்வான் என்று நினைத்தேன். அவன் முகம் அப்படித்தான் நினைக்க வைத்தது. ஆனால் மெதுவாக எழுந்தான். என்னை விட ஓரடியாவது உயரமாயிருப்பான். "வெட்ஸ்டன் வேண்டாம். ரிவர்வ்யூ போவோம்," என்றான். ரிவர்வ்யூ சிற்றுண்டிக் கடைக்குச் செல்லச் சாலையைக் கடந்து பத்து நிமிடங்கள் நடக்க வேண்டியிருந்தது. குளிர் தாங்க முடியாது போலிருந்தது. "எனக்குக் குளிர் தாங்க முடியவில்லை." அவன் என்னைத் திரும்பிப் பாராமலே, "நீ போட்டிருக்கும் கோட்டு இந்தக் குளிருக்குப் போதாது. ஒரு கடை இருக்கிறது. அங்கே போ. மிகக் குறைந்த விலையில் நீ ஒரு கோட்டு வாங்கிக் கொள்ளலாம்", "எங்கே இருக்கிறது?", "வாஷிங்டன் தெரு முனைக்குச் சென்று இடது புறம் திரும்ப வேண்டும்.", "அந்த தெரு குறுகலாக இருக்குமோ?" அப்படி என்றால் நீ அங்கே போயிருக்கிறாய்.", "அங்கே எல்லாம் பழையது என்கிறார்களே?", "இருக்கலாம்." ரிவர்வ்யூயில் காசு கொடுத்துவிட்டுக் காபி எடுத்துவர வேண்டும். அந்த மனிதன் அவனுக்கு மட்டும் பணம் கொடுத்து விட்டுக் காபி எடுத்துக் கொண்டான். அப்புறம் நானும் ஒரு தட்டு கோப்பை எடுத்துக் கொண்டு ஜாடியிலிருந்து காபி டிகாஷன் விட்டுக்கொண்டு மேஜைக்குப் போனேன். அங்கு பாலுக்குப் பதில் பால் பவுடர். காபி காபியாகவே இருக்காது. வெட்ஸ்டனில் பால் இருக்கும். அந்த மனிதன் காபியை மிகவும் மெதுவாகக் குடித்தான். அவன் குடித்து முடிக்கப் போகும் நேரத்தில் நான் எழுந்திருந்து, "நான் போக வேண்டும் என்றேன். "சரி.", "பெயர் சொன்னால் நூலகத்தில் தங்கள் நூல்களைப் படிப்பேன்.", "வேண்டாம்.", "என்ன!", "வேண்டாம், போய் வா." எனக்கு மிகவும் சங்கடமாயிருந்தது மற்றவர்களும் அவனால் சங்கடத்துக்கு உட்படுத்தப்பட்டிருப்பார்கள். அவனைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளாததற்கு அவனே காரணமாயிருக்கலாம். அந்த நூலகத்தில் பட்டியலைப் பார்த்துத்தான் நூல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நூலகப் பெண்களை விசாரித்தேன். அவளுக்குத் தெரியவில்லை. "அவன் இந்த ஊர்க்காரனாகத்தான் இருக்க வேண்டும்," என்றேன். "நான் கூட இந்த ஊர்க்காரிதான். என் பக்கத்து வீட்டில் காலியாயிருக்கும் அறைக்கு என்ன வாடகை என்று கேட்டால் எனக்குத் தெரியாது." அவனை மீண்டும் ஒரே முறை அந்த நாற்காலியில் பார்த்தேன். நான் அவன் கண்ணில் பட வாய்ப்பில்லை. அப்படி என்னைப் பார்த்தால் கூட அவன் யாரோ அயலானைப் பார்த்தது போலத்தான் இருப்பான். அவன் என்ன புத்தகங்கள் எழுதியிருப்பான்? விஞ்ஞானம், வரலாறு, பொருளாதாரம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு எதுவும் இருக்காது. இந்தத் துறைகளுக்கு மற்றவர்களுடன் விவாதமும் பரிமாற்றமும் தேவை. அவன் படைப்பிலக்கியக் காரனாகத்தான் இருக்க வேண்டும். மனிதர்களைப் பற்றி எழுதுகிறேன் என்ற பெயரில் அவர்கள் தான் எங்கோ உச்சாணிக் கொம்பில் தனியாக இருப்பார்கள். உச்சாணிக் கொம்புக்காரன் ஏன் பிறர் பார்க்க வெட்ட வெளியில் நாளெல்லாம் உட்கார்ந்திருக்க வேண்டும்? அவனைப் பற்றி எல்லாரிடமும் விசாரிக்கவும் முடியாது. அப்படி விசாரிப்பது ஓட்டுக் கேட்பதற்கு இணை என்று நினைக்கும் சமூகம் இது. அதன் பிறகு மதிக்கவே மாட்டார்கள். பெரிய மதிப்பு என்று வேண்டாம். சிறு சிறு உதவி கூடச் செய்ய மாட்டார்கள். அவன் உயரமாக இருந்தாலும் மிகவும் ஒல்லியாகவும் இருந்தான். ஆனால் பட்டினி கிடப்பவன் அல்ல. குடிகாரனும் அல்ல. அவன் சிகரெட் குடித்துக் கூடப் பார்த்ததில்லை. (முப்பது ஆண்டுகளுக்கு முன்பு புகையிலைக்குத் தடையேதும் கிடையாது.) அதுவே கூட அவன் தனியனாகப் போனதற்கு ஒரு காரணமாயிருக்கலாம். சில பழக்கங்கள் தவிர்க்க முடியாதவை என்று கருதுவோம் அல்லது கருதுவதாகத் தோற்றம் தருவோர் எப்போதும் நண்பர் குழாம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ரசிகர் சங்கங்களின் ஆதாரமே ஏதோ ஒரு மனிதர் தவிர்க்க முடியாதவர் என்ற நம்பிக்கை. இந்த பெஞ்சு மனிதன் தவிர்க்க முடியாதவன் அல்ல என்று அந்த ஊர் தீர்மானித்து விட்டது. தீர்மானித்து விட்டது என்று சொல்வது கூடச் சரியல்ல. இது யாரோ நான்கு பேர் கூடி விவாதித்து எடுத்த முடிவல்ல. யாருமே நேரடியாகக் காரணமில்லாமல் எல்லாருமே அந்த முடிவுக்கு நகர்ந்து சென்றார்கள் என்றே கூற வேண்டும். அவனுக்கு யாருடனும் எழுத்து மூலமாகக் கூடத் தொடர்பு வேண்டாமென்று தோன்றிவிட்டது. கிறிஸ்துமஸ் போய்ப் புது வருடம் வந்தது. நான் பதினைந்து நாட்கள் கழித்துத்தான் வங்கிப் பக்கம் போக நேர்ந்தது. அன்று அவன் இல்லை. அவனுக்காக அடுத்த நாள் சென்றேன். அன்றும் இல்லை. அவனை அப்புறம் காணவில்லை. எனக்குத் தெரிந்தவர்களிடம் விசாரித்தேன். அந்த ஊர் தபாலாபீசில் விசாரித்தேன். அந்த ஊருக்கான காவல் நிலையம் கிடையாது. இன்னும் நான்கு மாதங்கள் கழித்து நானே அந்த ஊரை விட்டுச் செல்ல வேண்டியிருந்தது. அங்கு எனக்கு அறிமுகமானவர்களிடம் என் அறையில் இருந்த சிலவற்றைத்தான் தர முடிந்தது. "ஸால்வேஷன் ஆர்மி கடையில் கொடு, தேவைப்படுகிறவர்கள் வாங்கிக் கொள்வார்கள்" என்று சொன்னார்கள். எல்லாவற்றையும் இரண்டு பெரிய காகிதப் பைகளில் போட்டு அந்தச் சந்துக் கடைக்குச் சென்றேன். "மிக்க நன்றி" என்றார்கள். அப்போது எனக்கு அந்த பெஞ்சு மனிதன் சொன்னது நினைவுக்கு வந்தது, எனக்கு இனி கம்பளிக் கோட்டு தேவைப்படாது. "கடையைச் சுற்றிப் பார்க்கலாமா?" என்று கேட்டேன். "இதற்கென்ன அனுமதி? தாராளமாகப் பாருங்கள்." நான் துணிமணிகள் வைத்திருக்கும் இடத்திற்குப் போனேன். அவை பழைய உடைகள் தான். சலவை செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. ஒரு கம்பியில் கம்பளிக் கோட்டுகள் தொங்கவிடப்பட்டிருந்தன. என் புறங்கையை நகர்த்த அவை செங்குத்தான அலைகள் போல அசைந்தன. ஒரு கோட்டருகில் என் கை நின்றது. கருநீல நிறக்கோட்டு. கழுத்துப் பட்டையடியில் "கென்வுட்" என்று எழுதியிருந்தது. கடையைக் கவனித்துக் கொண்டிருந்த அம்மாளிடம் அந்த கோட்டைக் காண்பித்தேன். "இது யாருடையது என்று தெரியுமா?", "தெரியும்.", "யார்?", "யார் என்று தெரியாது. கிறிஸ்துமஸ•க்கு முந்தின தினம் இறந்துவிட்டான். அவன் குடியிருந்த வீட்டுக்காரர் அவனுடைய பொருள்களில் மீண்டும் பயன்படுத்தக் கூடியவையை இங்கு கொண்டு வந்து கொடுத்தார்." இங்கிருக்கும் பொருள்கள் எல்லாம் இறந்தவர்களுடையதா?", "இப்போது நீங்கள் கொண்டுவந்திருக்கிறீர்களே, அப்படியும் இருக்கலாம் அல்லவா? ஆனால் எந்தப் பொருளானாலும் நாங்கள் தீவிர சுத்திகரிப்புக்குப் பிறகுதான் விற்பனைக்கு வைக்கிறோம். நீங்கள் பௌதிக மாணவரா என்று தெரியாது. ஒரு அடிப்படை உண்மை, பொருள் அழிவற்றது.", "என்ன?", "பொருள் அழிவற்றது, பொருளை அழித்து விட முடியாது.", "இந்த மனிதர் பொருளில்லையோ?" அவள் உதட்டைப் பிதுக்கினாள். |
முல்லாவின் ஊருக்கு ஓரு தத்துவ ஞானி வந்தார் ஒவ்வொரு நாளும் மாலையில் பொதுமக்கள்
அடங்கிய ஒரு கூட்டத்தில் தத்துவ ஞானி சொற்பொழிவாற்றினார். ஓருநாள் தத்துவ ஞானி சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த போது கீழக்கண்டவாறு ஒரு
தத்துவத்தைக் கூறினார். இறைவன் சிருஷ்டியில் எல்லா உயிர்களுமே சமந்தான். நாம் மற்ற மனிதர்களை மட்டுமின்றி
மிருகங்கள் போன்ற உயிரினங்களையும் நமக்குச் சமமாக பாவித்து அன்புடன் நடத்த வேண்டும். அந்தக் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார். தத்துவ ஞானியிடம் ஒரு வேடிக்கை செய்ய
நினைத்தார். உடனே அவர் எழுந்து " தத்துவ ஞானி அவர்களே, நீங்கள் கூறும் கருத்து அவ்வளவு
சரியல்ல என்று எனக்குத் தோன்றுகிறது" என்றார். " இதை எந்தக் கண்ணோட்டத்தில் கூறுகிறீர். நீர் உமது வாழ்க்கையில் ஏதாவது சோதனை செய்து
பார்த்தீரா?" என்று தத்துவஞானி கேட்டார். " சோதனை செய்து பார்த்த அனுபவம் காரணமாகத்தான் இந்தக் கருத்தை கூறுகிறேன் " என்றார்
முல்லா. " என்ன சோதனை செய்தீர்? அதை விளக்கமாகக் கூறும் " தத்துவ ஞானி கேட்டார். " நான் என்னுடைய மனைவியையும் என் வீட்டுக் கழுதையும் சரி சமமாக நடத்தினேன் "
என்றார். " அதன் விளைவு என்ன?" என்று தத்துவ ஞானி கேட்டார் " எனது பரிசோதனையின் விளைவாக ஒரு நல்ல கழுதையும், கெட்ட மனைவியும் கிடைத்தாள்
" என்று சொன்னார். இதைக் கேட்டதும் தத்துவ ஞானி உட்பட அனைவரும் வாய் விட்டுச் சிரித்தனர். |
அக்பர் சக்கரவர்த்திக்கு வெற்றிலை போடும் பழக்கம் இருந்தது. அதிலும் குறிப்பாக, சௌகத் அலி தயாரிக்கும் பீடா அவருக்கு மிகவும் பிடிக்கும். அவன் தயாரிக்கும் பீடா மிகப் பிரமாதமாக இருப்பதாக அக்பர் அடிக்கடி அவனிடமே புகழ்ந்து பேசுவதுண்டு! அந்த சமயங்களில் சௌகத் அலி அக்பருக்கு சலாம் செய்து விட்டு, “பீடா தயாரிப்பது எனக்கு கை வந்த கலை! என்னுடைய எட்டாவது வயது முதல் இந்தத் தொழிலை நான் செய்து கொண்டு இருக்கிறேன். சக்கரவர்த்தியான உங்களுக்கு நான் பீடா தயாரித்து கொடுப்பதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்” என்றான். அக்பர் அன்றுமுதல் தான் எங்கு சென்றாலும் தன்னுடன் சௌகத் அலியையும் உடன் அழைத்துச் செல்லத் தொடங்கினார். இவ்வாறு மூன்றாண்டுகள் கழிந்தன! ஒருநாள் அலி பீடாவில் கை தவறி சிறிது அதிகமாக சுண்ணாம்பினைக் கலந்து விட்டான். அதைத் தின்ற அக்பரின் நாக்கு வெந்து விட்டது. உடனே பீடாவைத் துப்பியவாறே, “முட்டாள்! உன்னுடைய பீடாவைத் தின்று என் நாக்கு வெந்து விட்டது. பீடா தயாரிப்பதில் தலை சிறந்தவன் என்று ஓயாமல் பெருமையடித்துக் கொண்டாயே! இதுவா நீ தயாரிக்கும் லட்சணம்?” என்று சீறினார். அலி பயத்தினால் மிகவும் நடுங்க ஆரம்பித்து விட்டான். மிகக் கோபத்துடன் அவனை முறைத்துப் பார்த்தவாறே, “உடனே சென்று ஒரு பை நிறைய சுண்ணாம்பு கொண்டு வா!” என்று கட்டளையிட்டார். அலி கடைக்குப் போய் ஒரு பை நிறைய சுண்ணாம்பு வாங்கினான். அப்போது அங்கே வந்த மகேஷ்தாஸ் “அலி! என்ன விஷயம்? எதற்கு இத்தனை சுண்ணாம்பு?” என்று கேட்டான். “இதை சக்கரவர்த்தி வாங்கி வரச் சொன்னார். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை!” என்றான் அலி. “தெரியவில்லையா? எந்த சந்தர்ப்பத்தில் இதை வாங்கச் சொன்னார்?” என்று மகேஷ் கேட்க, அலியும் நடந்ததைக் கூறினான்.சக்கரவர்த்தி எதற்காக ஒரு பை நிறைய சுண்ணாம்பு வாங்கச் சொன்னார் என்று மகேஷுக்குப் புரிந்து விட்டது. உடனே அவன் அலியிடம், “வயிறு நிறைய நெய் குடித்து விட்டு சக்கரவர்த்தியிடம் செல்!” என்றான்.“என்னப்பா! ஏற்கெனவே நான் யானைக் குட்டி போல் பருமனாக இருக்கிறேன். இந்த லட்சணத்தில் நான் வயிறு நிறைய நெய் தின்றால் பூதம் போல் ஆகிவிடுவேன்!” என்றான் அலி!“இன்று ஒருநாள் மட்டும் செய்” என்று சொல்லிவிட்டு மகேஷ் சென்று விட்டான்.மகேஷ் சொன்னால் அதில் ஏதோ காரணம் இருக்கும் என்று நம்பிய அலி, வீட்டிற்குச் சென்று ஒரு செம்பு நிறைய நெய் எடுத்து வயிறு முட்ட குடித்த பிறகு அவன் அக்பரை நாடிப் போனான்.சபையில் அமர்ந்திருந்த அக்பர் அலியைப் பார்த்து, “ஒரு பை சுண்ணாம்பு வாங்க இத்தனை நேரமா?” என்று கடிந்து கொண்ட பிறகு, ஒரு காவலனை நோக்கி “இவனை சபைக்கு வெளியே அழைத்துச் சென்று பையிலுள்ள சுண்ணாம்பு முழுவதையும் அவன் வாய்க்குள் போட்டு அடைத்து விடு!” என்றார். அப்போதுதான் அக்பர் தனக்குத் தந்த தண்டனையின் கொடூரம் அலிக்குப் புரிந்தது.கதறக் கதற அலியை வெளியே இழுத்துப் போன காவலன், அலியின் பையிலிருந்து சுண்ணாம்பை எடுத்து அலியின் வாயில் போட்டு விழுங்கச் செய்தான். ஒரு கவளம் சுண்ணாம்பு தின்ற உடனேயே, வாய், தொண்டை, வயிறு வெந்து போக அலி சுருண்டு விழுந்தான். தண்டனைக்குள்ளான அலி என்ன ஆனான் என்று பார்க்க அங்கு வந்த அக்பர், அலி தரையில் விழுந்திருந்தும் சுயநினைவுடன் இருப்பதைப் பார்த்து, “நீ இன்னும் சாகவில்லையா?” என்று கேட்டார்.“இல்லை, பிரபு!” என்ற அலி சிரமப்பட்டு எழுந்து நின்று, “வயிறு நிறைய நெய் சாப்பிட்டதாலோ என்னவோ, நான் உயிருடன் இருக்கிறேன்!” என்றான். “உன்னை யார் நெய் உண்ணச் சொன்னார்கள்?” என்று அக்பர் கேட்க, அலி மகேஷின் பெயரைக் கூறினான். உடனே மகேஷ் அங்கு அழைத்து வரப்பட்டான். அவனைப் பார்த்ததும், “பீர்பல்! உன் வேலைதானா இது? அவனை ஏன் நெய் சாப்பிடச் சொன்னாய்?” என்று அக்பர் கேட்டார். “பிரபு! அலியிடம் நடந்தைக் கேட்ட பிறகு நீங்கள் அவனை சுண்ணாம்பை விழுங்க வைக்கப் போகிறீர்கள் என்று தெரிந்து கொண்டேன். நெய் தின்ற பிறகு சுண்ணாம்பை விழுங்கினால் உடலுக்குத் தீங்கு ஏற்படாது என்று எனக்குத் தெரியும்! அதனால்தான் அவ்வாறு அவனை செய்யச் சொன்னேன்” என்றான் பீர்பல்.“அவன் மீது உனக்கு என்ன அவ்வளவு அக்கறை?” என்று அக்பர் கேட்க, “அக்கறை அவன் மீதில்லை, உங்கள் மீதுதான் பிரபு. அவன் தயாரிக்கும் பீடாவை நீங்கள் மிகவும் விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஏதோ தெரியாமல் அவன் ஒருநாள் செய்த தவறுக்காக அத்தனை பெரிய தண்டனையை அவன் பெறப் போவதைத் தவிர்க்க விரும்பினேன். நீங்கள் அவன் செய்த சிறிய தவறை மன்னித்து விட வேண்டும். அக்பர் சக்கரவர்த்தி மிகவும் இரக்க குணம் படைத்தவர் என்பதை நிரூபிக்க இதை விட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?” என்று கேட்டான் பீர்பல்.அவனுடைய சாமர்த்தியமான பேச்சினால் கவரப்பட்ட அக்பர், “நீ சொல்வது சரிதான். மூன்று ஆண்டுகளாக அருமையாக பீடா தயாரித்தவன் ஒருநாள் தெரியாமல் செய்த தவறுக்காக தண்டனை பெறுவது சரியல்ல. அவனை நான் மன்னித்து விடுகிறேன்” என்றவர் அலியைப் பார்த்து, “பிழைத்துப் போ” என்றார்.
|
எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு ஞாயிற்றுக்கிழமை ஏழைவிவசாயி ஒருவன் வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது அவனது பால்யபிராயத்து நண்பன் அவனை காண வந்தான். விவசாயி,"வா!வா! இத்தனை வருடங்களாக எங்கே போயிருந்தாய்? உள்ளே வா, நான் சிலரை சந்திக்க போய்க்கொண்டிருக்கிறேன். இப்போது விட்டுவிட்டால் அவர்களை திரும்ப பிடிப்பது கஷ்டம். அதனால் நீ வீட்டில் சிறிதுநேரம் ஓய்வெடுத்து கொண்டிரு. ஒரு மணிநேரத்தில் நான் திரும்பி வந்து விடுவேன். வந்தபின் நாம் பேசலாம்." என்றான். அந்த நண்பன்,"இல்லையில்லை, நானும் உன்னுடன் வருகிறேன். ஆனால் என்னுடைய உடை மிகவும் அழுக்காக இருக்கிறது. நீ எனக்கு வேறு மாற்றுடை கொடு. நான் மாற்றிக் கொண்டு உன்னுடன் வருகிறேன்," என்றான். பல நாட்களுக்கு முன், அரசர் சில விலை மதிப்பான ஆடைகளை விவசாயிக்கு பரிசாக கொடுத்திருந்தார். அவன் அதை விசேஷ காலங்களில் அணிய என்று பாதுகாப்பாக வைத்திருந்தான். அதை எடுத்து சந்தோஷமாக நண்பனிடம் கொடுத்தான். நண்பன் மேல்அங்கி, தலைப்பாகை, வேட்டி, அழகான ஆடம்பரமான செருப்பு என எல்லாவற்றையும் போட்டுக் கொண்டான். அவன் இப்போது அரசனைப் போல காட்சியளித்தான். தன்னுடைய நண்பனை பார்த்த விவசாயிக்கு சிறிது பொறாமை ஏற்பட்டது. ஒப்பிடும்போது இவன் ஒரு வேலைக்காரன் போல தோன்றினான். தன்னுடைய அழகிய ஆடைகளை கொடுத்து, தான் தவறு செய்துவிட்டோமோ என்று வருத்தப்பட்டான். தன்னை தாழ்வாக உணர்ந்தான். இப்போது எல்லோரும் தன் நண்பனையே பார்ப்பார்கள், தான் ஒரு வேலைக்காரன் போல தோன்றுவோம் என நினைத்தான். அவன் தன்னை நல்ல நண்பன் என்றும் தெய்வம் போன்றவன் என்றும் தன் மனதை தேற்றிக் கொள்ள முயற்சித்தான். தெய்வத்தைப் பற்றியும் நல்ல விஷயங்களை பற்றியும் மட்டுமே நினைப்பதாக முடிவு செய்தான். "நல்ல அங்கி, விலையுயர்ந்த தலைப்பாகையில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது? இதனாலென்ன?" என நினைத்தான். ஆனால் அவன் என்ன முயற்சி செய்தாலும் திரும்ப திரும்ப அங்கியும் தலைப்பாகையும் தான் அவன் மனதில் அலை மோதின. அவர்கள் நடந்து செல்லும்போது வழியில் கடந்து செல்வோர் அனைவரும் நண்பனையே கவனித்தனர். யாரும் விவசாயியை கவனிக்க வில்லை. அதனால் அவன் வருத்தமடைந்தான். தன் நண்பனுடன் பேசிக் கொண்டே இருந்தாலும் அவனுள்ளே அங்கியும் தலைபாகையுமே ஓடிக்கொண்டிருந்தன. போகவேண்டிய வீட்டிற்கு போய் சேர்ந்தவுடன் அவன் தன் நண்பனை அறிமுகம் செய்தான். "இவன் என் நண்பன், சிறுவயதுமுதல் நண்பன், மிகவும் அன்பானவன்." என்றவன் திடீரென,"ஆனால் இந்த துணிமணிகள் என்னுடையவை" என்றான். நண்பன் திகைத்து நின்றான். வீட்டிலுள்ளவர்கள் ஆச்சரியப் பட்டனர். இதை சொல்லியிருக்கக் கூடாது என உணர்ந்தான். ஆனால் காலம் கடந்து விட்டது. அவன் தனது தவறுக்காக வருத்தப்பட்டான், உள்ளுக்குள்ளே தன்னை கடிந்து கொண்டான். அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தபின், தன் நண்பனிடம் அவன் மன்னிப்பு கேட்டுக் கொண்டான். நண்பன், "நான் திகைத்துவிட்டேன். அந்தமாதிரி ஏன் சொன்னாய்" எனக் கேட்டான். விவசாயி,"மன்னித்துவிடு, வாய் தவறி விட்டது. நான் தப்பு செய்து விட்டேன்." என்றான். ஆனால் நாக்கு பொய் சொல்லாது. மனதில் இருப்பது மட்டுமே வாயிலிருந்து குதித்து வெளி வரும். நாக்கு ஒருபோதும் தவறு செய்யாது. விவசாயி, "என்னை மன்னித்து விடு. நான் எப்படி அந்தமாதிரி சொன்னேன் என எனக்கு தெரியவில்லை" என்றான். ஆனால் அந்த எண்ணம் தனது மனதிலிருந்து தான் வெளி வந்தது என்பது மிக நன்றாக அவனுக்குத் தெரியும். மற்றோர் நண்பனின் வீட்டிற்கு போனார்கள். இப்போது விவசாயி இந்த துணிமணிகள் தன்னுடையது என சொல்லக்கூடாது என்று உறுதியான தீர்மானம் செய்துகொண்டான். தனது மனதை நிலைப் படுத்திக் கொண்டான். அந்த நண்பனின் வீட்டு கேட்டை அடையும் போது அந்த துணிமணிகள் பற்றி எதுவும் பேசக் கூடாது என மாற்றமுடியாத தீர்மானம் செய்துகொண்டான். அந்த அப்பாவி மனிதனுக்கு, எதுவும் சொல்லக் கூடாது என தீர்மானம் செய்ய செய்ய, அந்த உறுதியான தீர்மானமே இந்த துணிமணிகள் என்னுடையவை என்பதை உள் மனதில் ஆழமாக கொண்டு செல்லும் என்பது தெரியாது. மேலும் இந்த உறுதியான தீர்மானம் எங்கு செய்யப் படுகிறது. ஒருவன் பிரம்மச்சரிய விரதம் பூணும்போது அவன் தன்னுடைய காம உணர்ச்சியை வலுக்கட்டாயமாக உள்நோக்கி தள்ளுவது போல, உணவு கட்டுப்பாட்டில் இருப்பதாகவோ, பட்டினி கிடப்பதாகவோ முடிவு செய்தால் அவன் அதிகமாக சாப்பிடும் ஆசையை அடக்கி வைப்பது போல, இது போன்ற முயற்சிகள் உள்ளே தவிர்க்கமுடியாத பின்விளைவுகளை ஏற்படுத்தும். எதிர்விளைவை ஏற்படுத்தும். நமது பலவீனம் எதுவோ அதுவே நாம். ஆனால் நாம் அதை அடக்கி ஆள முடிவு செய்கிறோம். அதை எதிர்த்து போராட தீர்மானிக்கிறோம். – இது தானாகவே ஆழ்மனதில் தகராறு உருவாக ஒரு அடிப்படையாக அமைகிறது. ஆகவே உள்ளே இந்த சச்சரவுடன், நமது விவசாயி அந்த வீட்டிற்க்குள் சென்றான். அவன் மிகவும் ஜாக்கிரதையாக, ‘இவன் எனது நண்பன்." என்றான். யாரும் அவன் சொல்வதை கவனிக்கவில்லை. எல்லோரும் நண்பனையும் அவன் துணிமணியையுமே ஆச்சரியத்தோடு கவனித்தனர். இது என்னுடைய அங்கி இது என்னுடைய தலைப்பாகை என அவனுக்கு தோன்றியது. ஆனால் உடையை பற்றி பேசுவதில்லை என்ற தீர்மானத்தை நினைவு படுத்திக் கொண்டான். அவன் உறுதி எடுத்திருந்தான். எல்லோரிடமும் எளிமையானதோ அழகானதோ உடைகள் உண்டு. இது ஒரு விஷயமே அல்ல என தனக்குதானே விளக்கம் கூறிக் கொண்டான். ஆனால் அந்த உடைகள் அவனது கண்களுக்கு முன் பெண்டுலம் போல ஆடிக் கொண்டிருந்தது. அவன் மறுபடியும் அறிமுகம் செய்தான். "இவன் எனது நண்பன். சிறுவயது முதலே நண்பன். நாணயமானவன். ஆனால் இந்த உடைகள் அவனுடையவைதான், என்னுடையவை அல்ல" எல்லோரும் ஆச்சரியமடைந்தனர். யாரும் இப்படி ஒரு அறிமுகத்தை கேட்டதேயில்லை. "உடைகள் அவனுடையவைதான், என்னுடையவை அல்ல." அங்கிருந்து வந்தபின் திரும்பவும் மனபூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டான். ‘மிகப் பெரிய தப்பு!" என்று அவன் ஒத்துக்கொண்டான். இப்போது அவன் என்ன செய்யக்கூடாது, என்ன செய்ய வேண்டும் என்பதில் குழப்பமடைந்தான். ‘உடைகள் இதற்கு முன் இதுபோல நினைவில் இருந்ததேயில்லை. கடவுளே எனக்கு என்ன நடந்தது.?" அவனுக்கு என்ன நடந்தது ? அவன் தன்னைக் கட்டுப் படுத்திக்கொண்ட முறையை கடவுளே முயற்சி செய்தால் கூட அந்த உடைகளை பற்றிய நினைப்பு கடவுளையும் பற்றிக்கொண்டு விடும். அந்த செயல்முறை அப்படிப் பட்டது என்பது அந்த அப்பாவி விவசாயிக்குத் தெரியாது. நண்பன் மிகுந்த மன வருத்தத்துடன்,"இனி நான் உன்னுடன் வரவில்லை" என்றான். விவசாயி அவன் தோளைப் பற்றி, "அப்படிச் செய்யாதே! என் வாழ்நாள் முழுவதும் ஒரு நண்பனிடம் இப்படி நடந்து கொண்டேனே என சங்கடத்துடனேயே நான் இருக்க நேரிடும். நான் சத்தியமாக திரும்பவும் இந்த உடைகளை பற்றி குறிப்பிட மாட்டேன். இதயபூர்வமாக, கடவுள் சத்தியமாக நான் உடைகளை பற்றி எதுவும் கூறவே மாட்டேன்." என்றான். ஆனால் ஒருவர் சத்தியம் செய்யும்போது அதைப் பற்றி அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு உறுதியான முடிவு எடுக்கும்போது அடி ஆழத்தில் வேறு ஏதோ அதனுடன் இணைந்துள்ளது. உறுதியான முடிவு மேல் மட்ட மனதில் எடுக்கப் படுகிறது, அதற்கு எதிரானது உள் மனதில் எங்கோ செருகப் படுகிறது. மனம் பத்து பிரிவுகளாக இருந்தால், மேற் பகுதியில் உள்ள ஒரு பிரிவு மட்டுமே முடிவு செய்கிறது. ஆனால் மீதி உள்ள ஒன்பது பிரிவுகளும் அந்த முடிவுக்கு எதிராக உள்ளன. பிரம்மச்சரியம் ஒரு பிரிவால் எடுக்கப் படும் முடிவு எனில் மீதி உள்ள மனம் அனைத்தும் உடலுறவுக்கு அலைகின்றன. இறைவனால் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட ஈடு செய்யமுடியாத அந்த முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்துக்காக ஏங்குகின்றன. அவர்கள் மூன்றாவது நண்பனின் வீட்டிற்கு சென்றனர். விவசாயி தன்னை மிகவும் கட்டுப் படுத்திக் கொண்டான். இறுக்கமானவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். ஏனெனில் ஒரு எரிமலையே அவர்களுக்குள் குமுறிக் கொண்டிருக்கிறது. வெளிப்பார்வையில் அவர்கள் கண்டிப்பானவர்களாக, கட்டுபாடானவர்களாக, இருப்பார்கள். ஏனெனில் அவர்களது இயல்பான போக்கை தன்னிச்சையாக விடாமல் உள்ளே பிடித்துவைத்து சிரமப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். நினைவில் கொள், கட்டாயமாக திணிக்கப்படும் எதுவும் தொடரவும் முடியாது, நிறைவு பெறவும் முடியாது. ஏனெனில் அதில் அளவற்ற சிரமம் ஏற்படுகிறது. நீ சில சமயங்களில் ஓய்வாக இருக்கவேண்டும். சில சமயங்களில் தளர்வு கொள்ள வேண்டும். உன்னுடைய முஷ்டியை நீ எத்தனை நேரம் இறுக்க மூடி வைத்திருக்க முடியும் 24 மணி நேரமுமா? நீ இறுக்க இறுக்க அது சோர்வடைந்து விடும். அதனால் அந்த அளவு வேகமாக அது திறந்து விடும். கடின வேலை செய்தால் அதிக சக்தி செலவாகி சீக்கிரத்தில் சோர்வாகி விடுவாய். எப்போதும் ஒரு செயலுக்கு ஒரு எதிர்செயல் இருக்கும், அந்த எதிர்செயல் எப்போதும் உடனடியாக நிகழும். உனது கைகள் எல்லா நேரமும் திறந்தே இருக்கலாம், ஆனால் முஷ்டியை இறுக்கமாக எல்லா நேரமும் வைத்திருக்க முடியாது. அது உன்னை சோர்வடைய செய்யும் அதன்பின் எந்த விஷயமும் வாழக்கையின் இயற்கையான பாகமாக இருக்க முடியாது. எப்போதெல்லாம் நீ கட்டாயப்படுத்துகிறாயோ, அப்போதெல்லாம் ஓய்வு நேரம் தொடர்ந்து வந்தே தீரும். அதனால் ஒரு துறவி எந்த அளவு கட்டுப்பாடானவனோ, அந்த அளவு அவன் ஆபத்தானவன். இருபத்தி மூன்று மணி நேரம் இறுக்கமாக சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் பின்பற்றிய பின், குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் தன்னை தளர்த்திக் கொள்ள வேண்டும். அந்த ஒரு மணி நேரத்திற்க்குள் அவன் தன்னுள் அடக்கிவைத்த அத்தனை தேவையற்றவைகளையும் வெளியேற்றியாக வேண்டிய அவசரம் ஏற்படுகிறது. இந்த விவசாயி உடைகளை பற்றி பேசக் கூடாது என்ற கட்டுப்பாட்டை இறுக்கமாக வைத்துக் கொண்டான். அவனது நிலையை கற்பனை செய்து பார். உனக்கு ஒரு சிறிதளவு மத அனுபவம் இருந்தால் போதும், அவனது மனநிலையை உன்னால் கற்பனை செய்து பார்க்க முடியும். சத்தியம் செய்திருந்தாலோ அல்லது சபதம் எடுத்திருந்தாலோ அல்லது விரதம் என்பதற்க்காக உன்னை கட்டுப் படுத்தி வைத்திருந்தாலோ உனக்கு அனுபவம் இருக்கும். இப்போது அந்த விவசாயியின் பரிதாபத்துக்குரிய மனம் என்ன பாடுபடும் என்பதை உன்னால் நன்றாக புரிந்து கொள்ள முடியும். அவர்கள் மற்றொரு வீட்டிற்க்கு சென்றனர். அந்த விவசாயி களைத்துபோய்விட்டான், வியர்த்துக் கொட்டியது அவனுக்கு. அந்த நண்பன் கவலைப் பட்டான். விவசாயி வேதனையால் உறைந்து போய்விட்டான். மெதுவாகவும் ஒவ்வொரு வார்த்தையையும் ஜாக்கிரதையாகவும் பேசியவாறே அவன் அறிமுகம் செய்தான். ‘இவன் எனது நண்பன், சிறு வயது நண்பன், மிகவும் நல்லவன்." ஒரு வினாடி அவன் தடுமாறினான். அவன் உள்ளிருந்து ஒரு உந்துதல் வந்தது. தான் மதியிழப்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. அவன் சத்தமாக,"இந்த உடைகள் என்னை மன்னித்து விடுங்கள். நான் அதைப் பற்றி எதுவும் சொல்லமாட்டேன். ஏனெனில் நான் அதைப் பற்றி எதுவும் சொல்லமாட்டேன் என சத்தியம் செய்திருக்கிறேன்.!" இந்த மனிதனுக்கு என்ன நிகழ்ந்ததோ, அதுவேதான் மனிதஇனம் முழுமைக்கும் நிகழ்கிறது. ஏனெனில் கட்டுப்படுத்தப்படுவதால், காமம் என்பது ஒரு வெறியாக, ஒரு நோயாக, நெறி தவறிய ஒன்றாக மாறிவிட்டது. அது விஷமாகி விட்டது. |
மாமன்னர் அசோகர் குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார். போரே வேண்டாம்… போரே மன்னனின் தொழில் என்றிருந்த அவர் புத்தரின் பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம் அடைந்திருந்த நேரம்! இப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர். அசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மீது பட்டது. உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது முடி துறவியின் காலில் பட்டது. ஒரு புன்னகையுடன் துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு ஒரே சங்கடம். ‘எத்தனை பெரிய ராஜ்ஜியத்தின் அதிபதி… உலகமே வியக்கும் ஒரு பேரரசன் போயும் போயும் இந்த பரதேசியின் காலில் விழுந்து, முடியை வேறு காலில் பட வைத்துவிட்டாரே!’ என்ற நினைத்து உள்ளுக்குள் கொஞ்சம் கோபமும் எரிச்சலும் அடைந்தார். அரண்மனை சென்றதுமே அசோகரிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட மன்னர் சிரித்தார். ஆனால் அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. அவரிடமிருந்து ஒரு விசித்திர உத்தரவு வந்தது அமைச்சருக்கு. “மந்திரியாரே… ஓர் ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் மன்னர். நாம் சொன்னதென்ன…. இவர் உத்தரவென்ன…. என்ற திகைப்புடன் கட்டளையை சிரமேற்கொண்டு ஏவலாட்களை நாடெங்கும் அனுப்பினார். ஆட்டுத் தலைக்கு அதிகம் கஷ்டப்படவில்லை. கறிக்கடையில் கிடைத்துவிட்டது. புலித்தலைக்கு ரொம்பவே அலைய வேண்டி வந்தது. கடைசியில் ஒரு வேட்டைக்காரனிடம் அது கிடைத்தது. ஆனால் மனிதத் தலை? உயிரோடிருப்பவனை வெட்டி தலையை எடுத்தால் அது கொலை… என்ன செய்யலாம் என யோசித்தபோது, வழியில் ஒரு சுடுகாடு தென்பட்டது. அங்கே புதைக்கக் கொண்டுவந்த ஒரு பிணத்தில் தலையை எடுத்துக் கொண்டனர். மன்னரிடம் கொண்டு போனார்கள். மூன்று தலைகளையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், “சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்று பொருளாக்கி வாருங்கள்,” என்றார். மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவர்களுக்கு ஆட்டுத்தலையை விற்பதில் எந்த சிக்கலும் இல்லை. பதிலுக்கு பண்டமும் கிடைத்தது. புலியின் தலையை வாங்க யாரும் முன் வரவில்லை. பலரும் அதை வேடிக்கைதான் பார்த்தார்கள். கடைசியில் ஒரு பணக்காரர் தன் வேட்டை மாளிகையை அலங்கரிக்க அதை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார். இப்போது மனிதத் தலைதான் மிச்சமிருந்தது. அதைப் பார்க்கவே யாரும் விரும்பவில்லை. அருவருத்து ஓடினர். வேறு வழியின்றி மனிதத் தலையுடன் அரண்மனைக்கே திரும்பினர் ஏவலாட்கள். மன்னரிடம் போய், விவரத்தைச் சொன்னார் அமைச்சர். “அப்படியா… சரி, யாரிடமாவது இலவசமாகக் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள்”, என்றார் மன்னர். ஒரு நாளெல்லாம் அலைந்தும் இலவசமாகக் கூட அதனை பெற்றுக் கொள்ள யாருமே முன் வரவில்லை. விஷயத்தைக் கேட்ட அசோக மன்னர் புன்சிரிப்புடன் இப்படிக் கூறினார்: “மந்திரியாரே… நீங்கள் தெரிந்து கொண்டது என்ன?” என்றார். அமைச்சர் மவுனம் காத்தார். “மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்புக்கு மரியாதை ஏது? சக மனிதன்தானே… வாங்கி வைத்துக் கொள்ளலாம் அல்லவா… ஆனால் நடை முறையில் இலவசமாகக் கொடுத்தாலும் அருவருத்து ஓடுகிறார்கள்… இதை யாரும் தொடக்கூட மாட்டார்கள். இருந்தும் இந்த உடம்பு உயிரும் துடிப்புமாக உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது. தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள்தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதே ஞானத்தைப் பெறும் முதல் வழி..!” என்றார். அமைச்சர் தலை கவிழ்ந்து நின்றார்!
|
போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியடாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றன். தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்றுஅங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான். தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம் கொண்டான். மனச்சோர்வினால் துணிவு இழந்தான். ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் கவர்ந்தது. குகையின் ஒரு பகுதியினுள் ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது. இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கடைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் "இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்? நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்" என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான். தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை. |
விஜயநகரப் பேரரசின் அவை கலைந்தது. அரசர் கிருஷ்ண தேவராயர் வெளியேறிக் கொண்டிருந்தார். மற்ற உறுப்பினர்களும் பின் தொடர்ந்தனர். அப்போது அமைச்சர் தெனாலிராமனிடம் மெல்லிய குரலில், “தெனாலி... உனக்கோ வயதாகி விட்டது. ஏன் நீ அரசரிடம் கேட்டு பணி ஓய்வு பெறக் கூடாது?” என்றார். அது அரசரின் காதில் விழுந்து விடவே, அரசர் சிரித்தவாறு, “தெனாலிராமா! வேண்டுமானால் சொல்... மகிழ்ச்சியோடு தருகிறேன்” என்றார். “அப்படியானால் சரி... ஆனால், ஒரு நிபந்தனை! எனக்குப் பதிலாக வரப்போகிறவரை நான்தான் சோதித்துத் தேர்வு செய்து தருவேன்...” என்றார். “அதற்கென்ன... அப்படியே செய்யலாம்...!” என்று அரசர் ஏற்றுக் கொண்டார். “அப்படியானால் உங்கள் மோதிரத்தை என்னிடம் கொடுங்கள்” என்றார் தெனாலிராமன். ஏன்...? எதற்கு? என்று அரசர் கேட்கவில்லை. கழற்றப் போனார். அதற்குள் முந்திக் கொண்டு, அமைச்சர் தன் மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்து விட்டார். பெற்றுக்கொண்டே தெனாலிராமன், “அடுத்த வியாழக்கிழமை சோதனை... அதில், வெற்றி பெறுபவர் எனது பதவியைப் பெறுவார்... நான் ஓய்வில் போய்விடுகிறேன்” என்றார். மோதிரத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலி, ஒரு சிறிய மர டப்பாவில் அதை வைத்து மூடி, அரண்மனையில் இருந்த யானை நீர்குடிக்கும் ஆழமான பெரிய தொட்டியினுள் அதைப் போட்டு விட்டு, “யார் இதை எடுக்கிறாரோ, அவரே எனக்குப் பின் என் பதவிக்கு வரமுடியும்...” என்றார். அடுத்த சில நாட்களில், பதவித் தேர்வுக்கு மனு செய்திருந்த இளைஞர்கள் அனைவரும் வந்து ஆழமான தொட்டியைப் பார்த்தனர். அப்போது தொட்டி முற்றிலும் வறண்டு போயிருந்தது. மோதிர டப்பா அடியில் கிடந்தது. அதனுள் எப்படி இறங்கி அதை எடுப்பது? அனைவரும் பல்வேறு உபாயங்களைச் செய்து பார்த்தனர். எவராலும் எடுக்க முடியவில்லை. அதற்குள் தெனாலிராமன் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. அமைச்சர், அவர் காதில் விழும்படியாகவே, “தெனாலிராமன் அந்த மோதிரத்தைத் தானே அபகரித்துக் கொள்ளச் செய்யும் தந்திரம் இது... இல்லாவிட்டால், அவனே அதை வெளியில் எடுத்துக் காட்டட்டுமே...!” என்றார். அதைக் கேட்டதும், தெனாலிராமன் நேராக அரண்மனைக்குச் சென்றார். அரசர் ஒவ்வொரு வருடமும் ஹோலிப் பண்டிகையின் போது அந்த யானைத் தொட்டியில்தான் வண்ணநீரை நிரப்புவது வழக்கம். அதற்கு நீர் நிரப்பவும் வடி கட்டவும் தனித்தனிக் குழாய்கள் உண்டு. தெனாலி சென்று நீர் நிரப்பும் குழாயை திறந்து விட்டார். தொட்டியில் நீர் நிரம்பவே, அடியில் கிடந்த சிறிய மர டப்பா நீரில் மிதந்து மேலே வந்துவிட்டது. அதை எடுத்துத் திறந்து மோதிரத்தை அரசர் கையில் ஒப்படைத்து விட்டார். அரசரிடமிருந்து அது அமைச்சரைப் போய்ச் சேர்ந்து விட்டது. மகிழ்ச்சி அடைந்த அரசர் கிருஷ்ண தேவராயர், “மோதிரத்தை எடுத்துத் தருபவர் தான் உனக்குப் பிறகு உன் பதவிக்கு வர முடியும் என்றாய்... இப்போது நீயே எடுத்துத் தந்து விட்டாய்... எனவே, உன் பதவி உன்னையே வந்தடைந்து விட்டது. ஆகவே, உனக்கு ஓய்வு தருவது பற்றி இனி நான் எண்ணிக் கூடப் பார்க்க முடியாது” என்றார். அமைச்சர் வெட்கித் தலைகுனிந்தார்.
|
ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் ராமு, மற்றொருவன் சோமு. இருவரும் இணை பிரியாத நண்பர்கள். ஒரு நாள் இருவரும் தேன் எடுப்பதற்காக காட்டுக்குப் பகுதிக்குச் சென்றனர். செல்லும் வழியில் ராமு சோமுவிடம், ''நீ எதைபற்றியும் பயப்டாமல் என்னுடன் வா. என்னைப் போன்ற நண்பனைக் காண முடியாது. என்ன துன்பம் வந்தாலும் நான் உன்னைக் காப்பாற்றுவேன்'' என்று கூறினான். காட்டிலுள்ள பறவைகள், மரங்கள், காட்டு விலங்குகள் போன்றவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருவரும் நடந்து சென்றார்கள். அப்போது கரடி ஒன்று உறுமும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அவர்கள் செல்லும் வழியிலேயே, அந்த கரடி திடீரென வந்து கொண்டிருந்தது. கரடியைக் கண்டதும் இருவரும் பயத்தில் ஓடத் தொடங்கினார்கள். கரடியும் அவர்களைத் துரத்தியது. ஓடத் தொடங்கிய சில வினாடிகளில் மரம் ஒன்று இருப்பதை ராமு கண்டான். உடனடியாக அந்த மரத்தில் ராமு ஏறி விட்டான். சோமுவுக்கோ மரத்தில் ஏறத் தெரியாது என்று அறிந்திருந்தும் மரத்தில் ஏற முடியாதவனைக் கீழே விட்டு விட்டுத் தன்னை மட்டும் காத்துக்கொள்ள சுய நலத்துடன் ராமு நடந்து கொண்டான். சோமுவுக்கு மரம் ஏறத் தெரியாததால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான். கவலையுடன் எப்படி கரடியிடமிருந்து தப்புவது என்று அவசரமாக யோசித்தான். இறந்தவன் போல் நடித்தால் கரடி தன்னைக் கொல்லாது என்று ஒரு யோசனை தோன்ற, பின்னர் நிலத்தில் விழுந்து மூச்சை அடக்கிக் கொண்டு இறந்தவனைபோல் படுத்துக் கொண்டான். அப்பொழுது கரடியும் அங்கு வந்து சேர்ந்தது. படுத்திருந்தவனை உண்பதற்காக அருகில் வந்த கரடி கீழே விழுந்து கிடந்தவன் காதருகே சென்று நுகர்ந்து பார்த்தது. கரடி சோமுவை முகர்ந்து பார்த்ததை, மேலேயிருந்து பார்த்த ராமு, கரடி சோமுவிடம் ஏதோ சொல்கிறது என்று தவறுதலாக புரிந்து கொண்டான். பிறகு அவன் இறந்தவன் என்று முடிவு செய்து அங்கிருந்து நகர்ந்து போய் விட்டது. கரடி செல்வதை மரத்தின் மேலிருந்து பார்த்த ராமு, கீழே இறங்கி வந்து சோமுவை எழுப்பினான். ''கரடி சென்று விட்டது இனி எழும்பு நாம் தப்பி விட்டோம்'' என்று ராமு கூறினான். சோமுவும் எழுந்து தன் யோசனை வெற்றியடைந்ததை எண்ணி நிம்மதியடைந்தான். கீழே படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்தான். ராமு சோமுவிடம், ''கரடி உன் காதில் என்ன இரகசியம் சொன்னது?'' என்ன என்று கேட்டான். அதற்குப் சோமு, ''ஆபத்தில் உதவாத நண்பனை என்றுமே நம்பக் கூடாது! என்று சொல்லிவிட்டுப் போனது'' என்றான். இப்பதிலால், ராமு தன் சுயநலப் புத்தியை எண்ணி நொந்து கொண்டான். சோமுவோ இனி மேல் எங்கள் நட்பு நீடிக்க வேண்டாம் என்று கூறிக்கொண்டு கொண்டு தனியே நடந்து சென்றான். ஆபத்தில் உதவாதது நட்பல்ல.
|
முட்டாளும் மூடனும் தவிர பரமார்த்த குருவும் மற்ற சீடர்களும் ராஜ வீதியில் காத்திருந்தனர். அந்த நாட்டு மன்னன் தேரில் ஊர்வலமாக வந்து கொண்டு இருந்தான். தங்கள் அருகே தேர் வந்ததும், கையில் தயாராக வைத்திருந்த செத்துப் போன தவளையையும், ஓணானையும் தேரின் சக்கத்தில் போட்டான், மட்டி. அதன் மீது சக்கரம் ஏறி நகர்ந்ததும், நசுங்கிப் போன தவளையையும் ஓணானையும் தூக்கி வந்தான், மடையன். பரமார்த்தர், தேருக்கு முன்னால் சென்று, ஐயோ! என் சீடர்களைக் கொன்று விட்டாயே! இது தான் நீ குடிமக்களைக் காப்பாற்றும் முறையா? என்று கூச்சலிட்டார். மட்டியும் மடையனும் சேர்ந்து கொண்டு, ஐயோ, கொஞ்ச நேரத்துக்கு முன்னால் எங்களோடு சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தீர்கள். அதற்குள் இப்படி நசுங்கிக் கூழ் கூழாக ஆகிவிட்டீர்களே! என்று ஒப்பாரி வைத்தனர். அரசனுக்கும் அமைச்சர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. யாரைக் கொன்றேன்? எனக் கேட்டான், மன்னன். என் அருமையான சீடர்களான முட்டாளையும், மூடனையும் நீதான் தேர் ஏற்றிக் கொன்று விட்டாய்! என்று குற்றம் சாட்டினார், குரு. அப்படியானால் எங்கே அவர்கள் உடல்கள்? என்று மந்திரி கேட்டார். இதோ இவைதான் என்றபடி, நசுங்கிப் போன தவளையையும், ஓணானையும் காட்டினார், பரமார்த்தர்! எல்லோருக்கும் வியப்பாக இருந்தது. இது தவளை அல்லவா? இந்தக் தவளையா உன் சீடன்? எனக் கேட்டான், மன்னன். இது ஓணான்! இதுவா உன் சீடன்? யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்? என்று கோபமாகக் கேட்டார், ஓர் அமைச்சர். அரசே! நான் எதற்கு உன்னை ஏமாற்ற வேண்டும்? உண்மையாகவே இந்தத் தவளையும் ஓணானும் என் சீடர்கள்தாம். நம்மைப் போல மனிதர்களாகத்தான் இவர்கள் இருந்தார்கள். ஒரு மந்திரவாதியின் சாபத்தால் இப்படி ஆகிவிட்டார்கள்! என்று பொய் கூறினார், பரமார்த்தர். தவளைதான் என்றாலும் மனிதர்களைப் போலவே பேசுவான்! ஓணான்தான் என்றாலும் தினம் நூறு பொற்காசு சம்பாதித்துக் கொண்டு வந்து கொடுப்பான்! என்று புளுகினான் மண்டு. இதைக் கேட்டு, அரசனுக்கும் மந்திரிகளுக்கும் பெரும் சங்கடமாக இருந்தது. சரி... நடந்தது நடந்து விட்டது. இப்போது என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டார், அமைச்சர். என்ன செய்வதா? இவர்களை வைத்துத்தானே எங்கள் பிழைப்பே நடந்தது. அதனால், மறுபடியும் இதே தவளைக்கும் ஓணானுக்கும் உயிர் கொடுங்கள். இல்லாவிட்டால், தினம் நூறு பொற்காசுகளை நீங்கள் தான் தர வேண்டும், என்றார் பரமார்த்தர். வேறு வழி தெரியாத மன்னன், மறுபடியும் உயிர் கொடுக்க முடியாது. அதனால் தினம் நூறு பொற்காசு தந்து விடுகிறேன், என்று ஒப்புக் கொண்டான். மடத்துக்கு வந்ததும், செத்துப் போன தவளையையும் ஓணானையும் காட்டி ராஜாவையே ஏமாற்றி விட்டோம்! இனிமேல் தினமும் நூறு பொற்காசு கிடைக்கப் போகிறது, என்று குதித்தார்கள். முட்டாளையும் மூடனையும் பார்த்து, நீங்கள் இரண்டு பேரும் செத்து விட்டதாகக் கூறி விட்டோம். ஆகையால் இனிமேல் மடத்தை விட்டு வெளியே போகவே கூடாது. தப்பித் தவறி வெளியே போனீர்களானால் மாட்டிக் கொள்வோம். ஜாக்கிரதை! என்று எச்சரிக்கை செய்தார், குரு. ஒரே வாரம் கழிந்தது. இரவு நேரத்தில் எல்லோரும் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டு இருந்தனர். முட்டாளும் மூடனும் மட்டும் விழித்துக் கொண்டனர். சோ! ஊர் சுற்றி ஒரு வாரம் ஆகிறது! யாருக்கும் தெரியாமல் ஒரு சுற்றுச் சுற்றிக் கொண்டு வந்து விடலாம்! என்று ஆசைப்பட்டனர். கையில் கொள்ளிக் கட்டையுடன் இருவரும் வெளியே புறப்பட்டனர். இரண்டு தெரு சுற்றுவதற்குள், இரவுக் காவலர்கள் கண்ணில் பட்டு விட்டனர்! உடனே இருவரையும் துரத்திப் பிடித்தனர். பொழுது விடிந்ததும், மற்ற சீடர்களும் குருவும் கைது செய்யப்பட்டனர். ஆளை உயிரோடு வைத்துக் கொண்டே செத்து விட்டதாக ஏமாற்றினீர்கள். அதனால், இப்போது உண்மையாகவே இவர்கள் இருவரையும் தேர் ஏற்றிச் சாகடிக்கப் போகிறேன்! என்றான், மன்னன். அதைக் கேட்ட குருவும் சீடர்களும், அலறினார்கள். ஐயோ, மன்னா! தெரியாமல் செய்து விட்டோம். உங்களிடம் இருந்து வாங்கிய பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்து விடுகிறோம். மன்னித்து விட்டு விடுங்கள், என்று அரசனின் கால்களில் விழுந்தார். சீடர்களும் கீழே விழுந்து வேண்டினார்கள். மன்னனும் போனால் போகிறது என்று மன்னித்து அனைவரையும் விடுதலை செய்தான்! |
"குரு நாதா! இனிமேல் நாம் மருத்துவத் தொழில் செய்தால் என்ன?" எனக் கேட்டான், முட்டாள். "அதனால் நமக்கு என்ன பயன்?" என்று பரமார்த்த குரு கேட்டார். "பணம் கிடைக்கும். அத்துடன் புண்ணியமும் கிடைக்கும்" என்றான், மூடன். "அப்படியே செய்வோம்" என்றார் குரு. "மனிதர்களுக்கு மட்டும்தானா?" என்று கேட்டான் மண்டு. "மனிதர்க்கும் வைத்தியம் செய்வோம்; மாட்டுக்கும் செய்வோம்; குழந்தைக்கும் செய்வோம்; குரங்குக்கும் செய்வோம்!" என்றான் மட்டி. பரமார்த்தரும் அவரது ஐந்து சீடர்களும் மருத்துவம் செய்யும் செய்தி ஊர் முழுதும் பரவியது. காய்ச்சலால் அவதிப்பட்ட ஒருவன் வந்தான். அவன் உடலைத் தொட்டுப் பார்த்த மடையன், "குருவே! இவன் உடம்பு நெருப்பாகச் சுடுகிறது!" என்றான். "அப்படியானால் உடனே உடம்பைக் குளிர்ச்சி அடையச் செய்ய வேண்டும்!" என்றார் பரமார்த்தர். "அதற்கு என்ன செய்வது?" எனக் கேட்டான் முட்டாள். "இந்த ஆளைக் கொண்டுபோய்த் தொட்டியில் உள்ள தண்ªரில் அழுத்தி வையுங்கள். ஒரு மணி நேரம் அப்படியே கிடக்கட்டும்" என்றார் குரு. உடனே மட்டியும் மடையனும் அந்த நோயாளியைத் தூக்கிக் கொண்டு போய், தொட்டி நீரில் போட்டனர். முட்டாளும் மூடனும் மாற்றி மாற்றி அவனை நீரில் அழுத்தினார்கள். நோயாளியோ "ஐயோ, அம்மா!" என்று அலறியபடி விழுந்தடித்து ஓடினான். கொஞ்ச நேரம் கழித்து ஒரு கிழவி வந்தாள். "கண் வலிக்கிறது" என்றாள். "இப்போது நேரமில்லை. உண் கண்ணை மட்டும் தோண்டி எடுத்துக் கொடுத்து விட்டுப்போ. சரி செய்து வைக்கிறோம்!" என்றான் முட்டாள். கிழவியோ, "ஐயையோ" என்று கத்திக் கொண்டு ஓடினாள். சிறிது நேரம் சென்றது. "உடம்பெல்லாம் வெட வெட என்று நடுங்குகிறது என்றபடி ஒருவன் வந்தான். "சும்மா இருப்பதால்தான் ஆடுகிறது. உடம்பு முழுவதும் கயிறு போட்டுக் கட்டி விடுங்கள்! அப்போது எல்லாம் சரியாகிவிடும்" என்றார் பரமார்த்தர். முட்டாளும் மூடனும், வந்தவனை இழுத்துக் கொண்டு சென்று தூணில் கட்டி வைத்தனர். கட்டி வைத்த பிறகும் அவன் உடம்பு நடுங்குவதைக் கண்ட மட்டி, "குருதேவா! இது குளிரால் வந்த நோய். இது தீர வேண்டுமானால், இவன் உடம்பைச் சூடாக்க வேண்டும்!" என்றான். அதைக் கேட்ட முட்டாள் தன் கையிலிருந்த கொள்ளிக் கட்டையால் நோயாளியின் உடல் முழுவதும் வரிவரியாகச் சூடு போட்டான். வலி தாங்காத நோயாளி சுருண்டு விழுந்தான். "பல் வலி தாங்க முடியவில்லை. என்ன செய்வது?" என்று கேட்டபடி வேறொருவர் வந்தார் "வலிக்கிற பல்லை எடுத்து விட்டால் சரியாகி விடும்" என்றார் பரமார்த்தர். சீடர்களோ, ஆளுக்குக் கொஞ்சமாக எல்லா பல்லையும் கத்தியால் தட்டி எடுத்துப் பொட்டலமாகக் கட்டிக் கொடுத்தனர்! "இனிமேல் உனக்குப் பல்வலியே வராது!" என்றார் பரமார்த்தர் சற்று நேரம் கழிந்தது. யானைக்கால் வியாதிக்காரன் ஒருவன் வந்தான். "உலகிலேயே இதற்கு இரண்டு வகையான வைத்தியம்தான் இருக்கிறது. நன்றாக இருக்கிற காலை வெட்டிவிட்டு, அந்த இடத்தில் யானையின் காலை ஒட்டி விட வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் காலுக்குச் சமமாக இந்தக் காலில் உள்ள சதையைச் செதுக்கி எடுத்து விட வேண்டும்!" என்றார் பரமார்த்தர் யானைக்கால் வியாதிக்காரனோ, "காலை விட்டால் போதும்" என்று தப்பினான். "ஐயா! ஒரே இருமல். தொடர்ந்து இருமிக் கொண்டே இருக்கிறþன்" என்றபடி வேறு ஓர் ஆள் வந்தார். வாயைத் திறப்பதால்தானே இருமல் வருகிறது. வாயை மூடிவிட்டால் என்ன? என்று நினைத்தார், பரமார்த்தர். "இவர் வாயை அடைத்து விடுங்கள்!" என்று கட்டளை இட்டார். குருவின் சொல்படி, கிழிந்த துணிகளை எல்லாம் சுருட்டி, இருமல்காரனின் வாயில் வைத்துத் திணித்தான் மட்டி. "என் ஆடு சரியாகத் தழை தின்னமாட்டேன் என்கிறது" என்றபடி ஒருவன் வந்தான். அந்த ஆட்டைக் கண்ட குரு, "தொண்டையில் ஏதாவது அடைத்துக் கொண்டு இருக்கும்" என்றார். "வாயைப் பெரிதாக ஆக்கிவிட்டால் போதும்" என்றான் மடையன். கத்தி ஒன்றைத் தூக்கிக் கொண்டு வந்தான், முட்டாள். அதைப் பிடுங்கி, ஆட்டை வெட்டப் போனான் மூடன். பயந்துபோன ஆட்டுக்காரன், ஆட்டை இழுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான். குருவும் சீடர்களும் வைத்தியம் என்ற பெயரில் கண்டபடி நடந்து கொள்வதைப் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டனர். ஊர் பெரியவர்கள் கூடி இனி குருவையும் சீடர்களையும் ஊருள் நுழையவிடக் கூடாதென முடிவெடுத்தனர்.. |
முல்லா ஒரு தடவை அயல்நாட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது. அந்தக் காலத்தில் எவ்வளவு தொலைதூரமாக இருந்தாலும் கழுதையின் மீது சவாரி செய்துதான்
செல்ல வேண்டும். முல்லா செல்ல வேண்டியிருந்ததோ பயங்கரமான காட்டு வழி. அங்கு கள்வர் பயமும் உண்டு.
முல்லா நீண்ட தொலைவு பயணம் புறப்பட்ட செய்தியை அண்டை வீட்டுக்காரர் அறிந்து மிகவும்
கவலைப்பட்டார். அவர் முல்லாவை நோக்கி முல்லா அவ்வளவு நீண்ட தூரம் பயணம் செய்கிறீர்களே. வழியில்
கள்வர் பயம் அதிகமாயிற்றே. நீர் பாதுகாப்பாகச் செல்ல ஏதாவது ஏற்பாடு செய்து
கொண்டீரா? என்று கேட்டார். " கள்வன் என்னை என்ன செய்வான்? என்னிடம் அப்படியொன்றும் பணம் காசு கிடையாதே
?" என்றார் முல்லா. " கள்வனுக்கு அதெல்லாம் கணக்கில்லை. உம்மிடம் காசு இல்லை என்றால் உமது கழுதையைப்
பிடுங்கிக் கொள்வான். கழுதை இல்லாமல் உங்களால் தொடர்ந்து எவ்வாறு பயணம் செய்ய
முடியும்?" என்று அண்டை வீட்டுக்காரர் கேட்டார். அவர் சொன்னதில் இருந்த உண்மையை முல்லா உணர்ந்து கொண்டார். " நீங்கள் சொல்வது சரிதான் நான் என்ன செய்வது? பிரயாணத்தைத் தவிர்க்க முடியாதே?"
எனக் கவலையுடன் கூறினார் முல்லா. " கவலைப்படாதீர்கள் என்னிடம் நல்ல உடைவாள் ஒன்று இருக்கிறது. அதைக் கையோடு எடுத்துச்
செல்லுங்கள். திருடன் எதிர்ப்பட்டால் இந்த உடைவாளைப் பயன்படுத்தி அவனை
விரட்டிவிட்டுக் கழுதையைக் காப்பாற்றுங்கள் " என்ற கூறி உடைவாளையும் அவரிடன்
அளித்தார். முல்லாவுக்கு வாள் எடுத்துச் சண்டை போட்டுப் பழக்கம் இல்லை என்றாலும் அண்டை
வீட்டுக்காரர் அன்போடு தருவதை மறுக்கக் கூடாதே என்று அவருடைய உடைவாளை வாங்கி
இடுப்பில் கட்டிக் கொண்டார். பிறகு அவர் பிரயாணத்தைத் தொடர்ந்தார். ஒரு காட்டு வழியாக முல்லா கழுதைமீது அமர்ந்து சென்று கொண்டிருந்தார். நான்கு திருடர்கள் அவரை வழிமறித்துக் கொண்டனர். " கிழவனாரே, உம்மிடம் உள்ள விலை உயர்ந்த பொருளைக் கொடுத்துவிடும். உம்மை உயிரோடு
அனுப்பி விடுகிறோம் " என்று திருடர்கள் கேட்டனர். " என்னிடம் காசு பணமெல்லாம் ஏதுவும் கிடையாதே நான் ஒரு பரம ஏழை" என்றார் முல்லா. " அப்படியானால் உம்முடைய கழுதையை எங்களிடம் ஒப்படைத்து விட்டு நடந்து செல்லும் "
என்ற கள்வர்கள் மிரட்டினர். " கழுதை இல்லாமல் இந்த வயதான காலத்திலே என்னால் நடந்து செல்ல முடியுமா?" என்று
கூறிச் சிறிது யோசனை செய்தார் முல்லா. " ஒரு ஏற்பாடு செய்யலாம் என்று இருக்கிறேன். உங்களுக்கு திருப்பதியாக இருக்கும்
என்று
தோன்றுகிறது" என்றார் முல்லா. " என்ன யோசனை?" என்று கள்வர்கள் கேட்டனர். " என்னிடம் ஒரு உடைவாள் இருக்கிறது கழுதைக்குப் பதிலாக அதைப் பெற்றுக் கொண்டு
என்னை விட்டு விடுகிறீர்களா?" என்றார் முல்லா. கள்வர்கள் உடைவாளை வாங்கிப் பார்த்தனர் விலை மதிப்புள்ள அருமையான வாள் அது.
கள்வர்களின் தொழிலுக்கும் அது பயன்படும். அதனால் அவர்கள் மகிழ்ச்சியோடு உடை வாளைப்
பெற்றுக் கொண்டு முல்லாவை கழுதையுடன் தொடர்ந்து போக அனுமதித்தனர். பிரயாணத்தை
முடித்துக் கொண்டு முல்லா ஊர் திரும்பினார். வீட்டுக்கு வந்த முல்லாவை அண்டை வீட்டுக்காரர் மகிழ்ச்சியுடன் வரவேற்று " பிராயணம்
எவ்வாறு இருந்தது" என விசாரித்தார். " எதிர்பார்த்ததைவிட நன்றாக இருந்தது" என்றார் முல்லா. " வழியில் கள்வர் தொல்லை ஏதாவது ஏற்ப்பட்டதா?" என அண்டை வீட்டுக்காரர் கேட்டார். " அதை ஏன் கேட்கிறீர்கள். நான்கு திருடர்கள் வந்து என்னை வளைத்துக் கொண்டார்கள்.
நல்ல வேளையாக நீங்கள் கொடுத்த உடைவாள் இருந்தது. அதை உபயோகித்து நிலமையைச்
சமாளித்து விட்டேன் " என்றார் முல்லா. " உடைவாளைப் பயன்படுத்தி அந்தக் கள்வர்களை விரட்டி அடித்திருப்பீர் என்று
நினைக்கிறேன்
" என்றார் அண்டை வீட்டுக்காரர். " உங்கள் உடைவாள் தான் என் உயிரைக் காப்பாற்றி கழுதையை மீட்டுத் தந்தது. உங்களுக்கு
நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன் " என்று முல்லா அண்டை வீட்டுக்காரருக்கு நன்றி
கூறினார். " உடைவாள் உங்களிடம் பத்திரமா இருக்கிறதல்லவா? இனி உமக்கு உடைவாள்
தேவைப்படாது. கொடுத்து விடுங்கள் " என்றார் அண்டை வீட்டுக்காரர். " உடைவாள் என்னிடம் ஏது?" அதைத்தான் அவர்களிடம் கொடுத்துவிட்டேனே என்றார் முல்லா. " கள்வனிடம் கொடுத்து விட்டீரா? அவர்களிடம் ஏன் உடைவாளைக் கொடுக்க வேண்டும்.
உடைவாளைக் கொண்டு சண்டைபோட்டு கள்வர்களை விரட்டியிருப்பீர் என்றல்லவா நான்
நினைத்தேன்" என்று வியப்பும் திகைப்பும் தோன்றக் கேட்டார் அண்டை வீட்டுக்காரர்.
காட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சியை முல்லா விரிவாக் எடுத்துச் சொன்னார். அண்டை வீட்டுக்காரருக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
|
எப்படியோ அரசனை ஏமாற்றி, மட நாட்டின் முதல் மந்திரி ஆகி விட்டார், பரமார்த்த குரு. அவருக்குத் துணையாகச் சீடர்களும் அரண்மனை ஊழியர்களாக நியமிக்கப்பட்டனர். "நம் குரு முதல் அமைச்சர் ஆகிவிட்டதால், இனி கவலையே பட வேண்டாம்" என்று சந்தோஷம் கொண்டனர், ஐந்து சீடர்களும் ஒருநாள், "நமது நாட்டுப் படை பலம் எப்படி இருக்கிறது?" என்று பரமார்த்தரிடம் கேட்டான் மட மன்னன். இதுதான் நல்ல சமயம் என்ற நினைத்தார், பரமார்த்தர். "மன்னா! உங்களிடம் சொல்லவே நாக்குக் கூசுகிறது. நம் நாட்டு யானைகள் எல்லாம் பட்டினியால் வாடி இளைத்து, பன்றிகள் போல் ஆகிவிட்டன!" என்று புளுகினார். சீடர்களும், "ஆமாம் அரசே! இப்படியே கவனிக்காமல் விட்டால், போரில் கட்டாயம் தோல்வியே ஏற்படும்" என்று ஒத்து ஊதினார்கள். அதைக் கேட்ட மன்னன், "அப்படியா? இரண்டு யானைகளை இங்கே அழைத்து வாருங்கள்" என்று கட்டளை இட்டான். மட்டியும் மடையனும் ஓடிச் சென்று இரண்டு பன்றிக் குட்டிகளை அரண்மனைக்குள் ஓட்டி வந்தனர். அதைப் பார்த்த அரசன், "சே! சே! பார்க்கவே சகிக்கவில்லையே! இவையா நம் நாட்டு யானைகள்?" என்று கேட்டான். முதலில் மட மன்னனுக்குக் கொஞ்சம் சந்தேகம் எற்பட்டது. "இது யானை என்றால், தும்பிக்கையைக் காணோமே?" என்று கேட்டான். "மன்னா! எல்லாம் முதலில் தும்பிக்கையுடன் இருந்த யானைகள் தான். பட்டினி கிடப்பதால் உடலும் மெலிந்து விட்டது, தும்பிக்கையும் சுருங்கி விட்டது" என்று விளக்கினார் பரமார்த்தர். "இவை மறுபடியும் பழைய உருவம் அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான் மடமன்னன். "மன்னா! இன்னொரு விஷயம். அதையும் பாருங்கள், பிறகு வைத்தியம் சொல்கிறோம்" என்றார் குரு. "நமது நாட்டுக் குதிரைப் படைகளும் இதே போல் இளைத்து விட்டன. எல்லாம் ஆட்டுக் குட்டிகள் மாதிரி ஆகிவிட்டன!" என்றான் மூடன். அப்படியா? வியப்பாக இருக்கிறதே! என்ன செய்யலாம் சொல்லுங்கள் என்றான் மன்னன். மன்னா! நாங்கள் அருமையான திட்டம் ஒன்று வைத்துள்ளோம். அதன்படி ஆயிரம் பொற்காசுகள் செலவாகும். அந்த ஆயிரம் பொற்காசுகளையும் எங்களிடமே கொடுத்து விடுங்கள். நாங்கள் எல்லாவற்றையும் பழையபடி குண்டாக்கி விடுகிறோம்! என்றனர், முட்டாளும், மூடனும் மடமன்னன் பெரிய கஞ்சன். அதனால் ஆயிரம் பொற்காசு செலவழிக்க மனம் வரவில்லை. "வேறு ஏதாவது யோசனை இருந்தால் சொல்லுங்கள்!" என்று கட்டளையிட்டான். "சே! நம் திட்டம் எல்லாம் பாழாகி விட்டதே!" என்று வருந்தினார், பரமார்த்தர். சீடர்களுக்கும் ஆத்திரமாக இருந்தது "அரசே! எல்லா யானைகளையும், குதிரைகளையும் நாட்டில் உள்ள வயல்களில் மேயவிடுவோம்! கொஞ்ச நாளில் சரியாகிவிடும்!" என்றான் மண்டு. "இதை வேண்டுமானால் செய்யலாம்!" என்றான் மடமன்னன். பரமார்த்தரின் ஆணையின்படி, மடநாட்டில் உள்ள பன்றிகள், ஆடுகள் அனைத்தும் அவிழ்த்து விடப்பட்டன. எல்லாம் சேர்ந்து கொண்டு, குடி மக்களின் வயல்களில் சென்று மேயத் தொடங்கின. இரண்டே நாளில் எல்லா வகையான தானியங்களும் பாழாகி விட்டன. அடுத்த மாதமே நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட்டது. பலபேர் சோற்றுக்கே வழியில்லாமல் இறந்தனர். பரமார்த்தரும், சீடர்களும் ஒரு பயனும் இன்றித் தண்டச் சோற்றுத் தடிராமன்களாக இருப்பதைக் கண்ட மன்னன், எல்லோரையும் விரட்டி அடித்தான். அடடா! எப்படியாவது ஆயிரம் பொற்காசுகளைச் சம்பாதித்து விடலாம் என்று நினைத்தோம். கடைசியில் இப்படிப் பாழாகி விட்டதே! என்று புலம்பியபடி பழையபடி மடத்துக்கே திரும்பினார்கள். |
ஒரு நாள் முல்லா தெருவழியா நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒரு குடிசை வாசலை அவர்
கடந்து சென்ற சமயம் குடிசைக்குள் ஏதோ சத்தம் கேட்கவே உள்ளே சென்றார். அந்தக் குடிசையில் ஒரு ஏழை விதவைப் பெண் வசித்து வந்தாள் துணிகளை தைத்துக் கொடுத்து
அவள் கஷ்ட ஜவனம் நடத்திக் கொண்டிருந்தாள் அவளுக்கு பத்து வயதில் ஒரு மகன்
இருந்தான். அந்தக் குடும்பத்தைப் பற்றி முல்லாவுக்கு நன்றாகத் தெரியும் அவர்கள் மீது அவருக்கு
அனுதாபமும் உண்டு. வீட்டுக்குள் தாயும் மகனும் எதோ சச்சரவில் ஈடுபட்டிருந்தனர். " இங்கே என்ன நடக்கிறது?" என்று முல்லா வினவினார். " முல்லா அவர்களே இவனைப் பாருங்கள் ஒழுங்காக பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று
அடம்பிடிக்கிறான், அறிவுரை கூறிப் பார்த்தேன் அடித்து மிரட்டிப் பார்த்தேன்
ஒன்றுக்கும் மசியமாட்டேன் என்கிறான் " என்றாள் தாய் வேதனையோடு. " குழந்தாய் நீ பள்ளிக்கூடம் போக வேண்டியது அவசியமில்லையா? அது உன்
எதிர்காலத்துக்கு நல்லதில்லையா?" என்று முல்லா சிறுவனுக்கு புத்திமதி கூறினார்.
பையன் கேட்பதாக இல்லை. " நான் பள்ளிக்கூடம் போகப்போவதே இல்லை" என்று அடம்பிடித்தான். முல்லா சுற்றும்முற்றும் பார்த்தார் தைப்பதற்காக அந்தப் பையனின் தாய் வைத்திருந்த
விலை உயர்ந்த துணி ஒன்று அவர் கண்களில் பட்டது. அதை எடுத்து முல்லா துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டு விட்டார். அதைக்கண்டு
தாயும் மகனும் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தனர். " அம்மா முல்லா விலை உயர்ந்த துணியைக் கிழித்துப் பாழாக்கி விட்டரே?" என்று
திகைப்போடு கேட்டான் பையன். " பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று உன் எதிர்கால வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்கிறாயே
அதைவிட இந்த விலை உயரந்த துணி பாழானது பெரிய விஷயமா" என்றார் முல்லா. இந்தச் சொற்கள் அவன் மனதில் பெரிய மாறுதலை உண்டாக்கிற்று உடனே புத்தகங்களை
எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பாட்டான். அவன் சென்றபிறகு முல்லா தாம் கிழித்த துணியின் மதிப்புக்கேற்ற விலையைக் கொடுத்து
விட்டுப் புறப்பட்டார்.
|
அறிஞர்கள் கூடியிருந்த ஒரு சபையில் மிகவும் பயனுடையது எது சூரியனா அல்லது சந்திரனா? என்பது குறித்துப் பட்டிமன்றம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அங்கே பேசியவர்கள் பெரும்பான்மையினர் சந்திரனைவிட சூரியனால்தான் உலகத்திற்கு அதிகப்
பயன் உண்டு என்ற கருத்தையே வலியுறுத்திப் பேசினர். அப்போது பேசியவர்களை நையாண்டி செய்து வேடிக்கை பார்க்க வேண்டும் என்று
முல்லாவுக்குத் தோன்றியது. அவர் உடனே எழுந்து " அறிஞர் பெருமக்களே, இங்கே நடந்த பட்டிமன்றம் தொடர்பாக எனது
கருத்தைக் கூறலாமா?" என்று கேட்டார். இது பொதுமன்றம், இங்கு யாரும் தங்கள் கருத்தினை எந்தவிதத் தடையுன்றிக் கூறலாம்.
முல்லா அவர்களே உங்கள் கருத்தைக் கூறுங்கள் என்று அறிஞர் பெருமக்கள் கேட்டுக்
கொண்டனர். சூரியனைவிடச் சந்திரனால்தான் உலகத்திற்கு அதிகமான பயன் கிடைக்கிறது என்று
நான் கருதுகிறேன் என்றார் முல்லா. அது எவ்வாறு விளக்குங்கள் என்று அறிஞர்கள் கேட்டனர். பகலில் நமக்கு இயற்கையாக வெளிச்சம் இருக்கிறது. அதனால் சூரியனுடைய உதவி நமக்குத்
தேவையே இல்லை. இரவில் இருளாக இருக்கிறது. சந்திரன் இருளை அகற்றி நமக்கத் தேவையான
ஒளியை இரவிலே அளிக்கிறது. அதனால் சந்திரன் தான் நமக்கு அதிகப் பயனை அளிக்கின்றது
என்றார் முல்லா. முல்லா தங்களை நையாண்டி செய்கிறார் என்பதை உணர்ந்து அறிஞர்கள் சிரித்து
மகிழ்ந்தார்கள். |
அதிசயக்குதிரை கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர்.அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது. ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருந்தது.குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு கொழுத்தான். ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு வரவழைத்தார் மன்னர். அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து “உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை” என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிரானோ “என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை.” என்றான். “குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன்” என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார். குதிரைப்படைத்தலைவருக்கு நீண்ட தாடியுண்டு குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார்.அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார். அதற்குத் தெனாலிராமன் “இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப் படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப் படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் ” என்றான்.இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார்.
|
ராமகிருஷ்ணர் 19-தாவது நூற்றாண்டின் கடைசியில் வாழ்ந்தவர் மிகவும் வெகுளி. கேசவ் சந்திரசென் என்பவர் மிகவும் படித்தவர், பண்டிதர், அந்த கால கட்டத்தில் மிகவும் படித்த பண்டிதர்களில் ஒருவர். அவர்கள் இருவரும் அருகருகில்தான் வாழ்ந்தனர். கேசவ் கொல்கத்தாவில் இருந்தார், ராமகிருஷ்ணர் கொல்கத்தா அருகே கங்கை நதிகரையோரம் இருந்த தக்ஷ்ணேஷ்வரில் இருந்த சிறிய கோவிலில் பூசாரியாக வேலை செய்தார். கேசவ் சந்திரா அவருடைய புத்திசாலித்தனம், அவருடைய தர்க்க அறிவு, வாதத்திறமை, அவருடைய அறிவு, விவேகம், வேதநூல்களில் அவருக்கிருந்த புலமை ஆகியவற்றிற்க்காக நாடு முழுவதும் போற்றப்பட்டார். மக்கள் எல்லா இடங்களில் இருந்தும் வந்து அவர் காலடியில் அமர்ந்து அவர் பேச்சைக் கேட்டனர். இப்படி இவர் பேச்சைக் வருடக்கணக்கில் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் தக்ஷிணேஷ்வர் கோவிலில் இருக்கும் ராமகிருஷ்ணரிடம் செல்வதை பார்த்து அவர் மிகவும் குழப்பமடைந்தார். அவருக்கு படிப்பறிவில்லை, எந்த வேதபுத்தகத்தைப்பற்றியும் எதுவும் தெரியாது, அவருக்கு அறிவு ஏதும் இருப்பதாகவே தெரிவதில்லை, அவருக்கு தர்க்கம் ஏதும் செய்ய தெரியாது, எதைப் பற்றியும் பேசி யாருக்கும் அவரால் புரிய வைக்கவும் முடியாது. என்ன நடக்கிறது இங்கே என்று மிகவும் குழப்பமடைந்தார் கேசவ். அவருடன் வருடக்கணக்கில் இருந்து அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் இப்போது அங்கே செல்கின்றனர். அவரிடம் கூட்டம் கூடிக் கொண்டிருந்தது. கேசவ் கேள்விப்பட்ட வகையில் ராமகிருஷ்ணர் கிட்டத்தட்ட அரைப்பைத்தியம் போன்றவர். திடீரென ஆடுவார், பாடுவார். நல்லதொரு பாடலை கேட்டவுடன் சமாதி நிலை அடைந்து விடுவார். பல மணி நேரங்களுக்கு அந்த சமாதி நிலை நீடிக்கும். அவர் அவருள் ஆழ்ந்து போய் விடுவார், அவரை யாராலும் எழுப்ப முடியாது. அது சாதாரண தூக்கமல்ல, அது கோமா போன்றது. ஒரு முறை அவர் அது போன்று 6 நாட்களுக்கு இருந்தார். அவரை எழுப்ப எல்லோரும் இயன்றவரை முயன்று பார்த்தனர். ஆனால் எல்லாமே தோல்வியில்தான் முடிந்தது. அவரை யாராலும் எழுப்ப முடியவில்லை. 6 நாட்களுக்கு பின் எழுந்த அவர் கண்களில் கண்ணீருடன், "ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள் நான் என்னுள் ஆனந்தமாக இருந்தேன். என்னை வெளி உலகுக்கு இழுத்துக் கொண்டே இருந்தீர்கள், இங்கே ஒன்றுமே இல்லை. நான் எல்லாவற்றையும் அனுபவித்து பார்த்து விட்டேன். என்னுடைய சுயத்தை உணரவோ, முடிவற்ற ஆனந்தத்தை கொடுக்கவோ, அழிவற்ற பரவசத்தை அளிப்பதற்க்கோ இங்குள்ள எதனாலும் முடியாது. அதனால் நான் எப்போதெல்லாம் நான் உள்ளே சென்றாலும் என்னை தொந்தரவு செய்யாதீர்கள். என்னை விட்டு விடுங்கள்". என்று கூறினார். 6 நாட்கள் என்பது மிகவும் அதிகமான நாட்கணக்குதான். அவர் கோமாவில் இருந்தால் சீடர்கள் கவலைப்படாமல் என்ன செய்வார்கள்!. இது போல கேசவ்வை வந்து சேர்ந்த செய்திகள் அனைத்துமே இந்த ராமகிருஷ்ணர் ஒரு கிறுக்கு, மறைகழன்றவர், லூசு என்பதாகத்தான் இருந்தது. ஆனால் அவரிடம் வந்து அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த அனைவருமே மெத்த படித்தவர்கள், பேராசிரியர்கள், வேத விற்பன்னர்கள். அவர்கள் எப்படி இந்த ராமகிருஷ்ணரிடம் போனார்கள்? இறுதியாக கேசவ் தானே போய் அவரை பார்ப்பது என்று தீர்மானித்தார். பார்ப்பது மட்டுமல்லாமல் அவரிடம் வாதிட்டு அவரை தோற்கடிப்பது என்றும் நினைத்தார். அவர் ராமகிருஷ்ணருக்கு, "நான் இந்த தேதியில் வருகிறேன். தயாராக இருங்கள். நான் இறுதியான விஷயங்களைப் பற்றி பேசி உங்களுடன் தர்க்கம் செய்யப் போகிறேன்." என்று செய்தி அனுப்பினார். ராமகிருஷ்ணர் இதை கேள்விப்பட்டதும் சிரித்தார். "கேசவ் சந்திராவை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். அவர் மிகச் சிறந்த தர்க்கவாதி, புத்திசாலி. ஆனால் அவர் யாருடன் தர்க்கம் செய்யப்போகிறார் என்று அவருக்குத் தெரியவில்லை. வரட்டும், நான் இந்த போட்டியை ஒத்துக் கொள்கிறேன். இது ஒரு நல்ல காரணமாக இருக்கும்." என்றார். அவரது சீடர்கள், "இது நன்றாக இருக்காது. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இதுவரை யாருடனும் போட்டியிட்டதேயில்லை. அவர் அவரது சீடர்களுடன் வரப் போகிறார். அத்தனை பேர் முன்னிலையிலும் …….. வேண்டாம் இந்த விஷப்பரீட்சை". என்றனர். ஆனால் ராமகிருஷ்ணர் கூறியது எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. அவர், "நான் வாதிடப் போவதில்லை, ஏனெனில் நான் வாதாடும் மனிதனல்ல. அவர் வரட்டும், எனக்கு சமய நூல்களைப்பற்றி தெரியாது, தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு உண்மை என்னவென்று தெரியும், நான் எதற்கு கடன்வாங்கப்பட்ட தகவலறிவைப் பற்றி கவலைப்பட வேண்டும்? நான் படிக்கவில்லை, எனக்கு எப்படி நிரூபிப்பது, அல்லது நிரூபித்ததை உடைப்பது என்று தெரியாது, தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. என்னுடைய இருப்பே போதுமானது, அவர் வரட்டும்." என்று கூறினார். கேசவ் சந்திரா இவருடைய இருப்பை எப்படி ஒரு வாதமாக ஏற்றுக் கொள்வார் என்று சீடர்களுக்கு தெரியாததால் அவர்கள் பயந்தனர். கேசவ் சந்திரா வந்தார். ராமகிருஷ்ணர் வெளியே வந்து இவரை அணைத்து உள்ளே கூட்டிச் சென்றார். கேசவ் இப்படி இவர் வெளியே வந்து காத்திருந்து அணைத்து உள்ளே கூட்டிச் செல்வார் என்று எதிர்பார்க்கவேயில்லை. "நீங்கள் வந்ததற்கு மிகவும் நன்றி. நான் நீங்கள் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தேன். எப்போதெல்லாம் உங்களுக்கு என்னிடம் வாதிட தோன்றுகிறதோ அப்போதெல்லாம் நீங்கள் என்னிடம் வரலாம். என்னிடம் போட்டியிட நீங்கள் எப்போதும் வரலாம். முன்கூட்டியே சொல்லிவிட்டு வர வேண்டிய அவசியம் இல்லை. நான் எப்போதும் ப்ரீதான். நான் 24 மணி நேரமும் இந்த கோவிலிலேயேதான் இருப்பேன். நீங்கள் இரவு பகல் எந்த நேரமும் வரலாம்". என்றார் ராமகிருஷ்ணர். கேசவ் தனக்குத்தானே எதற்காக வந்தோம் என நினைவு படுத்திக் கொண்டார். அது மிகவும் கடினமானதாக இருந்தது. இவர் மிகவும் அன்பானவராக இருந்தார், இவரது அதிர்வே மிகவும் பிடித்தமானதாக இருந்தது. மேலும் ராமகிருஷ்ணர், "முதலில் உங்களது வாக்குவாதத்தை ஆரம்பிக்கும் முன் உங்களை வரவேற்பதற்காக நான் நடனமாடுகிறேன்". என்றார். அங்கே இருந்த அவரது இசைக்குழுவினர் வாத்தியங்களை வாசிக்க ஆரம்பித்தனர், இவர் நடனமாட ஆரம்பித்தார். கேசவ் சந்திரரால் நம்பவே முடியவில்லை. அவரது சீடர்களாலும் நம்ப முடியவில்லை. சந்திரா பலருடன் வாக்குவாதம் செய்திருக்கிறார். நாடு முழுவதிலும் உள்ள பல பண்டிதர்களை போட்டியிட்டு வென்றிருக்கிறார். ஆனால் நடனம் மூலம் தன்னை வரவேற்ற ஒருவரை இதுவரை அவர் சந்திக்கவில்லை. மேலும் நடனம் மிகவும் அற்புதமாக இருந்தது. அது ஒரு பொங்கிப் பெருகும் அன்பின் அடையாளமாக இருந்தது. அது சாதாரணமானதாக இல்லை, அது வரவேற்பின் உச்சகட்டம். கேசவ் சந்திரர் கூட இவர் சத்தியமானவர் என்பதை உணர்ந்தார். நடனம் முடிந்த பின் ராமகிருஷ்ணர் "இப்போது நீங்கள் ஆரம்பிக்கலாம்" என்று கூறினார். கேசவ் சந்திரா, "நீங்கள் முதலில் கடவுள் இருக்கிறார் என்பதை எனக்கு நிரூபிக்க வேண்டும்" என்றார். ராமகிருஷ்ணர் சிரித்தார். "கடவுள் இருப்பதற்க்கு சான்றா ? நீதான் சான்று.! இல்லாவிடில் எங்கிருந்து இவ்வளவு விவேகம் வந்தது? இது உறுதியாக பிரபஞ்சத்திலிருந்துதான் வந்திருக்க வேண்டும், பிரபஞ்சத்தால் கேசவ் சந்திரா போன்றவரை உருவாக்க முடியும் என்றால் அது தன்னுணர்வற்றது அல்ல, அது விவேகமற்றதுமல்ல. இதைத்தான் நாம் கடவுள் என்றழைக்கிறோம். எப்படி அழைக்கிறோம் என்பது பொருட்டல்ல. நீதான் சான்று. நீதான் சான்று என்பதை அறியாமல் நீயே சான்று கேட்பதுதான் இதில் விந்தை. நான் யாரை வேண்டுமானாலும் கொண்டு வந்து நிறுத்துகிறேன், நீதான் சான்று என்பதை எல்லோரும் ஒத்துக் கொள்வர். நாம் கடவுள் என்றழைப்பது பிரபஞ்சம் புத்திசாலித்தனத்தோடு இருப்பதுதான், பிரபஞ்சம் தன்னுணர்வின்றி இருப்பதில்லை. என்றார். கேசவ் சந்திராவின் சீடர்கள் கேசவ் சந்திரா இவ்வளவு அதிர்ச்சியடைந்து பார்த்தேயில்லை. அவர் மௌனமாகிவிட்டார், என்ன சொல்வதென்றே அவருக்கு தெரியவில்லை. ராமகிருஷ்ணரின் சீடர்கள்கூட அதிர்ச்சியடைந்து விட்டனர். அவர்கள், "அடக் கடவுளே, எப்படி இவர் அவருடன் வாதிடப் போகிறாரோ என நாம் நினைத்தோம், ஆனால் இவர் எந்த சிரமுமில்லாமல் அவரை வாயடைக்கச் செய்து விட்டாரே, எந்த புத்தகத்திலிருந்தும் மேற்கோள் எதுவும் காட்டவில்லை, கேசவ் சந்திராவே தனக்கு எதிரான வாதத்தை செய்து கொண்டு விட்டார்" என்று பேசிக் கொண்டனர். ஒவ்வொரு முறை கேசவ் சந்திரா எதையாவது மிக நன்றாக சொல்லும் போது ராமகிருஷ்ணர் ஒரு குழந்தை போல கை தட்டி பாராட்டுவார். ஆனால் தனக்கு எதிராக தானே விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்கிறோம் என அவர் நினைக்கவேயில்லை. சீடர்கள், "நான் அவருக்கு எதிராக வாதம் புரிந்து கொண்டிருக்கிறேன், அவர் மகிழ்ச்சியாக கை தட்டிக் கொண்டிருக்கிறார், அவருகென்ன பைத்தியமா என கேசவ் சந்திரா நினைத்தார்" என கூறிக் கொண்டனர். வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தபோது இடையில் ராமகிருஷ்ணர் எழுந்துவந்து கேசவ்வை கட்டிதழுவிக் கொண்டு, "இது மிகவும் அற்புதமான பாயிண்ட். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நீங்கள் தொடருங்கள்" என்று கூறினார். எந்த வாக்குவாதமும் செய்ய வேண்டிய தேவையேயில்லாமல் அவரிடம் இருந்த அந்த சந்தோஷம், அந்த அன்பு, அந்த அசைக்க முடியாத அமைதி இவைதான் அவருடைய வெற்றியாக அமைந்தன. கேசவ் சந்திரா ராமகிருஷ்ணரின் பாதங்களில் வீழ்ந்து பணிந்து "என்னை மன்னித்துவிடுங்கள். நான் உங்களைப் பற்றி தவறாக புரிந்து கொண்டிருந்தேன்" என்றார். ராமகிருஷ்ணர், "என்ன இது நீங்கள் மிகவும் படித்தவர், நான் படிக்காதவன். படிப்பறிவில்லாதவன், வெகுளி, என்னால் எனது பெயரைக் கூட எழுத முடியாது. எனக்கு என்னைத் தெரியும், ஆனால் எனக்கு கையெழுத்திடத் தெரியாது, எனக்கு படிக்கத் தெரியாது. நீங்கள் இப்படி செய்ய வேண்டியதில்லை" என்றார். கேசவ் சந்திரா ராமகிருஷ்ணரின் பக்தர்களில் ஒருவராக மாறிவிட்டார். ராமகிருஷ்ணரிடம் எந்த கேள்விக்கும் பதில் இல்லை, அவரிடமும் எந்த கேள்வியும் இல்லை. ஆனால் அவரது வெகுளித்தனமும் எளிமையும் பல பேரை கவர்ந்தது, பலபேரை மாற்றியது. அவருடைய அன்பே மிகப்பெரிய இரசாயனமாற்றத்தை தந்தது. |
தேரிக்குடியிருப்பு என்ற ஊரின் எல்லையில் இருந்த காட்டில் பெரிய குளம் இருந்தது, அதனை ஒட்டி சிறிய நீரோடை ஓடிக் கொண்டிருக்கும். அந்த குளத்தில் நிறைய மீன்கள், நண்டுகள், மற்றும் அனைத்து நீர்வாழ் இனங்கள் வாழ்ந்து வந்தன. அவற்றில் ராமு, சோமு, தாமு என்ற மூன்று மீன்கள் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அந்த மூவரும் எங்கே சென்றாலும் ஒன்றாகவே போவார்கள். ஒரு பயமும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் மகிழ்ச்சியை கெடுக்கும் விதமாக ஒரு நாள் மாலையில் ஒரு இரண்டு மனிதர்கள் அங்கே வந்தார்கள், வேட்டையாடிய களைப்பு முகத்தில் தெரிந்தது, குளத்து நீரை அருந்தி விட்டு, குளத்தை நன்றாக ஆராய்ந்தார்கள், பின்னர் அவர்களில் ஒருவர் “இந்த குளத்தில் நிறைய மீன்கள் இருக்கிறதே, அதுவும் நன்றாக வளர்ந்து கொழு கொழு என்று இருக்கிறதே, நாம் வீணாக காடு மேடு என்று அலைந்து வேட்டையாட வேண்டாம், பேசாம இங்கே நாளை வந்து வலையை விரிப்போம், மாட்டிக் கொள்ளும் மீன்களை விற்று பணம் சம்பாதிக்கலாம்” என்றார். மற்றவரும் “ஆகா, அருமையான யோசனையாக இருக்கிறதே” என்றார். இவர்கள் பேசுவதை கேட்ட ராமு என்ற மீன் பெருங்கவலை அடைந்தது, உடனே தன் நண்பர்களான சோமு, தாமுவிடம் கூறியது. காட்டின் நடுவில் இருந்ததால் இதுவரை பெரிய ஆபத்து வந்தது இல்லை, குளத்தில் நடுவில் போய் இருந்தால் பறவைகள் கூட தங்களை ஒன்றும் செய்தது இல்லை, இன்றோ இந்த மனிதர்களால் பெரிய ஆபத்து வந்து விட்டதே என்ன செய்யலாம் என்று யோசித்தன. ராமு எப்போவும் வரும்முன் காத்துக் கொள்ளும் மனம் படைத்த மீன், மற்ற மீன்களைப் பார்த்து, நாளை கண்டிப்பாக அவர்கள் இங்கே வருவார்கள், நாம் இன்று இரவே இக்குளத்தை விட்டு நீரோடையின் உதவியால் அருகில் இருக்கும் வேறு குளத்திற்கு போகலாம். சில காலம் போனபின்பு மீண்டும் இங்கே வரலாம் என்றது. ராமுவின் நல்ல யோசனையை மற்ற இருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் சும்மா சொல்லிவிட்டு போயிருப்பார்கள், அவர்களாவது நம்மை பிடிப்பதாவது, நீ வீணாக பயப்படுகிறாய் என்றன. ராமு எவ்வளவோ சொல்லிப் பார்த்தது, ஆனால் சோமு,தாமு இருவரும் கேட்கவில்லை. ராமு அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் இன்று இரவே அந்த குளத்தை விட்டு போவதாக சொல்லி விட்டு இரவே தப்பி வேற குளத்திற்கு போய் விட்டது. மறு நாள் காலையில் சோமு, தாமு இருவரும் கூடி பேசினார்கள், மீன் பிடிப்பதாக சொன்னவர்களை காணவில்லை, சும்மா பேச்சு சொன்னதை நம்பி ராமு வேற குளத்திற்கு போனது முட்டாள்த்தனம் என்று கேலி செய்தன. சிறிது நேரத்தில் வலை விரிப்பதாக சொன்ன இருவரும் பெரிய வலையை எடுத்து வந்து எங்கே வலை வீசுவது என்று பேசினார்கள். அவ்வளவு தான் அதைக் கேட்டு சோமு “அய்யோ கடவுளே!, ராமு அப்போவே சொன்னதே, இரவே தப்பியிருக்கலாமே” என்று புலம்பியது. ஆனால் தாமு அந்த சூழ்நிலையிலும் கொஞ்சமும் பயப்படவில்லை, “ஏன் பயப்படுகிறாய், குளத்தில் எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன, நாம் மறைந்துக் கொள்ளலாம்” என்றது. சோமு கொஞ்சம் கொழு கொழு மீன், அதற்கு பயம் வந்து விட்டது, அதற்குள் மீனவர்கள் வலை வீச, தாமூ ஓடி ஒளிந்துக் கொண்டது. சோமு மாட்டிக் கொண்டது, வலையில் இருந்து தன்னை விடுவிக்க படாத பாடு பட்டது, இறுதியில் சோமுவின் வால் பகுதியும் முதுகும் சேதமடைந்து, வலையில் இருந்து விடுபட்டு நீரோடையில் பாய்ந்து தப்பி விட்டது. உடல் எங்கும் ரத்தம், வரும் முன்னால் காக்காமல் வந்த போது காக்க நினைத்த தன் முட்டாள்தனத்தை நினைத்து வருந்தியது. தாமு குளத்தின் உள்ளே இருந்த பாறையின் அடியில் ஒளிந்துக் கொண்டது, தான் வீரமாக தப்பியதை நினைத்து பெருமைப்பட்டது. அது ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. வந்த இருவரில் ஒருவர் நீண்ட கம்பை எடுத்து குளத்தின் அடியில் இருக்கும் பாறைகளில் செலுத்தி அசைத்தார், அவ்வாறு செய்கையில் ஒரு முறை அந்த கம்பானது தாமுவை தாக்கியது, தாமு தப்பிக்க நினைத்து அதிலிருந்து வெளியே வர, அங்கே இருந்த வலையில் மாட்டிக் கொண்டது. சிறிது நேரத்தில் மீனவர்கள் வலையை வெளியே எடுத்து மாட்டிய அனைத்து மீன்களையும் தரையில் போட்டு கொன்றார்கள். அதில் தாமுவும் ஒரு மீன். வரும்முன் காப்போம் என்ற கொள்கை கொண்ட ராமு ஒரு ஆபத்தும் இல்லாமல் தப்பி, மகிழ்ச்சியாக வாழ்ந்தது, வந்த போது காப்போம் என்ற கொள்கை உடைய சோமு, உடல் எங்கும் காயப்பட்டு, மற்ற மீன்களுக்கு பயந்து பயந்து வாழ்ந்தது, வந்தப்பின்பு பார்ப்போம் என்ற கொள்கை உடைய தாமுவோ கொல்லப்பட்டு விட்டது. குழந்தைகளே! இக்கதையானது நம் அனைவருக்கும் நல்ல பாடம். எந்த விசயத்தையும் வரும் முன்பே யோசிக்க வேண்டும், மழைக்காலம் என்றால் வெளியே செல்லும் போது கையில் குடை இருக்க வேண்டும். தேர்வு வருகிறது என்றால் ஒரு வாரத்திற்கு அனைத்துப் பாடங்களையும் படித்து முடிக்க வேண்டும். கடைசி நேரத்தில் படிக்கத் தொடங்கினால் அது பயன் அளிக்காது, எனவே நாம் எப்போவும் வரும்முன் காப்போம் என்ற கொள்கையை பின்பற்ற வேண்டும், பின்பற்றினால் கவலையின்றி வாழலாம்.
|
அமெரிக்கா ஒரு காலத்தில் இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. அமெரிக்க மக்கள், இங்கிலாந்து மக்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராட்டம் நடத்தினர். அது கி.பி., பதினெட்டாம் நுõற்றாண்டு. அமெரிக்க ராணுவப் படை, இங்கிலாந்து ராணுவப் படையுடன் கடுமையாக மோதியது. போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வந்தது. ஆகவே, இரண்டு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்தனர். அச்சமயம் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளில் ஒருவரான இஸ்ரேல் பொட்னாம் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவரைச் சந்தித்தார். இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அமெரிக்க அதிகாரி, ஆங்கிலேயே அதிகாரியை மிகவும் திட்டி விட்டார். இதைக் கேட்ட ஆங்கில அதிகாரி கொதித்தெழுந்தார். “இவ்வளவு துõரம் நீ பேசிவிட்டாய் அல்லவா…? நாளை நீ என்னுடன் சண்டைக்கு வர வேண்டும். நீ உன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வா. நான் என் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வருகிறேன். இருவரும் துப்பாக்கியால் சண்டை போடுவோம். யார் வெல்கிறார்கள் என்று பார்க்கலாமா?” என்றார். இஸ்ரேல் பொட்னாம் இதைக் கேட்டு பதில் எதுவும் பேசவில்லை. அமைதியாக அங்கே கிடந்த மரப் பீப்பாய் ஒன்றின் மேல் உட்கார்ந்திருந்தார். போர்க்களத்தில் இந்த மரப் பீப்பாய்கள் அதிகமாகக் காணப்படும். காரணம், இம்மாதிரிப் பீப்பாய்களில் தான் போருக்குத் தேவையான வெடி மருந்துகள் நிரப்பி வைத்திருப்பர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரி அதிகமான கோபம் அடைந்தார். “அப்படியானால் நீ ஒரு கோழை என்பதை வெளிப்படையாகவே ஒப்புக் கொள்ள வேண்டியதுதானே! மவுனம் ஏன்?” என்று சீண்டினார். “நான் உன்னைப் போன்ற கோழை இல்லை. வாய்ச் சொல்லில் வீரம் பேசவும் எனக்குத் தெரியாது. நான் செயல் வீரன். நீ உனக்குச் சாதகமான முறையில் துப்பாக்கிச் சண்டை செய்யலாம் என்று கூறினாய். உனக்குத் துப்பாக்கி சுடுவதில் நல்ல பயிற்சி உண்டு என்பது எனக்குத் தெரியும். “ஆகையினால் நீ துப்பாக்கிச் சண்டையைத் தேர்ந்தெடுத்தாய். என் விஷயம் அப்படி இல்லை. எனக்குத் துப்பாக்கி சுடுவதில் அத்தனை அனுபவமில்லை. யார் வீரன் என்பதை நிரூபிக்க ஒரு பொதுவான வழிமுறையை உன்னால் சொல்லத் தெரியவில்லையே!” “ஏன், நீதான் செயல் வீரனாயிற்றே! பொதுவான ஒரு வழியைச் சொல்லேன் பார்க்கலாம்,” என்று குமுறினார் ஆங்கில அதிகாரி. “சரி! நானே சொல்கிறேன். இங்கே இரண்டு பீப்பாய்கள் இருக்கின்றன. இந்தப் பீப்பாய்கள் எதற்காக உபயோகப்படுத்தப்படுகின்றன என்பதை நீயும் அறிவாய். வெடிமருந்து போட்டு வைக்க உபயோகப்படுத்தும் பீப்பாய்கள் இவை என்பதை நீ மறந்தாலும் நான் உனக்கு நினைவூட்டுகிறேன். “இப்போது இந்த இரண்டு பீப்பாய்களிலும் நான் ஒரு துளையை இடுகிறேன். நீ ஒரு பீப்பாயின் மேல் அமர்ந்து கொள். நான் ஒரு பீப்பாயின் மேல் அமர்ந்து கொள்கிறேன். இந்த இரண்டு பீப்பாய்களில் எதன் மீதாவது அமரவும் உனக்குச் சுதந்திரம் உண்டு. “இதன் பிறகு நான் ஒரு வயரைச் செருகி வைப்பேன். அதன் முனையையும் பற்ற வைத்து விடுவேன். அது மெல்ல மெல்லக் கனிந்து பீப்பாய்க்குள் போகும். இவ்வாறு பற்ற வைத்த பின்னாலும் யார் ஒருவர் நீண்ட நேரம் வரை கீழே இறங்காமலேயே அந்தப் பீப்பாயின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர். சம்மதமா? அதற்கான தைரியம் உன்னிடமிருக்கிறதா?’ என்று கேட்டார் இஸ்ரேல் பொட்னாம். “சரி’ என்று வீராவேசமாக ஒப்புக் கொண்டார் ஆங்கிலேய அதிகாரி. பொட்னாம் எழுந்தார். இரண்டு நீண்ட “ப்யூஸ்’ வயர்களை இணைத்து அதைப் பீப்பாய்க்குள் செலுத்தி விட்டு நுனியைப் பற்ற வைத்துவிட்டு அமைதியாகப் பீப்பாய் மேல் வந்து அமர்ந்தார். ஆங்கிலேய அதிகாரியும் ஒரு பீப்பாய் மேல் அமர்ந்திருந்தார். நெருப்பு சிறிது சிறிதாகக் கனிந்து பீப்பாயை நோக்கி வர ஆரம்பித்தது. அது பாதித் தொலைவில் வந்தவுடனேயே ஆங்கிலேய அதிகாரி நடுங்கினார். “இவன் நம்மைத் துண்டு துண்டாகச் சிதற வைக்கத் திட்டம் தீட்டித்தான் இம்மாதிரி ஏற்பாடு செய்திருக்கிறான்!’ என்று எண்ணினார். நெருப்பு மெல்ல மெல்ல ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. “இது மிகவும் பைத்தியக்காரத்தனமான ஒன்று. இதனால் நாம் இருவருமே வெடித்துச் சிதறி இறந்து விடுவோம். இது பயத்துக்குரிய ஒன்று.’ இஸ்ரேல் பொட்னாம் பேசவில்லை. அவர் முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லை. பீப்பாயை விட்டு அவர் இறங்கவுமில்லை. இன்னும் நன்றாக வசதியாக அமர்ந்து கொண்டார் அவர். திரி எரிந்து பீப்பாய்க்கு வெகு அருகில் வந்து விட்டது. இன்னும் முப்பது விநாடிகள் தாமதித்தால் நெருப்பு பீப்பாய்க்குள் போய்விடும். அப்படிப் போய் விட்டால்…? நினைத்தால் கூடத் தப்பி ஓட முடியாது. அதற்கு மேல் ஆங்கிலேய அதிகாரியால் அமைதியாக இருக்க முடியவில்லை. பீப்பாயிலிருந்து துள்ளிக் குதித்து இறங்கினார். திடுதிடுவென அந்த இடத்தைவிட்டு ஓட ஆரம்பித்தார். பாதுகாப்பான இடத்தில் நின்று திரும்பிப் பார்த்தார். பீப்பாய்க்குள் நெருப்பு நுழைய ஒரு விநாடி இருந்தது. அப்போதும் பொட்னாம் பீப்பாயை விட்டு எழவில்லை. ஆங்கிலேய அதிகாரியைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார். “கோழை யார் என்பது புரிந்ததா?’ என்று சப்தமாகக் கேட்டார். அவர் அவ்வாறு கேட்டு முடித்தவுடன், பீப்பாய் வெடித்துத் துண்டு துண்டாகச் சிதறி விடும் என்று ஆங்கிலேய அதிகாரி எதிர்பார்த்தார். அவ்விதமான அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. பீப்பாய்க்குள்ளும் நெருப்புப் போய்விட்டது. பொட்னாம் அமைதியாகவே இருந்தார். ஐந்து நிமிடங்களுக்குப் பின் முழுதாக இறங்கி வந்தார் பொட்னாம். “இந்தப் பீப்பாய்க்குள் இருப்பது வெடி மருந்து என்றுதானே நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். இல்லை, அது வெங்காயம். வெங்காயத்தைச் சமையல் அறையில் கொட்டிய பின் தான் வெடி மருந்து அதில் நிரப்பப்பட வேண்டும்!’ என்று அமைதியாகக் கூறினார். ஆங்கிலேய அதிகாரி மிகப் பெரிய அவமானத்தை அடைந்தார். அன்று இரவோடு இரவாக அந்த அதிகாரி அந்தப் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு சென்று விட்டார். இந்த அமெரிக்கச் சுதந்திரப் போரில் ஈடுபட்ட அந்த அதிகாரி இஸ்ரேல் பொட்னாம் பின்னாளில் அமெரிக்காவின் ராணுவத் தளபதியானார். புத்தி இருந்தால் எதையும் சாதிக்கலாம்.
|
ஒரு பெருந்தனக்காரரின் வீட்டில் அமர்ந்து முல்லா அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார்.
செல்வந்தருக்கு திடீரென ஒரு சந்தேகம் வந்து விட்டது " முல்லா அவர்களே விதி என்று மனிதர்கள் கூறுகிறார்களே அது என்ன?" என அவர்
கேட்டார். " நாம் எதிர்பார்ப்பது நடக்காதபோது அதற்கு விதி என்று பெயரிட்டு அழைக்கிறோம் "
என்றார் முல்லா. செல்வந்தருக்கு முல்லாவின் விளக்கம் சரியாகப் புரியவில்லை. " இன்னும் சற்று தெளிவாக இதைப் பற்றிச் சொல்லுங்களேன் " எனச் செல்வந்தர் கேட்டுச்
கொண்டார். முல்லா உடனே " என் அருமை நண்பர் அவர்களே! முதலில் நான் உங்களை எதற்காச் சந்திக்க
வந்தேனோ அந்த விஷயத்தைக் கூறி விடுகிறேன். அப்புறம் விதியைப் பற்றி தெளிவாக
விளக்குகிறேன் " என்றார். " எதற்காகச் சந்திக்க வந்தீர்?" என்று செல்வந்தர் வியப்புடன் கேட்டார். " எனக்கு ஒரு கோடிப் பொன் கடனாக வேண்டும் உங்களைக் கேட்டுப் பெறலாம் என்றுதான்
வந்தேன் " என்றார் முல்லா. செல்வந்தருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு பெரிய தொகை எதற்காக? என்று
விளங்காமல் திகைத்தார். " நான் கேட்டது என்ன ஆயிற்று?" என்று முல்லா கேட்டார். " இவ்வளவு பெரிய தொகையைத் திடீரென்று கேட்டால் எப்படி?" என்றார் செல்வந்தர்
தயக்கத்துடன். முல்லா சிரித்துக் கொண்டே " உம்மிடம் கடன் கேட்டால் நிச்சயம் கிடைக்கும் என்ற
நம்பிக்கையுடன் உங்களை நான் சந்தித்தேன் உங்களால் பணத்தைக் கொடுக்க முடியவில்லை
அல்லது கொடுக்க விரும்பவில்லை அப்போது எனக்கு ஏற்படுகிற ஏமாற்றம் இருக்கிறதே அதை
விதி என்று எண்ணி மனம் சமாதானம் அடையலாம் " என்று விதிக்கு விளக்கம் தந்தார்
முல்லா. பிறகு முல்லா சொன்னார் " நான் விளையாட்டுக்காகத்தான் உம்மிடம் கடன் கேட்டேன் நீர்
குழப்பமடைய வேண்டாம் " எனக் கூறிச் சிரித்தார்.
|
நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். அது திபெத்தில் நிகழ்ந்தது. வெகு தூரத்தில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் சேவை செய்து கொண்டிருந்த லாமா ஒருவர் தனது தலைமையகத்திற்கு மேலும் ஒரு லாமா தேவை என்று தகவலனுப்பினார். மேலும் உடனடியாக அவரை இங்கு அனுப்பி வையுங்கள் என்றும் கேட்டிருந்தார். தலைமை மடாலயத்தின் மதகுரு எல்லா சீடர்களையும் கூப்பிட்டு அனுப்பி இந்த கடிதத்தை படித்து காண்பித்துவிட்டு அவர்களிடம் நான் உங்களில் ஐந்து பேரை அனுப்ப போகிறேன் என்றார். ஒரு லாமா, ஆனால் அவர் ஒருவரை தானே அனுப்பச் சொல்லிக் கேட்டிருக்கிறார் ஏன் ஐந்து பேரை அனுப்ப வேண்டும் என்று கேட்டார். வயதான தலைமை குரு ஏனென்று உனக்கு பின்னால் தெரியும். நான் ஐந்து பேரை அனுப்பப் போகிறேன், ஆனாலும் ஒருவராவது சென்று சேர்வது நிச்சயமில்லை. ஏனெனில் வழி மிகவும் நீண்டது, மற்றும் ஆயிரத்தோரு தடைகள் வரும். என்று கூறினார். எல்லோரும் சிரித்தனர். இந்த வயதான மனிதனுக்கு மூளை குழம்பிவிட்டது. ஒரே ஒருவர் தேவைபடும் இடத்திற்கு ஏன் ஐந்து பேரை அனுப்ப வேண்டும் என்று கேட்டனர். ஆயினும் அவர் வற்புறுத்தியதால் ஐவர் பயணத்திற்கு தயாராயினர். அடுத்த நாள் காலை அவர்கள் ஒரு கிராமத்தை கடக்கும்போது ஒரு அறிவிப்பாளன் அந்த கிராமத்தின் தலைமையிடம் இருந்து செய்தி கொண்டு வந்தான். எங்களது குரு இறந்துவிட்டார். எனவே எங்களுக்கு ஒரு குரு தேவை. நல்ல சம்பளம் கிடைக்கும் என்று கூறினான். அந்த கிராமம் நல்ல செழிப்பானதாகவும் வளமானதாகவும் தோன்றியது. அதனால் அந்த ஐந்து பேரில் ஒருவர் நான் இங்கேயே தங்க விரும்புகிறேன். ஏனெனில் இதுவும் புத்தரின் வேலைதான். ஏன் பள்ளத்தாக்கு வரை செல்ல வேண்டும். இங்கேயும் நான் அதே வேலையைதான் செய்யப் போகிறேன். நீங்கள் நால்வரும் போங்கள் நான் இங்கேயே தங்கப் போகிறேன் என்றார். ஒருவர் குறைந்துவிட்டார். அடுத்தநாள் அவர்கள் ஒரு நகரத்தின் வெளிப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தனர். அந்த நகரத்தின் அரசன் அந்த வழியே தன் குதிரையில் வந்து கொண்டிருந்தான். அந்த நான்கு பேரில் ஒரு துறவி மிகவும் ஆரோக்கியமானவராகவும் தேஜஸ் பொருந்தியவராகவும் அழகானவராகவும் இருந்தார். உடனே அரசன் நில்லுங்கள். நான் என் பெண்ணிற்கு ஒரு இளைஞனை தேடிக் கொண்டிருந்தேன். நீங்கள் மிகப் பொருத்தமானவராக தோன்றுகிறீர்கள். எனக்கு ஒரே ஒரு மகள்தான். அவளை திருமணம் செய்து கொண்டு இந்த அரசையும் ஏற்றுக் கொள்ளுங்கள். என்றான். இயல்பாகவே அந்த இளம்துறவி தனது சக பயணிகளிடம் போய்வருகிறேன் என்று கூறி விடைபெற்றுக் கொண்டான். அவனும் போய்விட்டான். இரண்டாவது ஆளும் சென்று விட்டான். இப்போது இருந்த மூன்று பேருக்கும் அந்த வயதான குரு அறிவு கெட்டவரல்ல என்பது புரிந்தது. வழி மிகவும் நீண்டது, மேலும் ஆயிரத்தோரு தடைகள் என்பது புரிந்தது. இப்போது மூவரும் நாம் இதுபோன்ற ஒரு போதும் செய்யக்கூடாது என்று முடிவு செய்து கொண்டனர். ஒருவர் அரசராகவும் மற்றொருவர் மிகப் பெரிய குருவாகவும் ஆனதில் அடிமனதில் பொறாமை இருந்தது. என்னதான் நடக்கப் போகிறது இந்த பள்ளத்தாக்கில் என்று எண்ணினர். மூன்றாவது நாள் அவர்கள் வழியை தவற விட்டுவிட்டனர். தூரத்தில் மலைஉச்சியில் ஒரே ஒரு விளக்கு வெளிச்சம் தெரிந்தது. எப்படியோ தட்டுதடுமாறி அந்த விளக்கு வெளிச்சத்தை அடைந்தனர். அது ஒரு வீடு. அங்கே ஒரேஒரு இளம் பெண் இருந்தாள். அவள் இவர்களை பார்த்தவுடன் நீங்கள் கடவுளால் அனுப்பப் பட்டவர்கள் போலத் தெரிகிறீர்கள். எனது தாயும் தந்தையும் வெளியே சென்றவர்கள் இன்னேரம் வந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை வரவில்லை. எனக்கு தனியாக இருக்க பயமாக இருந்தது. தெய்வம் அனுப்பிய தூதுவர்கள் போல நீங்கள் வந்து விட்டீர்கள். மிகவும் நன்றி. புத்தர்தான் உங்களை அனுப்பி இருக்க வேண்டும். எனது தாய்தந்தை வரும்வரை நீங்கள் என்னுடன் இருங்கள் எனக்கு பயமாக இருக்கிறது என்று கேட்டுக் கொண்டாள். அடுத்த நாள் காலை இவர்கள் கிளம்ப வேண்டும். ஆனால் இவர்களில் ஒருவர் – அந்த பெண்ணுடன் ஆழமாக காதலில் விழுந்து விட – இவளுடைய பெற்றோர் வரும்வரை நான் வர முடியாது. அது முறையல்ல என்று கூறி வர மறுத்தார். முறையல்ல என்பதல்ல விஷயம், பிடிப்புதான் விஷயம். ஆனால் பிடிப்பு அங்கிருக்கும்போது, மக்கள் முறையை பற்றி பேசுகின்றனர். மற்ற இருவரும் இது சரியல்ல. நாம் சென்றடையப் போகிறோம். நீ வரவில்லை. மேலும் நாம் இதுபோல செய்வதில்லை என்று நாம் முடிவு செய்தோம் அல்லவா என்று கேட்டனர். அதற்கு அவன், நான் வாழ்க்கை முழுவதும் கருணையைப் பற்றியே கற்றுக் கொண்டு வந்திருக்கிறேன். இந்த பெண் தனியாக இருக்கிறாள். இவளது பெற்றோர் இன்னும் வரவில்லை. இப்படி விட்டுவிட்டு போவது நல்லதல்ல. இது கெடுதலாகலாம். புத்தர் என்னை மன்னிக்கவே மாட்டார். நீங்கள் போகலாம். நான் இங்கே தங்கப் போகிறேன் என்றான். உண்மையில் அவன் இவர்கள் சென்றுவிட வேண்டும் என விரும்பினான். மூன்றாவது நபரும் விடுபட்டு விட்டார். அடுத்த நாள் வழியில் ஒரு கிராமத்தில் இவர்கள் கூட்டத்தில் மாட்டிக் கொண்டனர். அந்த கிராமத்து மக்கள் ஆத்திகர்கள். அவர்கள் புத்தரை நம்புவதில்லை. அந்த கிராமத்தில் இருந்த ஒரு மிகப் பெரிய பண்டிதர் ஒருவர் இவர்களை பார்த்து புத்தர் கூறியது உண்மை என்று நிரூபியுங்கள் என்று சவால் விட்டார். அவர்களில் ஒருவர் அந்த சவாலை ஏற்றுக் கொண்டார். மற்றொருவர் நீ என்ன செய்கிறாய் இதற்கு எவ்வளவு காலம் பிடிக்குமோ யாருக்குத் தெரியும் நாம் செல்ல வேண்டுமே என்று கேட்டார். அதற்கு அவர், எனது முழு வாழ்வும் போனாலும் சரி, நான் புத்தரின் சீடன். இந்த மனிதன் புத்தரையும் அவரது கொள்கைகளையும் சவால் விடுகிறான். என்று கூறினான். உண்மையில் அது புத்தருக்கான சவால் அல்ல. அது இவனது ஆணவத்துக்கான சவால். நான் வரவில்லை, நான் இந்த கிராமத்தை விட்டு வரமுடியாது. நான் இந்த கிராமம் முழுமையையவும் மாற்றப் போகிறேன். நீ போகலாம். உண்மையில் அங்கு ஒருவர் மட்டும் தானே தேவை. என்று கூறினார். இப்படித்தான் அது நிகழ்ந்தது. இந்த மனிதன் தர்க்கம் செய்வதற்காக இங்கே நின்று விட்டான். ஒரே ஒருவர் மட்டும் போய் சேர்ந்தார்.
|
அந்தப்பிரதேசம் முழுக்க அந்தபுனிதரின் பெயர்பரவிருந்தது. அவர் ஒரு மலையில் சிறு குடிசையில்வசிக்கிற சேதியும் கூடவே பிரபலமாக இருந்தது. தூரத்து கிராமத்து மனிதர் ஒருவர் அவரைச்"சந்தித்துவிடவேண்டுமென்கிற ஏக்கத்தில் நெடுநாள் பயணம் செய்து புனிதரின் இருப்பிடம்அடைந்தார். குடிசையின் வாசலில் அவரை ஒரு வயோதிகவேலைலைக்கரன் வரவேற்றான்."நான் அந்தமகானைப்பார்க்கவேண்டு"மென்று வேலைக்காரனிடம் சொன்னார்.குடிசைக்குள்அவருக்கு உபசாரம் நடந்தது.அப்போதும் புனிதரைப் பார்க்கமுடியவில்லை. நேரம் ஆக ஆக பொறுமையிழந்து கிராம வாசி ‘நான் எப்பொழுதுதான் புனிதரைப்பார்க்க முடியும்" என்று கேட்டார்."நீங்கள் பார்க்க வந்தவரை ஏற்கனவே பார்த்துவிட்டீர்கள்" என்று சொன்னார். - மேலும்"நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கிற ஒவ்வொரு சாதாரண,அடித்தட்டு மனிதரையும் விவேகமுள்ள புனிதராக நினைத்தால் உங்கள் வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளையும் மிகச் சுலபமக தீர்த்துவிடலாம்" என்று வேலைக்காரனாய் வந்த புனிதர் சொன்னார். |
ராமகிருஷ்ணர் 19-தாவது நூற்றாண்டின் கடைசியில் வாழ்ந்தவர் மிகவும் வெகுளி. கேசவ் சந்திரசென் என்பவர் மிகவும் படித்தவர், பண்டிதர், அந்த கால கட்டத்தில் மிகவும் படித்த பண்டிதர்களில் ஒருவர். அவர்கள் இருவரும் அருகருகில்தான் வாழ்ந்தனர். கேசவ் கொல்கத்தாவில் இருந்தார், ராமகிருஷ்ணர் கொல்கத்தா அருகே கங்கை நதிகரையோரம் இருந்த தக்ஷ்ணேஷ்வரில் இருந்த சிறிய கோவிலில் பூசாரியாக வேலை செய்தார். கேசவ் சந்திரா அவருடைய புத்திசாலித்தனம், அவருடைய தர்க்க அறிவு, வாதத்திறமை, அவருடைய அறிவு, விவேகம், வேதநூல்களில் அவருக்கிருந்த புலமை ஆகியவற்றிற்க்காக நாடு முழுவதும் போற்றப்பட்டார். மக்கள் எல்லா இடங்களில் இருந்தும் வந்து அவர் காலடியில் அமர்ந்து அவர் பேச்சைக் கேட்டனர். இப்படி இவர் பேச்சைக் வருடக்கணக்கில் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் தக்ஷிணேஷ்வர் கோவிலில் இருக்கும் ராமகிருஷ்ணரிடம் செல்வதை பார்த்து அவர் மிகவும் குழப்பமடைந்தார். அவருக்கு படிப்பறிவில்லை, எந்த வேதபுத்தகத்தைப்பற்றியும் எதுவும் தெரியாது, அவருக்கு அறிவு ஏதும் இருப்பதாகவே தெரிவதில்லை, அவருக்கு தர்க்கம் ஏதும் செய்ய தெரியாது, எதைப் பற்றியும் பேசி யாருக்கும் அவரால் புரிய வைக்கவும் முடியாது. என்ன நடக்கிறது இங்கே என்று மிகவும் குழப்பமடைந்தார் கேசவ். அவருடன் வருடக்கணக்கில் இருந்து அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் இப்போது அங்கே செல்கின்றனர். அவரிடம் கூட்டம் கூடிக் கொண்டிருந்தது. கேசவ் கேள்விப்பட்ட வகையில் ராமகிருஷ்ணர் கிட்டத்தட்ட அரைப்பைத்தியம் போன்றவர். திடீரென ஆடுவார், பாடுவார். நல்லதொரு பாடலை கேட்டவுடன் சமாதி நிலை அடைந்து விடுவார். பல மணி நேரங்களுக்கு அந்த சமாதி நிலை நீடிக்கும். அவர் அவருள் ஆழ்ந்து போய் விடுவார், அவரை யாராலும் எழுப்ப முடியாது. அது சாதாரண தூக்கமல்ல, அது கோமா போன்றது. ஒரு முறை அவர் அது போன்று 6 நாட்களுக்கு இருந்தார். அவரை எழுப்ப எல்லோரும் இயன்றவரை முயன்று பார்த்தனர். ஆனால் எல்லாமே தோல்வியில்தான் முடிந்தது. அவரை யாராலும் எழுப்ப முடியவில்லை. 6 நாட்களுக்கு பின் எழுந்த அவர் கண்களில் கண்ணீருடன், “ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள் நான் என்னுள் ஆனந்தமாக இருந்தேன். என்னை வெளி உலகுக்கு இழுத்துக் கொண்டே இருந்தீர்கள், இங்கே ஒன்றுமே இல்லை. நான் எல்லாவற்றையும் அனுபவித்து பார்த்து விட்டேன். என்னுடைய சுயத்தை உணரவோ, முடிவற்ற ஆனந்தத்தை கொடுக்கவோ, அழிவற்ற பரவசத்தை அளிப்பதற்க்கோ இங்குள்ள எதனாலும் முடியாது. அதனால் நான் எப்போதெல்லாம் நான் உள்ளே சென்றாலும் என்னை தொந்தரவு செய்யாதீர்கள். என்னை விட்டு விடுங்கள்”. என்று கூறினார். 6 நாட்கள் என்பது மிகவும் அதிகமான நாட்கணக்குதான். அவர் கோமாவில் இருந்தால் சீடர்கள் கவலைப்படாமல் என்ன செய்வார்கள்!. இது போல கேசவ்வை வந்து சேர்ந்த செய்திகள் அனைத்துமே இந்த ராமகிருஷ்ணர் ஒரு கிறுக்கு, மறைகழன்றவர், லூசு என்பதாகத்தான் இருந்தது. ஆனால் அவரிடம் வந்து அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த அனைவருமே மெத்த படித்தவர்கள், பேராசிரியர்கள், வேத விற்பன்னர்கள். அவர்கள் எப்படி இந்த ராமகிருஷ்ணரிடம் போனார்கள்? இறுதியாக கேசவ் தானே போய் அவரை பார்ப்பது என்று தீர்மானித்தார். பார்ப்பது மட்டுமல்லாமல் அவரிடம் வாதிட்டு அவரை தோற்கடிப்பது என்றும் நினைத்தார். அவர் ராமகிருஷ்ணருக்கு, “நான் இந்த தேதியில் வருகிறேன். தயாராக இருங்கள். நான் இறுதியான விஷயங்களைப் பற்றி பேசி உங்களுடன் தர்க்கம் செய்யப் போகிறேன்.” என்று செய்தி அனுப்பினார். ராமகிருஷ்ணர் இதை கேள்விப்பட்டதும் சிரித்தார். “கேசவ் சந்திராவை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். அவர் மிகச் சிறந்த தர்க்கவாதி, புத்திசாலி. ஆனால் அவர் யாருடன் தர்க்கம் செய்யப்போகிறார் என்று அவருக்குத் தெரியவில்லை. வரட்டும், நான் இந்த போட்டியை ஒத்துக் கொள்கிறேன். இது ஒரு நல்ல காரணமாக இருக்கும்.” என்றார். அவரது சீடர்கள், “இது நன்றாக இருக்காது. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இதுவரை யாருடனும் போட்டியிட்டதேயில்லை. அவர் அவரது சீடர்களுடன் வரப் போகிறார். அத்தனை பேர் முன்னிலையிலும் …….. வேண்டாம் இந்த விஷப்பரீட்சை”. என்றனர். ஆனால் ராமகிருஷ்ணர் கூறியது எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. அவர், “நான் வாதிடப் போவதில்லை, ஏனெனில் நான் வாதாடும் மனிதனல்ல. அவர் வரட்டும், எனக்கு சமய நூல்களைப்பற்றி தெரியாது, தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு உண்மை என்னவென்று தெரியும், நான் எதற்கு கடன்வாங்கப்பட்ட தகவலறிவைப் பற்றி கவலைப்பட வேண்டும்? நான் படிக்கவில்லை, எனக்கு எப்படி நிரூபிப்பது, அல்லது நிரூபித்ததை உடைப்பது என்று தெரியாது, தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. என்னுடைய இருப்பே போதுமானது, அவர் வரட்டும்.” என்று கூறினார். கேசவ் சந்திரா இவருடைய இருப்பை எப்படி ஒரு வாதமாக ஏற்றுக் கொள்வார் என்று சீடர்களுக்கு தெரியாததால் அவர்கள் பயந்தனர். கேசவ் சந்திரா வந்தார். ராமகிருஷ்ணர் வெளியே வந்து இவரை அணைத்து உள்ளே கூட்டிச் சென்றார். கேசவ் இப்படி இவர் வெளியே வந்து காத்திருந்து அணைத்து உள்ளே கூட்டிச் செல்வார் என்று எதிர்பார்க்கவேயில்லை. “நீங்கள் வந்ததற்கு மிகவும் நன்றி. நான் நீங்கள் வருவதற்காக காத்துக் கொண்டிருந்தேன். எப்போதெல்லாம் உங்களுக்கு என்னிடம் வாதிட தோன்றுகிறதோ அப்போதெல்லாம் நீங்கள் என்னிடம் வரலாம். என்னிடம் போட்டியிட நீங்கள் எப்போதும் வரலாம். முன்கூட்டியே சொல்லிவிட்டு வர வேண்டிய அவசியம் இல்லை. நான் எப்போதும் ப்ரீதான். நான் 24 மணி நேரமும் இந்த கோவிலிலேயேதான் இருப்பேன். நீங்கள் இரவு பகல் எந்த நேரமும் வரலாம்”. என்றார் ராமகிருஷ்ணர். கேசவ் தனக்குத்தானே எதற்காக வந்தோம் என நினைவு படுத்திக் கொண்டார். அது மிகவும் கடினமானதாக இருந்தது. இவர் மிகவும் அன்பானவராக இருந்தார், இவரது அதிர்வே மிகவும் பிடித்தமானதாக இருந்தது. மேலும் ராமகிருஷ்ணர், “முதலில் உங்களது வாக்குவாதத்தை ஆரம்பிக்கும் முன் உங்களை வரவேற்பதற்காக நான் நடனமாடுகிறேன்”. என்றார். அங்கே இருந்த அவரது இசைக்குழுவினர் வாத்தியங்களை வாசிக்க ஆரம்பித்தனர், இவர் நடனமாட ஆரம்பித்தார். கேசவ் சந்திரரால் நம்பவே முடியவில்லை. அவரது சீடர்களாலும் நம்ப முடியவில்லை. சந்திரா பலருடன் வாக்குவாதம் செய்திருக்கிறார். நாடு முழுவதிலும் உள்ள பல பண்டிதர்களை போட்டியிட்டு வென்றிருக்கிறார். ஆனால் நடனம் மூலம் தன்னை வரவேற்ற ஒருவரை இதுவரை அவர் சந்திக்கவில்லை. மேலும் நடனம் மிகவும் அற்புதமாக இருந்தது. அது ஒரு பொங்கிப் பெருகும் அன்பின் அடையாளமாக இருந்தது. அது சாதாரணமானதாக இல்லை, அது வரவேற்பின் உச்சகட்டம். கேசவ் சந்திரர் கூட இவர் சத்தியமானவர் என்பதை உணர்ந்தார். நடனம் முடிந்த பின் ராமகிருஷ்ணர் “இப்போது நீங்கள் ஆரம்பிக்கலாம்” என்று கூறினார். கேசவ் சந்திரா, “நீங்கள் முதலில் கடவுள் இருக்கிறார் என்பதை எனக்கு நிரூபிக்க வேண்டும்” என்றார். ராமகிருஷ்ணர் சிரித்தார். “கடவுள் இருப்பதற்க்கு சான்றா ? நீதான் சான்று.! இல்லாவிடில் எங்கிருந்து இவ்வளவு விவேகம் வந்தது? இது உறுதியாக பிரபஞ்சத்திலிருந்துதான் வந்திருக்க வேண்டும், பிரபஞ்சத்தால் கேசவ் சந்திரா போன்றவரை உருவாக்க முடியும் என்றால் அது தன்னுணர்வற்றது அல்ல, அது விவேகமற்றதுமல்ல. இதைத்தான் நாம் கடவுள் என்றழைக்கிறோம். எப்படி அழைக்கிறோம் என்பது பொருட்டல்ல. நீதான் சான்று. நீதான் சான்று என்பதை அறியாமல் நீயே சான்று கேட்பதுதான் இதில் விந்தை. நான் யாரை வேண்டுமானாலும் கொண்டு வந்து நிறுத்துகிறேன், நீதான் சான்று என்பதை எல்லோரும் ஒத்துக் கொள்வர். நாம் கடவுள் என்றழைப்பது பிரபஞ்சம் புத்திசாலித்தனத்தோடு இருப்பதுதான், பிரபஞ்சம் தன்னுணர்வின்றி இருப்பதில்லை. என்றார். கேசவ் சந்திராவின் சீடர்கள் கேசவ் சந்திரா இவ்வளவு அதிர்ச்சியடைந்து பார்த்தேயில்லை. அவர் மௌனமாகிவிட்டார், என்ன சொல்வதென்றே அவருக்கு தெரியவில்லை. ராமகிருஷ்ணரின் சீடர்கள்கூட அதிர்ச்சியடைந்து விட்டனர். அவர்கள், “அடக் கடவுளே, எப்படி இவர் அவருடன் வாதிடப் போகிறாரோ என நாம் நினைத்தோம், ஆனால் இவர் எந்த சிரமுமில்லாமல் அவரை வாயடைக்கச் செய்து விட்டாரே, எந்த புத்தகத்திலிருந்தும் மேற்கோள் எதுவும் காட்டவில்லை, கேசவ் சந்திராவே தனக்கு எதிரான வாதத்தை செய்து கொண்டு விட்டார்” என்று பேசிக் கொண்டனர். ஒவ்வொரு முறை கேசவ் சந்திரா எதையாவது மிக நன்றாக சொல்லும் போது ராமகிருஷ்ணர் ஒரு குழந்தை போல கை தட்டி பாராட்டுவார். ஆனால் தனக்கு எதிராக தானே விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்கிறோம் என அவர் நினைக்கவேயில்லை. சீடர்கள், “நான் அவருக்கு எதிராக வாதம் புரிந்து கொண்டிருக்கிறேன், அவர் மகிழ்ச்சியாக கை தட்டிக் கொண்டிருக்கிறார், அவருகென்ன பைத்தியமா என கேசவ் சந்திரா நினைத்தார்” என கூறிக் கொண்டனர். வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தபோது இடையில் ராமகிருஷ்ணர் எழுந்துவந்து கேசவ்வை கட்டிதழுவிக் கொண்டு, “இது மிகவும் அற்புதமான பாயிண்ட். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நீங்கள் தொடருங்கள்” என்று கூறினார். எந்த வாக்குவாதமும் செய்ய வேண்டிய தேவையேயில்லாமல் அவரிடம் இருந்த அந்த சந்தோஷம், அந்த அன்பு, அந்த அசைக்க முடியாத அமைதி இவைதான் அவருடைய வெற்றியாக அமைந்தன. கேசவ் சந்திரா ராமகிருஷ்ணரின் பாதங்களில் வீழ்ந்து பணிந்து “என்னை மன்னித்துவிடுங்கள். நான் உங்களைப் பற்றி தவறாக புரிந்து கொண்டிருந்தேன்” என்றார். ராமகிருஷ்ணர், “என்ன இது நீங்கள் மிகவும் படித்தவர், நான் படிக்காதவன். படிப்பறிவில்லாதவன், வெகுளி, என்னால் எனது பெயரைக் கூட எழுத முடியாது. எனக்கு என்னைத் தெரியும், ஆனால் எனக்கு கையெழுத்திடத் தெரியாது, எனக்கு படிக்கத் தெரியாது. நீங்கள் இப்படி செய்ய வேண்டியதில்லை” என்றார். கேசவ் சந்திரா ராமகிருஷ்ணரின் பக்தர்களில் ஒருவராக மாறிவிட்டார். ராமகிருஷ்ணரிடம் எந்த கேள்விக்கும் பதில் இல்லை, அவரிடமும் எந்த கேள்வியும் இல்லை. ஆனால் அவரது வெகுளித்தனமும் எளிமையும் பல பேரை கவர்ந்தது, பலபேரை மாற்றியது. அவருடைய அன்பே மிகப்பெரிய இரசாயனமாற்றத்தை தந்தது.
|
பீர்பால் அடிக்கடி புகையிலை உபயோகிப்பார். மன்னர் பலமுறை சொல்லியும் அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள அவரால் முடியவில்லை. அக்பரின் மூத்த அமைச்சர் ஒருவருக்கு பீர்பால் புகையிலை உபயோகிப்பது மிகவும் அருவறுப்பாக இருந்தது. நல்ல சந்தர்ப்பம் பார்த்து புகையிலைப் பழக்கத்துக்காகப் பீர்பாலை அவமானப் படுத்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். ஒருமுறை மன்னர் காற்றோட்டமாக அரண்மனைத் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தார். அவருடன் மூத்த அமைச்சரும் பீர்பாலும் சேர்ந்து உலவியவாறு உரையாடிக் கொண்டிருந்தனர். அரண்மனைத் தோட்டத்தின் வேலியோரத்தில் புகையிலைச் செடி ஒன்று தானாக முளைத்து வளர்ந்து இருந்தது. தெருவிலே சென்று கொண்டிருந்த கழுதை ஒன்று வேலியின் இடுக்கு வழியாக முகத்தினை நுழைத்து அந்த புகையிலைச் செடியைத் திண்ணப் பார்த்தது. இலையில் வாயை வைத்தவுடன் அதன் காரமும் நாற்றமும் பிடிக்காமல் செடியை விட்டுவிட்டு திங்காமல் வெறுப்போடு போய்விட்டது. அதனைச் சுட்டிக் காட்டிய மூத்த அமைச்சர், “மன்னர் அவர்களே, பார்த்தீர்களா? நம் பீர்பாலுக்கு மிகவும் பிடித்தமான புகையிலை கேவலம் அந்த கழுதைக்குக்கூடப் பிடிக்கவில்லை!” என்றார் சிரிப்புடன். அவர் முகத்தில் இப்போது நிம்மதி. உடனே பீர்பால் சிரித்துக் கொண்டே, “அமைச்சர் அவர்களே, உண்மையைத்தான் சொன்னீர்கள். புகையிலை எனக்கு மிகவும் பிடித்த பொருள்தான். ஆனால் கழுதைகளுக்குத்தான் புகையிலையைப் பிடிப்பதில்லை!” என்றார் ஒரே போடாக! தனது வாக்கு வன்மையால் மூக்குடைத்தார் மூத்த அமைச்சரை பீர்பால்.
|
ஒரு பெரிய செல்வந்தனிடம் கொஞ்ச காலம் முல்லா வேலை பார்த்து வந்தார்.ஒரு நாள் முல்லா தொடர்ந்து மூன்று தடவை கடைத் தெருவுக்குச் சென்று வந்ததை அவருடைய முதாளி கண்டு அவரைக் கூப்பிட்டு விசாரித்தார்.” நீர் ஏன் மூன்று தடவை கடைக்குச் சென்றீர்?” என்று கேட்டார் அவர். ” கோதுமை வாங்குவதற்காக ஒரு தடவை கடைக்குப் போனேன். அடுத்த தடவை நான் போனது முட்டை வாங்குவதற்காக மூன்றாவது தடவையாக எண்ணெய் வாங்கச் சென்றேன் ” என்றார் முல்லா.அதைக் கேட்டு முதலாளி கோபம் அடைந்தார். ” கடைக்குச் செல்லுவதற்கு முன்னால் என்னென்ன தேவை என்பதைப் பற்றி முன்னதாகவே தீர்மானித்துக் கொள்வது அல்லவா புத்திசாலித்தனம்? ஒவ்வொரு பொருளையும் வாங்க ஒவ்வொரு தடவை கடைக்குச் செல்வது எவ்வளவு பெரிய மடத்தனம். இனி இந்த மாதிரித் தவறைச் செய்யாதே” என்று முல்லாவை எச்சரித்து அனுப்பினார்.ஒரு தடவை முல்லாவின் முதலாளியான செல்வந்தருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு விட்டது. அவர் முல்லாவை அழைத்து உடனே சென்று மருத்துவரை அழைத்து வா என்று உத்தரவிட்டார்.முல்லா விரைந்து சென்றார்.சற்று நேரங்கழித்து முல்லா வீடு திரும்பிய போது அவருடன் மூன்று மனிதர்கள் வந்திருந்தனர்.” இவர்கள் எல்லாம் யார்? எதற்காக வந்திருக்கிறார்கள்?” என முதலாளி ஆச்சரியத்துடன் கேட்டார்.” இதோ இவர் மருத்துவர் அதோ அந்த மனிதர் மதகுரு - அந்த மூன்றாவது ஆள் சமாதிக் குழி தோண்டுபவர் ” என்றார் முல்லா.” நான் மருத்துவரை மட்டுந்தானே அழைத்து வரச் சொன்னேன் ” என்றார் முதலாளி.” நீங்கள் சொன்னது போலத்தானுங்க செய்தேன். ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒவ்வொரு தடவை போகக் கூடாது. ஒரே தடவை திட்டம் போட்டு எல்லா காரியங்களையும் செய்துவிட வேண்டும் என்று சொன்னீர்களே” என்று கேட்டார் முல்லா.” ஆமாம், அப்படித்தான் சொன்னேன் ” . அதற்கும் இதற்கு என்ன தொடர்பு? என்று ஆச்சரியம் தோன்ற கேட்டார் முதலாளி.” ஐயா, உங்களுக்கு உடல்நலம் சரியாக இல்லை. நோய் முற்றி இறந்து விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இறுதிப் பிரார்த்தனை செய்வதற்காக மதகுருவை ஒரு தடவை அழைக்கப் போக வேண்டும். பிறகு உங்கள் உடலைச் சமாதியில் வைப்பதற்காக புதைகுழி தோண்டுபவனைஅழைக்க ஒரு தடவை போக வேண்டும். இவ்வாறு மூன்று தடவை மூன்று காரியங்களுக்காக நடப்பதற்கு பதில் ஒரே நேரத்தில் மூன்று ஆட்களையும் அழைத்து வந்து விட்டேன்” என்றார் முல்லா.முதலாளியின் முகத்தில் ஈயாடவில்லை.
|
மட்டியும் மடையனும் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு, கவலையோடு இருந்தனர். மண்டுவும் மூடனும் போனாரே! எங்கள் குரு செத்துப் போனாரே! என்று மூக்கால் அழுது கொண்டு இருந்தனர். "இனி மேல் யார் சுருட்டுக்கு நான் கொள்ளி வைப்பேன்? எங்களைத் தனியாக விட்டுட்டு, இப்படி அநியாயமாச் செத்துட்டீங்களே!" என்று ஒப்பாரி வைத்தான், முட்டாள் அதன் பிறகு, ஐந்து சீடர்களும் மடத்துக்கு எதிரே தெருவில் கட்டிப்பிடித்து உருண்டார்கள். "செத்துப்போன நம் குரு, எங்கே போயிருப்பார்?" என்றான் மட்டி "எமலோகத்துக்குப் போனால் பார்க்கலாம்" "ஒரு வேளை, சொர்க்கத்துக்குப் போயிருப்பாரோ?" "நம் குரு நிறைய பாவம் செய்தவர். அதனால் நரகத்துக்குத் தான் போயிருப்பார்" முட்டாளும் மூடனும் இப்படிப் பேசிக் கொண்டு இருந்தனர். "நாமும் நரகத்துக்குப் போனால் நம் குருவைப் பார்க்கலாமே!" என்று யோசனை சொன்னான், மண்டு. "நம் குருவை மீண்டும் பார்ப்பதற்கு இது தான் ஒரே வழி!" என்று குதித்தான் மடையன். உடனே மண்டுவும் மூடனும் கைகோர்த்தபடி, தோட்டத்தில் இருந்த கிணற்றில் குதித்தனர். முட்டாளோ, கையில் இருந்த கொள்ளிக் கட்டையால் தலையில் நெருப்பு வைத்துக் கொண்டான். சற்று நேரத்துக்கெல்லாம், பரமார்த்த குருவின் அருமைச் சீடர்கள் ஐந்து பேரும் உயிரை விட்டனர். எங்கு பார்த்தாலும் ஒரே புகை மயமாக இருந்தது. சீடர்களுக்கோ, ஒன்றுமே புரியவில்லை. "நாம் தான் செத்து விட்டோமே, மறுபடியும் இப்போது எங்கே இருக்கிறோம்?" என்று கேட்டான் மட்டி. அப்போது, "அதோ பாருங்கள், நரலோகம்!" என்று கத்தினான் மடையன். நரகத்திற்கு வந்து சேர்ந்து விட்டதை உணர்ந்த சீடர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். "வாருங்கள், நம் குருவைத் தேடிப் பார்ப்போம்!" என்று ஒவ்வொரு இடமாகப் பரமார்த்தரைத் தேடிக் கொண்டே சென்றார்கள். ஓரிடத்தில் பெரிய பெரிய செக்குகள் சுழன்று கொண்டு இருந்தன. பாவம் செய்த சிலரை அதனுள் போட்டு நசுக்கிக் கொண்டு இருந்தனர். அதைப் பார்த்த மட்டியும் மடையனும், "நம் குரு, இதன் உள்ளே இருந்தாலும் இருப்பார்!" என்று சொன்னபடி செக்குக்குள் தலையை விட்டார்கள். அவ்வளவுதான்! "ஐயோ! ஐயையோ!" என்று தலை நசுங்கி, ரத்தம் ஒழுகக் கீழே விழுந்தனர். இன்னொரு இடத்தில், உயரமான கொப்பரைகளில் எண்ணெய் கொதித்துக் கொண்டு இருந்தது. அதைப் பார்த்த முட்டாள், "நம் குருவை இந்தக் கொப்பரையில் தான் போட்டிருப்பார்கள்!" என்று கூறிக்கொண்டே, கொப்பரைக்குள் எகிறிக் குதித்தான்! முட்டாள் விழுவதைக் கண்ட மூடன், தானும் ஓடிப் போய் ஒரு கொப்பரையில் குதித்தான்! கொதிக்கும் எண்ணெய் உடல் முழுவதும் பட்டதும், லபோ திபோ என அலறியவாறு இருவரும் சுருண்டு விழுந்தனர். மண்டு மட்டும் பல இடங்களில் பரமார்த்தரைத் தேடிக் கொண்டே சென்றான். நரக லோகத்தின் சனி மூலையில் ஏராளமான விறகுக் கட்டைகளை வைத்துத் திகு திகு என்று எரியும் அடுப்பைக் கண்டான். நம் குரு இந்த நெருப்புக்கு உள்ளே ஒளிந்து கொண்டு இருந்தாலும் இருப்பார் என்றபடி அதற்குள் நுழைந்தான். அடுத்த கணம், "ஆ, நெருப்பு! அம்மாடி நெருப்பு!" என்று கதறியவாறு விழுந்து புரண்டான். இதே சமயத்தில், நரக லோகத்தில் கட்டப்பட்டு இருந்த விஷ மண்டலத்தில் பரமார்த்தர் அலறிக் கொண்டு இருந்தார். அவரைச் சுற்றிலும் ராட்சத தேள்களும், பாம்புகளும், நண்டுகளும் படையெடுத்து வந்தன. "ஐயோ, தேளே! நீ வாழ்க! உன் கொடுக்கு வாழ்க! என்னை மட்டும் கொட்டாதே!" என்று கும்பிட்டார். அதற்குள் ஐந்து சீடர்களும் அவர் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர். "ஐயோ! பாம்பு, பாம்பு!" என்று அலறியபடி திண்ணை மேலிருந்து தடால் என்று கீழே விழுந்தார், பரமார்த்தர். சீடர்கள் அனைவரும் ஓடி வந்து பார்த்தார்கள். அப்பொழுதுதான் பரமார்த்தர் சுற்றும் முற்றும் பார்த்தார். "நல்ல காலம்! மடத்தில் தான் இருக்கிறேன். நரக லோகத்தில் மாட்டிக் கொண்டது போல வெறும் கனவுதான் கண்டிருக்கிறேன்!" என்று மகிழ்வுடன் தொப்பையைத் தடவிக் கொண்டார். சீடர்களும் மகிழ்ச்சியுடன் குதித்தார்கள்.
|
வெகு காலத்திற்கு முன் ஓர் ஊரில் ஏழைக் கிழவி ஒருத்தி இருந்தாள். சமைப்பதற்காக ஒரு பாத்திரம் நிறைய மொச்சை வாங்கினாள் அவள். அப்பொழுது மொச்சைக்குக் கருப்புப் பகுதி கிடையாது. முழுமையும் வெண்மை கலந்த பழுப்பு நிறமாக இருக்கும். மொச்சைகளை ஒரு பாத்திரத்தில் போட்டாள் அவள். அந்தப் பாத்திரத்தை அடுப்பின் மேல் வைத்தாள். அடுப்பில் நெருப்பு மூட்டினாள். எரிப்பதற்காக வைக்கோலை அடுப்பிற்குள் நுழைத்தாள். பாத்திரம் சூடேறத் தொடங்கியது. தப்பிக்க நினைத்த ஒரு மொச்சை பாத்திரத்தில் இருந்து துள்ளிக் கீழே குதித்தது. தீயில் எரியாமல் ஒரு வைக்கோல் எப்படியோ வெளியே வந்தது. நெருப்புத் துண்டு ஒன்றும் தப்பித்து வெளியே வந்தது. மூன்றும் அருகருகே இருந்தன. "எப்படியோ தப்பித்தேன். இல்லாவிட்டால் கூட்டத்தோடு நானும் இறந்திருப்பேன்" என்றது மொச்சை. "என் நிலையும் உன்னைப் போலத்தான். கிழவியை ஏமாற்றி விட்டு வெளியே வந்தேன். இல்லாவிட்டால் இந்நேரம் எரிந்து இருப்பேன்" என்றது வைக்கோல். "என்னைப் போல இருபது பேரை அந்தக் கிழவி அடுப்பிற்குள் போட்டாள். எல்லோரும் இந்நேரம் புகையால் சூழப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பார்கள். நல்ல வேளை. நான் தப்பித்தேன்" என்றது நெருப்புத் துண்டு. "உங்கள் இருவரையும் சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. இப்பொழுது நாம் என்ன செய்வது?" என்று கேட்டது மொச்சை. "நாம் மூவரும் எப்படியோ சாவிலிருந்து தப்பித்தோம். இனிமேல் நாம் நல்ல நண்பர்களாக இருப்போம். பல ஊர்களுக்குச் செல்வோம். இனிய அனுபவங்களைப் பெறுவோம்" என்றது வைக்கோல். நெருப்புத் துண்டும் மொச்சையும் இதை ஏற்றுக் கொண்டன. அருகருகே இருந்தபடி மூன்றும் சிரித்துப் பேசிக் கொண்டே நடந்தன. சிறிது தூரம் சென்றன. அவற்றின் எதிரில் ஒரு ஆறு குறுக்கிட்டது. அதில் தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது. மூன்றும் அந்த ஆற்றின் கரையில் நின்றன. "இந்த ஆற்றை எப்படிக் கடப்பது?" என்று கேட்டது மொச்சை. "ஆற்றின் நீர் வேகமாக ஓடுகிறது. எனக்குப் பயமாக இருக்கிறது" என்றது நெருப்புத் துண்டு. இதைக் கேட்ட வைக்கோல், "கவலைப்படாதீர்கள். நான் மிக நீளமாக இருக்கிறேன். இக்கரையில் இருந்து அக்கரை வரை ஆற்றின் மேல் நான் படுத்துக் கொள்கிறேன். நீங்கள் இருவரும் என் மேல் நடந்து அக்கரையை அடைந்து விடுங்கள். பிறகு நானும் அக்கரை வந்து விடுகிறேன்" என்றது. இரண்டும் அதன் திட்டத்தை ஏற்றுக் கொண்டன. வைக்கோல் நீண்டது. இருகரைகளையும் பிடித்துக் கொண்டு ஆற்றின் மேல் பாலம் போல் நின்றது. நெருப்புத் துண்டு மெதுவாக வைக்கோலின் மேல் நடந்தது. ஆற்றின் நடுப்பகுதிக்கு வந்த அது கீழே பார்த்தது. தண்ணீர் சலசலவென்று ஓடுவதைக் கண்டு அஞ்சியது அது. பயத்தால் தயங்கியபடி சிறிது நேரம் அங்கேயே நின்றது. அவ்வளவுதான்! நெருப்புத் துண்டின் வெம்மை தாங்காமல் வைக்கோல் எரிந்து இரண்டு துண்டுகள் ஆயிற்று. நெருப்புத் துண்டு ஆற்று நீருக்குள் விழுந்தது. 'உஸ்' என்ற சத்தத்துடன் புகை எழுப்பி நீருக்குள் மூழ்கியது அது. இரண்டு துண்டுகளான வைக்கோலும் ஆற்று நீருக்குள் விழுந்தது. ஆற்று நீர் அதை அடித்துக் கொண்டு சென்றது. கரையில் இருந்து இந்த வேடிக்கையைப் பார்த்து மொச்சையால் சிரிப்பை அடிக்க முடியவில்லை. "ஆ! ஆ!" என்று வயிறு குலுங்கச் சிரித்தது அது. உடனே அதன் வயிறு வெடித்து விட்டது. உள்ளிருந்த குடல் வெளியே தெரிந்தது. வலி தாங்க முடியாமல் வேதனையால் துடித்தது அது. அந்த வழியாக ஒரு தையல்காரன் வந்தான். மொச்சையின் மீது இரக்கப்பட்டான். தன் கையிலிருந்த ஊசி நூலால் அதன் வயிற்றைத் தைத்தான். கறுப்பு நூலால் அவன் தைத்ததால் இன்றும் மொச்சையிக் வயிற்றில் நீண்ட கறுப்புத் தையல் காணப்படுகிறது.
|
சுமார் நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு
சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன்
தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து
வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர். தெனாலி
ராமனுக்குப் பள்ளி சென்று படிப்பது என்பது வேப்பங்காயாகக் கசந்தது. ஆனால் மிகவும்
அறிவுக்கூர்மையும் நகைச் சுவையாகப் பேசக்கூடிய திறனும் இயற்கையாகவே பெற்றிருந்தான்.
வீட்டுத்தலைவர் இல்லாத காரணத்தால் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலை தெனாலி
ராமனுக்கு ஏற்பட்டது. அதனால் என்ன செய்வது என்ற கவலை அவனை வாட்டியது. ஒருநாள் தெனாலிக்கு ஒரு முனிவர் வந்தார். அவர் இராமனின் நிலையைக்கண்டு அவனுக்கு ஒரு
மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார். அந்த மந்திரத்தை பக்தியுடன் ஜபித்தால் காளி
பிரசன்ன மாவாள் என்றும் சொல்லிச் சென்றார். அதன்படியே இராமனும் ஊருக்கு வெளியே
இருந்த காளி கோயிலுக்குச் சென்று முனிவர் கற்றுக் கொடுத்த மந்திரத்தை நூற்றியெட்டு
முறை ஜெபித்தான். காளி பிரசன்னமாகவில்லை. இராமன் யோசித்தான். சட்டென்று அவனுக்கு
நினைவுக்கு வந்தது. முனிவர் சொன்னது ஆயிரத்துஎட்டு முறை என்பது. உடனே மீண்டும்
கண்களை மூடிக் கொண்டு காளியை ஜெபிக்கத் தொடங்கினான். இரவும் வந்து விட்டது. ஆனாலும் இராமன் காளி கோயிலை விட்டு அகலவில்லை. திடீரென்று
காளி அவன் எதிரே தோன்றினாள். "என்னை ஏன் அழைத்தாய்? உனக்கு என்ன வேண்டும்?" என்று கோபமாகக் கேட்டாள் காளி. அவளை
வணங்கி எழுந்த இராமன் கைகளைக் கூப்பித் தொழுதவாறே கேட்டான். "தாயே நானோ வறுமையில் வாடுகிறேன். என் வறுமை அகலும் வழியும் எனக்கு நல்லறிவும்
தரவேண்டுகிறேன். காளி பெரிதாகச் சிரித்தாள். " உனக்குப் பேராசைதான். கல்வியும் வேண்டும் செல்வமும் வேண்டுமா?", "ஆம் தாயே. புகழடையக் கல்வி வேண்டும். வறுமை நீங்கப் பொருள் வேண்டும். இரண்டையும்
தந்து அருள் செய்ய வேண்டும்." என்றான் இராமன். காளி புன்னகையுடன் தன் இரண்டு கரங்களை நீட்டினாள். அதில் இரண்டு கிண்ணங்கள் பாலுடன்
வந்தன. அந்தக் கிண்ணங்களை இராமனிடம் தந்தாள் காளி. "இராமா! இந்த இரண்டு கிண்ணங்களிலும் உள்ள பால் மிகவும் விசேஷமானது. வலது கிண்ணம்
கல்வி. இடது கிண்ணம் செல்வம். நீ ஒரு கிண்ணத்திலுள்ள பாலை மட்டுமே குடிக்க வேண்டும்.
உனக்கு எது மிகவும் தேவையோ அந்தக் கிண்ணத்தின் பாலை மட்டும் குடி" என்றாள்
புன்னகையுடன். இராமன் " என்ன தாயே! நான் இரண்டையும் தானே கேட்டேன்.ஒரு கிண்ணத்தை மட்டும் அருந்தச்
சொல்கிறாயே. நான் எதை அருந்துவது தெரியவில்லையே" என்று சற்று நேரம் சிந்திப்பது போல
நின்றான். பிறகு சட்டென்று இடது கரத்திலிருந்த பாலை வலது கரத்திலிருந்த கிண்ணத்தில்
கொட்டிவிட்டு அந்தக் கிண்ணத்துப் பாலை மடமடவெனக் குடித்து விட்டுச் சிரித்தான். காளி
திகைத்து நின்றாள். "நான் உன்னை ஒரு கிண்ணத்திலுள்ள பாலைத்தானே குடிக்கச் சொன்னேன்!", "ஆம் தாயே, நானும் ஒரு கிண்ணத்துப் பாலைத்தானே குடித்தேன்." என்றான். "ஏன் இரண்டையும் ஒன்றாகக் கலந்தாய்?", "கலக்கக் கூடாது என்று நீ சொல்லவில்லையே தாயே!" காளி புன்னகை புரிந்தாள். "இராமா! என்னையே ஏமாற்றி விட்டாய். நீ பெரும் புலவன் என்று
பெயர் பெறாமல் விகடகவி என்றே பெயர் பெறுவாய்." என்று வரம் தந்து விட்டு மறைந்தாள். இராமன் விகடகவி என்று சொல்லிப் பார்த்துச் சிரித்துக் கொண்டான். திருப்பிப்
படித்தாலும் விகடகவி என்றே வருகிறதே என்று மகிழ்ந்தான். |
ஒருவர் சக்ரவர்த்தி ஆவது ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நிகழக்கூடும் என்றும் அவர் ஒரு தனிப்பிறவி என்றும் அதனால் சக்ரவர்த்தியான ஒருவர் இறந்தால் அவருக்கு சொர்க்கத்தில் தனிப்பட்ட மரியாதைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டு, சிறப்பான ஒரு இடம் கொடுக்கப்படும் என்றும் சொல்லப்படுவதுண்டு. ஜைன மத நூல்களில் சொர்க்கத்தில் இமயமலையை போன்ற ஒரு மலை உண்டு எனக் கூறப்பட்டுள்ளது. இந்த இமயமலை பாறைகளாலும் மண்ணாலும் பனியாலும் உருவாக்கப்பட்டுள்ளது. சொர்க்கத்தில் உள்ள அந்த மலைக்கு பெயர் சுமிரு. சுமிரு என்றால் மிக உயர்ந்த மலை எனப் பொருள். அதை விட சிறந்த, அதை விட அழகானது வேறில்லை என்பது அதன் அர்த்தம். அது தங்கத்தால் உருவானது. அதில் பாறைகளுக்கு பதிலாக வைரங்களும் பவளங்களும் மரகதங்களும் உள்ளன. சக்ரவர்த்தி ஒருவர் இறந்தால் அவரது பெயர் அந்த மலை மீது பொறிக்கப்படும். அப்படி ஒரு சக்ரவர்த்தி இறந்த சமயம் அவரது பெயரை சுமிரு மலை மீது பொறிப்பதற்காக அவரை கூட்டிப் போனார்கள். அது ஒரு அரிதான தருணம். அது ஆயிரம் வருடங்களில் ஒருமுறையே நிகழும். இந்த மன்னன் தன் பெயரை சுமிரு மலை மீது தான் பொறிக்கப்போவதை எண்ணி மிகவும் மனக்கிளர்ச்சியடைந்தான். இதுவரை இருந்த மிகச் சிறந்தவர்களில் ஒருவனாகப் போவதோடு, வரப்போகிற சிறந்தவர்களுக்கும் ஒரு பாடமாக, வழிகாட்டியாக இருக்கப்போகிறான். அந்த சக்ரவர்த்தி அசாதாரணமானவர்களில் ஒருவனாகப் போகிறான். அந்த வாயில் காவலன் மலைமீது அவரது பெயரை பொறிப்பதற்க்கு தேவையான கருவிகளை கொடுத்தான். சக்ரவர்த்தி தன்னுடன் இன்னும் சிலரை கூட்டிச் செல்ல விரும்பினான். சக்ரவர்த்தியின் வாழ்நாள் பூராவும் அவருடன் இருந்து அவரது வெற்றிக்கு துணை நின்ற அவரது மனைவி, அமைச்சர், தளபதி ஆகியோர் சக்ரவர்த்தி இறந்தபோது அவரின்றி வாழ முடியாது என தற்கொலை செய்துகொண்டு அவருடன் கூடவே உயிர் விட்டு அவருடன் இப்போது சொர்க்கத்துக்கு வந்துள்ளனர். அவர்களையும் கூட்டிச் செல்ல அனுமதிக்குமாறு வாயில் காப்போனைக் கேட்டார். ஏனெனில் தன்னந்தனியே போய் தன் பெயரை பதித்துவிட்டு வருவதில் என்ன சந்தோஷம் இருக்கப் போகிறது—அங்கு அதைப்பார்க்க யாருமே இல்லாவிடில் மகிழ்ச்சி எப்படி வரும்—ஏனெனில் இந்த முழு உலகமும் பார்ப்பதில்தான் சந்தோஷமே இருக்கிறது. வாயில் காவலன், என்னுடைய பேச்சை தயவு செய்து கேளுங்கள். இது என்னுடைய பரம்பரை தொழில். என்னுடைய அப்பா, தாத்தா, அவருடைய அப்பா என நாங்கள் ஆயிரக்கணக்கான நூற்றாண்டுகளாக இந்த சுமிரு மலையின் வாயில் காப்பவர்கள். அதனால் என் பேச்சைக் கேளுங்கள். இவர்கள் யாரையும் உங்களுடன் கூட்டிச் செல்லாதீர்கள். இல்லையெனில் வருத்தப்படுவீர்கள். என்றான். சக்ரவர்த்தியால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவரால் அவனது பேச்சைக் கேட்காமலும் இருக்க முடியவில்லை. ஏனெனில் அவரைத் தடுப்பதால் அவனுக்கு என்ன லாபம்… வாயில் காப்போன், நீங்கள் இவர்களை இப்போதேக் கூட்டிச் செல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அவர்களைக் கூட்டிச் சென்று விட்டு பின் அங்குள்ள நிலையை பார்த்துவிட்டு ஒருக்கால் காண்பிக்க வேண்டாம் என முடிவெடுத்தால் அப்போது அதை செயல்படுத்த வழியும் இருக்காது, வாய்ப்பும் இருக்காது. அவர்கள் உங்களுடன்தான் இருப்பார்கள். எனவே இப்போது நீங்கள் தனியே சென்று உங்கள் பெயரை பொறித்துவிட்டு வாருங்கள். பின் இவர்கள் பார்க்கத்தான் வேண்டும் என விரும்பினால் திரும்பி வந்து இவர்களை கூட்டிச் செல்லுங்கள். என்றான். இது மிகச் சரியான யோசனையாகத் தோன்றியதால் சக்ரவர்த்தி, மற்றவர்களிடம், நான் தனியாகப் போய் எனது பெயரை பொறித்துவிட்டு திரும்ப வந்து உங்கள் எல்லோரையும் அழைத்துச் செல்கிறேன். என்றார். வாயில் காப்போன், இதுதான் மிகச் சரியானது என்றான். சக்ரவர்த்தி சென்று ஆயிரக்கணக்கான சூரியன்களுக்கு அடியில் தகதகத்துக் கொண்டிருந்த சுமிரு மலையைக் கண்டார். – ஏனெனில் சொர்க்கத்தில் ஒரே ஒரு சூரியனோடு ஏழை போன்று இருக்க முடியாது – ஆயிரக்கணக்கான சூரியன்கள், இமயமலையைவிட பெரிதான தங்க மலை. இமயமலையே இரண்டாயிரம் மைல் நீளம் உடையது. சக்ரவர்த்தியால் கண்களை திறக்கவே முடியவில்லை. அவ்வளவு தகதகப்பு – பின் மெதுவாக கண்களை பழக்கப்படுத்திக்கொண்டு தனது பெயரை பொறிக்க சரியான ஒரு இடத்தைத் தேடினார். ஆனால் அவர் மிகவும் வியப்படைந்தார். அங்கு இடமே இல்லை. மலை முழுவதும் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவரால் தனது கண்களையே நம்ப முடியவில்லை. முதல் தடவையாக அவர் தான் யாரென்று உணர்ந்தார். இதுவரை ஆயிரம் வருடங்களில் ஒருமுறை மட்டுமே உருவாகக் கூடிய சிறப்பான மனிதனாக தன்னை நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் காலம் முடிவற்றது. அதில் ஆயிரம் வருடங்கள் என்பது எந்தப்பெரிய மாறுதலையும் ஏற்படுத்தி விடாது. அது ஒரு பொருட்டே அல்ல. அதனால் ஏகப்பட்ட சக்ரவர்த்திகள் ஏற்கனவே இருந்திருக்கிறார்கள். அவ்வளவு பெரிய மலையில் இவருடைய சிறிய பெயரை எழுத இடமே இல்லை. அவர் திரும்பி வந்தார். உன்னுடைய மனைவி, அமைச்சர்கள், தளபதி மற்றும் நெருங்கிய நண்பர்கள் என யாரையும் உன்னுடன் கூட்டிச் செல்ல வேண்டாம் என காவலாளி தடுத்தது ஏன் என இப்போது புரிந்தது. அவர்கள் இந்த காட்சியை பார்க்காமல் இருந்தது நல்லது. தங்களது சக்ரவர்த்தி ஒரு அரிய பிறவி என்றே அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கட்டும். அவர் காவலாளியை உள்ளே தனியே அழைத்து, அங்கே இடமே இல்லை என்பதைக் கூறினார். காவலாளி, இதைத்தான் நான் உங்களிடம் கூறினேன். நீங்கள் சில பெயர்களை அழித்துவிட்டு உங்களது பெயரை எழுதிவிட்டு வாருங்கள். அப்படித்தான் செய்திருக்கிறார்கள். என் வாழ்வில் பலர் இப்படி செய்வதை பார்த்திருக்கிறேன். எனது தந்தையும் இப்படி நடந்திருக்கிறது எனக் கூறியிருக்கிறார். எனது தாத்தா ஏன் எனது பரம்பரையில் யாருமே சுமிரு மலை காலியாக இருந்தோ, சிறிதளவு இடம் இருந்தோ பார்த்ததில்லை. எப்போதுமே ஒரு சக்ரவர்த்தி வந்தால் அவர் சில பெயர்களை அழித்துவிட்டு தனது பெயரை எழுதுவார். இதுவரை இருந்த எல்லா சக்ரவர்த்திகளின் பெயரும் இதனுள் இருக்கிறது என்று கூறிவிட முடியாது. பலமுறை அழிக்கப்பட்டு பலமுறை பொறிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் உங்களது பெயரை எழுதிவிட்டு பின் உங்களது நண்பர்களிடம் காட்ட விரும்பினால் அவர்களை உள்ளே அழைத்துச் செல்லுங்கள். என்றான். சக்ரவர்த்தி, இல்லை, நான் அவர்களிடம் காட்டவும் விரும்பவில்லை, என்னுடைய பெயரை நான் எழுதவும் போவதில்லை. அதனால் என்ன பயன் – ஒருநாள் யாராவது ஒருவர் வந்து அதை அழிக்கப் போகிறார். என்னுடைய முழு வாழ்வும் இப்போது பொருளற்றதாகி விட்டது. சொர்க்கத்தில் உள்ள சுமிரு மலையில் எனது பெயர் பொறிக்கப் படும் என்பதுதான் எனது ஒரே நம்பிக்கையாக இருந்தது. இதற்காகவே நான் வாழ்ந்தேன். இதற்காகவே நான் எனது வாழ்க்கை முழுவதையும் பணயம் வைத்தேன். இதற்காகவே நான் இந்த உலகம் முழுவதையும் கொல்லத் தயாராக இருந்தேன். ஆனால் இப்போது வேறு யார் வேண்டுமானாலும் வந்து எனது பெயரை அழித்துவிட்டு தங்களது பெயரை எழுதக்கூடும் எனும்போது அதில் எழுதுவதில் என்ன பொருளிருக்கிறது— நான் அதில் எழுதப் போவதில்லை. என்றார். காவலாளி சிரித்தான். சக்ரவர்த்தி, ஏன் சிரிக்கிறாய் எனக் கேட்டார். காவலாளி, ஆச்சரியமாயிருக்கிறது. ஏனெனில் சக்ரவர்த்திகள் வந்து, இதைப் பார்த்துவிட்டு, கேட்டுவிட்டு, தங்கள் பெயரை எழுதாமல் திரும்பி போன கதையையும் நான் எனது தாத்தாவிடமிருந்து கேட்டிருக்கிறேன். நீங்கள் மட்டுமல்ல, ஒரு சிறிதளவாவது புத்திசாலித்தனம் உள்ள யாரும் இதையேதான் செய்வர். என்றான். |
அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தான். மன்னர் கிருஷ்ண்தேவராயர் வந்தவுடன் சபை கூடியது. வேற்றூரிலிருந்து வந்த தத்துவஞானியை விழாவைத் தொடங்கி வைத்து விவாத மன்றத்தை ஆரம்பிக்கச் சொன்னர். தத்துவ ஞானியும் ஏதேதோ சொன்னார். ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. அவர் பேச்சின் இறுதியில் மாய தத்துவம் பற்றி நீண்ட நேரம் பேசினார். அதாவது நாம் கண்ணால் காண்பதும் மாயை, உண்பதும் மாயை என்று சொன்னார். இதைக்கேட்ட அறிஞர்கள் முதல் அரசர்வரை எவருமே வாய் திறக்கவில்லை. ராஜகுரு மௌனமாகி விட்டார். சுற்றும் முற்றும் பார்த்த தென்னாலிராமன் எழுந்து நின்றான். தத்துவஞானியைப் பார்த்து, "ஐயா தத்துவ ஞானியாரே ஏன் பிதற்றுகிறீர் நாம் உண்பதற்கும் உண்பதாக நினைப்பதற்கும் வித்தியாசமே இல்லையா?" எனக் கேட்டான். அதற்கு தத்துவஞானி வித்தியாசம் இல்லை என்றான். அதை சோதிக்க தெனாலிராமன் அரசரிடம் ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். விருந்து ஏற்பாடு ஆயிற்று. அனைவரும் பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். தத்துவஞானிக்கு உணவு பரிமாறியும் சாப்பிடக்கூடாது எனக் கட்டளை இட்டுவிட்டனர். அதனால் தத்துவஞானி தன் தவறை உணர்ந்தான். இதைப்பார்த்த அரசர் தெனாலிராமனின் திறமையைப் பாராட்டி பொன் பரிசளித்தது மட்டுமில்லாமல் அன்று முதல் அவரது அரசவை விகடகவியாக்கினார். |
அழகாபுரி ஊர் மக்கள் ஒரே மகிழ்ச்சியாக இருந்தனர். அதற்குக் காரணம், அன்றுதான் பொங்கல் பண்டிகை ஆரம்பம் ஆனது. பரமார்த்தரும் சீடர்களும் கூட மிகவும் சுறுசுறுப்பாய் இருந்தனர். மறுநாள் - மாட்டுப் பொங்கலும் வந்து விட்டது. "குருவே...குருவே.." என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான் மண்டு. "இன்று சாயுங்காலம், ஊர் எல்லையில் நிறைய பந்தயம் எல்லாம் நடக்கப் போகுதாம்!", "பந்தயமா? என்ன அது?" என்றபடி குருவும் சீடர்களும் அவனைச் சூழ்ந்து கேட்டார்கள். "காளை மாட்டின் கொம்புகளுக்கு வண்ணம் பூச வேண்டுமாம். அப்புறம், ஜல்லிக் கட்டுகூட நடக்கப் போகுதாம். வெற்றி பெறுபவர்களுக்குப் பல கிராமங்களைத் தரப் போகிறாராம் நம் அரசர்" என்று சொன்னான் மண்டு. இதைக் கேட்டதும் பரமார்த்தரின் மூளை தீவிரமாக வேலை செய்தது. "சீடர்களே! எப்படியாவது இந்தப் பந்தயத்தில் நாம் ஜெயித்து விட்டால்.... நான் பல ஊர்களுக்குத் தலைவன் ஆகிவிடுவேன்! உங்களுக்கும் பதவி கிடைக்கும். அப்புறம் நமக்கு எந்தத் துன்பமும் இல்லை" குருவின் திட்டத்தைக் கேட்ட சீடர்கள் மகிழ்ச்சியால் எகிறி எகிறிக் குதித்தனர். "குருவே! நீங்கள் கவலையே படாதீர்கள். எப்படியும் நாங்கள் வெற்றிபெற்றுக் காட்டுகிறோம்!" என்று முட்டாள் சொன்னான். "நம் குரு மட்டும் எப்படியாவது ராஜா ஆகி விட்டால்... மகிழ்ச்சியாக இருக்கலாமே! விதம் விதமான குதிரைகள் பூட்டிய தேரில் ஜம்மென்று ஊர்வலம் வரலாம்!" என்று கனவு கண்டான் மூடன். "அது மட்டுமா? தெருவில் போனால், எல்லோரும் நம் காலில் விழுந்து விழுந்து கும்பிடுவார்களே!" என்று சிரித்தான், மட்டி. "ஆமாம், ஆமாம். எனக்கும்கூட இலவசமாக நிறைய சுருட்டுகள் கிடைக்கும். பணத்துக்குப் பதில் சுருட்டையே வரியாகக் கட்டச் சொல்ல வேண்டும்!" என்றார் பரமார்த்தர். "குருவே! இன்னொரு கட்டளையும் போட வேண்டும். "இனிமேல் புதிதாகக் குதிரைகள் போடும் முட்டைகள் எல்லாம் மன்னருக்கே சொநதம்" என்று சொல்லி விட்டால், எல்லா குதிரைகளும் நமக்கே கிடைத்து விடும் என்று மடையன் யோசனை சொன்னான். "சீடர்களே, அற்புதமான யோசனைகள்! அருமையான எதிர்காலம்! வெற்றி நமக்கே! விடாதீர்கள்... ஓடுங்கள்..." என்று ஆவேசமாய்க் கூச்சலிட்டார், பரமார்த்தார். "குருவுக்கு ஜே" என்றபடி எல்லோரும் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். ஒரு வீதியில் குருவும் சீடர்களும் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்தது. "ஐயா! அந்த மாட்டைப் பிடியுங்கள்" என்று கூச்சலிட்டுக் கொண்டு ஒரு தடித்த அம்மாள் பரங்கிக்காய் போன்ற தன் உடலை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நடந்து வந்தாள். இலேசாகக் காற்று வீசினால் கூட மூன்று முறை குட்டிக்கரணம் போட்டு உருளும் அளவுக்கு ஒரு பசுமாடு வாயில் நுரை வழிய நொண்டி நொண்டித் தள்ளாடி நடந்துவந்தது. அது, அவளுக்குப் "போக்கு" காட்டிக் கொண்டிருந்தது. அதன் விலாவில் வரிவரியாக எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன. மாட்டுப் பொங்கல் என்பதால் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, பூவும் சுற்றப்பட்டு இருந்தது. பொங்கல் தயாரித்த பின் அதைத் தன் அருமையான பசுமாட்டுக்கு ஊட்டுவதற்காக ஒரு பெரிய கிண்ணத்தில் வைத்திருந்தாள். அந்தக் கிண்ணம் அடிக்கடி பசுமாட்டுக்கு மருந்து கரைத்து ஊட்டுவதற்குப் பயன்படுத்தப்படுவது. எனவே ஏதோ மருந்து ஊட்ட வருகிறாள் என்று நினைத்துப் பசு தள்ளாடித் தடுக்கி ஓட்டம் பிடிக்கத் தொடங்கியிருந்தது. இதற்கிடையே தாடி மீசையும், சுருட்டும் புகையுமாக பரமார்த்த குருவும், அலங்கோல விசித்திரங்களாக அவரது சீடர்களும் எதிரே வரவே அவர்களைக் கண்டு மாடு மிரண்டது. "இதோ ஒரு ஜல்லிக்கட்டு காளை! மைதானத்திலிருந்து தப்பி வந்திருக்கிறது!" என்று சீடர்கள் அதைச் சூழ்ந்து கொண்டார்கள். "விடாதே! விடாதே! வாலைப்பிடி! இதை அடக்கி மன்னரிடம் பரிசு வாங்கி விடலாம்!" என்று குரு கட்டளையிட எல்லா சீடர்களும் ஒரே நேரத்தில் மாட்டின் வாலைப் பிடித்து இழுத்தார்கள். வால் பாதியாக அறுந்தது. வேதனை தாளாமல் குரல் எழுப்பிய மாடு தன்னிடமிருந்த கொஞ்சம் நஞ்சம் சக்தியையும் திரட்டி, கழுதைபோல் ஒரு உதை விட்டது. இதில் மட்டிக்கம் மடையனுக்கும் மூக்கு பிய்ந்தது. இருவரும் கதறிக் கொண்டு தூரப்போய் விழுந்தார்கள். "இது மாடா? அல்லது கழுதையா?" என்று திகைத்த குரு, கொம்பு இருப்பதைப் பார்த்து "பொல்லாத மாடாக இருக்கிறதே! கொம்மைப் பிடியுங்கள்! அப்போதுதான் அடங்கும்!" என்று பதறியவாறே சொன்னார். முட்டாளும் மூடனும் மண்டுவும், மாட்டின் மீது போய் விழுந்தார்கள். இவர்கள் பாய்ந்த வேகத்தில் இரண்டு கொம்புகளும் பிய்ந்து கையோடு வந்து விட்டன. பசு கால்களை விரித்துப் படுத்தே விட்டது. "ஆ..! மாடு அடங்கி விட்டது! அடங்கி விட்டது!" என்று குருவும் சீடர்களும் குதித்தார்கள். "ஐயோ! என் கண்ணுன! என் செல்லம்.. போச்சே! தினமும் நாலுபடி பால் கறக்கும் அருமைப் பசுவைக் கொன்று விட்டீர்களே! என்று குண்டுக் கிழவி கண்ணீர் விட்டு ஒப்பாரி வைக்கத் தொடங்கி விட்டாள். "கவலைப்படாதே பாட்டி! மாட்டை அடக்கிய வீரச் செயலை மன்னரிடம் சொல்லி, கிடைக்கும் பரிசுப் பணத்தில் உனக்கு நஷ்ட ஈடு கொடுத்து விடுகிறோம்!" என்று கூறி அவளைச் சீடர்கள் சமாதானப்படுத்தினார்கள். குற்றுயிராகக் கிடந்த பசு மாட்டை ஒரு கட்டை வண்டியில தூக்கிப் போட்டுக் கொண்டு ஜல்லிக்கட்டு மைதானத்துக்குப் போனார்கள். போய் சேருவதற்கள் மாடு இறந்து விட்டது. ஜல்லிக் கட்டுக் காளையை அடக்குவதாக நினைத்து நோஞ்சான் பசு மாட்டின் உயிரையும் போக்கிய குருவையும் சீடர்களையும் கண்டு மைதானத்தில் திரண்டிருந்த மக்கள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்கள். ஆனால், ஒரு பசுவைக் கொன்ற குற்றத்திற்காகக் குருவுக்கும் சீடர்களுக்கும் சாட்டையடிகள் தரப்பட்டன. |
ஒற்றைப் பெண்பிள்ளையை விட்டுவிட்டு அவள் அப்பன் அரசன் பிழைப்புக்காக வேலை தேடி வெளியூர் சென்று வருடங்களாகிறது. ஊர் திரும்பாமலிருக்கும் அவனைப்பற்றி செய்திகள் மட்டும் ஊருக்குள் வந்து கொண்டிருந்தது. கொளஞ்சியை சிறுவயதிலிருந்தே அவளின் சின்னாத்தாள் அழகம்மாள்தான் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவளுக்கும் வேறு ஆதரவு கிடையாது. மீசைக்காரர் வீட்டில் பொழுதுக்கும் அடிமை வேலை செய்து, இரவானால் வீடடைவாள், மீசைக்காரர் குடும்பத்துக்கு தன் உயிரை உழைப்பாக்கி கொட்டிக் கொண்டிருந்தாள். அவர்கள் இரண்டு வேளை சோறும் விழாக்காலங்களில் உடுப்பும் எடுத்துக் கொடுத்தார்கள். உடலெல்லாம் பல்லாய் வாங்கிக் கட்டிக் கொண்டாள். கொளஞ்சிக்கு படிப்பு ஏறவில்லை. சோற்றுத்தட்டை பையில் வைத்துக்கொண்டு பிள்ளைகளோடு பிள்ளையாய் பள்ளிக்கூடம் போனாள்; திரும்பி வந்தாள். தினம் தினம் வகுப்பில் உதையும் அவமானமும் கிடைத்தன. சோற்றுக்காக பள்ளிக்கூடம் போய் வந்தாள். வாத்தியார் அடித்த அடி சூத்தாம்பட்டை பிரம்பு கனத்திற்கு வீங்கி குப்புறடித்துக் கிடந்தாள் வீட்டில். அழகம்மாள் வாத்தியாரை நடுரோட்டில் வைத்து திட்டித் தீர்த்தாள். அவளின் நோட்டுப் புத்தகப் பை சுவரில் அடித்த ஆணியில் கேட்பாரற்று உரையத் தொடங்கியது. அரசன் சிறுவயதிலிருந்து மேளம் அடிப்பவர்கள் கூடவே திரிந்து கொண்டிருந்தான். மேளம் தூக்கவும் சாராயம் வாங்கி வரவும் மேளக்காரர்களுக்கு உபயோகப்பட்டான். சமயங்களில் போதை முற்றிய பின் இழவு வீடுகளில் மேள சப்தத்தை ஒப்பேற்ற அவனைத் தட்டச் சொன்னார்கள். அவன் உயிரைக் கொடுத்து, "தொம் தொம்" எனத் தட்டிக் கொண்டிருந்தான். கைவாகு வரவில்லை. பானையிலும் கதவிலும் ஜோராகத் தாளம் போடும் அவனுக்கு மேளத்தில் சொல் கூடிவரவில்லை. விரல்களைப் புரட்டி சுருட்டி கும் கும்மென குத்தி மேளத்திடம் கேட்டுக் கொண்டிருந்தான் தாளம் வராத காரணத்தினை. கட்டையர் தாத்தா நாதஸ்வரம் சொல்லிக் கொடுத்தார். பிடி கொள்ளவில்லை. தவிலில்தான் முட்டிக்கொண்டு நின்றான். "கழுத போகுது. சொல்லிக்கொடுத்து தொலை" என்றார் கட்டையர் தாத்தா. சம்பிரதாயமாக அரும்பு மீசையை மழித்துக் கொண்டு வந்து நின்றான். "மீசை மழித்ததற்காகவே உனக்கு தவில் சொல்லித் தரவேண்டும்" என்றான் தவில்காரன் கணேசன். கணேசனின் சிஷ்யனாக மேளத்தை தூக்கிக்கொண்டு கணேசன் குரூப்பின் நிழலாய்க் கிடந்தான். நோஞ்சான் உடம்பு. தோளில் தூக்கி மாட்டி வாசிக்கத் திராணியற்று கோணிக்கொண்டு நின்றான். எல்லோரும் சிரித்தார்கள். அவர்களோடு அரசனும் சிரித்தான். மேளக்குச்சும் கழியும் பிடிக்க விரல் வளைத்து பழகிக்கொடுத்தான் கணேசன். கணேசனுக்கு துணை மேளமாய் இழவு வீடுகளில் வாசிக்கத் தொடங்கினான். ஹர்லிங் முடி வளர்த்தான், தேங்காய் எண்ணெய் தடவி. மேளச் சப்தத்தை ஊர் கேட்டுக்கொண்டிருந்தது. காரியம் முடிந்து ஊர் திரும்பும் நாட்களில் ஓய்வில்லாமல் தவிலைத் தட்டிக் கிடந்தான். பகலில் தூங்கும் மேளக்கார குரூப் அவனைத் துரத்தியது. மேளத்தைத் தூக்கிக்கெண்டு ஓடினான். மேளம் மேலும் மேலும் பல தாளங்களை இசைந்து கொடுக்கத் தொடங்கியது. தாளம் பிடி கொடுப்பதை கணேசன் தூரத்திலிருந்து ரசித்துக் கொண்டிருந்தான். வயிசுக்கு வந்து அறை வீட்டிலிருந்து அரசனின் மேளச் சப்தத்தில் தான் வெளிக் கிளம்பினாள் வசந்தா. பதினாறு நாட்கள் வெயில் படாத வசந்தாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் அரசன். அவனது ஹர்லிங் முடி நெறி நெறியாய் வஞ்சனையற்று வளர்ந்து கிடந்தது. மேளம் தாங்கி நிற்கும் தோரணையும் துடித்து அடிக்கையில் குலுங்கும் சுருள் முடியும் வசந்தாவை பார்த்துக்கொண்டிருக்க வைத்தன. முகம் மாசு மருவற்று, பூனை மயிர் பளபளத்தத அவள் காதோரங்களில். அரசன் தாளங்களில் வழி தன் காதலை வாசித்துக்கொண்டிருந்தான். வசந்தா தூது போவதற்குத் தோதான ஆட்கள் தேடிக் கொண்டிருந்தாள். கணேசனுக்கு அரசனின் விருப்பம் தெரிந்து கட்டையர் தாத்தாவிடம் சொன்னான். நாதஸ்வரத்தை ரிப்பேர் செய்தபடி யோசனை செய்தார் கட்டையர் தாத்தா. வசந்தாவின் வயிற்றில் கொளஞ்சி இருந்தபோது அவள் கேட்டறியாத ஊர்களுக்கு மேளம் வாசிக்கச் சென்றான் அரசன். ஒருக்களித்துப் படுத்தபடி சிம்னியின் திரியைத் தூண்டிக் கொண்டே கூரை வீடடில் காத்துக்கிடந்தாள். காகிதம் சுருட்டி அடைக்கப்பட்ட மண்ணெண்ணெய் சீசாவில் மண்ணெண்ணெய் தீர்ந்து கொண்டுவந்தது. விடிந்த பிறகு அவள் மண்ணெண்ணெய் வாங்க கடன் கேட்டுக்கொண்டிருந்தாள். சிறுவயசு கர்ப்பம். மெல்லிய உடலில் வயிறு தள்ளிக்கொண்டு சிரமமாக மூச்சு விட்டாள். அவளுக்கு சிரமமெல்லாம் அரசன் அருகிலிருந்தாள் பறந்து விடும். தரையில் கால் பாவாமல் பார்த்துக் கொள்வான். எல்லோரும் அவளுக்கு ஆறுதல் சொன்னார்கள். அவளின் ஆறுதலுக்காக அரசனைத் திட்டினார்கள். "புள்ளத்தாச்சிப் பொம்பள" என்று துணைக்குப் படுத்துக்கொண்டாள் கட்டையர் தாத்தா மனைவி. அவள் நாதஸ்வரக்காரனைக் கட்டி ஆண்டு அனுபவித்தவள். தூக்கம் வராமல் கதைகள் சொல்லிக்கொண்டு கிடந்தாள். கதைகளைக் கேட்டபடி வீடு விழித்திருந்தது. "அவனுங்களுக்கு என்ன இருக்கு சொல்லு பாப்போம்? நாலு வூட்டு சோறு. ஒரு வீட்டுத் திண்ணை" என்றாள் கிழவி. அரசன் ஊரைத் தேடிக்கொண்டு வந்தான். குழந்தை வசந்தாவை வார்த்ததுபோல் இருந்தது. கொளஞ்சி என்று கூப்பிட்டார்கள். வசந்தாவின் தங்கை அழகம்மாள் பிரசவம் பார்க்க வந்திருந்தாள். சிறுவயதுப் பிரசவம் பிரச்சனைதான் என்றபடியே முடிந்து விட்டிருந்தது. வேலைக்குச் செல்லாத தவில், திண்ணை மூலையில் ரோஸ் கலர் துணியால் மூடிக் கிடந்தது. அரசன் பொழுதுக்கும் புளிய மரத்தடியில் கயிற்றுக் கட்டிலில் அசையும் பிணம் போல் வானம் வெறித்துக் கிடந்தான். கிளைகளைத் தாண்டித் தெரியும் வானம் அவனுக்கு எதையோ சொல்லிக்கொண்டிருந்தது. பாக்கு வைத்து அழைத்தார்கள் அரசனை. தவிலைத் தொடுவதில்லை என்றான். அழகம்மாள் பனைவோலைக் குடிசை முகப்பிலிருந்து அவனுக்கு பாதிமுகம் தெரிய, "வேல வித்து பார்த்தாதாங் இருக்கிறத காபந்து பண்ண முடியும்" என்றான். வந்தவர்கள் கோவில் அழைப்பிதழையும் முன் பணத்தையும் அழகம்மாளிடம் கொடுத்துச் சென்றார்கள். அழகம்மாள் முந்தியில் வாங்கிக் கொண்டாள். குழந்தையை காபந்து பண்ண வேண்டிய பொறுப்பு அவளுக்கு இருந்தது. அரசன் வேலைக்குச் சென்றான்; மேளத்தைத் தூக்கிக் கொண்டு அழகம்மாள் பிள்ளையைப் பார்த்துக் கொண்டாள். சாவு வீடுகளில் அரசன் மூர்க்கமாக வாசித்துக்கொண்டிருந்தான். சாராய டப்பாக்கள் அவனிடம் திணறி விழுந்தன. போதையையும் பலத்தையும் தாளக் குச்சிகளுக்குள் செலுத்திக்கொண்டிருந்தான். கண்கள் ரத்தமாய் மின்ன மின்ன குடித்துக் குடித்து வாசித்துக்கெண்டிருந்தான். ஆட்டக்காரர்கள் சக்தியிழந்து அவன் கைகளைப் பற்றி தாளத்தை நிறுத்தினார்கள். சரஞ்சரமாய் தொங்கும் முடியினை தலை சொடுக்கி வாரிப் போட்டுக்கொண்டு சிரித்தான் சேலத்தில் குரூப் மேளத்திற்கு நபராய் சென்ற அரசன் ராசாத்தியைக் கூட்டிக்கொண்டு வந்தான். ஊர் வேடிக்கை பார்த்தது. அழகம்மாள் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு தனிவீடு சென்று விட்டாள். அரசன் ராசாத்தியின் மழமழப்பான உடல் வளைவுகளில் இறந்து கிடந்தான். ராசாத்தி அரசனுக்குத் தலைவாரிவிட்டாள்; குளிப்பாட்டி விட்டாள்; வயல் வேலைக்குச் சென்றாள். அரசன் மேளத்தோடு காரிய வீடுகளில் வெற்றிலை குதப்பிக்கொண்டு மைனர் செயின் போட்டுக்கொண்டு களிப்பேறிக் கிடந்தான். மீசைக்காரன் மகன் பூபாலன் அரும்பாத மீசையைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தான். ராசாத்தியின் வாசனை ஊர் முழுக்கப் பரவிக்கொண்டிருந்தது. சுய மைதுனம் செய்ய மறைவிடம் தேடி மோட்டார் கொட்டகைக்குச் சென்றபோது ராசாத்தி ஊர்க்காரிகளோடு வயல் வேலை செய்துவிட்டு அவனைக் கடந்து சென்றாள், ராசாத்திக்காக அரசனிடம் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அழகிய மனைவி பற்றிய ஊராரின் வர்ணனைகளில் பெருமை உடலெல்லாம் சுரந்து வழிந்து கொண்டிருந்தது அவனுக்கு. ஆண்கள் குழுமிக் கிடக்கும் இடங்களில், தெருத் திருப்பங்களில், பெட்டிக்கடைகளில், இளைஞர் சங்கத்து கொட்டகை முகப்பில் ராசாத்தி அழகைச் சிந்தி இறைத்தபடி நடந்து சென்ற கொண்டிருந்தாள். சங்கத்து சுவர்களில் ராசாத்தி பெயரை எழுதி விதவிதமாக முலை தொங்கிய படங்கள் வரைந்து அம்புக்குறி போட்டு குறியில் பெயர் எழுதி வைக்கப்பட்டது. ராசாத்திக்கு பிள்ளைகள் எதுவும் பிறக்கவில்லை. மூத்தவள் மகள்தான் என் மகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தாள். கொளஞ்சியை வேலைக்குப் போய்விட்டு வந்தபின். தன் வீட்டிற்குத் தூக்கி வந்து பாசத்தில் உளறிக்கொண்டு கிடந்தாள். கொளஞ்சி ராசாத்தியை அடையாளம் தெரிந்து வைத்துக்கொண்டு கை கால்களை உதறிச் சிரித்தாள். குழந்தையின் சிரிப்பொலியும் உடல் தன்மையும் ராசாத்திக்குள் பரவசத்தைப் பெருக்கிக்கொண்டிருந்தது. அழகம்மாள் குழந்தையை ராயசாத்தியை நம்பி ஒப்படைத்துவிட்டுச் சென்றாள். குழந்தை ராசாத்தியிடமும் அழகம்மாளிடமும் கைமாறிக் கிடந்தது. ராசாத்தி மோட்டார் கொட்டகைக்கு மலத்துணி அலசச் சென்றாள். வசந்தாவின் பிரேம் போடாத போட்டோவை சன்னலில் சாத்திவைத்து விசேஷ காலங்களில் கறிச்சோறு படைத்தாள். பத்திப் புகை சுருள் சுருளாய் வசந்தாவின் முகத்தில் படர்ந்து கொண்டிருந்தது. குழந்தைக்கு சாமி கும்பிடக் கற்றக்கொடுத்தாள் கைபிடித்து. குழந்தை எல்லோரையும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது. மோட்டார் கொட்டகையில் மீசைக்காரர் மகன் காதல் பாடல்களை டேப் ரிக்கார்டரில் போட்டான். ராசாத்தியின் வருகையின் போதெல்லாம் நீர் குதிக்கும் சப்தம் தாண்டி அவளுடைய காதுக்கு பாடல் போய்ச் சேரவேண்டிய கவலை அவனுக்கு இருந்தது. பாடல்களின் வழி தன் காதலை அவளிடம் சொல்லிவிட்டதாக நம்பிக்கொண்டிருந்தான். இரவெல்லாம் கண்விழித்துப் படித்த செக்ஸ் புத்தகத்தில் ராசாத்தி உருமாறி வந்துகொண்டிருந்தாள். கறுப்பு வெள்ளை படங்களில் விதவிதமாக போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் ராசாத்திக்கு காகிதத்தில் முத்தம் கொடுத்தான். பேப்பர் வாசனை நாசியில் ஏறியது. எரவாணத்தில் செருகப்பட்ட செக்ஸ் புத்தகம் தூங்கத் தொடங்கியவுடன் கயிற்றுக் கட்டிலில் மோட்டார் இறைக்கும் நீர் குதிப்பு சப்தங்களோடு களைத்துப்போய் தூங்கிக் கொண்டிருந்தான் ஸ்கலிதமாகும் கனவுகளுடன். ராசாத்தி மாதவிடாய்க் காலங்களில் அதிகாலையில் குளிக்க வந்தாள் மோட்டார் கொட்டகைக்கு விழிப்பு தட்டிய அவன் ராசாத்தியின் மினுமினுப்பான அழகு நீரில் முங்கி எழுவதைக் கண்டான். யாருமற்றதான அதிகாலைவெளி என நம்பிக்— காண்டிருந்தாள் அவள். படபடப்பு எழுந்து விடைத்துக்கொண்டு நின்றது அவனுக்கு. தன் இருப்பைக் காட்டிக்கொள்ளாமல் நின்று கொண்டிருந்தான். அவள் ஈரத் துணிகளை உடலில் போர்த்திக்கொண்டு குளிரில் நடுங்கியபடி ஓட்டமும் நடையுமாய் சென்றுவிட்டபிறகு நீரில் இறங்கி சுய மைதுனம் செய்தபடி அவள் பெயரையும் உடலையும் வருத்தி அழைத்துக் கொண்டிருந்தான். அவள் தொலைவில் சென்று கொண்டிருந்தாள். அவள் பெயரை முனகிக் கொண்டிருந்தான். தூரத்தில் சென்று கொண்டிருப்பவள் அருகாமையில் நின்றாள்; அவன் குளியலைப் பார்த்தாள்; அவளும் நீரில் இறங்கி அவனைக் கட்டிப் பிடித்து அவனைத் தனக்குள் வாங்கி அவனை ஒரு புள்ளியாக்கி பருகத் தொடங்கினாள். கண்மூடிக் கிடந்து திறந்தான். தூரத்தில் சென்ற ராசாத்தி அங்கிருந்தபடியே மோட்டார் கொட்டகையைத் திரும்பிப் பார்த்தாள். யாரோ குளிக்கும் அசைவுகள் தெரிந்து கொண்டிருந்தது தூரத்துப் பார்வைக்கு. அவள் பார்ப்பதை இவன் பார்த்தான். பிறகு அவள் செல்லத் தொடங்கினாள் பலவித யோசனைகளுடன். கொளஞ்சி வளர்ந்துகொண்டு வந்தாள். ராசாத்தி சேர்த்து வைத்த காசில் பாவாடை, சட்டை எடுத்தாள் பிள்ளைக்கு. அழகம்மாள் சைக்கிளில் வரும் துணி மூட்டைக்காரனிடம் பாதி பணமும் மீதி கடனும் சொல்லி எடுத்தாள். அரசன் பக்கத்து டவுனில் வரிசையாய் நீல மயில்கள் நிற்கும் பட்டுப் பாவாடை எடுத்துக்கொண்டு வந்தான். பட்டுப் பாவாடை கட்டிக்கொண்டு தெருப் பிள்ளைகளோடு விளையாடப் போகாமல்வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். கொளஞ்சிக்கு ராசாத்தியுடனே அதிக நேரத்தை கழிக்கும்படி ஆனது. மீசைக்காரர் வீட்டில் பிள்ளையைக் கொண்டு வரக்கூடாது வேலைக்கு என்று விட்டதில் வருந்திக்கொண்டிருந்தாள் அழகம்மாள். வேலை கெடுகிறது; இரண்டாள் சாப்பாடு ஆகிறது; நேரத்துக்கு தீனி, சாக்குப் போக்கு என்று கத்தி விட்டாள் ஆச்சி. கொளஞ்சிக்கு முக்காடு போட்டு மரத்தடியில் சோற்று வாளிகளுக்கு காவலாய் உட்கார்த்தி வைத்து விட்டு வயல் வேலை செய்துகிடந்தாள் ராசாத்தி. அழுவாத பிள்ளை என்று எல்லோரும் கிள்ளினார்கள். கொளஞ்சி சிணுங்கிவிட்டு வாயை மூடிக்கொண்டாள். ராசாத்தியின் பேச்சுவழக்கும் காரிய நேர்த்தியும் மணம் கமழும் சமையலும் பின்னாளில் கொளஞ்சிக்கு ஒட்டிக் கொண்டது. தன் எண்ணங்களை ராசாத்தியிடம் நேரடியாகச் சொல்லாமல் பல வழிகளில் தெரிவித்துக்கொண்டிருந்தான் மீசைக்காரர் மகன், அரசன் வசிக்கும் தெருவில் அவன் பாதம் நடந்து நடந்து தேய்ந்து கொண்டிருந்தது. கிழவிகள் அவனைக் கூப்பிட்டு அவன் அப்பாவை விசாரித்தார்கள். ராசாத்திக்கு அவன் வருகை தெரிந்துகொண்டு வந்தது. ராசாத்திக்கு தூரத்திலிருந்து மோட்டார் கொட்டகையின் காட்சிவெளியைப் பார்க்கும்போதெல்லாம் யாருமற்ற காலையில் நீராடியதும் வந்து விட்ட பின் எதேச்சையாய் திரும்பிப் பார்த்த கணத்தில் அங்கு வேறு யாரோ ஒரு உருவத்தின் குளியல் அசைவையும் நின்று உற்றுப் பார்த்தது அவளுக்கு நிழலாடிக்கொண்டிருந்தது. அந்நினைவு அவள் வாழ்க்கையில் மறக்க முடியாத அரூப நினைவாக விழுந்துவிட்டிருந்தது. அந்த மாதத்து மாதவிடாய் காலங்களில் அவளிடம் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்ததை முகம் பார்க்கும் கண்ணாடியில் கண்டு கொண்டிருந்தாள். தேவையற்ற பரபரப்பும் துயரம் படிந்த முகமும் மறைமுகமான சத்தோஷமும் அதிகாலையில் தோன்றி மறைந்து கொண்டிருந்தது. பறவைகளின் சப்தத்துடனும் மோட்டாரின் தொடர் ரீங்காரத்துடனும் நீராடிக் கொண்டிருந்தவளுக்கு கீற்று மறைவில் நிற்கும் இரண்டு கால்களை மட்டுமே அவதானிக்க முடிந்தது. அவள் இயல்பாய் எழுந்து ஆடை மாற்றும் போக்குகாட்டி கொட்டகைப் பின்புறமாக சுற்றிவந்து உள்ளே எட்டிப் பார்த்தபோது அவள் குளியல் முடித்து விட்டதான எண்ணத்திலும் அவசரத்திலுமான முடியாக் கனவின் துயரத்துடன் சுய மைதுனத்தில் மிதந்து கொண்டிருந்தான். அதை எதிர்பார்த்தவள் அவன் தன்னைப் பார்க்கும்வரை நின்று கொண்டிருந்தாள். அதன் பிறகு அவனைக் கடந்து சென்ற போதெல்லாம் அவள் முகத்தில் விசேஷ பூ சிரித்துக்கொண்டிருந்தது. பேன் பார்க்கும் கிழவிகளை வீட்டு வாசலில் இருந்து கொண்டு தலை மயிரைப் பரப்பிவிட்டு சாடைமாடைப் பேச்சுக்கள் மொழிந்துகொண்டிருந்தாள். எதிர் திண்ணைகளில் பேச்சுக் கொடுத்துக் கிடத்தான் அவன். வயசாளிகளும் குழந்தைகளும் அவனின் அர்த்தமற்ற பேச்சுக்களுக்கு செவிமடுத்துக் கிடந்தார்கள். முகம் தெரியாத அதிகாலை இருட்டில் பாவாடை, சேலைகளைத் தோளில் போட்டுக்கொண்டு குளிக்கச் சென்றாள். அவளின் வருகை அவனுக்கு யாருமே சொல்லாமலே தெரிந்திருந்தது. அவனின் ஒவ்வொரு அசைவுகளையும் கற்பனையில் நினைத்தபடி வரப்பில் நடந்துகொண்டிருந்தாள். மீசைக்காரர் வீட்டின் பயனற்ற பழைய பொருள்கள் குவிக்கப் பட்டிருக்கும் தனி வீட்டில் உடலின் மர்மங்களோடு அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சாகக்கிடக்கும் மீசைக்காரர் வீட்டுக் கிழவி அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள் சாம்பல் நிறக் கண்களுடன். அவர்களின் இருப்பு தனக்குத் தெரியும் என்பதை எத்தனையோ முறை அவளின் மட்கிய குரலில் இருமியும் கனைத்தும் காட்டியும் அவர்கள் பொருட்படுத்தாதிருந்தார்கள். தன்னைப் பொருட்படுத்தாத அவர்கள் தன்னை அவமானப்படுத்துவதாகக் கருதி சபித்தாள். மரணத்தின் முனகலும் சுகிப்பின் சிரிப்பும் ஒரே அரையில் ஒலித்துக்கொண்டிருந்தது. கிழவியின் மல மூத்திரங்களை சுத்தப்படுத்த வந்த அழகம்மாள் அவர்கள் கட்டிப் பிடித்துத் துயில்வதைப் பார்த்துவிட்டுச் சென்றாள். அரசன் விசனம் பிடித்துக் கிடந்தான். பிரசிடென்ட் வீட்டு மாட்டுக் கொட்டகையில் பஞ்சாயத்து நிகழ்ந்தது. அரசன் கைகளைக் கட்டிக்கொண்டு கல்தூணில் சாய்ந்து நின்றான். ராசாத்தி எல்லோருக்கும் மறைவாய் விசும்பிக்கொண்டு நின்றாள் மாடுகளின் பின்புறம். அரசனை சமாதானப் படுத்தினார்கள். அரசன் அவளை வச்சி வாழமுடியாதென்றான். "பையன் சின்ன பையன்" , "யாருதாங் தவறல்", "இந்த ஒருவாட்டி விட்டுப்புடி", "கழுத மேயுதுன்னா தொலைச்சி தலமொழுவிட்டுப் போ", "அதுக்கப்பறம் நான் இவள உங்கிட்ட சேத்தன்னா உஞ்செருப்பகயிட்டிக்க ஆமா". "உங்க வீட்ல உங்க சம்சாரம் இப்பிடி பண்ணிட்டா இப்படி பேசுவீங்களா?" பிரசிடென்ட் துண்டை உதறி தோளில் போட்டுச் சென்றார். சாயங்காலம் தீர்ந்துபோனது. எல்லோரும் வீட்டுக்குச் சென்றும் ராசாத்தி பிரசிடென்ட் வீட்டில் அவர் மனைவியிடம் அழுது புலம்பிக்கொண்டிருந்தாள். அன்றிரவு வாழ்க்கை பூதாகரமாக மீசைக்காரர் மகனிடம் பற்களைக் காட்டிக்கொண்டு நின்றது. ராசாத்தி அவன் முன் முகம் மூடி அழுதுகொண்டிருந்தாள். விடியும் வரை விரைத்த சடலம் போல் யோசனை செய்துகொண்டிருந்தான். மாட்டுச் சந்தையின் பின்புறம் மாற்றுத் துணிகளும் செருவாட்டுக் காசும் எடுத்துவந்து காத்திருந்த பகல்பொழுது முடிந்து போனது ராசாத்திக்கு. போக்கிடமற்ற கவலை பீடித்து உதடுகள் உலரத் தொடங்கி எச்சில் சுரப்பு நின்றுபோனது. வந்து சேராத அவன் வருகையை அழுது தீர்த்துக் கொண்டிருந்தாள். அழகம்மாளின் தனி வீட்டில் பழம்புடவையில் அவள் உடல் சமனப்படாத விசையுடன் இடமும் வலமுமாய் ஆடிக் கொண்டிருந்ததை கொளஞ்சிதான் முதலில் பார்த்தாள். கொளஞ்சி மாராப்பு போட்டுக் கொண்டாள். அரசன் பிழைப்பு தேடி அயலூர்களுக்கு சென்று கொண்டிருந்தான். தூரத்து ஊரில் பூபாலன் காலேஜ் படிப்பை தங்கிப் படித்தான். அழகம்மாள் கருவாடு போல்ஆகிக் கொண்டு வந்தாள். அவளின் சருமம் மேலும் மேலும் வரிவரியாய் கிழடுதட்டிப் போனது. ஊரறிய அரசனுக்குப் பெயர் சொல்லாத பெண்டாட்டியாக வந்து சேர்ந்தவளுக்கு கல்யாணத்தில் இஷ்டமில்லாமலில்லை. எடுத்து செய்வார் யாருமில்லை. அவள் உடல் மன இறுக்கங்களால் கெட்டித் தட்டி நரம்பாகிப் போனாள். மேலுக்கு ஒரு புடவையைச் சுற்றிக்கொண்டும் அவளின் பழைய அளவைச் சொல்லும் தொளதொள ஜாக்கெட்டைப் போட்டுக் கொண்டும் அடிமை வேலை செய்யச் சென்றாள். வேலைகள் ஆவலாய் அவளைப் பற்றிக்கொண்டு இழுத்தன. சதா சுரந்துகொண்டிருக்கும் முதலாளி வீட்டு வேலைகளின் அன்றைய வேலைக்கான முடிவை இரவுகள் வந்து முற்றுப்புள்ளி இட்டு வைத்தன. கொளஞ்சி சோறாக்கி வைத்துவிட்டு பக்கத்து வீடுகளில் உட்கார்ந்து அழகம்மாளின் வருகைக்குக் காத்திருந்தாள். ராசாத்தியின் உடல் தொங்கிய அக்காட்சி, தனிமையான இரவுகளில் கொளஞ்சிக்கு பயமூட்டுவதாக சொல்லிக் கொண்டு நேரத்தில் வீடுவரும்படி அழகம்மாளை நச்சரித்துக் கொண்டிருந்தாள். வயிசுக்கு வந்த பிள்ளையை காத்து கறுப்பு அண்டினால் ஆயுசுக்கும் போகாது என்று வேறு வீடு பார்க்கச் சொன்னார்கள். அழகம்மாளுக்கும் இரவில் துர்சொப்பனங்கள் வந்து கொண்டிருந்தது. அம்மா இருக்கும் தைரியத்தில் பிள்ளையும் பிள்ளை இருக்கும் தைரியத்தில் அம்மாவும் அவ்வீட்டில் விடிய விடிய விளக்கெரியவிட்டு உறங்கிக் கொண்ருந்தார்கள். அழகம்மாளுக்கு டைபாய்டு ஜூரம் வந்து முனகிக் கொண்டு கிடந்தாள். முதலாளி வீட்டு வேலைகள் அவளைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தது. அம்மாவுக்கு பதிலாய் ஈரிழைத் துண்டை கழுத்தில் சுற்றிக் கொண்டு முதலாளி வீட்டுக்கு வேலைக்குச் சென்றாள். புதிய வேலைக்காரியின் சுறுசுறுப்பும் காரியநேர்த்தியும் ஆச்சிக்கு மிகவும் பிடித்து பழம் புடவைகள் மூன்று கொடுத்தாள். சென்ற விசேஷங்களில் செய்து இன்னும் தின்று தீராத பட்சணங்களை பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொருட்டு சவ்வுத்தாள் பையில் போட்டு வாரிக் கொடுத்தாள். ஜூரத்தில் முனகிக்கெண்டிருக்கும் அழகம்மாளுக்கு நாக்கு கசந்து போனது. பட்சணங்களை அவளால் ருசி பார்க்க முடியவில்லை. கடைசி காலங்களில் கொளஞ்சி தனக்கு கஞ்சி ஊற்றி காபந்து பண்ணுவாள் என்று ஊர்ஜிதமாகிக் கிடந்தாள். அம்மாவுக்கு உடல் சரியாகும் வரை என்று நினைத்துக்கொண்டு வேலைக்குச் சென்றதைத் தாண்டி ஆத்தாளும் பிள்ளையுமாக ஜோடி போட்டுக்கொண்டு வேலைக்குச் சென்றார்கள். ஆச்சிக்கு நிம்மதியாக இருந்தது. சிறிது காலத்தில் கொளஞ்சி மட்டும் போதும் என்றாள். அழகம்மாள் எப்போதாவது கிடைக்கும் விவசாய வேலையைப் பார்த்துக்கொண்டும் பிள்ளைக்கும் தனக்குமாய் சோறாக்கி வைத்துக் கொண்டும் தனிமையும் பயமும் ஒழுகும் கூரைவீட்டில் காத்துக் கிடந்தாள். கொளஞ்சிக்கு முதலாளி வீட்டின் ஒவ்வொரு அசைவும் தன் நடத்தைகளுக்குள் வந்தபோது பூபாலன் படிப்பு முடித்து வீடு வந்தான். எந்த வகையிலும் அழகாய் தெரியாத அவளிடம் மயங்கி நின்றான். அவள் உடலைத் தாண்டி ஏதோ ஒரு மாய வசீகரத்தில் போதை வயப்பட்டவனாக நின்றுகொண்டிருந்தான். ஏரிக்கரை வயலில் வேலை செய்யும் ஆட்களுக்கு அன்னக் கூடையில் சோறு வளர்த்துக் கொண்டும் குழம்பு வாளியைத் தூக்கிக் கொண்டும் வெயிலில் சென்றாள். பூபாலன் அவளுக்கு ஒத்தாசையாய் குழம்பு வாளியை சைக்கிள் ஓட்டியபடி வாங்கிச் சென்றான். நாவல்பழ மரத்தடியில் வேலை செய்த ஆட்களுக்கு வயிறார சப்பாடு போட்டாள். ஈரம் தீராத உதடுகளில் நாவல் பழங்களை சப்பித் தின்றாள். உதடுகளும் உதடுகளின் சுற்றுப்புறங்களும் ரோஸ்கலர் படிந்திருக்க வீடு வந்த போது, பூபாலன் அவள் நாவல்பழம் தின்ற வக்கணையை கேலி செய்து சிரித்தான். முதலாளி மகனின் கேலி வெட்கத்தை மீறி சங்கடத்தைத் தருவித்தது. ஓடி ஒளிந்துகொண்டாள். அவனுக்காக ஓடியதும் ஒளிந்ததும் இருவருக்குமான சுவாரஸ்யமான காரியமாக இருந்தது. அவள் ஓடி ஓடி ஒளிவதற்கான செயல்களையும் பேச்சுக்களையும் உருவாக்கிக் கொண்டிருந்தான். அவன் குரலைக் கேட்காமல் அவளுக்கு அவ்வீட்டின் இருப்பு நிலைக்கவில்லை. அவளின் அசைவுகள் இல்லாத அவ்விட்டின் இரவுப் பொழுதுகளை, பகலில் நிகழ்ந்தவைகளை நினைத்துக் கழித்தான். பகல்கள் மிகச் சிறியதாகவும் இரவுகள் மிக நீண்டதாகவும் போய்க்கொண்டிருந்தது. கொளஞ்சி பிள்ளைமார் தெருவில் மோர் விற்கச் சென்றபோது நாய்கடித்து குருவிக்கார தாத்தாவிடம் விபூதி வைத்தியம் செய்துகொண்டு வேலைக்கு வராமல் அழகம்மாளை அனுப்பி வைத்தாள். அழகம்மாள் மாலை மாலையாய் அழுதாள் ஆச்சியிடம். பூபாலன் அவளைத் தேடிக்கொண்டு அவள் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது. சாணி மெழுகிய தரையில் சாக்கு விரித்துப் படுத்துக் கிடந்தாள். டாக்டரிடம் செல்ல பணம் கொடுத்தான். அவளை பஸ்ஸில் வரச் சொல்லி டாக்டர் வசிக்கும் தெருவில் சைக்கிளில் காத்திருந்தான். கடைத் தெருவில் இருவரும் பேசிக்கொண்டு சென்றார்கள். நீ இல்லையென்றால் செத்துப் போய்விடுவேன் என்றான். அவனுக்காக, அவ்வார்த்தைகளுக்காக அழத் தொடங்கினாள். இருவரும் சேர்ந்து பிடித்துக்கொண்ட போட்டோவை கொளஞ்சி அடுக்குப்பானையில் ஒளித்து வைத்தாள். பழந்துணி சுருட்டி. கொளஞ்சி இருளில் அரட்டிக்கொண்டு கிடந்தாள். அழகம்மாளுக்கு பயம் பற்றிக்கொண்டு பக்கத்து வீடுகளை துணைக்கு அழைத்தாள் அவர்கள் தூக்கம்போன கண்களுடன் குருவிக்கார தாத்தாவைக் கூட்டி வந்தார்கள். பிள்ளை தலை மயிரைப் பரப்பிப் போட்டுக் கொண்டு பற்களை நறநறவெனக் கடித்தாள். குருவிக்கார தாத்தா பிள்ளையை ஆதுரமாகத் தழுவித் தூக்கினார். அது அவர் மேல் காறித்துப்பியது. மயிரைக் கொத்தாக பிடித்து தூக்கி அறைந்தார். பிள்ளை சுருண்டு விழுந்தாள். கொளஞ்சியின் மேலெல்லாம் திருநீற்று சாம்பல் பூசிவிட்டு அருகிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அழகம்மாள். தடிமனான இரவுகள் அவளை மூச்சுத் திணற வைத்தது. தெருவில் ஆடைகளைக் களைந்து ஓலமிட்டபடி கத்திக்கொண்டு ஓடினாள் கொளஞ்சி. பிரம்படியும் நெருப்புச் சூடும் தடம்பதித்துக் கிடந்தது அவளுடலில். பகல் முழுக்க திராணியின்றி சுருண்டு கிடந்த பிள்ளையை வெந்நீர் வைத்துக் குளிப்பாட்டினாள் அழகம்மாள். சடை பின்னிப் பூ வைத்து ஆடை மாற்றி மடியில் கிடத்தி கொண்டு அழத் தொடங்கினாள். கொளஞ்சியும் சேர்ந்துகொண்டு அழுதாள். பூபாலனுக்கு மீசைக்காரர் கல்யாணப் பேச்சைத் துவங்கத் தொடங்கியதுமே கொளஞ்சியைக் கட்டிக்கொள்ளப் போவதாகச் சொன்னான். கொளஞ்சியைக் வீட்டுக்கு வந்து பார்த்துவிட்டுச் சென்றான் பூபாலன். அழகம்மாள் அவனுக்கு கும்பிடு போட்டு அழுதாள். அவன் சென்ற பிறகு ஊதாங்குழலை அடுப்பில் சூடேற்றி கொளஞ்சியை மிரட்டினாள். கொளஞ்சி அடுப்பங்கரையில் ஆட்காட்டி விரலில் ரத்தமெடுத்து கொளஞ்சி - பூபாலன் என தரையில் எழுதியதை சாணியால் மெழுகி அழகம்மாளால் மறைத்துவிட முடியவில்லை ஆச்சியின் சொந்தக்காரர்கள் வீட்டுக்கு வந்து விருந்துண்டு சென்றார்கள். வந்தவர்களுக்கு விதவிதமாக ஆக்கிப்போட்டு மகிழ்ச்சியூட்டினாள் ஆச்சி. பூபாலனிடம் எல்லோரும் வேலைக்கார பறைச்சியை எப்படி மருமகளாக்குவது என்று கேட்டுவிட்டுச் சென்றார்கள். மீசைக்காரர் காரெடுத்துச் சென்று காரிய வேலைகள் பார்த்துக் கொண்டிருந்தார். பூபாலன் இன்னும் படிக்க வேண்டும் என்றான். " கட்டிக் கொண்டு படி "என்றார்கள். பார்த்திருக்கும் பெண் பாரம்பரியமிக்க வீட்டின் குணவதி என்று பார்ப்போரிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாள் ஆச்சி. கரும்புக் கொல்லையில் வெய்யில் மிதக்கும் வேளையில் இரண்டு கலர் பாட்டில்களை எடுத்து வைத்தான் கொளஞ்சியிடம். முகம் இறுகி கட்டிக் கொண்டாள் அவனை. இரண்டு பாட்டில்கள் காத்திருக்க இருவரும் புணர்ந்து களைத்தார்கள். இருவரும் கையிலெடுத்துக் கொண்ட பாட்டில்களை வைத்துக்கொண்டு ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொண்டார்கள். அவள் பார்த்துக்கொண்டிருக்க, அவன் குடிக்கத் தொடங்கினான். அவள் அவன் குடிப்பதை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் ஒரே மூச்சில் குடித்துவிட்டு அவளைப் பார்த்தான். நொடிகளில் வேற்றுமையில் அவன் மரணத்தை சம்பவிக்கப் போகிறவனாக அவளிடமிருந்து மாறுபட்டுப் போனான். பாட்டிலை வைத்துவிட்டு அவனைக் கட்டிக்கொண்டு அழுதாள். அவன் அவளைக் குடிக்கச் சொன்னான். அவள் அவனுக்குமேலும் மேலும் முத்தங்களைக் கொடுத்தாள். சட்டென்று கோணிக்கொண்ட அவன் உடல் வலிப்பு போல் இழுக்கத் தொடங்கியதை விலகி நின்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள், உலர்ந்து போய். சிறிது நேரத்தில், சுடப்பட்ட ஒரு மூர்க்கமான விலங்குபோல் அலங்கோலமாய் கோணிக்கொண்டு கிடந்தான். மிச்சமிருந்த ஒரு பாட்டிலை எடுத்துக்கொண்டு வெளியே ஓடத் தொடங்கினாள் பயத்துடன். சிறிது நேரத்தில் அவன் உடலில் ஈ மொய்க்கத் தொடங்கியது. |
Subsets and Splits